Thursday, January 5, 2012

ஏமாறா மனிதர்களாக வாழுங்கள்!


எந்தத் தகுதியும் இல்லாத பலருக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள ரெடிமேட் ஆயுதம், எழுச்சி பீடம் எது தெரியுமா?
அவர்களது முகமன்கூறும் (முகஸ்துதி)  கூச்சநாச்சம் அறியாத சுபாவம்தான்! பலவீனமான மனிதர்கள் இவர்களிடம் கிடைத்துவிட்டால், பருந்து, கழுகுகளுக்குக் கிடைத்த இரை போல அவர்களைப் பிணமாவதற்கு முன்பே கொத்திக் கொத்தித் தின்று விடுவார்கள்!
போலிப் பெருமைகளுக்கும், பொருத்தமில்லாப் புகழ் உரைகளுக்கும் பலியாகும் மனிதர்கள் இந்த குளோரோஃபாம் (மயக்க மருந்து)  ஆசாமிகளை சரி வரப் புரிந்துகொள்ளாமல், அவர்களது போதை மாத்திரைகளை விடாமல் போட்டு விழுங்கி விழுங்கி வீங்கியே பிறகு வீழ்வார்கள்!
தகுதியுள்ள ஒருவரைப் பாராட்டுவது தவறல்ல; அது தேவையும்கூட! மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் அது பால் போன்றது. முகஸ்துதியோ மது போன்றது. வாழ்வாதாரத்திற்குத் தேவையற்றது; கேடும் செய்யக்கூடியது.
எது பாராட்டு - எது முகஸ்துதி (Flattary, Cajolery) என்று எப்படி பகுத்துக் கண்டுபிடிப்பது என்ற கேள்வியை சில வாசக நேயர்கள் உடனே கேட்க முற்படுவது எமக்குப் புரிகிறது!
புகழ்கின்றவர் மனதில் புகழப்படுகின்றவரைப் பற்றி உண்மையான மதிப்பீடு அதன்படியே இருக்குமானால், அதன் காரணமாக அப்புகழுரை, பாராட்டுரையாக வெளிவருமாயின் - உள்மனமும் வாயும் ஒத்து இருக்குமாயின், அது முகமன் அல்ல; உண்மையாகவே பாராட்டுதான் என்று எடுத்துக் கொள்ளலாம்!
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்றார் வடலூரார்.
இதன்படி ஒழுகிடவேண்டுமானால், இந்த முகமன் கூறும் முகமூடி ஆசாமிகளை ஒதுக்கியே வைக்கவேண்டும்.
அதிலும் பணம், பதவி, பட்டங்கள் இருக்கும் இடத்தில் உள்ளவர்களை காக்கா பிடிப்பதற்கு பலர் தங்களது வாய்ச் சாதுரியங்களையே அஸ்திரங்களாக்கி, கேட்போர் எவ்வளவு பெரியவர்களாயினும் அவர்களை தலைக்குப்புற விழும்படிச் செய்து (Flat ஆக்கிவிடுவார்கள்- ஒருவேளை இதிலிருந்துதான் Flattary என்ற சொல் வந்திருக்கலாமோ!) அவர்களை ஆட்டிப் படைக்கும் ஆற்றலை அவர்களை அறியாமலேயே பெற்று ஆதிக்கம் செலுத்துவோராகி விடும் அபாயம் உண்டு!
ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டு சாதிக்க வேண்டியவைகளை சாதித்துக் கொள்ளத் தவறமாட்டார்கள்!
வடலூராருக்கு முன்பே வள்ளுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சகரை அஞ்சப் படும்      (குறள் 824)
இதன் கருத்து:
முகத்தினால் மட்டும் இனிமையாக நகைத்து நடித்துப் பேசி, நெஞ்சினால் எப்பொழுதும் கேடு செய்யும் வஞ்சகர்களைக் கண்டு, ஒருவர் அஞ்சி ஒதுங்கிடல் வேண்டும்.
அப்படிப்பட்ட ஆசாமிகளை வஞ்சகர்கள் என்று மிகப் பொருத்தமாக அல்லவோ கூறினார் வள்ளுவர்!
ஒரு நீண்ட கால நண்பர் திடீரென்று இன்னொரு நண்பரது இல்லத்திற்கு வருகை தந்தார்; தன்னுடன் பயின்ற ஒரு சாதாரணத் தோழன் இன்று உழைப்பினால் உயர்ந்து இவ்வளவு வசதியாக உள்ளானே என்று உள்ளுக்குள் மனம் வெதும்பிக் கொண்டே, வெளியில் அன்பொழுக, முகஸ்துதி செய்யத் தொடங்கியதை நிறுத்தவில்லை.
வந்தவரை வரவேற்று நன்கு உபசரித்து வழியனுப்பினார் இந்த வெகுளியான மனிதர். அவர் போகும்போது நன்றியை உள்ளத்தில் தேக்கி வைத்தோ, வெளிப்படுத்தியோ எதுவும் சொல்லவில்லை.
மாறாக, ஹூம் இவனுக்கு இப்படி ஒரு வாழ்வா? என்ன கொடுமை என்று முணுமுணுத்துக்கொண்டே அந்த தனது பழைய நண்பர் வரவேற்று உபசரித்து விருந்தளித்து பிறகு வழியனுப்பும்போது தந்த பரிசுப் பொருளையும் எடுத்துக் கொண்டு நடந்தார்!
இவர்களைப் புரியாமல், இவர்களின் ததாஸ்து புராணத்தை ஒதுக்கி, அவர்களுக்குக் கொடுக்கவேண்டியவைகளைக் கொடுத்து ஒதுக்கிவிட்டால்தானே நாம் ஏமாறா மனிதர்களாக எப்போதும் இருக்க முடியும்!
எனவே எச்சரிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
முகஸ்துதி பாடும் இவர்களைவிட நம் எதிரிகளைச் சமாளிப்பது என்பது வெகுசுலபம் என்பதைப் புரிந்து வாழுங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...