மதவெறி ஒழிந்த மனிதநேய உலகுபடைப்போம்!
பதவிகளுக்கு முடிவு உண்டு - தொண்டோ தொடர் பயணம்!
எனக்கு 2.12.2017 இல் 85 ஆம் ஆண்டு பிறக்கிறது.
இதைவிட எனக்கு மகிழ்ச்சி அளிப்பது - அந்த 85 ஆண்டில் புதைந்திருப்பது 75 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை.
அதுவும் எப்படிப்பட்ட பொதுவாழ்க்கை?
எமது அறிவு ஆசான் தந்தை பெரியார் கூறினார்:
‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.
அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத் தவிர வேறு பற்று எனக்கு ஒன்றும் இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.
சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்!’’ (6.9.1972 இல் தந்தை பெரியார் எழுதியது)
சமுதாயத் தொண்டு என்ற ஒரு பற்றைத் தவிர, ‘வேறு பற்றற்ற அவரைப்பற்றிக் கொள்ள’ எனக்குப் பயிற்சி தந்த எனது ஆசிரியர் மானமிகு ஆ.திராவிடமணி அவர்களை என்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
பெற்ற பல்கலைக் கழகப் பட்ட அறிவைவிட, சுய சிந்தனையாளரான நம் அறிவு ஆசானின் பகுத்தறிவுப் பாடங்களும், வழிகாட்டிய நெறியும், அந்நெறி ஊட்டிய ஒளியும் எம்மை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசா உண்மைத் தொண்டனாக ஆக்கி, பெரியாரின் பெரும்பணியின் ஒரு பகுதியை ஆற்றிட எனக்கு வாய்ப்பளித்தது - யான் பெற்ற பேறு; ஈடு இணையற்ற இன்பம்!
பெரியார் என்ற பேராசானை வாசித்த கட்டம் மாறி, சுவாசித்த கட்டம் வந்ததாலும், அவரும் அவர் நம்பிக்கை வைத்து தொலைநோக்கோடு செய்த ஏற்பாட்டினாலும், தொடர்ந்த தொண்டு மேலும் தொடர உழைத்த எம் அன்னையும் - இருவரும் எம்மீது சுமத்திய பொறுப்பில் பளிச்சென்று தெரிந்த நம்பிக்கைச் சுடரும், இருட்டில் தடுமாறாது கடமையாற்றிட எம்மை வழிநடத்தியது அய்யா - அம்மாவுக்குப் பிறகு,
இலக்கை மட்டுமே குறி வைத்த பார்வை; பதவியோ, பெருமையோ வராதா என்ற சபலம் ஏற்படாது காத்து அரண் செய்த கரணியாக அமைந்தது!
தனி வாழ்வில் இடறிவிழ வாய்ப்பே இன்றி, இயக்கப் பொறுப்பு எம்மை என்றும் ஈரோட்டுப் பாதையிலேயே பயணிக்க வைத்தது.
மானம் பாராத பணி
நன்றி பாராத பணி,
புகழ்வேட்டை ஆடாத பணி
தன்முனைப்பில்லா தனித்தன்மைப் பணி
தன்னடக்க தகைமைப் பணி
என்ற இலக்கணம் வகுத்து எம்மை நடத்தியது - வழி நடத்துகிறது!
‘பெரியார் தந்த புத்தி’ என்ற பெருவழிகாட்டி, இதைவிட எமது தொடர் பணிக்குத் தூண்டுதல் வேறு என்ன தேவை?
இந்த அளவுக்கு ஒரு முக்கால் நூற்றாண்டு பொதுவாழ்க்கைதான் எல்லையற்ற மன நிறைவையும், மகிழ்வையும் தந்துகொண்டே இருக்கிறது!
நம் இன எதிரிகளின் எதிர்ப்புகள் ஒருபுறம் உரமேற்றுகிறது. இயக்கத் தோழர்களின் அணைப்புகள் மறுபுறம் உற்சாகமூட்டுகின்றன.
‘ரத்தம், தண்ணீரைவிடக் கெட்டியானது; ஆனால், கொள்கைக் குடும்ப உறவும், உணர்வும், ரத்த பாசத்தைவிடக் கெட்டியானது! குன்றாதது!!
இது என்னைப் பொறுத்தவரை கூடுதல் (போனஸ்) வாழ்க்கை; மருத்துவ அறுவை சிகிச்சைகள், பலமுறை கொலை முயற்சிகள் எல்லாம் தாண்டிய நிலையில், பெரியார்தம் பெரும் பணி முடிக்கும் சமூகப் போர்க்களத்தில் முறுக்கோடு நிற்கும் துணிவை அளித்துள்ளது.
இப்படி, சலிப்பின்றி உழைக்க, பலரது சரியான ஒத்துழைப்பே முக்கிய காரணம். அவர்கள் அனைவரும் எமது வற்றாத நன்றிக்குரியவர்கள்.
1. எனது வாழ்விணையர் திருமதி. மோகனா
2. எனது இயக்கக் குடும்பத்தவரான கருஞ்சட்டைகளின் பாசப் பொழிவுகள், கருஞ்சட்டை அணியாத கண்ணுக்குத் தெரியாத பற்றாளர்கள் அன்புப் பிணைப்புகள்
3. என் வாழ்நாளை நீட்டும் மருத்துவ மாமணிகள்
4. எனக்குத் துளியும் கவலையையோ, அவப்பெயரையோ ஏற்படுத்திடாத எனது குருதிக் குடும்ப உறவுகள்
5. பயணத்தில் என்னைப் பாதுகாக்கும் காரோட்டிகள் உள்பட பற்பலத் தோழர்கள்
6. குறிப்பறிந்து என்னுடன் பணியில் பங்கேற்று, எனது ‘வேகத் தாக்குதல்களையும்‘ சமாளிக்கும் தோழர்கள்.
7. தேவைப்படும்போதும், நாடும்போதும் மதியுரை அளிக்கும் நல்லெண்ண நண்பர்களாம் மூத்தோர்.
- இப்படிப் பலரது கூட்டு - என் பணிகளை எளிதாக்கி, ஊக்கமூட்டும் மாமருந்துகளாகும்!
‘இளமையில் கல்’ என்பது என்னைப் பொறுத்தவரை, ‘ஈரோட்டில் கல்’ என்றாகியதால், எவ்வித கேடோ, குறையோ இன்றி, எளிதில் முடியாத பணியை ஏற்றமுடன் என்றும் புத்துணர்ச்சியுடன் செய்வதில்தான் புத்தாக்கம் பெறுகிறேன்.
இவ்வாண்டும் பெரும் பணி முடிக்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம் தலைமீது சுமத்தப்பட்டுள்ளது.
1. ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பதை அடிப்படையாகக் கொண்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தின் அமலாக்கம்! இப்பணியே முன்னுரிமை பெற்ற முதன்மைப் பணி இப்போது.
2. சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்களுடன் தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கான விரிவான வேலைத் திட்டம்!
3. மகளிர் மாண்பும், உரிமையும், அவர்களுக்கெதிரான வன்கொடுமைகளை எதிர்த்துப் போராட்ட வடிவங்கள்.
4. சாமியார்கள் என்ற போர்வையில் சமூக விரோத காவிக் காலிகளின் அட்டகாசத்தை அறவே வீழ்த்தி எறிய, ‘ஜாதியற்ற சமூகம், சாமியார்கள் இல்லா நாடு’ நம் குறிக்கோள்.
5. மனிதன் தானாகவும் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை என்பதால், தரணிக்கு உழைப்பது தன்னேரில்லாத இன்பம் என்று உணரச் செய்த பெரியார் தத்துவங்களை உலகளாவிய அளவில் பரப்பும் பணியில் மேலும் முன்னேற்றம்.
- இந்த இலக்குகளை நோக்கிய எம் பயணத்தில் இணைந்து கொள்ள வாருங்கள் இளைஞர்களே, தோழர்களே!
சராசரி மனிதனுக்கு 85 வயது - முதுமையின் அடையாளம்!
சறுக்காத பொதுத் தொண்டனுக்கு ‘‘சடுதியில் பணி முடி’’ என்ற கட்டளையின் ஒலி முழக்கம் அது!
இல்லையா தோழர்களே?
எனவே, இணைந்து பணி முடிப்போம்!
மதவெறி ஒழிந்த மனிதநேய உலகுபடைப்போம்!
பதவிகளுக்கு முடிவு உண்டு - தொண்டோ தொடர் பயணம் - மறவாதீர்!
அனைவரின் நம்பிக்கையை ஒருபோதும் பொய்யாக்காமலிருக்க முடிந்த அளவு - முடிவு வரை உழைப்பேன் என்ற உறுதிமூலம் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.
களம் காண கைகுலுக்கி வரவேற்கிறேன் விரைந்து வாரீர் தோழர்களே!
பெரியார் பணி முடிப்போம்!
வெற்றியைக் குவிப்போம்!
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
1.12.2017
No comments:
Post a Comment