Monday, August 19, 2019

30-40 ஆண்டுகள் பின்னோக்கி பொருளாதார வீழ்ச்சி!

"இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குக் காரணமானோர் நரசிம்மராவ், மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட நால்வர்தான்" என்று புகழாரம் சூட்டியுள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்  நாராயண மூர்த்தி.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் "பொருளாதார வளர்ச்சியில்  ஒத்துழைப்பு" என்ற தலைப்பில் அவர் பேசியதாவது, கடந்த 1980களில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய போது நாட்டில் எந்த தொழில்நுட்பப் புரட்சியும் நிகழ்ந்திருக்கவில்லை. ஒரு தொலைப்பேசி இணைப்பைப் பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆனது. முன்னுரிமை அடிப்படையில்தான் தொலைப்பேசி இணைப்புகள் வழங்கப்படும்.
ஒருமுறை தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சி.எம்.ஸ்டீபனிடம் சிலர் சென்று தங்களின் தொலைப்பேசிகள் வேலை செய்யவில்லை என்று புகாரளித்ததற்கு, பரவாயில்லை, அப்படி ஒன்று உங்களிடம் இருப்பதாக சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தற்போது பிரதமர் இந்திரா காந்தியின் தொலைப்பேசியே வேலை செய்யவில்லை என்று அவர் கூறியதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.
இது இப்படியென்றால், சுமார் 1,00,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு கணிப்பொறியை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், டில்லிக்கு 50 தடவைகள் பயணம் செய்து, அதே 1,00,000 அமெரிக்க டாலர் செலவழித்திருக்க வேண்டும். அன்றைய நிலையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.6.2 என்பதாக இருந்தது.
வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றாலும் ஆர்பிஅய்-யிடம் விண்ணப்பம் செய்து 3 வாரங்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவேளை சாதகமான பதிலைப் பெறலாம். இந்த நிலைமைகள் மாறாதா என்று ஏங்கிக் கிடந்திருக்கிறோம்.
ஆனால், அந்த மாற்றமும் ஒருநாள் நடந்தது. நரசிம்மராவ், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் மாண்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். கடந்த 45 ஆண்டுகளாக முடியாததை ஒரேவாரத்தில் செய்து முடித்தார்கள். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை சாத் தியமாக்கினார்கள் என்று புகழ்ந்துள்ளார் நாராயண மூர்த்தி.
சொல்லுகிறவர் அரசியல்வாதியல்ல.  உள்நோக்கம் கற்பிப்பதற்கு - நாட்டின் யதார்த்த நிலையை கலப்படமற்ற உண்மையோடு மனந்திறந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பூடான் சென்று இந்தியாவில் வறுமை ஒழிப்புத்திட்டம் வேகமாக செயல்படுவதாகப் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.
வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் வறுமை ஒழிப்பு என்பதெல்லாம் வெற்றுச் சொற்களே! இந்திய வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு முதன் முதலாக இரு சக்கர வாகன விற்பனை கீழிறக்கத்தில் (மைனசாக) போய்க் கொண்டு இருக்கிறது. மாருதி தனது உற்பத்தியை 50 விழுக்காடு நிறுத்தி யுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2018-2019) பொருளாதார வளர்ச்சி 6.8 விழுக்காடாகும். அண்மைக் காலாண்டு வளர்ச்சியானது 5.8 விழுக்காடாகும். முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் கூறுகிறார்; கடந்த நிதியாண்டின் உண்மையானவளர்ச்சி 4.3 விழுக்காடு மட்டுமே, என்கிறார். இது நமது கடந்த கால வளர்ச்சி விகிதங் களுடன் ஒப்பிடுகையில் இந்தியா 30-40 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது என்கிறார். இதுதான் மத்திய பிஜேபி ஆட்சியின் சாதனை! வெறும் விளம்பர வெளிச்சத்தின் சாயம் வெகு நாள் நிலைக்காது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...