சுற்றுப்பயணத்தின் போது சேலம் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் மேடைச் சொற்பொழிவுக் கழகத் துவக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய தந்தை பெரியார், மேடைப் பேச்சுக்கு வகுத்துக் கொடுத்த இலக் கணம் இதில் பேச்சு எப்படி இருக்க வேண்டும். பேச் சாளனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் குறித்து ஒரு சுவையான விளக்கம் அளித்தார். சுவை மிக்க தந்தை பெரியாரின் சொற்பொழிவு இலக்கணப் பேச்சு இது:
இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.
பேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந்தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்தனையற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.
பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளைஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்படவும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாததாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத் தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.
சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப்பட்டவர்களை தேர்தல் சமயத்தில் பார்க்கலாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர் களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப்பட்ட காரியத் துக்குப் பயன்படுத்த மாட்டான்.
பொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி - உண்மையைக் கூறி - குறைப் பாடுகளைக் கூறி - உண்மை தேவைகளைக் கூறி மக் களைத் தன்வயப்படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.
சிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங்களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள். தாம் பேச வேண்டும், மக்கள் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.
எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச்சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட்டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதி யாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.
அடுக்கு அடுக்காகப் பேச வேண்டுமென்றும், அலங் காரமாய்ப் பேச வேண்டுமென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்குகின்றனர்.
இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.
சிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப் பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டினால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
பேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சாளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் பேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும். உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப்பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.
தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.
தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவே இதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராக வில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.
ஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப் பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.
சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்படுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத் தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள் கைக்கோ அல்லது அக்கொள்கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அது வரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விட மாட்டார்கள்.
அவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க் கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம்.
பத்திரிகை ஆபீசில் புரூப் ரீடர் வேலைக் கமர்ந்து ஒருவன் வேலை அங்கு நடந்து வரும் விதத்தையும் பத்திரிகைச் சொந்தக்காரர் பெற்று வரும் லாபத்தையும் பார்த்து தானும் ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து வெளியேறி ஒரு பேப்பரையும் துவக்கி கையில் உள்ள காசையும் எப்படி தொலைப்பானோ. அதுபோல் பைத்தியக் காரத்தனமான செய்கை தான் பேச்சாளிகள் சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் பேச்சு சாமர்த்தியத்தை நம்பி புதுக் கழகம் அமைப்பதும் ஆகும்.
மேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவு டனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத் தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத் துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச்சாளி யாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை - சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங் கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாளனும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர்ப் பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அது வாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டிலிருந்து கொண்டே எழுதிக் கொண்டி ருப்பவன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடியவன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.
ஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வரு பவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளையாட் டிற்காகவும், தனக்குக் கெட்டிக் காரப் பட்டம் வரவேண்டும் என்பதற்காக வும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.
அப்படிப் பயன்படுத்தினால் அவருடைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத்தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதையும் வெகுவாகக் குறைந்துவிடும்.
பேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்காரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாடகம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச்சாளிக்கு இருக் கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடையாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.
அப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டி யவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண் டும் என்பதற்காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக் காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தர வேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.
விளம்பரத்துக்கு ஆகப் பேசும் குணத்தை விட்டுவிட வேண்டும். ஈரோட்டில் ஒரு காங்கிரஸ் ஜில்லா மாநாடு நடந்தது. அதில் ஒரு விஷயம் பற்றி ஒரு தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு 5, 6 பேர்கள் பேசி விட்டார்கள். ஓட்டுக்கு விடும் சமயத்தில் ஒரு வக்கீல் எழுந்து தான் சிறிது பேச வேண்டும் என்றார். தலைவர் தடுத்து நேரமாகி விட்டது. முடிக்க வேண்டும் என்றார். பேச எழுந்தவர் ஒரே ஒரு பாயிண்டு அதை சொல்லி விடுகிறேன் என்றார். தலைவர் அவரை நோக்கி, நீங்கள் பேசுவது தீர்மானத்துக்கு சாதக மாகவா? எதிர்த்தா? என்று கேட்டார். அதற்கு பேசுபவர் ஆதரித்துப் பேசப் போகிறேன் என்றார். அதற்கு தலைவர் ஆதரித்து 4 பேர் பேசி விட்டார்கள். ஆதலால் இனி ஆதரித்துப் பேச வேண்டியதில்லை. உட்காருங்கள் என்றார். அதைக் கேட்டவுடன் பேச எழுந்தவர் அப்படி யானால் நான் எதிர்த்து இரண்டு வார்த்தை சொல்லுகிறேன் என் றார். உடனே தலைவர் சிரித்துக் கொண்டே தயவு செய்து உட்காருங்கள் என்று சொல்லி, கையையும் அமரும் படி அவர் உட்காரும்வரை ஜாடை காட்டிக் கொண்டே இருந்தார்; பேச எழுந்தவர் சிறிதுகூட வெட்கப்படாமல் வெகு சங்கடத்துடன் மெதுவாய் உட்கார்ந்தார்.
தலைமை வகித்த தலைவர் டாக்டர் நாயர், பேச எழுந்தவர் ஒரு பி.ஏ.,பி.எல்., வக்கீல் அய்யர்.
சிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறி முகத்தால் உடனே பத்திரிகை ஆரம்பித்துக் கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவுமாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்கா விட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.
ஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழகுங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார்.
- விடுதலை, 6.11.1949
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தந்தை பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா - பொதுக்கூட்டம்
- பெரியாரியல் பயிற்சி முகாம் - குற்றாலம்
- நடக்க இருப்பவை
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம்
- சட்டம் ஒரு இருட்டறை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment