Friday, May 25, 2018

25 ஆம் தேதி முழு வேலை நிறுத்தம் வெற்றியடைய ஒத்துழைப்பு தாரீர்!

தமிழர்  தலைவர்  அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தை சரியான அணுகுமுறையின்றி, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி  வரலாற்றில் இதற்குமுன் எப்போதும் தமிழ் நாட்டில் நடந்திராத வகையில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு மக்களிடத்தில் மட்டுமல்ல; மனிதநேயம், மனித உரிமை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சட்டப்படி எந்தவித விதிமுறை களையும், நியதிகளையும்கூட பின்பற்றாது, ஆலை முதலாளிகளுக்கு அனுசரணையாக மாநில அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட போக்கு கண்டிக்கத் தக்கதாகும். தூத்துக்குடியை சுடுகாடாக்கும் போக்கிற்கு முடிவு கண்டாகவேண்டும்.

மக்களின் கண்டன உணர்வைப் பதிவு செய்யும் வகையிலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய அளவில் நாளை (25.5.2018) அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்யுமாறு பொது மக்களையும், வணிகப் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.



-கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார் கழகத் தலைவர்



திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை - சென்னை கோபாலபுரம் இல்லத்தில், 23.5.2018 இரவு 8 மணியளவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, கலைஞர் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன்'', பூந்தோட்டம்'' ஆகிய திராவிடர் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களை வழங்கினார். கலைஞர்அவர்கள் நூல்களை ஆர்வமுடன் பார்த்தார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி .பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், முன்னாள் மத்திய அமைச்சர்  ஆ. இராசா ஆகியோர் உள்ளனர்.

போராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா?

ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்?

ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க எந்தவித விதிமுறைகள், நியதிகளைப் பின்பற்றாமல் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைப் பார்க்கும்போது இனி போராட்டம், மக்கள் பேரணி என்று நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் - சாவுதான் என்று அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது என்று தெரிவித்த   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வேதாந்தா' என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதலாகவே கடந்த 20 ஆண்டு களுக்குமேல் மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஆலையை மூடுமாறு 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தடையை நீக்கி விட்டது. இந்த ஆலை வந்தபோதே தொடக்கத்தில் மீனவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

காற்று, நிலத்தடி நீர் உள்படப் பாதிப்பு!

இந்த ஆலையின் கழிவால் காற்று, நிலத்தடி நீர்ப் பெரிதும் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார 14 கிராமப் பகுதி மக்களும் கடும் நோய்க்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த ஸ்டெர்லைட் ஆலை என்பது உலகின் பல நாடுகளாலும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகி யுள்ளது.

பல இடங்களில் விரட்டப்பட்ட ஆலை


இந்தியாவில் குஜராத்தில் தொடங்கப்பட இருந்தபோது கடும் எதிர்ப்புக்குப் பிறகு கைவிடப்பட்டது - அதன்பின் கோவா, மகாராட்டிரத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலை தொடங்க அறிவிப்பு வந்த நேரத்திலேயே மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே அங்கிருந்து விரட்டப் பட்ட இந்த ஸ்டெர்லைட் ஊருக்கு இளைத்தது தமிழ்நாடு என்ற இளக்காரத்தின் அடிப்படையில் இங்கே கொண்டு வந்து திணிக்கப்பட்டது.

99 நாள்களாக அப்பகுதி மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டுப் போராடி வருகிறார்கள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல, ஆலை மேலும் விரிவாக்கம் என்ற செய்தி வருகிறது.

நூறாவது நாளில் மக்கள் பேரணி ஒரு லட்சம் பேர் திரளுவோம் என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்கவேண்டும்?

மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போதிய அளவு உத்தரவாதம் கொடுத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கவேண்டாமா?

தொலைநோக்குப் பார்வை இல்லாதது ஏன்?

ஒரு லட்சம் மக்கள் திரளுகிறார்கள் என்றால், காவல் துறை அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டாமா?

நடந்துள்ளவற்றைப் பார்த்தால், திட்டமிட்ட வகையில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

பேரணி தொடங்குவதற்குமுன் நுண்ணறிவு காவல் துறை என்னானது?

பேரணி தொடங்கும் இடத்திலேயே தடுத்திருக்கவேண் டாமா? மக்களை உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு, காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல் அல்லவா வேட் டையாடியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்குமுன்
பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றாதது ஏன்?

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தவேண்டுமானால், அதற் கென்று வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக் கின்றனவே. எச்சரிக்கை செய்யவேண்டும்; வானத்தை நோக்கிச் சுடவேண்டும்; சுடுவதற்குமுன் அதற்குரிய அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இவற்றிற்குப் பிறகும், சுடவேண்டிய அவசியம் ஏற் பட்டால், முழங்காலுக்குக் கீழே சுடவேண்டும் - இவற்றில் எந்த நியதிகளையும் பின்பற்றாது காவல்துறை நடந்திருப்பதைப் பார்க்கும்பொழுது, நாம் ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று உடலைக் கிள்ளிப் பார்க்கவேண்டியுள்ளது.

குறி வைத்து சுட்ட கொடுமை!


வாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு (காவல்துறை உடை யில்லாதவர்கள்கூட) குறி பார்த்துச் சுட்ட காட்சியைப் பார்த்தபோது குலையெல்லாம் நடுநடுங்கியது. குருதியே உறைந்துவிடக் கூடிய மனிதாபிமானமற்ற  கொடூரமான மனித வேட்டை அது என்பதில் அய்யமில்லை.

அரசு என்ற ஒன்று இருக்கிறதா?

22 ஆம் தேதிதான் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் - தமிழ்நாட்டு மக்கள் கொதி நிலைக்கு ஆளானார்கள்; தலைவர்கள் எல்லாம் கண்டித்து அறிக்கைகளை விட் டனர்.

இவ்வளவுக்குப் பிறகும் மறுநாளும் (நேற்று - 23.5.2018) துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால், இது என்ன அக்கிரமம் - ஆணவம்!

அரசு ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அதன் கையைவிட்டுக் காவல்துறை சென்றுவிட்டதா?

இனி போராட்டம் என்றால் துப்பாக்கிச் சூடு என்று அச்சுறுத்தலா?
நேற்று ஒரு தோழர் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாயை அடித்துக் கொன்று தரையில் இழுத்து வருவதுபோல, தரதரவென்று இழுத்து வந்த காட்சியைக் கண்டபோது ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவேயில்லை. இனிப் போராட்டம் நடந்தால், இப்படித்தான் நடக்கும் - எச்சரிக்கை என்பதற்காகவோ, ஆலை முதலாளியைத் திருப்திப்படுத்துவதற்காகவோதான் காவல்துறை இப்படி நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பொதுவாக மக்களிடையே உருவாகியுள்ளது என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம். உளவுத் துறை என்ன செய்து கொண்டுள்ளது என்றும் தெரியவில்லை!

இதற்கிடையே இணைய தளங்களின் செயல்பாட்டை முடக்கி இருக்கிறது தமிழக அரசு. சில தொலைக்காட்சி சேவையையும் முடக்கி இருக்கிறது. நாட்டில் அறிவிக் கப்படாத நெருக்கடி நிலை வந்துவிட்டதா?

அமைச்சர்கள் செல்லாதது ஏன்?


பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் சென்று இருக்கவேண்டாமா? அமைச்சர்களே அந்தப் பக்கம் தலைகாட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று கருதவேண்டியுள்ளது.

டில்லியில்கூட தமிழ்நாடு அரசு இல்லத்தின்முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் வீட்டின்முன் அங் குள்ள தமிழர்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரமாக மூடுக!


நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய - மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம் - இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக்கூடாது. வருமுன்னர் காப்பது தான் புத்திசாலித்தனம். அரசின் கொள்கை முடி வாக (Policy Decision) அமைச்சரவை கூடி முடி வெடுத்தால், நீதிமன்றங்களும் தலையிட முடியாது.

விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!


துப்பாக்கிச் சூடுபற்றி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓர்ந்து கண்ணோடாது தீர விசாரித்து அறிக்கையினை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தளபதி மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட

தலைவர்களின்மீது வழக்கா?


துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர்மீது வழக்குத் தொடுத்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியது. விநாசகாலே விபரீத புத்தி என்பது இதுதான்!

தலைவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெறவேண்டும்.

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

Tuesday, May 15, 2018

பாம்பின் விஷத்தை விடக் கொடியது மூடநம்பிக்கை!

பாமர மக்கள் எவ்வளவு எளிதில் மூடநம்பிக்கை களுக்கு ஆளாகி தங்களது வாழ்க்கையையே பலி கொடுத்துக் கொண்டுள்ளனர்.

நாட்டில் அறிவியல் பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகிறதே தவிர, அறிவியல் மனப்பாங்கு (scientific temper) மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிட எந்த முயற்சியும் செய்யாததோடு, பழைய கந்தல் புராணப் புளுகுகளுக்கெல்லாம் அறிவியல் முலாம் பூசிடவும் முயற்சிகளை இப்போதுள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் செய்து,  உலக விஞ்ஞானிகளையே அதிர்ச்சியும், அருவருப்பும் ஏற்படுத்தி தலைகுனியச் செய்து வருவது இன்னும் மோசம்.

குதிரை, கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்ததை  போன்று உள்ளது இந்த பழமைக்கு பொருத்தமில்லாத மேல் பூச்சுப் பூசுவது!

நேற்றைய  'தின இதழ்' நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. மனிதநேயம் உள்ள அனைவரது உள்ளங்களையும் நோகடிக்கும் செய்தி. அப்படியே தருகிறோம்.

"பாம்பு கடித்த பெண்ணின் உயிரைப் பறித்த மூடநம்பிக்கை!" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள முழுச் செய்தி:

"நாளுக்கு நாள் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. குறுக்கு வழியில் நடக்க வேண்டும், உரிய காலத்திற்கு, முன்னரே நமக்கு கிடைக்க வேண்டும் . ஓவர் நைட்டி ல்  ஒபாமா   ஆகிட  வேண்டும் என்று  நினைப்பவர்களை மனதில் வைத்துக் கொண்டு புரளிகளை கிளப்பி விட்டு சம்பாதிப்பதற்கென்றே சிலர் உலா வரு கிறார்கள். அவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மட்டுமல்ல, சற்று விழிப் புணர்வுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும். அவர்களை கண் மூடித்தனமாக நம்பினால் நீங்கள் உங்களுடைய உயிரைக்கூட பலிகொடுக்க நேரிட லாம். கோமியத்தில், மாட்டுச் சாணத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அதைக் குடித்தால் சர்வரோக நிவாரணியாக செயல்படும் என்ற பில்டப்புகளை நம்பி இங்கே ஒருவர் தன் மனைவியையே பறிகொடுத்திருக்கிறார்....

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ். என்பவருக்கு தேவேந்திரி என்ற மனைவியும் அய்ந்து குழந்தைகளும் இருக்கி றார்கள். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவ்வப்போது தேவேந்திரியும் தன்னால் இயன்ற வேலைகளை செய்து பொருளீட்டி வந்திருக்கிறார். விறகடுப்பினை தான் முகேஷ் வீட்டில் பயன்படுத்துவார்கள். அன்று முகேஷ் வேலைக்கு கிளம்பிட, அடுப்பெரிக்க விறகு வேண்டும் என்று சொல்லி. வீட்டிற்கு அருகில் இருந்த முள் காட்டிற்குள்   விறகு வெட்டி வர சென்றிருக்கிறார் தேவேந்திரி.

விறகினை வெட்டி  வெட்டி  கட்டி தலையில்  தூக்கி  வைக்கும் சமயத்தில் எங்கிருந்தோ வந்த கரும் பாம்பு ஒன்று தேவேந்திரியை கொத்தியிருக்கிறது. அதைப்  பார்த்து  பதறிப் போன  தேவேந்திரி விறகினை அங்கேயே  போட்டு  விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியிருக்கிறார்.

முதலில் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு ஓடியவரை இடைமறித்த கணவர், எங்கே இப்படி அவசரமாக ஓடுகிறாய் என்று கேட்டிருக்கிறார், கதையைச் சொல்ல.... மருத்துவமனைக்குச் செல்ல லாம் என்றிருக்கிறார் மனைவி.

இல்லை. அதெல்லாம் வேலைக்கு ஆகாது, பாம்பின் விஷத்தை எடுக்க பாம்பாட்டி தான் சிறந்தவர். அதனால் நாம் உடனடியாக இப்போது செல்ல வேண்டியது மருத்துவரிடம் அல்ல, பாம்பாட்டியிடம் என்று சொல்லி அவ்வூரின் பாம்பாட் டியான முராரேவிடம் சென்றிருக்கிறார்கள். பாம்பு கடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் விஷம் பரவியிருக்குமே என்கிறார் முராரே...

இருவருக்கும் பயம்.... இப்போது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க, என் உயிரைக் காப்பாற்ற வழியே இல்லையா என்று கெஞ்சுகிறாள் தேவேந்திரி. சிறிது நேரம் யோசித்த பாம்பாட்டி முராரே... இருக்கிறது. இதற்கு ஒரே வழி தான் இருக்கு. இதைச் செய்தால் உடலில் கலந்திருக்கும் பாம்பின் மொத்த விஷத்தையும் எடுத்துவிடலாம் என்கிறார்.

இருவருக்குமே  மிகுந்த சந்தோஷம்.

இதன்  பிறகு அந்த விபரீதமான செயலில் இறங்குகிறார்கள். பாம்பாட்டி முராரேவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார் முகேஷ்.

அங்கே வாசலில் மனைவி படுத்துக் கொள்ள தொழுவத்தில் இருக்கிற மாட்டுச் சாணத்தை எடுத்து வந்து மனைவியின் உடல் முழுவதும் பூசி மூடுகிறார் முகேஷ்.

மக்கள் கூட்டம் கூடிவிட்டார்கள்... என்னாச்சு? என்ன செய்கிறாய் நீ.... என்ன நடந்தது என்று ஆயிரம் கேள்விகள்... சிலருக்கு பதில் சொன்னார். சிறிது நேரத்தில் தேவேந்திரி உடல் முழுவதும் மாட்டுச் சாணத்தால்  மூடப்பட்டிருந்தது.

இப்போது அதன் அருகில் வந்து அமர்ந்த பாம்பாட்டி முராரே மந்திரங்களை சொல்ல ஆரம் பித்தார்.

சுமார் 75 நிமிடங்கள் மந்திரங்கள் சொல்லி விட்டு இப்போது இந்த சாணத்தை கலைத்துவிட்டுப் பார்.

உன் மனைவி துள்ளியெழுந்துவிடுவாள் என்று சிரித்திருக்கிறார் முராரே.

முகேஷும் அவசர அவசரமாக மனைவி உடல் மீது அப்பிய மாட்டுச் சாணத்தை எல்லாம் கலைத்துப் பார்த்திருக்கிறார்.

தட்டி எழுப்பியிருக்கிறார், தண்ணீர் தெளித் திருக்கிறார் ஆனால் தேவேந்திரி எழுந்திருக்கவே யில்லை. பிறகு தான் தெரிந்தது, மாட்டுச் சாணத்தை வைத்து மூடிய போதே மூச்சுத் திணறி தேவேந்திரி இறந்துவிட்டார்.

இந்த மருந்தை அரைத்துக் கொடுக்கிறோம், அதை குடிக்கச் சொல், இறுக்கமாக கயிரை முதலில் கட்டு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்... என்று நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால் முகேஷ் கேட்கவேயில்லை என்கிறார்கள் அதை வேடிக்கை பார்த்த மக்கள். இப்படி நடக்கும் என்று எதிர் பார்க்கவேயில்லை, தேவேந்திரி பிழைத்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது என்று எஸ்கேப் ஆகிவிட்டார் முராரே.

இப்போது தேவேந்திரியின் அய்ந்து குழந்தை களும் தாயை இழந்து அனாதைகளாகி விட்டார்கள்." என்பதுதான் அந்த செய்தி!

பாம்பின் விஷத்தைவிட, மூடநம்பிக்கையின் விஷம் எவ்வளவு ஆபத்தானது பார்த்தீர்களா? திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் தமிழ்நாட்டில் செய்து வரும் மூடநம்பிக்கை எதிர்ப்பு - ஒழிப்புப் பிரச்சாரம் எவ்வளவு தேவையானதொரு பிரச்சாரம் என்பதை இப்போதாவது எண்ணிப் பாருங்கள் - முடிந்தவரை மூடநம்பிக்கைகளின் முதுகுத் தோலை உரியுங்கள்!

'நாகராஜா' என்று பால் வார்க்கும் பக்த சிரோன் மணிகளும் இதைப் படித்து உய்த்து உண்மையை உணர்வார்களாக!

சவால் விடுகிறார் எஸ்.வி.சேகர் என்ற பி.ஜே.பி. பேர்வழி சென்னை காவல்துறை என்ன செய்கிறது?

பி.ஜே.பி. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தைத் தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில்  அவர்மீது,  அவதூறு பரப்பி அமைதியை சீர்குலைப்பது (இ.த.ச.504), ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக குற்றம் இழைக்கத் தூண்டுவது (இ.த.ச. 505 (1) (சி), சொல், செயல் மூலமாக பெண்களின் நடத்தையை இழிவுபடுத்துவது (இ.த.ச.509), தமிழ்நாடு பெண் களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவான அந்த நபர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அந்தப் பேர்வழி, சென்னையில் நேற்று முன்தினம் (12.5.2018) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார்!

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய

இணைஅமைச்சர்பொன்.இராதாகிருஷ்ணன்அவர்களை யும் சந்தித்துள்ளார். இந்தச் செய்தி நேற்றே (13.5.2018) தொலைக் காட்சிகளிலும், விடுதலை' நாளிதழிலும், இன்று தினத்தந்தி'யிலும் வெளிவந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னை யில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும்'' என்று சவால் விடுத்துள்ளார் (ஒன் இண்டியா டாட்.காம்).

சென்னைப் பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னைப் பெருநகரக் காவல்துறையும் - அதன் சிறப்பான ஆணையரும்.

இத்தகு காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே!

இந்த நிலை தமிழக அரசுக்கும், சென்னை பெருநகரக் காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதாகாது.

உடனே, சவால் விடும் அந்தப் பேர்வழியை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்!

 கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

14.5.2018

தமிழர்களின் பாதுகாப்பு சமன்மை பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்!

மலேசியாவில் டாக்டர் மகாதீர் தலைமையிலான ஆட்சி
பிரதமருக்கும் - அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள் !

மலேசியாவில் அனுபவப் பழமான 92 வயது டாக்டர் மகாதீர் ஆட்சியில், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கான பாதுகாப்பு, அமைச்சரவையில் தமிழர்களுக்குப் பங்களிப்பு, சமன்மை உறுதிப்படுத்தப்படும் என்று நம்புகிறோம் - பிரதமர் உள்பட அமைச்சர்களுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள் என்று கூறி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மலேசிய நாட்டில் கடந்த 9.5.2018 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்ட டாக்டர் மகாதீர் அவர்களது தலைமையிலான கட்சி, பல காலம் பதவியிலிருந்த அம்னோ (ஹினீஸீஷீ) கட்சியை - அதன் கூட்டணி பாரிசானை தோற்கடித்து, வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
மலேசியாவின் பிரதமர் 92 வயது அனுபவப் பழம்
வெற்றி பெற்ற டாக் டர்மகாதீர்அவர்கள்தலை மையில் அங்கே புதிய அமைச்சரவை அமைந் துள்ளது. டாக்டர் மகாதீர் அவர்கள்92வயதுநிரம் பியவர். தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபட்டு, ஏற்கெனவே அன்வார்இப்ராகிம்அவர் கள் தலைமையில் இயங்கும் கட்சியுடனும், மற்ற சில கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து - குறுகிய காலத்தில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுள்ளார்.
டாக்டர் மகாதீர் அவர்கள் ஆளும் அனுபவத்தில் பழுத்தவர். மலேசியர்களும், சீனர்களும் - இந்தியர்கள் என்ற தலைப்பில் பெரிதும் தமிழர்களும் வாழும் நாடு அந்நாடு.
பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமியின் வெற்றி
பினாங்கு மாநிலத்தில் எதிர்க்கட்சிதான் ஆளுங் கட்சியாக தொடர்ந்து பெற்றி பெற்று மாநில ஆட்சியை நடத்தி வருகிறது.
அதில் துணை முதல மைச்சராக மொழிப்பற்றும், இன உணர்வும், ஆளுமையும் நிறைந்த திரு.இராமசாமி அவர்கள் பொறுப்பேற்று சிறந்த புகழை ஈட்டியுள்ளார். அவர் இத்தேர்தலில் முன்னரே அதிகமான அளவுக்கு வாக்குகள் வாங்கி வரலாறு படைத்து, மீண்டும் தற்போது வெற்றி பெற்றுள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்பது மகிழத்தக்க செய்தி!
தமிழர்களுக்குப் பாதுகாப்பு
அங்கே தமிழர்கள் கடாரம் புகழ்பெற்ற இனத்தவர்கள். மண்ணின் மைந்தர்களான மலாய் குடிமக்களும், தமிழர்களும், சீனர்களும் வாழும் பல் இன சமுதாயங்களை உள்ளடக்கிய நல்லாட்சியாக நடைபெறும் என்பதில் அய்யமில்லை. புதிய பொறுப்பேற்றுள்ள ஆட்சியில் தமிழர்களின் நலனும், வாழ்வுரிமையும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு ஆட்சியில் பங்கு - பொறுப்பினை ஏற்று நடத்திடும் சமன்மை முதலியவற்றில் புதிய பிரதமர் சமூக நல்லிணக்கத்தோடு திறம்பட நடத்திடுவார் என்றே நம்புகிறோம்.
அனைவருக்கும் வாழ்த்துகள்
(இந்தியர்கள்) தமிழர்கள் பிரச்சினையை நன்கு புரிந்தவர்தான் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பழம்பெரும் தலைவரான டாக்டர் மகாதீர் அவர்கள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துகளை - பண்பாட்டுப் பழம்பெரும் உறவுகள் அடிப்படையில் கூறுகிறோம்.
மலேசியத் திருநாட்டிற்குத் தந்தை பெரியார் இருமுறை சென்று திரும்பியுள்ளார்கள்.
அரசியல் கட்சியாக இல்லாது சமூக சீர்திருத்த இயக்கமாக மலேசிய திராவிடர் கழகம் அங்கே இயங்கி வருகின்ற ஒரு பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கமாகும்!
அனைவருக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்!

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
14.5.2018

Friday, May 11, 2018

அருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்!

ஒரு வகுப்பறை - அதில் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்.
உலகின் ஏழு அதிசயங்கள் என்ன? எவை எவை?
மாணவர்களில் பலரும் உடனே பட்டியலிட்டு விடையளிக்கிறார்கள். விவாதமும் தொடங்கியது.
1.  எகிப்தின் 'பிரமிடு'கள்
2. தாஜ்மகால்
3. தி கிராண்ட்கேரியன்
4. பனாமா கால்வாய்
5. சீனப் பெருஞ்சுவர்
6. பாரிசில் உள்ள மாதா கோயில் (பாசிலிக்கா)
7. எம்பயர் ஸ்டேட் பில்டிங் (நியூயார்க்)
இப்படிப் பலரும் பதில் அளித்துப் பட்டியலிட்டனர்.
இதில் சில சில மாறுபட்ட கருத்துகளும் அங்கே இருந்தன.
ஒரே ஒரு மாணவி மட்டும் இத்தகைய பட்டியல் - 7 அதிசயங்கள் பற்றிய கலகலப்பு வாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இதை கவனித்த ஆசிரியர், அம் மாணவியிடம் வந்து, 'ஏனம்மா நீங்கள் மட்டும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது போல உள்ளீர்கள்' என்று கேட்டார்.
அமைதியாக அமர்ந்திருந்த அந்த மாணவி தனது மவுனத்தைக் கலைத்தார். 'அய்யா இவர்கள் தந்த உலகின் ஏழு  அதிசயங்கள் என்ற இந்தப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லை'.
"எனது சிந்தனை ஓட்டம் வேறுவிதமாக உள்ளது!" என்றார்.
"அப்படியா உங்களுக்கு அதில் உடன்பாடில்லையா? பரவாயில்லை. நீங்கள் ஏதாவது தனித்தப் பட்டியலைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா? அப்படியானால் அதனை இந்த வகுப்பில் தாராளமாகச் சொல்லலாம்; மாறுபட்ட கருத்தானாலும் பரிசீலிக்கலாம்; தாராளமாக அதை இந்த வகுப்பில் கூறலாமே" என்றார்!
"என்னைப் பொருத்தவரை ஏழு அதிசயங்களுக்காக உலகத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, தேடிட வேண்டாம்.
சரியாக யோசித்தால் நம் ஒவ்வொரு மனிதருள்ளும் அந்த ஏழு அதிசயங்கள் நிலை கொண்டுதான் இருக்கின்றன! எடுத்துக்காட்டாக, -
1. தொடுதல் (to touch)
2. சுவைத்தல் (to taste)
3. பார்த்தல் (to see)
4. கேட்டல் (to hear)
5. உணர்தல் (to feel)
6. சிரித்தல் (to laugh)
7. நேசித்தல் (to love)
இவைகள் எல்லாம் மனிதர்களுக்கு அவர்களிடமே உள்ள ஏழு அதிசயங்கள்தான்!
தொலை தூர நாடுகளுக்கும், நகரங்களுக்கும் நாம் அலைந்து திரிந்து, பறந்து ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்!
எதுவுமே அருகில் இருந்து எளிதில் கிடைத்தால், அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு மகிழாமல் புறந்தள்ளி விடுகிறோம்.
எனவே வேகமாக ஓடாதீர்கள், மெல்ல நடங்கள் - நின்று யோசித்து, உணர்ந்து, கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து, சிரித்து மகிழ்ந்து, அன்பும், நேசமும் அனைவரிடமும் காட்டுங்கள்"
என்னே தெளிவான, துணிவான பதில்!
அருகில் இருப்பதால் எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
எளிதில் கிடைப்பதால் அரிதானதல்ல என்று எண்ணாதீர்கள்!
எளிமையாக இருப்பவர்களை ஏளனப் பார்வையால் கொன்று விடாதீர்கள்!
கள்ளங்கபடமற்ற சிரிப்பால் நோயை விரட்டுங்கள்!
எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை "அதிசயங் களையும்" உங்களுக்குள்ளேயே வைத்து தனிமைப் படுத்தி  விடாமல், ஊர் நலம், உலக நலம் ஓம்பப் பயன்படுத்தி அறத்தால் வரும் இன்பத்தை அள்ளிப் பருகுங்கள்; தள்ளிப் போடாதீர்!
(இணையத்தில் வந்த ஒரு துணுக்கை வைத்து எழுதப்பட்டது).

எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவர்'' இந்த நாட்டிலே?'

இன்றைய (10.5.2018) நாளேட்டில் இரண்டு திருட்டு - மோசடிச் செய்திகள்! விசித்திரமான மோசடிகள்!
இரண்டிலும் வருணமும், வர்க்கமும்; நம் மக்கள் (பெண்கள்) பக்தி, தோஷம் என்பதற்கு இரையாகி, கைப்பொருள் இழந்தவர்களாகி', பிறகு காவல்துறைக்கு வேலை தருகிறார்கள்!
ஆந்திராவிலிருந்து வந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த சீனுவாசன், திருட்டின்மூலமே சில்வர் சீனுவாசன்' ஆகிவிட்டார்!
70 வயது மதிக்கத் தகுந்த (அநேகமாக மேல் குலத்துப் பெரியவா) கடந்த 60 ஆண்டுகளாக, வெள்ளி, தங்க நகைகளை மட்டுமே குறி வைத்து, திருடுவதற்கு நல்ல களம், பக்தியுள்ளவர்களின் வீடுதான் என்று கண்டுபிடித்துவிட்டார் போலும்! அங்கே சென்று, பெண்களின் குறை கேட்டு, தோஷம் கழிப்பதாகச்'' சொல்லி,  அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை குடங்களில் போடச் சொல்லி, பிறகு - வெண்ணை திருடிய கண்ணனைப் போல - சென்றுவிடுவார்! இவருக்கு வானமே கூரை - பிளாட்பாரமே படுக்கை அறை எல்லாம்! இந்த சிங்கம்' சிங்கிளாத்தான் வருமாம்! அதே கும்பகோணத்திற்குப் பக்கத்திலுள்ள நுனிநாக்கு ஆங்கில மேதை வலங்கைமான் சாஸ்திரி - ரைட் ஆனரபிள் சீனுவாச சாஸ்திரி - என்னபெயர் பொருத்தம் பார்த் தீர்களா? சாஸ்திரி - சில்வர் டங்' சீனுவாச சாஸ்திரி என்று வெள் ளையர் ராஜ்ஜியத்தில் பட்டம் பெற்றார்!
இவரோ தன் கைத்தொழில்'மூலமே சில்வர் சீனுவாசன்' ஆகிவிட்டார்!
திருட்டுத் தொழிலுக்கும் சஷ்டியப்த பூர்த்தி' கொண்டாடிய சாதனையாளர் இவர்! (இவரது பூர்வீகம் திருப்பதி என்கிறது இந்து' ஏடு) கோவிந்தா! கோவிந்தா!!
மற்றொரு செய்தி - அதே நாளேட்டில்தான் இன்று!
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை 1.4 கோடி ரூபாய்க்கு விற்று மோசடி செய்த தந்தை - மகன் கைது செய்யப்பட்டுள்ளார்கள், டில்லியில்!
டில்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வீரேந்திரர்; அவரது பேராசைக்கு அவரே பலியாகி ஏமாந்துள்ள கதை - அறிவியலும், கற் பனை வளமும் கலந்து ஏமாற்றப்பட்ட விந்தையான விந்தை யாகும்!
இது சக்தி வாய்ந் தது; இதனை வைத் திருப்பவர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்; (அட்சய திருதையில் நகை வாங்கினால் பொன் குட்டி போடும் என்று விட்ட புருடா'போல) வேண்டுமானால் மத்திய அரசின் டி.ஆ.டி.ஓ. அமைப்பினர் ஆய்வு செய்து, அவர்கள் கொடுக்கும் சர்டிபிகேட்டை வைத்து அமெரிக்க நாசா அமைப்புக்கு அனுப்பினால், அவர்கள் 34,000 கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று அளந்து' - அந்தத் தொழிலதிபரை நம்ப வைத்தனர்.
அமெரிக்க நாசாவிற்கு விற்ற பிறகு, கிடைக்கும் லாபத்தில் 70:30 சதவிகிதம் என்று பிரித்துக் கொள்ளலாம்; மேலும் தகரத்திலிருந்து அணுக்கதிர் வீச்சு வரும்; அதிலிருந்து காத்துக்கொள்ள தனியாக உடை வாங்கவேண்டும்; வெள்ளி நிற உடை வாங்க என இரண்டு லட்சம் ரூபாய்களும் வாங்கி விட்டனர்!
தசாவதாரம்' படம் பார்த்திருப்பார்களோ, அணுசக்தி பாய்ச்சல் தியரிக்கு.
இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த நவீன அணு தகர டப்பாக்கள்' காணப்படவே இல்லை.
ஏமாந்ததுதான் மிச்சம்!
சீனுவாசன் சிங்கள் சிங்கமாவது சில்வரோடு நின்றது. இவர்களது கற்பனை வளமோ (கிரியேட் டிவிட்டி) அமெரிக்க நாசா வரை சென்றதற்கு ஒரு தனிப் பாராட்டே - இந்த நூதனத் திருட்டு மூளைகளுக்கு நடத்திட வேண்டாமா?
தந்தை பெரியார் கூறியதுபோல பசியா வரம் தருகிறேன் தாயே; கொஞ்சம் பழைய சோறு போடு!'' எனக் கேட்ட மோசடி சாமியார் - பிச்சைக்காரன் கதைதான் நினைவிற்கு வருகிறது!
பெரியார் கேட்டார், ஏமாந்த அந்த அம்மா புருஷன் கேட்டானாம் - ஏண்டி, அந்த வரம் தரும் சக்தி அவனுக்கு இருந்தால், அவன் ஏன் உன்னிடம் பழைய சோறு கேட்பான் - யோசித்தாயா?'' என்று!
எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவர் - இந்தப் பாரத நாட்டிலே!

தொடர்கிறது நீட் தேர்வு குளறுபடிகள்

சென்னை, மே 10 நாடு முழுவதும் மே 6 -ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில்தவறானமொழி பெயர்ப்புமற்றும்பிழையுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ள தாக 'டெக் ஃபார் ஆல்' எனும் அறக்கட்டளை குற்றஞ்சாட்டி யுள்ளது.
இதுதொடர்பாக, இந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன் கிழமை கூறியதாவது:
நீட்தேர்வில்இயற்பியல், வேதியியல்,உயிரியல்(தாவர வியல், விலங்கியல்) பாடங் களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இவற் றில், தமிழ் மொழி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 49 கேள்விகள் தவறான மொழிபெயர்ப்பு மற் றும் பிழைகளுடன் இருந்தன. உதாரணமாக செங்குத்து என்பது 'நேர்குத்து' எனவும், சிறுத்தையின் என்பதற்கு 'சீத்தாவின்' என்றும் தவறாக இடம்பெற்றிருந்தன. இதேபோன்று, இயல்பு மாற்றம் என்றிருக்க வேண்டியது 'இயல்மாற்றம்' எனவும், தாவ ரங்கள் என்பது 'பிளாண்டே' என்றும், பழுப்பு என்பது 'பழப்பு' என்றும் பிழையுடன் இடம்பெற்றுள்ளன. இவை தவறான பொருளைக் கொடுக் கின்றன.
மதிப்பெண் அளிக்கப்படுமா?
நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.49கேள் விகள் பிழைகளுடன் இடம் பெற்றிருப்பதால், அந்த 49 கேள்விகளுக்கு 196 சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்களைஅளிக்கும்என்சி இஆர்டி புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அத னால்தான் மொழிபெயர்ப்பு செய்வதில்சிபிஎஸ்இதவறு செய்துள்ளது.தமிழ் மொழியில் என்சிஇஆர்டி புத்தகங்களை வெளியிடவேண்டும்.இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கருநாடகம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள்

பிரமுகர் ஒப்புதல் வாக்குமூலம்
ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் பா.ஜ.க. பிரமுகர் மஞ்சுளா

பெங்களூரு, மே 10 கருநாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் பாஜகவினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் இருந்த வீட் டின் உரிமையாளர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருப்பதும் தெரிய வந் துள்ளது. கருநாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்மும்முரமாகநடந்து வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், கருநாடக மாநில தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினை ஒன்று உருவாகி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு ராஜராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடை யாள அட்டைகள் நேற்று முதல்நாள் ஒரு வீட்டின் அறையில் பறிமுதல் செய் யப்பட்டது. இதுபற்றிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்தச் செயலுக்கு பின்பாக காங்கிரசு இருக்கிறது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அந்தத் தொகுதியின் காங்கிரசு எம்எல்ஏதான் இந்த மோச டியை செய்து இருக்கிறார் என்று கூறி யுள்ளது. அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்து இருந்தது.

காங்கிரசு குற்றச்சாட்டு

கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
ஆனால், காங்கிரசு இதில் புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதன் படி பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்தக் கட் டடத்திற்கு உரிமையாளர் என்று கூறி யுள்ளது. அவர்தான் இந்த மோசடிக்கு காரணகர்த்தா என்றும் காங்கிரசு குற்றச் சாட்டு வைத்து இருக்கிறது. இதனால், அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கடைசி நேரத்தில் பாஜக இதில் திடீர் என்று பல்டி அடித்தது. அதன் படி மஞ்சுளாவை யார் என்றே தெரி யாது என்று பாஜக குறிப்பிட்டது. மஞ் சுளா எங்கள் கட்சியில் உறுப்பினர் இல்லை, எங்கள் கட்சியில் உள்ள யாருமே மஞ்சுளாவுடன் அரசியல் ரீதியாக தொடர்பில் இல்லை என்று கூறியது. காங்கிரசு தேவையில்லாமல் பழிபோடுகிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
ஒப்புதல் வாக்குமூலம்
தற்போது இதில் மஞ்சுளா மற்றும் அவரதுமகன் சிறீதர் விளக்கம் அளித் துள்ளனர். அதன்படி, ''நாங்கள் இப் போதும் பாஜகவில்தான் இருக்கிறோம். எங்களுக்கு பாஜக கட்சியினர் எல் லோரிடத்திலும் நல்ல தொடர்பு இருக் கிறது. பாஜக உறுப்பினர்கள் ஏன் இப்படி எங்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. பாஜக எங்களை கைவிட்டுவிட்டது'' என்று வருத்தமாகக் கூறியுள்ளனர்.
குறிப்பு: பா.ஜ.க. பிரமுகரின் வீட்டிலி ருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகள் அனைத்தும் உண்மை யானவைதான். போலியல்ல என்று தேர்தல் ஆணையம் அறுதியிட்டுக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Thursday, May 10, 2018

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் 14 ஆம் தேதி அறிவிப்பினைத் தொடர்ந்து 15 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட்'டுக்கு விலக்குக் கோரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தேவை

* ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பேசவேண்டும்

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்



சென்னை, மே 9 காவிரி நீர் உரிமைப் பிரச்சினையில் வரும் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் பின்னணியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மே 15 ஆம் தேதி அன்று காலை கூடி தேவையான முடிவுகளை எடுப்பது என்று ஒன்பது கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய ஒன்பது கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

நீட் தேவையில்லை எனும் தமிழக மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் வேண்டும் தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006ஆம் ஆண்டில் முறை யாகச் சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத் தேர்வினை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய தமிழ்நாட்டிற்கு, நீட்' தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஏளனமாகக் கருதி இழிவு படுத்திடும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு மாறாக மருத்துவக் கல்விக்கு நீட்' தேர்வையும் நடத்தி, இப்போது ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட்' கட்டாயம் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமிக்க சர்வாதிகாரப் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது. ஒரு போட்டித் தேர்வுக்கு தேவையில்லாத கடுமையான கெடுபிடிகளை தேர்வு மய்யங்களில் வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தி, தமிழ்நாட்டு மாணவ - மாணவியரை அவமானப்படுத்தித் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு,  மாணவர் உலகம் எப்போதும் கண்டும் கேட்டுமிராத சி.பி.எஸ்.இ. வாரியத்தின் பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாண வர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இன்னும் மனித உயிர்களைக் காவு கேட்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட்' விலக்கு மசோதாவிற்கு, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையொட்டி மேலும், காலங்கடத்தாமல் உடனடியாகக் குடியரசுத் தலை வர் ஒப்புதலைப் பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதற்கான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2:

முதலமைச்சர், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும்


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய உயர்வு, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட நிலுவையில் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த போராட்டத்தின் இறுதி வடிவமாக தலைமைச் செயலகத்தை நோக்கி மே 8 ஆம் தேதி பேரணி என்று அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை விவாதித்து சுமூக தீர்வு காண முற்படாமல், காவல்துறையை ஏவிவிட்டு நள்ளிரவிலும், சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில் கைது செய்ததற்கும், சென்னை மற்றும் மாநிலமெங்கும் இன்று போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எல்லாம் பெண்கள் என்றுகூட பாராமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் கைது செய்த அராஜகத்திற்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் தீர்வாகாது என்பதையும், அடக்குமுறையே தீர்வுகாண முதன்மைத் தடையாகிவிடும் என்பதையும் அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

மாநில நிர்வாகம் இயங்குவதை நிறுத்தி மேலும் நிலைகுலைந்து போகாமல் இருக்க, கைது செய்யப்பட்டுள்ள அனை வரையும் உடனே விடுவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப் பைச் சேர்ந்த நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.  தீர்மானம் 3:

காவிரி மேலாண்மை வாரியம் - அடுத்தகட்ட நடவடிக்கை 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங் கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங் காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல், அதனைத் திரித்தும், திசை திருப்பும் வகையிலும் வேறு வேறு பொருள்பட அறிவிப்புகளைச் செய்து, ஏறக்குறைய மூன்று மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மட்டுமின்றி, கரு நாடகத் தேர்தல் கணக்கை மனதில்கொண்டு, பலமுறை கால அவகாசம்'' கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. முதலில் விதித்த ஆறுவார காலக்கெடுவும் முடிந்து, பிறகு கருநாடகத் தேர்தலை காரணம் காட்டி வாய்தா வாங்கி, மீண்டும் மே 3 ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரதமரும், அமைச்சரும் கருநாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற முடியவில்லை'' என்று, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் அறிந்தோர் அனைவரும் நகைத்திடும் வண்ணம் கால அவகாசம்'' கேட்டு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், கூச்சமே இன்றி மீண்டும் பத்துநாள் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் மே 14 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதற்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறது. நீதித்துறை சுதந்திரத்தின்மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் உச்சநீதிமன்ற  நடவடிக்கைகளை கவ லையுடனும், அதிர்ச்சியுடனும் பார்க்கும் சூழ்நிலை காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உருவாகியிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் நிச்சயமாக உகந்த சூழலாக இல்லை என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர் களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தமிழக மக்கள் உச்சநீதிமன்றத்தின் மீது வைத் திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு, பல்வேறு முறை கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் அனுமதித்து, இறுதியில் கருநாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசத்தைப் பெற்றிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளையும், பொதுமக்களையும் திட்டமிட்டு வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் நாட்டின் பாரம்பரியமான காவிரி உரிமையை கர்நாடகத் தேர்தலுக்காக காவு கொடுத்து வருவது தமிழகத்தையே பதற வைக்கிறது. காவிரி உரிமையை நிலைநாட்ட, நடைபெற்ற ஜனநாயகவழியிலானஅறப்போராட்டங்களில்தன்னெழுச்சியாகப்பங்கேற்றஅனைத்துத் தரப்பு மக்களுக்கும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காமல்மத்தியஅரசுஉதாசீனப்படுத்தும்இந்ததுரோகம் கோபத்தையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்தி யுள்ளது. மேலும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கை இழக்கும் நிலையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியிருப்பதை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. சாலை மறியல், முழு அடைப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க நிஷீ ஙிணீநீளீ விஷீபீவீ'' என்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம், மேதகு ஆளுநரிடம் மனு, மனித சங்கிலிப் போராட்டம் என்று அனைத்து விதமான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அனைத்து கால அவகாசம்'' கோரும் போக்கிற்கும் மனமுவந்து துணை போவது மட்டுமின்றி வழக்கின் முக்கியத்துவத்தை திசை திருப்பும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறது. கருநாடக மாநில அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்'' என்று வழக்கு விசாரணையின்போது கூறிய போதிலும், மே 8 ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற ஆணையில் அந்த உத்தரவு இடம்பெறவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வரும் மத்திய அரசையும் - அதற்கு துணை போகும் மாநில அரசின் நடவடிக் கையையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப் பதுடன்; மே 14 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனைத் தீயில் தள்ளி, காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற 15.5.2018 செவ்வாய்க் கிழமை காலை 10 மணி அளவில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து  விவாதித்து முடிவெடுப்பதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

கணியூரில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு

73 ஆண்டுகளுக்குமுன் மாணவராக கணியூர் வந்தேன் - பலமுறை வந்துள்ளேன்

மீண்டும் கணியூர் வருவேன் - நீண்ட நேரம் பேசுவேன்
கணியூரைப் பணியூரா'க்கிய கழக மகளிருக்குப் பாராட்டு!
 

கடந்த 6 ஆம் தேதி தாராபுரத்தையடுத்த கணியூரில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டின் சிறப்புகள் குறித்தும், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த மகளிர் அணியினரைப் பாராட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 6.5.2018 அன்று காலை முதல் இரவு 9.30 மணிவரை கணியூரில் நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாடு ஒரு தனி வரலாறு படைத்த சிறப்பான மாநாடு ஆகும்.

இந்த மகளிர் மாநாட்டினைச் சிறப்புடன் நடத்திடும் பொறுப்பை கணியூர் மாவட்டத் தலைவரும், சிறந்த கொள்கை வீரரும், பெரு வணிகராக உழைப்பால் உயர்ந்த பெரியார் பெருந்தொண்டருமாகிய தோழர் மானமிகு கிருஷ்ணன் அவர்களும், அவருடன் இணைந்த கழகப் பொறுப்பாளர்களும், மகளிரும் ஏற்றனர்.

கணியூர் மாநாட்டு வெற்றிக்கு உழைத்த வீராங்கனைகள்

நாடு முழுவதும், குறிப்பாக மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் சுற்றிச் சுழன்று மகளிரணி பொறுப்பாளர்கள் ஆயிரக்கணக்கில் மகளிரைத் திரட்டி, மாநாடு மிகச் சிறப்புடன் நடந்திட கடும் உழைப்பைத் தந்து, நல்லதோர் கொள்கை அறுவடையைச் செய்திட வாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர்ப் பாசறை ஆகியவற்றின் முக்கியப் பொறுப்பாளர்களும், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தலைமையில் மிகவும் சிறப்பாகத் தொண்டாற்றி வெற்றிக்குப் பாதை அமைத்தனர்.

டாக்டர் பிறைநுதல் செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, கோ.செந்தமிழ்ச் செல்வி, கலைச்செல்வி (இருவர்), சி.வெற்றிச் செல்வி ஆகிய செல்வி''களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி ஆகியோர் மற்றவர்களை ஒருங்கிணைத்து ஏராளமான மகளிரைத் திரட்டியதோடு, காலை கருத்தரங்கம், மாலை எழுச்சிமிக்க பேரணி, ஊரைக் கலக்கிய வீராங்கனைகளின் தீப்பந்த ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், சிலம்ப மற்றும் வீர விளையாட்டுகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைத்தன!

கருத்தரங்கில் கருத்து மழை!

காலைக்கருத்தரங்கில்கழகப்பிரச்சாரசெயலாள ரும்உயர்நீதிமன்றவழக்குரைஞருமானஅ.அருள் மொழி அவர்களது சீரிய தலைமையில்,சிந்தனை விருந்து படைப்பதில் தலைமை தாங்கிய நெறிப்படுத்திய வராயிருந்து உரையாற்றிய தோழர்கள் தஞ்சை அ.கலைச் செல்வி, கோவை இரா.அன்புமதி, வேலூர் தே.அ.ஓவியா, கோவை செ.அன்புமணி, கோவை தி.ச.யாழினி, கி.சரசுவதி உள்ளிட்ட அத்துணைப் பேர்களும் ஒருவரை ஒருவர் முந்துபவர்களாக இருந்தனர்!

இளையதலைமுறையினர் இப்படி தந்தை பெரியார் தம் லட்சியங்களை நன்றாக உள்வாங்கி மக்களிடம் அருமையான பரப்புரை ஆற்றும் அளவிற்கு பக்குவ மாகி உள்ளார்கள் என்று எண்ணும்போது எங்கள் உள்ளமெலாம் பூரித்தன!

திராவிடத்தைக் காக்க இத்தகைய புலிக்குட்டிகள் நமது பாசறையில் உள்ளனர் என்ற வியப்பில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம்!

திறந்தவெளி மாநாடு தீட்டிய காவியம்

இதிலும் இளையர்கள் வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி ஆகியோரின் சிறப்பான சுருக்கப் பேச்சுகள்.

திறந்தவெளி மாநாடு - மாநாட்டின் லட்சியச் சொற்களை விளக்கிடும் வண்ணம், கொடியேற்றிய தமிழ்ச்செல்வி, திறப்பாளராக நம் அழைப்பை ஏற்று வந்து அருமையானதொரு உரையை - நேரத்தின் நெருக்கடியிலும் கருத்துரை வழங்கிய தி.முக. துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன், அதுபோல, தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் தோழர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட தி.மு.க. செயலாளர் இள.பத்மநாபன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப் பினர் இரா.செயராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்து மழை பொழிந்தனர். எடைக்கு எடை ஏராளமான பொருள்களை - அன்பின் வெள்ளமாக தந்தனர் கழகத் தோழர்கள்.  என்னைத் திருப்திப்படுத்த நாணயத்தால் எடைபோட்டு, இயக்கத்தின் நாணயத்தை உலகுக்குப் பறைசாற்றி, இயக்கத்திற்கு ரூ.75,000 மதிப்புள்ளதான அந்தப் பொருள்களை வழங்கினர்!

பெண்ணடிமைச் சின்னம் நீக்கம்!

பெண்ணடிமைச் சின்னமான தாலி அகற்றுதல் என்ற கொள்கை வெற்றிக்கு அடையாளமாக முன்வந்தனர் - இரண்டு வாழ்விணையர்கள். கணியூர் சரசுவதி - கிருஷ்ணன் ஆகியோர் 22 ஆண்டுகளுக்குமுன்னால் நடந்த திருமணத்தின்போது கட்டிய தாலியை, துணைவியார் கொள்கை வயப்பட்ட தன் முதிர்ச்சியினால், தாமே முன்வந்து அகற்றிக் கொள்வ தாகக் கூறி, பகிரங்கமாக மேடையில் அகற்றினார்.

அதுபோலவே, அடுத்து வாழ்விணையர்களான காரமடை தோழர்கள் அம்சவேணி - முருகேசன் ஆகியோர் அடிமைத் தளையான தாலியை அகற்றினர்.

மதியம் மாவட்டக் கழகத் தலைவர் கிருஷ்ணனின் பல்பொருள் அங்காடிக்குச் சென்று திறப்பு விழாவிற்கு நான் வர இயலாத குறையை நீக்கி, நிம்மதி அடைந்தேன். கணியூர்க் குடும்பம்' என்று திராவிட இயக்க வர லாற்றில் பிரபலமானது சகோதரர் கே.ஏ.மதியழகன் குடும்பம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். அத்துணைத் தலைவர்களுக்கும் நெருக்க மான குடும்பம்.

கணியூர் குடும்பத்தினரின் விருந்து உபசரிப்பு

அவரது மூத்த சகோதரர் கே.ஏ.முருகேசன், கே.ஏ.மதி யழகன் சகோதரர் கே.ஏ.மாணிக்கம், கே.ஏ.கிருஷ்ணசாமி அந்தப் பாரம்பரிய தொடர்ச்சியாக டாக்டர் கே.கே.எம்.செல்வராஜ், (தமிழகக் கால்நடைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் - தற்போது கல்வி ஆலோசகராக இருப்பவர்) ஆகியோர் அடங்கிய திராவிட இயக்கக் குடும்பம் ஆகும். செல்வராஜ் அவர்களின் செல்வன் தோழர் சீரிய பகுத்தறிவாளர் இளங்குமரன் - இதற்காகவே கணியூர் வந்து நேரில் அழைத்து, மதிய உணவு - விருந்து அளித்து  மகிழும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. கொள்கைப் பாசம் என்பது திராவிடர் இயக்க முத்திரைகளில் முக்கியமானது என்பதை நிலை நாட்டியது.

வரலாற்றுப் பேராசிரியர் வீட்டில்...

பிறகு உடுமலைப்பேட்டையில் சிறிய இடைவெளி ஓய்வில், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சில் நிறைந்த நண்பர் - வரலாற்றுப் பேராசிரியர் - பெருமான் ந.சுப்ரமணி யன் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவருடைய மகன் நண்பர் சுந்தரேசன் - அவரது வாழ்விணையர் ஆகியவர்களிடம் நானும், இணையர் மோகனாவும்,  கழகத் தோழர்களும் நலம் விசாரித்துத் திரும்பினோம்!

பல்கலைக் கொள்கலனான அந்த அறிஞர்தம் அறிவுச் சோலையைக் கண்டு திரும்பியது மகிழ்ச்சியூற்றைப் பெருக்கியது - இருசாராருக்கும்!

உடல்நலம் நலிந்துள்ள முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் தாராபுரம் வடிவேலு அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரிக்கும் வாய்ப்புக் கிடைத்தது - அவரது இணையர் இயக்க வீராங்கனை வ.துளசியம்மாள் பெயரில்தான் மாநாட்டு நினைவரங்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

எனக்குப் போதாத காலம்!'

இம்மாநாட்டில் பேசும்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிட்டேன். இப்போது எனக்குப் போதாத காலம்!' - காலம் போதாத நிலை - (கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் போதாத காலத்தால்'தான் பேசவேண்டாம் என ஒதுங்கி, பார்வையாளராக இறுதிவரை இருந்து திரும்பினார்)  காரணம் திருப்பூருக்குச் சென்று தொடர்வண்டியைப் பிடிக்கவேண்டியிருந்ததால், மனமில்லாமல் பேச்சை முடிக்கிறேன் - நமது கொள்கைக் குடும்ப உறவுகளான இப்பகுதி மக்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டு, விடைபெறுகின்றேன் என்று நா தழுதழுக்கக் கூறினேன்.

கணியூர் கழகப் பணியூர்

அக்கணியூருக்கு முதன்முதலாக நான் - மாணவர் பிரச்சாரத்திற்குச் சென்ற ஆண்டு 1945. அதாவது 73 ஆண்டுகளுக்குமுன்பு வந்திருக்கிறேன். இடையில் பலமுறை வந்துள்ள போதிலும், இந்தப் பயணம் மறக்க முடியாத பேரன்புப் பெருவெள்ளத்திடையே கழகம் நீந்திய பயணம் அல்லவா?

கணியூர் கழகப் பணியூராகியது

பணியூர் வெற்றி கண்டு அணியூராகி

வரலாறு படைத்தது!

அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி! நன்றி!! நன்றி!!!



கி.வீரமணி

திராவிடர் கழகம்.

தலைவர்

சென்னை 
9.5.2018
 

Wednesday, May 9, 2018

மகளிர் பெருத்தனர், ஆடவர் சிறுத்தனர்



ஆடவருக்கும் இடம் உண்டு என்ற வகையில் நடைபெற்ற கணியூர் மகளிர் எழுச்சி மாநாடு


கோவை மண்டல திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் தாராபுரம் கணியூரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு பெண்ணுரிமை வரலாற்றிலும், கழகத்தின் வரலாற்றிலும் நிரந்தர நங்கூரம் பாய்ச்சக் கூடியது.

திகைக்க வைத்த கணியூர் மங்கையர்ப் பேரணி


ஒவ்வொரு சிறு நிகழ்வும் கூட திட்டமிட்ட வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


பேரணி சரியாக பிற்பகல் 4 மணிக்கு கடத்தூர்சாலை யிலிருந்து, சென்னை - பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைக்க, கோவை மண்டல திராவிடர் கழக மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி தலைமையில் வீறு கொண்டு புறப்பட்டது.


தாராபுரம் மாவட்ட மகளிரணி செயலாளர் எம்.ஜெயந்தி, கோவை மாவட்ட மகளிரணி செயலாளர் சி.கவிதா, திருப்பூர் மாவட்ட மகளிரணி செயலாளர் த.வசந்தி, நீலமலை மாவட்ட மகளிரணி செயலாளர் நா.சாரதாமணி, தாராபுரம் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சாந்தி, கோவை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்செ.தனலட்சுமி, திருப்பூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்பா.சிந்துமணி, மேட்டுப்பாளையம் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இரா.நாகம்மை உள்ளிட்டவர்கள் முன்னிலையேற்க கணியூர் அதிர மகளிர் பேரணி நடைபெற்றது.


பேரணி கடத்தூர் சாலை, கிழக்குத் தெரு வழியாக மாநாடு நடக்கும் பெரியார் திடலை வந்தடைந்தது. பெரியார் பிஞ்சுகளும், மகளிரும் கழகக் கொடி  ஏந்தி கொள்கை முழக்கமிட்டு அணிவகுத்து வந்த காட்சி இராணுவ மிடுக்காகச் சிலிர்த்தது.


கழகக் கொள்கை விளக்க முழக்கங்கள் அவை. சோழ மாதேவி மாயவன் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் பொது மக்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்த வீர விளையாட்டுகளில் மகளிர் 'வித்தை'கள் வித்தியாசமாக இருந்தன.


திராவிடர் கழகப் பேரணி என்றால் மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கக் காட்சிகள் முக்கியமாக இடம் பெறும். ஆறறிவுள்ள மனிதனை அடிமைப்படுத்துவதில், சிந்தனா சக்தியைச் சிதறடிப்பதில், தன்னம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைப்பதில், பாடுபட்டுச் சேர்த்த பொருளை விரயமாக்கி தலைகுப்புறத் தள்ளுவதில், காசைக் கரியாக்குவதில் முதலிடத்தில், முண்டாதட்டி நிற்பதில் மூடநம்பிக்கைகளுக்குத்தானே முதலிடம்!


அந்தக் கும்மிருட்டிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது மானிடத்திற்குச் செய்யும் மகத்தான பணியல்லவா - அதனைத்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட திராவிடர் கழகமும் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது.


இந்தியாவிலேயே தென்னாட்டில் மகத்தான மக்கள் எழுச்சி, முற்போக்குச் சிந்தனைகள் தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.இராமசாமி என்பது அமெரிக்காவின் மூத்த பேராசிரியர்களின் கருத்து என்று ஜான் ரைலி குறிப்பிட்டிருந்ததை 'ஆனந்த விகடன்' வெளியிட்டதுண்டு.


தீச்சட்டி இங்கே - மாரியாத்தா எங்கே?
இத்தகு திட்டமிட்ட பணிகளால், பிரச்சாரத்தால், போராட்டங்களால் அவை நிகழ்ந்தன என்பதுதான் உண்மை - உண்மையிலும் உண்மை! கணியூர் வீதிகளில் மகளிரே தீச்சட்டி ஏந்தி தீச்சட்டி இங்கே  - மரியாத்தாள் எங்கே? என்று உணர்ச்சிப் பூர்வமாக முழக்கமிட்டு வீர நடை போட்டு வந்தகாட்சி புதிய புறநானூறாகும்.


கோவை தோழர்கள் கலைச்செல்வி, தேவிகா, திலகா, யாழினி, புனிதா, காரமடை அன்புமதி, கவுசல்யா, திருச்சி அம்பிகா, கணியூர் சரசுவதி, காரமடை  அம்ச வேணி, இரா.நாகமணி, காரத்தொழுவு நா.சரசுவதி ஆகியோர் தீச்சட்டி ஏந்தி அரிமா முழக்கமிட்டு வந்தனர்.


அலகுக் குத்தி சப்பரம் இழுப்பது ஆண்டவன் செயல் என்ற அடிமுட்டாள் தனத்தைத் தோலுரித்துக் காட்டும் வகையில் சிவகிரி தோழர் சண்முகம் தலைமையில் தாராபுரம் கழகத் தோழர்கள் முனீஸ்வரன், சின்னப்பதாசு ஆகியோர் முதுகில் அலகுக் குத்தி கார் இழுத்ததோடு, கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு வந்த காட்சி இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். மக்கள் கையசைத்து ஆதரவு காட்ட, கழக மகளிர் அணியினரின் பேரணி மாலை நேர மூடநம்பிக்கை ஒழிப்புச் செயல் விளக்கமாக (ஞிமீனீஷீஸீக்ஷீணீவீஷீஸீ) இருந்தது இப்பேரணிக்கான தனிச் சிறப்பாகும்.


பேரணியின் இரு மருங்கிலும் பொது மக்களும், வியாபாரிகளும், இளைஞர்களும், மாணவர்களும், பிஞ்சுகளும், பெரும் அளவில் திரண்டனர். திராவிட மகளிர் அணி - மகளிர்ப் பாசறை நடத்திக் காட்டிய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியின் நேர்த்தியைக் கண்டு வாய்விட்டுப் பேசி மகிழ்ந்தனர்.


களிப்பூட்டும் கலை நிகழ்ச்சிகள்


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் மானமிகு வடிவேலு அவர்களின் வாழ்விணையரும், கழக மகளிரணித் தோழருமான வ.துளசியம்மாள் நினைவரங்க மேடையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறின.


கழக குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளின் கொள்கை விளக்கப் பாடலுக்கான நடனம் இரசிக்கத்தக்க முறையில் அமைந்திருந்தது. பாவலர் அறிவுமதியின் பெரியாரை நம்படா நம்பு எனும் பாடலுக்கு திருச்சி யாழினியும், கவிஞர் காளமேகம் அவர்களின் வா தோழா என்ற பாடலுக்கு பெரியார் பிஞ்சுகள் கண்மணி, கவுசல்யா ஆகியோரும், ஆறறிவு மனிதனுக்கு ஜாதி எதற்கு? என்ற பாடலுக்கு திருவாரூர் மாவட்டம் - கண்கொடுத்தவனிதம் கு.குணவதி, பகுத்தறிவு சந்துரு ஆகியோர் கரகாட்ட முறையில் நடனத்தை அமைத்துக் கொண்டது வெகு சிறப்பு.


மாநாட்டில் தருமபுரி அன்பு, கலை இலக்கிய அணியின் சார்பாக கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாடக பயிற்சி அளிக்கப்பட்டது. மாரவாடி கிராம பெரியார் பிஞ்சுகள், மென்மை, தென்னரசு பெரியார், செந்தமிழ்ச்செல்வன், சஞ்சய், ஹரிஷ், கொட்டாவூர் கிராம செம்மொழி, வீரமணி, பந்தரள்ளி கிராம மு.க.ஸ்டாலின், மத்தூர் கிராம சிறீதர், அகரன், புதுப்பட்டி கிராம அஸ்மிதா, அபிநயா ஆகிய பெரியார் பிஞ்சுகள் கலந்து கொண்டு நடத்தினர்.


நடத்தப்பட்ட நாடகங்கள்

1. ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்!
2. ஆம்பளை வாயா? பொம் பளை வாயா?
3. எனக்கும் கொஞ்சம் பூ கொடுங்க!
4. ரத்தம் என்ன க்ரூப்?
நடனம்
5. மகளிர் சார்பாக தமிழர் தலை வருக்கு அளிக்கப்பட்ட வர வேற்பு நடனம். பயிற்சியாளர்: தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில அமைப்பாளர், மகளிரணி மற்றும் மகளிர் பாசறை.


நிமிர வைத்த நிமிர்வுக் கலைக் குழுவினர்


கோவையைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு இருக்கக் கூடியவர்களும், முதுநிலைப் பட்டதாரிகளும் அடங்கிய இருபால் இளைஞர்களும் மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்ற தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழியை முன்மொழிந்து பெரியாரைப் படி - அம்பேத்கரைப் படி என்ற சூளுரையுடன் போர்ப் பறையாக நடத்திக் காட்டினர்.
உண்மையிலேயே அது போர்ப்பறைதான்! கண்டோர் ஒவ்வொருவரின் உணர்வையும் சமுதாய விடுதலைப் போர்க் களத்திற்கு அழைத்துச் செல்லும் பறையோசையாக, இடி முழக்கமாக அமைந்தது என்பதில் அய்யமில்லை.


தாளம் தவறாமல் அவர்கள் பறையை முழக்கின போதெல்லாம் பார்வையாளர்களின் காலடிகளும் அவர்களை அறியாமலேயே அசைந்தாடியதையும் காண முடிந்தது.


திறந்த வெளி மாநாடு


கோவை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட திராவிட மகளிர் எழுச்சி திறந்த வெளி மாநாட்டுக்குத் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி தலைமை வகித்தார்.


கோவை மாவட்ட மகளிரணி தலைவர் செ.முத்துமணி, கோவை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கு.தேவிகா, திருப்பூர் மாவட்ட மகளிரணி தலைவர் க.திவ்யா, திருப்பூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் லெ.திவ்யா, நீலமலை மாவட்ட மகளிரணி தலைவர் க.ஜோதிமணி, நீலமலை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வே.அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மத்தியில் ஒரு மதவாத ஆட்சி - மாநிலத்திலோ அதற்கு ஆமாம் சாமி ஆட்சி நடைபெறுகிறது. இவ்விரண்டையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும், மனுதர்மமும், கீதையும் பெண்களை இழிவுப்படுத்தும் இந்து மதநூல்கள் என்றும் எடுத்துக்காட்டி தலைமை உரை நிகழ்த்தினார் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி.




மாநாட்டு வரவேற்புரையாற்றிய வடசென்னை மாவட்டக் கழக மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்கள், குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், வாலிபத்தில் கணவருக்கும், வயோதிகப் பருவத்தில் மகனுக்கும் கட்டுப்பட்டுத் தான் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை எடுத்துக்காட்டி, மனுதர்மத்தை எரிப்பது மகளிர் கடமை என்றும், அதனை எரித்துக் காட்டியது திராவிடர் கழகம் என்றும் எடுத்துரைத்தார்.


திராவிடர் கழக மகளிரணி - மகளிர்ப் பாசறை ஆகியவற்றின் மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிபோது - தந்தை பெரியார் அவர்களின் கொள்கை இழையால் பின்னப்பட்டது தான் திராவிடர் கழகக் கொடி என்றும், நம் இனத்தைச் சூழ்ந்திருக்கும்  இழிவை வெளிப்படுத்துவதுதான் கழகக் கொடியின் கருப்பின் அடையாளம் என்றும், இந்த இழிவை ஒழிக்கப் புரட்சி செய் என்பதுதான் கழகக் கொடியின் சிவப்பு வண்ணம் என்றும் எடுத்துரைத்தார்.


மனுதர்மத்தை ஒழிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி அவர்கள், பெண்ணுரிமை பற்றி நினைக்கும் பொழுது, நீங்கள் உங்கள் மனைவியை மட்டும் நினைத்துச் சிந்திக்காதீர்கள்; உங்கள் அருமை மகளையும், சகோ தரியையும் நினைத்து யோசியுங்கள் என்று தந்தை பெரியார் தெரிவித்த அரிய கருத்தை விளக்கிப் பேசினார்.


சென்னை மண்டல மாணவரணி அமைப்பாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தன்னுரையில், கீதையைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று சங்பரி வார்கள் கூறுகிறார்கள். உண்மையில் தேசிய நூலாக வைக்கத் தகுதியான நூல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற நூல்தான் என்று அறிவித்தபோது பலத்த கரஒலி!


மாநில மாணவரணி துணைச் செயலாளர் - சட்டக் கல்லூரி மாணவி மதிவதனி தனது உரையில், இன்றைக்கு வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரி கோலமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதற்கு என்ன தீர்வு என்று கேட்டால் பிரதமர் நரேந்திர மோடி பக்கோடா விற்கச் சொல்கிறார். இதனைப் பார்ப்பனர்களிடத்தில் போய்ச் சொல்லுவாரா என்ற வினாவை எழுப்பினார்.


கற்பழிக்கக் கடவுளிடம் விண்ணப்பம் போட்ட திருஞான சம்பந்தனின் வாரிசாக பா.ஜ.க. செயல்படுவதையும் கண்டித்துப் பேசினார்.


மாநில திமுக இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தனது உரையில், திராவிடர் கழகம் நடத்தும் மகளிர் மாநாடு பழம் புறநானூற்று வீரத்தினைப் பறைசாற்றுகிறது என்று குறிப்பிட்டார்.


திமுக மாவட்டச் செயலாளர் இள.பத்மநாபன் அவர்கள் தனது உரையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளும், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களும் பாடுபட்டுக் காத்த பெண்ணுரிமையை மனுதர்மவாதிகளால் அழிக்க முடியாது என்று ஆணித்தரமாகப் பேசினார்.


மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினர் இரா.செயராமகிருஷ்ணன் அவர்கள், இன்றைக்கு மக்களுக்கு இருக்க வேண்டிய முதற்கட்ட வேலையே மத்திய - மாநில அரசுகளை வெளியேற்றுவதே என்று குறிப்பிட்டார்.


சுப்புலட்சுமி ஜெகதீசன்



திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் மாநாட்டுத் திறப்பாளர் உரையைச் சுருக்கமாகவும், செறிவாகவும் எடுத்துரைத்தார்.


திராவிடர் கழக மகளிர் மாநாடு நடத்தும்போதெல்லாம் என்னைத் தவறாமல் அழைக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். நானும் பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணைச் சேர்ந்தவள் என்ற கூறும் உரிமையும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.


தந்தை பெரியார் கொள்கைகளை நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்பவள்நான் என்று சொன்னபொழுது பெருத்த கரஒலி.


பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் கல்வி, அரசுப் பணிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்பை நடத்தினர், வருணாசிரமத்தையும், ஜாதியையும் புகுத்தி மக்களைப் பிளவுப் படுத்தினர்.
இதற்கெல்லாம் முடிவுரையை எழுதினார் தந்தை பெரியார். திராவிடர் இயக்க ஆட்சியால் நாம் எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறோம். அதனை ஒழிக்கத் திட்டம் தீட்டி வருகிறார்கள் அதனை முறியடிக்கும் வல்லமை நமக்குண்டு.


பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தேவை என்றார் தந்தை பெரியார். கலைஞர் ஆட்சியில் முதற்கட்டமாக 30 சதவீதத்திற்கு வழி செய்யப்பட்டது.
ஆரியம் மீண்டும் தலைதூக்குமேயானால் தந்தை பெரியார் தந்த கைத்தடி எங்களிடம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.


மாநாட்டுக்கு வந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பத்துப் பேர்களுக்கு மாநாட்டைப் பற்றி சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


நிறைவுரையாய் தமிழர் தலைவர்


மாநாட்டு நிறைவுரையை வழங்கிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்க வரலாற்றில் கணியூருக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். கே.ஏ.மதியழகன் குடும்பம் - கணியூர் குடும்பம் என்று சொல்லத்தக்க வகையில் இப்பகுதியில் தந்தை பெரியார் கொள்கையை, இயக்கத்தை வளர்த்த அந்த வரலாற்றை நினைவூட்டியபோது பலத்த கரஒலி! (அவர்கள் வீட்டில்தான் தமிழர் தலைவருக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் உணவு அளித்து உபசரிக்கப்பட்டது. மூத்தவரான கே.ஏ.முருகேசன் அவர்கள் பெயரன் இளங்குமரன் அவர்கள் இதற்காகவே சென்னையிலிருந்து வருகை தந்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது).


இங்கே ஆறு செல்விகள் இருக்கிறார்கள். மாநாட்டுத் தலைவர் டாக்டர் பிறைநுதற் செல்வி, மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி, பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, கோவை மண்டல மகளிரணிச் செயலாளர் பா.கலைச்செல்வி, சென்னை சி.வெற்றிச்செல்வி என்று கழகத்திற்குச் செல்விகளுக்குப் பஞ்சமில்லை என்று கழகத் தலைவர் குறிப்பிட்டபோது ஒரே ஆரவாரம்.


இந்த மாநாட்டின் குறிக்கோள் செயற்களாக - பெண்ணே.... பெண்ணே... சனாதனத்தைச் சாடு...! சமதர்மத்தை நாடு! என்பதாகும். இதன் விளக்கத்தை விரிவுபடுத்தினார் கழகத் தலைவர். (முழு உரை வரும்)
ஆண்களுக்கு இடம் உண்டு, என்று கூறும் அளவுக்கு இப்பெண்கள் மாநாடு பெரு வெற்றி பெற்று இருப்பதைப் பாராட்டினார்.


நீண்ட நேரம் பேசவேண்டும் என்று எண்ணினாலும் எனக்குப் போதாத காலமாக இருக்கிறது. இரயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்று ஆசிரியர் சொன்னபோது ஒரே சிரிப்பும், கைதட்டலும் அலை மோதின.
மனமில்லாமல் உங்களை விட்டுச் செல்லுகிறேன் என்றாலும் இதே கணியூரில் மீண்டும் உங்களைச் சந்திப்பேன் என்று தமிழர் தலைவர் உருக்கமாக சொன்னபோது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.


எங்குப் பார்த்தாலும் கருப்புடை தரித்த மகளிர் பட்டாளத்தைப் பார்க்க முடிந்தது. மாலை திறந்த வெளி மாநாட்டிற்கு கணியூர்ப் பொதுமக்கள் மட்டுமல்ல; மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஆயிரக் கணக்கில் கூடி ஆசிரியரின் உரையைச் செவிமடுத்தனர்.


மாநாட்டுத் தீர்மானங்களை மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி முன்மொழிந்தார்.  மக்கள் அவற்றை வழிமொழியும் வகையில் பலத்த கரஒலி எழுப்பினர். தாராபுரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் த.விஜயா நன்றி கூற மாநாடு இரவு 9.30 மணி அளவில் வரலாற்றுச் சிறப்புடன் நிறைவுற்றது.


கணியூர் தீர்மானமும் அன்னையாரின் நூற்றாண்டும்


6.05.2018 ஞாயிறன்று தாராபுரம் - கணியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப் பெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தக் கால கட்டத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை - கருத்தூன்றிக் கவனித்து செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டியவைகளே!

முதல் தீர்மானம் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் 2019 மார்ச்சு 10 முதல் நடத்துவது குறித்ததாகும்.
தந்தை பெரியார் என்ற சகாப்தம் - தமிழின மக்களுக்குத் தாய்ப் போன்ற பாதுகாப்பு அரண்! அவர் ஒரு சகாப்தம் - கால கட்டம்  - திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா
தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 44 ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் சிந்தனைகளால், தேவைகளால் நாளும் நினைக்கப்படுகிறார் - தேவைப்படுகிறார் - ஏன் விமர்சிக்கவும் படுகிறார். விமர்சனங்களை தந்தை பெரியார் போல் இன்முகத்துடன் வரவேற்றவர்கள் யாருமிலர்.

பாராட்டும்போது மகிழ்வதும் இல்லை என்பதால் தூற்றப்படும் போது துன்பப்படுவதும் இல்லை என்ற இதயத்துக்குச் சொந்தக்காரர். இன்றைக்குத் தமிழர்கள் பெற்றுள்ள ஒவ்வொரு உரிமையும், அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளும், அவர் உழைப்பால் நம் மக்களுக்குக் கிடைத்த அறுவடைச் செல்வம், அதனைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் அய்யாவைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒரு சகாப்தம் ஒரு திருப்பம் என்ற தீர்க்கமான கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார். அவர் ஒரு தனி மனிதராக இல்லவே இல்லை. நாட்டின் பொதுவுடைமைச் சொத்தாகவே இருந்து வந்திருக்கிறார். அவர்தம் உயர் சிந்தனையின் உச்ச - பழுத்த கனியான கருத்து கடவுள் மறுப்பு தான் - பொதுவுடைமையின் எல்லை நாத்திகம் தான் என்பதே!

ஆனாலும் பக்திச் சிறைக்குள் சின்னாபின்னமாகச் சிக்கிய குடிமகன்(ள்)கூட தந்தை பெரியார்தம் ஒட்டு மொத்த சமுதாயத் திற்கான தலைவர் என்று ஏற்றுக் கொள்ளுவதில் எந்த விதமான சிந்தனைத் தடையும் இல்லை. இல்லவே இல்லை. அவர் சிலைமீது ஒரு தூசு விழுந்தாலும் பொறாத மக்களாக எழுந்து வந்தனரே - அவர்கள் எல்லாம் கடவுள் மறுப்பாளர்களா? அதையும் தாண்டி ஒவ்வொரு தமிழ் மகனின் உள்ளத்திலும், இல்லத்திலும் தந்தை பெரியாரின் தொண்டெனும் சுவடு ஆழமாகவே பளிச் சென்று பதிந்திருக்கிறது. உயர் எண்ணங்கள் மலரும் சோலையாய், மண்டைச் சுரப்பை உலகு தொழும் ஏற்றம்மிக்க மாமனிதராய் ஒளி வீசும் மாபெருஞ் சக்தியாம் தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் வாழ வைத்தார் ஒருவர் என்றால், அந்த ஒருவரும் இந்தச் சமுதாயத்தின் மிகப் பெரிய நன்றியறிதலுக்கு உரியவர் தானே!

ஆம் அந்த ஒருவர்தான் அன்னை .வெ.ரா. மணியம்மையார். அவர்கள் தன்னை வருத்திக் கொண்டு, இன்னும் சொல்லப் போனால் தனக்கென்று ஒரு தனி வாழ்வு உண்டு என்று கிஞ்சிற்றும் நினைக்காமல், தன் வாழ்வு எல்லாம் அந்தச் சகாப்தத் தலைவரின் ஆயுளை நீடிக்கச் செய்வது மட்டுமே என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்த உன்னதச் செவிலித்தாய் அவர்.

"கொடுத்தால் சாப்பிட்டு விடுவார், கூப்பிட்டால் வந்து விடுவார்!" என்பது தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய அன்னையார் அவர்களின் அனுபவ சொற்களாகும்.

கட்டுப்பாடற்ற சிந்தனை, கட்டுப்பாடற்ற உழைப்பு கட்டுக்குள் தன் வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாத பேராண்மையுடைய தலைவரை அவர்தம் பொதுத் தொண்டின் ஒப்பிலா உயர்வு - தேவை கருதி நீண்ட காலம் வாழ்விக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தார். அதற்காக தம் வாழ்க்கையையே கருப்பு மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டார் என்ற பெருமைக்குரிய உன்னதத் தாய் நமது அன்னையார் அவர்கள்.

அறிவுலக ஆசான் அய்யாவின் நூற்றாண்டு விழாவை நடத்திப் பார்க்க வேண்டும் என்று அளப்பரிய ஆசை கொண்ட அன்னையார் அவர்கள், அதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே தமது 59ஆம் வயதிலேயே மறைவுற்றார் என்பது தமிழர்களுக்கு ஏற்பட்டு விட்ட கெட்ட வாய்ப்பே!

எளிமையின் இலக்கணம் அவர் - ஆடம்பரம்  என்றால் என்ன என்ற "அகரத்தை"க்கூட அறியாதவர்! அதே நேரத்தில் அய்யாவின் கொள்கையில் சிறு வயது முதற்கொண்டே ஊட்டமும், ஊற்றமும், ஊக்கமும் கொண்டவர்.
அதனால்தான் அய்யா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்கள் கண்ட இயக்கத்தையும், அய்யா அவர்கள் தொலை நோக்கோடு உருவாக்கிய அறக்கட்டளைகளையும் காத்துப் புரந்தந்த பலமான  கரையல்லவா - கறையில்லா கடமையின் உருவகமல்லவா அவர்.

மருத்துவமனைகளில் ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல் லப்பட்ட அந்த மழலைகளை (யார் பெற்ற பிள்ளைகளோ!) அணைத்து அரவணைத்து அவர்களுக்கு தங்கள் பெயர்களையே தலைப்பெழுத்தாக்கி (.வெ.ரா.) வளர்த்தெடுத்து, கல்வி ஒளி தந்து ஆளாக்கிய அந்தக் கருணை உள்ளத்தை என்னவென்று சொல்லுவது!

தந்தை பெரியார் மறைந்த கால கட்டத்தில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் "விடுதலை"யின் ஆசிரியர் கி. வீரமணி  மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் மிசா கைதிகளாக்கப்பட்டு நெருக்கடி நிலை என்ற ஓர் இருண்ட காலம் கவ்வியபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஓயாதுழைத்து, திட்டமிட்டுக் கொடுக்கப்பட்ட தொல்லைகள், நெருக்கடிகள், சவால்களை எல்லாம் சந்தித்து, அய்யாவைக் காத்தது போல அவர்கள் கண்ட அந்த இயக் கத்தையும் கட்டிக் காத்த அந்தக் கருணைக் கடலுக்கு, கடமையின் வடிவத்திற்கு நூற்றாண்டு விழாவை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் செய்து காட்ட வேண்டாமா?

இராம்லீலாவுக்கு எதிராக இராவண லீலாவை நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தையே குலுங்கச் செய்து புதிய இனமானப் புறநானூற்றை வடித்துக் காட்டிய வீராங்கனையல்லவா அவர்!

அத்தகு வரலாற்று மாணிக்கப் பேழையின் நூற்றாண்டு விழாவை கொள்கைத் திருவிழாவாக, ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒளி யேற்றும் கொள்கைப் பரப்பு வைபவமாக, மகளிர் வரலாற்றுத் திசையில் புரட்சிக்கர மைல் கற்களை நிர்மாணிக்கும் நிகரற்ற சீலமாகக் கொண்டாடிட வேண்டாமா?

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு மற்றும் கணியூர் மகளிர் மாநாட்டில் எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுவோம்.

அன்னையாரின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கும்முன் கழகப் பாசறைக்கு மகளிர் எண்ணிக்கையை வளர்த்து மாபெரும் சக்தியாக வார்த்தெடுப்போம்!
அன்னையாரின் நூற்றாண்டையொட்டி நாம் நடத்தவிருக்கும் விழாவின் பேரணியில் கருப்புடை மகளிர் பாசறையின் அணி வகுப்பைக் கண்டு ஆரியத்தின் தலை வெடித்துச் சிதற வேண்டும்.

எந்த ஒரு கொள்கையும் மகளிரிடத்தில் முதலில் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தார் அன்னை மணியம்மையார்; அவர்களின் நூற்றாண்டில் அதனைச் சாதித்து முடிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மாபெரும் மரியாதையாக, நினைவுச் சின்னமாக  இருக்க முடியும்.


கணியூர்த்  தீர்மானத்தை காலத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்துவோம் வாரீர் வாழ்க பெரியார்! வெல்க அன்னையாரின் கனவுகள்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...