Wednesday, February 5, 2020

"இப்போது சுடுங்கள் அமைச்சரே, உங்களது தோட்டாக்கள் எங்கே?"

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான பிப்ரவரி 3 திங்களன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆவேச மிக்க போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக மக்களவையில், குடியுரிமை திருத்தச்சட்டத் திற்கு எதிராக போராடுபவர்களை சுட்டுத் தள்ள வேண்டுமென்று வெறித்தனத்துடன் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசத் துடன் தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தனர்.
மக்களவை திங்களன்று கூடியதும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு பதிலளிப் பார் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். அவர் அப்படி கூறியவுடனே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் எழுந்து நின்று அனுராக் தாக்கிற்கு எதிராக முழக்கமிடத் துவங்கினர். நாடாளு மன்றத்தில் பேசுவதற்கு அருகதையற்றவர் அனுராக் தாக்கூர் என்று அவர்கள் கூறினர் மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர், டில்லியில் நடைபெறவுள்ள தேர்தலை யொட்டி நடைபெற்றுவரும் பிரச்சாரத்தில் கடந்தவாரம் பங்கேற்று மிகவும் வெறித்தன மான முறையில்  பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் தேசவிரோதிகள் என்றும் அவர்களை சுட்டுத் தள்ளவேண்டுமென்றும் அவர் கூறினார். இது நாடு முழுவதும் பெரும் கண்டனக் கணைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு அவர் டில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் மக்களவையில் உறுப்பினர் களின் கேள்விகளுக்கு பதிலளிக்கஎழுந்த அனுராக் தாக்கூரை நோக்கி, “இப்போது சுடுங்கள் அமைச்சரே, உங்களது தோட்டாக்கள் எங்கே” எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு அனுராக் தாக்கூர் தனது இருக்கை யை விட்டு எழுந்தபோதெல்லாம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். அத்துடன் தேசிய குடி யுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் கைவிடு என்று தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தனர்.
மாநிலங்களவை
மாநிலங்களவையிலும் இதே நிலை இருந் தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அடுத்தடுத்து அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ், திரிணாமுல், பிஎஸ்பி உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் உறுப்பினர்கள் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர் பாக உடனடியாக விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். அவைத் தலைவர் பொறுப்பி லிருந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அதை இப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அவைத் தலைவர் இதுதொடர்பாக அறிவுறுத்தல் அளித்து விட்டு சென்றிருக்கிறார் என்றும் கூறினார். அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், “நாம் இந்த அவையை விதிகளின் அடிப்படையில்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவை விதி எண் 267ன்படி உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினையை விவாதிக்கலாம். அது அனு மதிக்கப்படாது என்று சொன்னால் அப்படி ஒரு விதி ஏன் அவையின் ஏட்டில் இருக்கிறது ” என்று கேள்வி எழுப்பினார்.
எனினும் அவைத் துணைத் தலைவரால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இந் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தனர். திரிணாமுல் உறுப்பினர்கள் அவையின் மய்யப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர்.தொடர்ந்து பேசிய குலாம்நபி ஆசாத், பாஜக ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து அமளி நிலவிய சூழலில்,மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப் பட்டது. முன்னதாக அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவிவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல், பிஎஸ்பி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்திருந்த தாக்கீதுகளை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின்மீது விவாதம் நடத்தும்போது இதைப்பற்றியும் பேசுவதற்கு உறுப்பினர் களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று வெங்கய்யா நாயுடு கூறியிருந்தார். குடி யரசுத்தலைவர் உரையானது, குடியுரிமை திருத் தச்சட்டம் தொடர்பாக குறிப்பாகவே குறிப் பிட்டி ருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்பிரச்சினை உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன், திரிணாமுல் தலைவர் தெரிக் ஓ பிரையன், பிஎஸ்பி தலைவர் சதீஸ் சந்திர மிஸ்ரா உள்ளிட்டோர் எழுந்துநின்று பேசத் துவங்கினர். எனினும் அவர்களுக்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. அப்போது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோரோடு எழுந்து நின்று கொண்டு முழக்கமிடத் துவங்கியதால், வெங்கய்யா நாயுடு அவையை ஒத்தி வைத்தார். முன்னதாக அவை கூடியதும் ஓமன் சுல்தான்கபூஸ் பின் சேத் அல் சேத் மறை வுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் உயிரிழந்த வர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் தீர்மா னத்தை வெங்கய்யா நாயுடு வாசித்தார். மேலும், அவையின் உறுப்பினரான விளையாட்டு வீராங்கனை மேரி கோமுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது என்பதை அறிவித்த அவர், இந்த விருது பெற்றுள்ள நாட்டின்முதல் பெண்மணி என்று பாராட்டினார். மறைந்த உறுப்பினர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கும் பத்மவிபூஷன் விருதுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...