Tuesday, January 3, 2012

கடலூர், புதுவைப் பகுதிகளில் பாதிப்பு மின்சாரம், குடிநீர் உடனடி தேவை


விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை
நேரில் பார்வையிட்ட திராவிடர் கழகக் குழு அறிக்கை


நேற்றைய  நமது அவசர - அவசிய அறிக்கைக்கேற்ப தானே புயல் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட கிராம - நகர பகுதிகளிலும், புதுவை மாநிலத்திலும் சூறாவளி சுற்றுப் பயணத்தை நமது அன்புக் கட்டளையை ஏற்று நடத்திய கழகப் பொதுச் செயலாளர் மானமிகு சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன், மண்டலச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் தண்டபாணி ஆகியோர் நேற்று காலை முதல் இன்று காலை வரை மேற்கொண்டு அங்குள்ள நிலவரம், மக்கள் துயர், வேதனை, அரசுகள் செய்யத் தவறியவை, செய்ய வேண்டியவைபற்றி கீழ்க்காணும் அறிக்கையைத் தந்துள்ளனர்.

மத்திய - மாநில அரசுகள் தங்களின் பணிகளை விரைந்து முடுக்கி விடுவதற்கு இது ஓரளவுக்கு அவர்களுக்கு உதவிகரமாக அமையலாம் என்பதற்காக வெளியிடுகிறோம்.
- கி.வீரமணி

கடலூர், ஜன.3- புயல் - மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுவைப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட திராவிடர் கழகக் குழு உண்மை நிலையைக் கண்டு கழகத் தலைவரிடம் அறிக்கை கொடுத்துள்ளது. விவரம் வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆணைக் கிணங்க தி.க. பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, தி.க. துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மாவட்ட தி.க. தலைவர் சொ. தண்டபாணி, மாவட்ட செயலர் கோ. புத்தன், புதுவை தி.க. தலைவர் சிவ.வீரமணி, மண்டல இளைஞரணி செயலர் மணிவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை பகுதியில் பல இடங்களிலும் புயல் சேதங்களை பார்வையிட்டனர். மக்களிடம் கருத்தறிந்து அளித்துள்ள அறிக்கை விவரம்:

2.1.2012 அன்று...
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பாண்டிச்சேரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் புயலின் பாதிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேகாக்கொல்லை, கோ.சத்திரம், அப்பியம்பேட்டை, சங்கொலிகுப்பம், குடிக்காடு, காரைக் காடு, கடலூர் நகரம், மஞ்சக்குப்பம், சிங்காரத்தோப்பு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா, காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் முதலிய கிராமங்களில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் பார்வை யிட்டோம்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோப்புப் பயிர் களான தென்னை, பலா, முந்திரி போன்றவை வேரோடு பெயர்க்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன. ஓராண்டுப் பயிர்களான வாழை, கரும்பு முதலியனவும், மரவள்ளி, மணிலா, நெல் போன்றவையும் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.

வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டு இடிந்து தரை மட்டமாகி உள்ளன. புயற்காற்றும் மழையும் சேர்ந்து தாக்கியதில் கூரை வீடுகளில் வாழ்ந்த பள்ளி மாணவ, மாணவியரின் பாடப் புத்தகங்கள் நனைந்து கிழிந்துவிட்டன.

மின்சாரத்தைக் காணோம்!

மின்சாரம் கடத்தும் கம்பங்கள் முழுவதும் அடி யோடு விழுந்து, மின் கம்பிகள் சின்னா பின்னப் படுத்தப்பட்டுள்ளன. எனவே மின்சக்தி கடலூர் மாவட்டத் தில் கிடைக்கவில்லை. வீடுகள் இருளடைந்து உள்ளன. மின்சக்தி இல்லாததால் மின் மோட்டார்கள் இயங்கவில்லை. அதன் விளைவாக குடிநீர் கிடைக்கவே இல்லை. இக்கிராமங்களில் திறந்த கிணறுகள் கிடையாது. குழாய்க் கிணற்று நீரை மோட்டார் மூலம் மட்டுமே தொட்டிக்குக் கொண்டு வர முடியும். மின் சக்தி இல்லாததால் குளிப்பதற்கும் நீர் இல்லாமல் உள்ளது.

அரசு இயந்திரம் மூலம் வழங்கப்படும் குடிநீர் குறைந்த அளவே தரப்படுகிறது. அதுவும் நகராட்சி பகுதிகளில் மட்டுமே தரப்படுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங் களில் குடிநீர் இல்லாத அவலம் உள்ளது.

நிருவாகத்தின் மெத்தனம்!

கடலூர் மாவட்ட நிருவாகம் மெத்தனமாகவே செயல்படுகிறது. கடலூர் நகராட்சியின் சார்பில் எந்த நிவாரணப் பணியும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. சமையல் எரிவாயு வைத்திருப்பதால் மண்ணெண்ணெய் பெறத் தகுதி அற்றோர் நகர் புறப்பகுதிகளில் 80 விழுக்காடுக்கு மேல் உள்ளனர். இவர்களது இருண்ட வீட்டில் ஒளி தருவதற்குப் பயன்படும் மெழுகுவத்திகள், மிகச் சிறிய கைஸ் ரூ.2.00 விற்றது இப்போது ரூ.6.00-க்கு மேல் விற்கப்படுகிறது.

குடிநீரும் இல்லையே!
கேனில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ.25-லிருந்து ரூ.50 என உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் முழு வீட்டையும் இழந்து ரூ.5000 இழப்பீடு பெறும் நிலை. நகர்ப்புறத்தில் கல்வீடுகளில் வசிப்போர் ஏதும் பெறாத நிலை உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.2000 தரப்படுவதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இயற்கை இடர்ப்பாடுகளின் போது வழங்கப்படும் தொகை, குடும்பத்தை சீரமைக்கவுமே என்பதுதான் அரசின் நீண்ட காலக் கொள்கை. அந்த வகையில் அனைவருக் கும் நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவை பாதிக்கப்பட்ட விவரத்தைக் கணக்கெடுக்க யாருமே முற்படவில்லை. கீழ்நிலை அலுவலர்களுக்கு மாவட்ட நிருவாகம் இது தொடர்பாக இதுவரை அறிவுரை ஏதும் வழங்கவில்லை எனத் தோன்றுகிறது. கிராமப்புற மக்களின் தேவைகளான குடிநீர் வழங்கிட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் எந்த முயற்சியும் இதுவரை எடுத்திடவில்லை.இவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்தான் அறிவுரை வழங்க வேண்டும்.

உடனடித் தேவைகள்!


மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் தற்போது புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரணப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உள்ளூர் அமைச்சர் கடலூர் நகரம் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு முதல் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு வரை நீண்டுள்ள நெடுஞ்சாலை சிமெண்ட், ஜல்லி, கான்கிரீட் போடப்பட்டு சீரமைக்கப்படும் என்று ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்.

இன்று வரை அது செய்யப்படவேயில்லை.அவரே தற்போது புயல் நிவாரணப் பணிகளைச் செய்திட நியமிக்கப்பட்டுள்ளார். என்ன நடக்கும்? யாருக்கும் நம்பிக்கையில்லை.

மின்வசதி உடனே தரப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் குடிநீர் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்கள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

நெல், வாழை, கரும்பு, தென்னை, முந்திரி, பலா, மரவள்ளி, மணிலா, சவுக்கு போன்ற பயிர்களை இழந்த விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும்.

பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்குப் புதிய புத்தகங்கள் தரப்பட வேண்டும்.

மாநில அளவிலான உயர் அய்.ஏ.எஸ்., அதிகாரிகளைப் பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். மாவட்ட நிருவாகமும், உள்ளாட்சி நிருவாகமும் முனைப்புடன் செயல்புரிந்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.
- புயல் சேத விவரங்களை பார்வையிட்ட திராவிடர் கழகக் குழு

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...