சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரிய தலைமையகத்தை வடமாநிலங்களுக்கு மாற்றுவதால் எந்தபலனும் ஏற்படாது. அதற்குப் பதில்வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கிளைகளை அதிகரிக்கலாம் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரபாசிறீதேவன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முத்திய அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்துக் கான தலைமையிடம் சென்னையில் கடந்த 2003, செப்.15 அன்று உருவாக்கப்பட்டது. இதன் சர்க்யூட் பெஞ்ச் எனப்படும் கிளைகள் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன.
வணிகச் சின்னம், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு மற்றும் உரிமை மீறல் போன்ற அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வழக்குகளை நீதித்துறை உறுப் பினர்களுடன், தொழில்நுட்ப உறுப்பினர் களும் இணைந்து விசாரித்து தீர்ப்பளிப்பர் என்பதால் பன்னாட்டுஅளவில் முக்கியத் துவம் பெற்று விளங்குகிறது.
தற்போது சென்னையில் உள்ளஇதன் தலைமையகத்தை நாக்பூர்அல்லது ஜபல் பூருக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதற்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான பிரபாசிறீதேவன் கூறும்போது,
‘‘இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகம் எங்கு செயல்பட்டாலும் அதன் செயல் பாடுகளில் வேறுபாடுகள் இருக்கப் போவ தில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரக் குவியல் ஒரே இடத்தில் குவியக் கூடாது. நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும்.
டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என குரல் கொடுத்துவரும் வேளையில், சென்னையில் உள்ள இந்தஅலுவலகத்தை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதால் எந்த பலனும் ஏற்படாது.
அதற்குப் பதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, டில்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் எனஉள்ள கிளைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தலாம்.
காலியாக உள்ள நீதித் துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களின் பதவிகளை நிரப்பலாம்’’ என்றார்.
இதுதொடர்பாக திமுக மூத்த வழக் குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறும்போது,
‘‘இந்தியா,உலக வர்த்தக அமைப்பில் இணைந்தவுடன் காப்புரிமை சட்டங்களைச் சீரமைத்து ட்ரிப்ஸ் ஒப்பந்த சட்டத்திலும், நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. அந்த கால கட்டத்தில் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சராக வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முரசொலி மாறன், தோஹாவில் 2001-இல் வளரும் நாடுகள் சார்பில் பல மணிநேரம் வாதாடி இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காப்புரிமை சட்டங்களை திருத்தினார்.
இதன்மூலம் அறிவுசார் சொத்துரிமை போன்ற மிக முக்கியமான உரிமைகளை இந்தியா போன்றவளரும் நாடுகளுக்கு முரசொலிமாறன் பெற்றுத் தந்தார் என உலகப் பத்திரிகைகளும் அவரைவெகுவாகப் பாராட்டின. காப்புரிமையையும், அறிவுசார் சொத்துரிமையையும் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என சிந்தித்தவர் முரசொலி மாறன்.
அவருடைய முயற்சியால் சென்னையில் கொண்டு வரப்பட்ட இந்த தலைமையகம் கடந்த 16 ஆண்டுகளாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறைந்தபட்சம் முரசொலி மாறனின் நினைவைப் போற்றும் வகையிலாவது மத்திய அரசு இந்த தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது’’ என்றார்.