ஜூலை 5ஆம் தேதி இலண்டன் ஒலிம்பிக் தடகளப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கேரளாவைச்சேர்ந்த இரு வீரர்களுக்குக் கிடைத்தது. பி. குனஹூமுகம்மது என்பவர் சிறந்த தடகள வீரர்! 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் தங்கம் வெல்லுவார் என்று எதிர்ப் பார்க்கப்படும் வீரராவார்! மற்றொரு வீரர் ஜோசப்ஜி ஆப்ரகாம் என்பவர் ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடையோட்டத்தில் (ழரசனடநள) தங்கப் பதக்கம் பெற்றவர்.
மகிழ்ச்சிதான்.. நிலைமை என்ன தெரியுமா? இந்த இரண்டு வீரர்களும் இலங்கையில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் பங்கு பெற முடியவில்லை; காரணம் என்னவாம்?
இலங்கை செல்வதற்குப் போதிய பண வசதியில்லையாம். 30 ஆயிரம் ரூபாய் பணம் இல்லாததால் போக முடியாமல் போய் விட்டதாம்.
இதுகுறித்து குனஹு முகம்மது கூறியிருப்பதாவது: கேரளாவில் உள்ள பலரிடமும் சென்று நான் பணம் கேட்டேன். ஆனால் யாரும் எனக்குப் பணம் தர முன் வரவில்லை. எனது வங்கிக் கணக்கில் வெறும் 9000 ரூபாய் மட்டும்தான் இருந்தது. இதனால் விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தேசிய தடகள உதவி பயிற்சியாளர் விஜோ தோட்டன் கூறியதாவது:
இந்த இருவரும் கடந்த இரு நாள்களாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். இருவருக்கு உதவும் வகையில் விளையாட்டுத் துறைத் தலைவர், அதிகாரிகள் என்று பல தரப்பட்டவர்களிடம் தடகள வீரர்களின் சூழ்நிலையை எடுத்துக் கூறினேன். ஆனால் யாரும் நிதி உதவி செய்ய முன் வரவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது தடகள வீரர்களின் இதுபோன்ற அவசர தேவைகளுக்கு நிதி உதவி வழங்க விளையாட்டு அமைப்பில் நிதி சேமிப்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுள்ள இரு தடகள வீரர்கள் ரூபாய் 30 ஆயிரம் பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தது வருந்தத்தக்கது. இதுபோன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க நம் நாட்டு விளையாட்டு அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு வெட்கக் கேடானவை என்று விவரிக்கத் தேவையில்லை. இதுவே கிரிக்கெட் விளையாட்டு என்றால் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுக்கு இருக்கும் மரியாதையும், முக்கியத்துவமும் தடகளப் போட்டி என்ற தனி மனிதனின் திறனை வெளிப்படுத்தக் கூடிய உண்மையான ஆற்றலுக்கு மரியாதை இல்லை.
காரணம் என்ன? இதற்குள்ளும் பார்ப்பனீயம் வருணாசிரமம் புகுந்து கொண்டு இருக்கிறது என்பதுதான்! பார்ப்பனர்களுக்குக் குத்தகை போன கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். அய்ந்து நட்சத்திர ஓட்டல்களை கட்டுகிறார்கள். கிரிக்கெட்காரர்களுக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று ஊடகங்களைத் தங்கள் கைகளில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள் கருத்தினை உருவாக்குகிறார்கள். குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேடி வருகிறது.
சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்கங்களைக் குவிக்கின்றன. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வெட்கக்கேடான இடத்தில் இருப்பதற்குக் காரணம் இது போன்ற பார்ப்பனீய அணுகுமுறைகள் தான்.
விளையாட்டுத்துறைகளுக்கென்று மத்தியிலும், மாநிலத்திலும் அமைச்சர்கள் இருக்கிறார்களே - அவர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள்? திறமையுள்ளவர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாதது மன்னிக்கப்படவே முடியாத குற்றமாகும். இது வன்மையான கண்டனத்துக்கு உரியதே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment