4.2.2020 நாளிட்ட 'தினமணி' நாளேடு "நோக்கம் மொழிப் பற்றல்ல!" - எனும் தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
"தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில், இறை
மறுப்பாளர்களால் தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு பிரச்சினை
யாக்கப்படுகிறது. ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஆகம
முறைக்கு மாற்றாக தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும் என்கிற
கோரிக்கையின் பின்னணியில் காணப்படுவது மொழியார்வம் அல்ல. ஆலய வழிபாட்டு
முறை சம்பிரதாயங்களைச் சிதைப்பதும், ஹிந்து மத நம்பிக்கையாளர்கள் மத்தியில்
வழிபாட்டு முறையின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதும்தான் இவர்களின்
நோக்கமே தவிர தமிழ்ப் பற்றல்ல!" - என்கிறது தலையங்கத்தின் முதல் பத்தி.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், ஆட்சிமொழிக் காவலர்
கீ. இராமலிங்கனாரும், கா.சு. பிள்ளையும், மறைமலை அடிகளாரும், சோம சுந்தர பாரதியாரும் இறை மறுப்பாளர்களா?
கோயில் வழிபாட்டு மொழி உட்பட அனைத்தும் தமிழில் நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியது எந்த அடிப்படையில்?
எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது
நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் அர்ச்சகர் நியமனம் குறித்து அமைக்கப்பட்ட
வல்லுநர் குழு அறிக்கை என்ன கூறுகிறது?
"இன்று மொழிபற்றிய காழ்ப்புணர்ச்சி
நம்மிடத்தில் அதிகமாக, நம்மவரில் அறிவு சான்றவர்கள்கூட ஆகமங்கள் வடமொழியில்
எழுதப் பெற்றுள்ளன என்ற ஒரு காரணத்தைக் கொண்டு, அவை தமிழுக்கு அன்னியமானவை
என்று கருதுகிறார்கள். இது சரியன்று, வழிபாட்டு முறையின் விரிவுகள்,
கோயில் பிரதிட்டை, சிவ மூர்த்திகளின் பல்வேறு வேதங்கள் முதலான பலவும்,
தமிழ் நாட்டிலேயே தோன்றியவை. தமிழ்த் தன்மையே பொருந்தியவை. அவற்றில்
வடநாட்டுச் சார்பு சிறிதும் இல்லை. இது வடநாட்டுக் கோயில்களையும், அவற்றின்
கட்டட அமைப்பையும், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளையும் மேம்போக்காகப்
பார்த் தாலே நன்கு விளங்கும். முக்கியமாக நடராஜன் திருவுருவம் இங்குக்
கருதத்தக்கது. தமிழ்நாட்டு வழிபாட்டின் விரிவும், அழகும் வட நாட்டில்
இல்லை. எப்படியிருப்பினும் இன்று தமிழ்நாட்டில் வேறெங்குமே
காண்பதற்கரிதாகிய வளம் பொருந்திய ஒரு சமய மரபும், பண்பாட்டு மரபும்
இடையறாது தொடர்புடையனவாய் நிலவுவதைக் காண்கிறோம்"
- வல்லுநர் குழுவின் இந்தக் கருத்துக்குத் 'தினமணி'யின் பதில் என்ன?
இந்த வல்லுநர் குழுவில் இடம் பெற்றவர்கள்
'தினமணி' கூற்றுப்படி இறை மறுப்பாளர்கள் அல்லர். சி. சுவாமிநாத குருக்கள்,
எ. விசுவநாத சிவாச்சாரியார், என். ரெங்கராசபட்டர், மு. அருணா சலம், க.
வச்சிரவேலு முதலியார், திருமுருக கிருபானந்தவாரியார், டி. சுப்பிரமணியன்
இ.ஆ.ப. (அய்.ஏ.எஸ்.), கோ.மு. முத்துசாமிப் பிள்ளை, க. சுந்தரராசபட்டர்,
டாக்டர் டி.எஸ். சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், அ.வெ.ர. கிருஷ்ணசாமி
ரெட்டியார் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தான் இந்த அறிக்கையை அரசிடம்
அளித்தது என்பது 'தினமணி'க்குத் தெரியாதா?
ஆகம முறைப்படி தான் கோயில் சமாச்சாரங்கள்
நடைபெற வேண்டும் என்றால், ஆகமங்கள் தமிழில் நிரம்பி வழிகின்றன என்று
தலைப்புக் கொடுத்து நிபுணர் குழு வரைந்து தள்ளியதே!
உண்மை இவ்வாறு இருக்க 'தினமணி' இவ்வாறு எழுதுகிறது.
"ஆலயங்களில் தமிழ் வழிக் குட முழுக்கு
என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. கல்வெட்டோ, ஓலைச் சுவடியோ,
ஆவணங்களோ, திருமுறை பிரபந்த அங்கீகாரமோ எதுவும் இல்லை" என்று 'தினமணி'
'சத்தியம்' செய்கிறது என்றால் அதன் உள்ளக் கிடக்கைதான் என்னே!
இன்னொன்று, தஞ்சைப் பெருவுடையார் கோயில்
சைவக் கோயிலே தவிர ஹிந்துக் கோயில் அல்ல. சைவத்தைச் சேர்ந்த பெரு மக்கள்
'சைவ மதம் ஹிந்து மதமல்ல' என்று இடித்து இடித்து அடித்து அடித்துக் கூறிய
பிறகும், வெட்கம் கெட்ட கூட்டம் சைவக் கோயில்களை ஹிந்துக் கோயில்கள் என்று
கூறுவது வெட்கக் கேடே!
ஆலய வழிபாட்டு முறையையும், தமிழ்
உணர்வையும் இணைக்க முற்படுவது அசட்டுத்தனம் என்றும் 'தினமணி' தலையங்கம்
கூறுகிறது. அந்த அளவுக்கு ஆரிய சமஸ்கிருத இன வெறி அவர்களுக்குப் புரையேறிக்
கிடக்கிறது.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று
வக்காலத்து வாங்குவோர் இது போன்ற இடங்களில்தான் பார்ப்பனர்களை அடையாளம் காண
முடியும் என்பதை உணர்வார்களாக!
இன்னொன்றையும் 'தினமணி' கூட்டத்தை
நோக்கிக் கேட்கிறோம், ஒரு விவாதத்துக்காகவே இதற்கு முன் சமஸ்கிருதத்தில்
தான் குடமுழுக்குகள் நடைபெற்றன -அவை மீறக் கூடாது என்று சொல்லுவது சரியா?
கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்
கூடாது என்று கூடத்தான் இருந்தது. மாற்றம் ஏற்படவில்லையா? ஏற்கெனவே
சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் வழிபாடு நடத்துவோம் என்ற நிலை ஏற்பட்டு
விட்டதே! கோயில் கருவறையில் உள்ள கடவுள்கள் எல்லாம் கோபித்துக் கொண்டு
நடைகட்டி விட்டனவா?
கோயில் நடையை எப்பொழுது சாத்துவது,
திறப்பது என்று ஆகமங்கள் இருக்கின்றன. ஆங்கிலப் புத்தாண்டின் போது விடிய
விடிய கோயில்கள் திறந்து கஜானாவை நிரப்புகின்றனவே - அப்பொழுதெல்லாம், இந்த
'தினமணி'கள் தலையங்கம் தீட்டிய துண்டா? இதுவும் ஒரு நல்ல வாய்ப்புதான்.
இக்காலத்துத் தலை முறையினர் பார்ப்பனர்கள் எத்தகையர் என்பதை நேரில் அறிந்து
கொள்ள அரிய வாய்ப்புக் கிடைத்து விட்டது அல்லவா!
No comments:
Post a Comment