Tuesday, August 13, 2019

காலங் கருதி நடத்தப்பட்ட திருக்குறள் மாநாடு!

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னை காமராசர் அரங்கில் திருக்குறள் மாநாடு நேற்று  (12.08.2019) முழு நாள் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை அரங்கம் மட்டுமல்ல - வளாகமே மக்கள் திரள் நிரம்பி வழிந்தது.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருக்குறளை இயக்கப்படுத்திச் செயல்படுத்துவோம் என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாவது:
"தமிழினக் காப்பு நோக்கத்தில் எழுதப்பட்ட திருக்குறள் நூலை அடையாளங் கண்டு மீட்டெடுக்கவும், மக்களிடையே பரப்பல் செய்யவும் முயற்சிகள் மேற்கொண்ட எண்ணற்ற அறிஞர்கள், குழுகச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் இம்மாநாடு நன்றியோடு நினைவு கூர்கிறது. மேலும் திருக்குறளை இயக்கப்படுத்திச் செயல்படுத்திட அறைகூவல் விடுத்த தந்தை பெரியார் உள்ளிட்ட அறிஞர் பெரு மக்களின் நோக்கங்களைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்வோம் என இம்மாநாட்டின் வழி சூளுரைக்கின்றோம்"
என்பது முதல் தீர்மானமாகும். திருக்குறள் என்பது  - கற்றறிந்த  மக்கள் மத்தியிலே மட்டும் நடமாடிய திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற தலைவர் தந்தை பெரியாரே!
1949ஆம் ஆண்டில் திருக்குறள் மாநாடு நடத்தி அறிஞர் பெருமக்கள் எண்ணற்றவர்களையும் அழைத்து குறளுக்குப் பெரும் வீச்சை ஏற்படுத்தியவர் தந்தை பெரியாரே!
திருக்குறளை மலிவு விலையில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பரப்பிய சாதனையும் தந்தை பெரியார் அவர்களுக் குண்டு. 'உன் மதம் என்று கேட்டால் குறள் மதம் என்றும், குறள் நெறியென்றும் சொல்லுக!' என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!
நேற்றைய மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர்களான பொழிலன், திருமுருகன் காந்தி ஆகியோர் உரையில் ஒரு கருத்தை முக்கியமானதாக அழுத்திச் சொன்னார்கள்.
திருக்குறள் நெறி என்பது ஆரிய நெறிக்கு எதிரானது என்பதுதான் அந்த அழுத்தமான கருத்தாகும்.
பிறப்பில் பேதம் கற்பிப்பது ஆரியம் - சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்பதுதானே ஆரிய மதப் பரப்பு நூலான கீதை. ஆனால் திருவள்ளுவரோ "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சொன்னவராயிற்றே!
"பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்" என்று சொன்னவர் தந்தை பெரியார்.
பார்ப்பனர்கள் திருக்குறளை எதிர்ப்பதற்கு அடிப்படையான காரணம் - தங்களின் வருணாசிரமத்தின் ஆணி வேரை அடியோடு அழிக்கும் ஆயுதம் திருக்குறள் என்பதால்தான் எப்பொழுதுமே திருக்குறளை வேறு கண்ணோட்டத்தில் பார்த்து வந்தனர். ஆண்டாளின் திருப்பாவையில் "தீக்குறளைச் சென்றோ தோம்" என்ற வரிக்கு மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார் தெரியுமா?
தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று பொருள் சொன்னாரே!
'குறளை' என்ற சொல்லுக்குக் கோள் சொல்லுதல் என்று பொருளாகும். ஆனால் அதற்குத் திருக்குறள் என்று பொருள் கொடுத்து, திருக்குறளைப் படிக்க மாட்டோம் என்று பொருள் சொன்னவர்தான் ஜெகத்குருவாம்!
அதே வழியில் வந்த நாகசாமி என்ற பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி உலகம் முழுவதும் பரப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் "குருநாதரான" கோல்வால்கரின் 'ஞான கங்கை' (Bunch of Thoughts) எனும் நூலில் திருக்குறள் ஓர் இந்து மத நூல் என்று எழுதியிருக்கிறார்.  நேற்றைய மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் அதனையும் எடுத்துக் காட்டினார்.
இருட்டடிப்பு, திரிபுவாதம், அணைத்தழிப்பு என்பதெல்லாம் பார்ப்பனீயத்துக்கே உரித்தான கை வந்த கலையாகும்.
எல்லாவற்றையம் கடந்து குறள் நிலை பெற்றது என்ற நிலையில் என்ன சொன்னார்கள் இந்தப் பார்ப்பனர்கள்? ஆதி என்ற புலைச்சிக்கும், பகவன் என்ற பிராமணனுக்கும் பிறந்தவரே திருவள்ளுவர் என்று கதை கட்டவில்லையா!
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் என்ற பார்ப்பனர் மக்கள் பேறு என்ற அதிகாரத்துக்குப் பொருள் கூறும் பொழுது, மக்கள் பேறு என்றால் ஆண் மக்களே என்று எழுதவில்லையா? இது பார்ப்பனீயத்துக்கே உரித்தான சித்தாந்தம் அல்லவா?
மத்தியிலே இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஆதிக்க ஆட்சி அதிகாரம் செலுத்தும் இந்தக் கால கட்டத்தில் அதற்கு மறுப்பாகவும், பார்ப்பன ஆரிய தத்துவத்துக்கு எதிரானதாகவும் உள்ள திருக்குறளின் தத்துவத்தைப் பரப்பும் இம்மாநாடு காலங் கருதிக் கூட்டப்பட்டதாகும். மாநாட்டை ஒருமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்திய பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர் அனைவருக்கும் பாராட்டுகளும் - வாழ்த்துகளும் உரித்தாகுக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...