பூமி தனது அச்சில் ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் நேரம்தான் ஒரு நாள் என்பது. அது எப்போதுமே சரியாக 24 மணி நேரம் கொண்டதாக இருப்பதில்லை.
அது அய்ம்பது முழு வினாடிகள் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்பது வியப்பளிப்ப தாகும். கடல் அலைகள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள்,புவியியல் நிகழ்வுகள் காரணமாக ஏற்படும் உராய் வினால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் வேறுபடுவதுதான் இதன் காரணமாகும். ஓராண்டு காலத்தில், சராசரியான ஒரு நாளின் நேரம் 24 மணி நேரத்தைவிட ஒரு வினாடியில் ஒரு பகுதி குறைவானதாக இருக்கும். ஒருமுறை அணுவியல் கடிகாரங்கள் இத்தகைய வேறுபாடுகளைப் பதிவுசெய்தன. சூரிய நாளின் ஒரு பகுதியாக இதுவரை இருந்த வினாடிக்கு மாற்றி விளக்கம் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது, ஒரு நாளில் ஒரு வினாடி என்பது, 86,400 இல் ஒரு பங்காகும்.
இந்தப் புதிய வினாடி 1967 இல் தொடங்கப்பட்டு, கீழ்க் கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டது. கேசியம் 133 அணு (caesium-133 atom) தரையில் இருக்கும்போது அதில் ஏற்படும் இரண்டு அருமையான நிலைகளுக்கிடையே உள்ள மாற்றத்துடன் தொடர்புடைய கதிர்வீச்சு நேரத்தில் 9,192,631,770 இல் ஒரு பங்கு என்பதுதான் இந்த விளக்கம். இது மிகச் சரியான விளக்கம் என்றாலும், பணிச்சுமை நிறைந்த ஒரு நாளின் முடிவில் இதனை விளக்குவது அவ்வளவு எளிதானதல்ல.
ஒரு வினாடிக்கு இவ்வாறு அளிக்கப்பட்ட புதிய விளக்கம், அணு நாளிலிருந்து சூரிய நாள் சிறிது சிறிதாக விலகிச் செல்கிறது என்று பொருள் தருவதாகும். இதன் விளைவாக, அணு ஆண்டை சூரிய ஆண்டிற்கு இணையாகக் கொண்டு வரவேண்டி, அணு ஆண்டில் ஒரு லீப் வினாடியை அறிவியலாளர்கள் அறிமுகப்படுத்தினர்.
பாரிஸ் விண்வெளி ஆய்வு நிலையத்தில் அமைந்துள்ள சர்வதேச பூமி சுழற்சி சேவை (International EarthRotation Service) யின் அறிவுரைகள்படி, லீப் வினாடி (1972 இல் ஏழாவது முறை நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த உலக அளவிலான நேரம் (Co-ordinated Universal Time- UTC) என்பது இறுதியாக 2005 டிசம்பர் 31 அன்று சேர்க்கப்பட்டது.
சூரியனை பூமி சுற்றி வருவதற்கு ஏற்றவாறு நமது கடிகாரங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும், வானவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தியாகும். ஆனால் செயற்கைக் கோள்களைச் சார்ந்துள்ள கணினி மென்பொறியாளர்களுக்கும், அனைத்து தொழில் நுட்பப் பணியாளர்களுக்கும் இது கெட்ட செய்தியாகும். இவ்வாறு லீப் வினாடியை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு அனைத்துலக டெலிகம்யூனிகேஷன் யூனியன் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. 2007 இல் இந்த லீப் வினாடியைக் கைவிடவேண்டும் என்று அது ஒரு முறையான செயல்திட்டத்தை அளித்தது. இரு கருத்துகளுக்கும் இடையே செய்யப்பட இயன்ற ஒரே சமரசம், UTC, GMT நேரங்களுக்கிடையே உள்ள வேறுபாடு ஒரு மணியை எட்டும் வரை (அதற்கு 400 ஆண்டுகள் பிடிக்கும்) காத்திருப்பது என்பதுதான். இதற்கிடையே உண்மையான நேரம் என்பது எதைப் பொறுத்தது என்பது பற்றிய விவாதம் தொடரவே செய்யும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment