Wednesday, November 29, 2017

சமூகநீதிக்கான பாதையை அமைத்தவர்களுள் முதன்மையரான ஷோதிபாபூலே (1827-1890) 127ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

 
ஜாதியக்கொடுமைகள் தலைவிரித்தாடிக்கொண்டு இருந்த சூழலில் மகராஷ்டிராவின் புனே நகரில் ஜோதி பாபூலே பிறந்தார்.  ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிபாபூலே, நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரை சூத்திரன் என்று கூறி திருமணத்தில் அனைவரின் முன்பும் அவரை அவமானப்படுத்தினர். இதனால் தலை குனிந்துவெளியேறிய ஜோதிபாபூலே இந்து மதசாஸ்திர நூல்களை படிக்க ஆரம்பித்தார். அதே போல் ஆங்கிலம் மற்றும் பிரான்சு நாட்டு மொழியைக் கற்று அந்த நூல்களையும் படிக்க ஆரம்பித்தார்.

இதன் மூலம் பொதுஇடங்களில் பகிரங்கமாக விவாதம் நடத்தத் துவங்கினார். உடலுழைப்பை கொட்டித் தரும் மக்களை, சூத்திரர் என இழிவுபடுத்தி சோம்பிக் கிடக்கிற வேலையைத் தான் பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்றார்.  மராட்டியப் பார்ப்பனர்கள் அதிகம் பேர் வணங்கும் தத்தார்ரேயர் (சிவன், பிரம்மன் விஷ்ணு ஒன்றாக இணைந்த ஓருருவம்) என்ற தெய்வத்திற்கு கிண்டல் செய்யும் பாணியில் கடிதம் ஒன்றை எழுதினார்.


பெறுநர் : சிரஞ்சீவி தத்தாத்ரேயா

தந்தை பெயர் : ஆதி நாராயணன்

இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்புள்ள தத்தாத்ரேயர் அவர்களுக்கு,

பார்ப்பனர்கள் மூலமாக உலகுக்குச் சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும், பிரஞ்சுக்காரரையும் வாயடைக்கச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ, என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு காலத்திற்குள் தாங்கள் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதி நாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம். அப்படிக் காட்சியளிக்க, தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும், மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பனர்களின் உண்மையான யோக்கியதையை அம் பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு,

தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்

நிஜத்தை சோதிக்க விரும்பும்

ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே

 கல்வி அறிவைத் தராமல் மக்களை ஒடுக்கும் வேலையைச் செய்த பார்ப்பனர்களை கடுமையாகச் சாடினார். சத்திய சோதக் சமாஜ் எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார். தன்னுடைய மனைவி சாவித்திரிபாய்பூலேவுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட, ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார். உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள்; அவர் போகிற பொழுது கல்லெறிந்தார்கள். என்றாலும், தனது கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார்.

பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது.  1851ஆம் ஆண்டு ஜூலையில் புனே புறநகரான நல்புதாவர் பேட், 1851ஆம் ஆண்டு செப்டம்பரில் ராஸ்தா பேட், 1852ஆம் ஆண்டு மார்ச்சில் விட்டல் பேட் போன்ற இடங்களில் பெண்கள் பயிலும் கல்விக் கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்பூலே.

சாவித்திரிபாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண்ணாசிரியராக பணியாற்றினார். நடந்து போகிற பொழுது ஆதிக்க ஜாதியினர் கற்களையும், சாணத்தையும் வீசினர், ஜோதிபா பூலேயிடம் புலம்பியதும் "அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு போ, பின் அங்கே போய் நல்ல ஆடைகளை அணிந்து கொள்!" என்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக் கிணறுகளில் தண்ணீர் தரமறுத்த போது தனது வீட்டிற்கு உள்ளேயே கிணறு வெட்டி அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்தார்

இளம் வயதில் விதவையான பெண்களின் தலையை மொட்டையடித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மொட்டையடிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்ய மாட்டோம் என அறிவிக்கச் செய்தார்.

மூடநம்பிக்கை, கல்வியறிவின்மை, சுயமரியாதை இன்றி இருத்தல், போன்றவைதான் நமக்கு எதிரிகளாக இருக்கின்றன என்று கூறி, அதனை ஒழிக்க தனது வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து மகாராஷ்டிரத்தில் சமூகநீதிக்கு வித்திட்டவர்களின் ஜோதிபா பூலேவும் ஒருவராவார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...