Monday, October 10, 2011

எ(இ)ப்படி இருக்கு அரசியல்?


எ(இ)ப்படி இருக்கு அரசியல்?


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சி. இந்தவூரில் தலைவர் மற்றும்9 வார்டு உறுப்பினர்கள் அத்தனை பேரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர். இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் அத்தனைப் பேரும் பெண்கள் என்பதே!
ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ஆசிரியை பணியிலிருந்து விடுவித்துக் கொண்டவர் என்பதும் கூடுதல் தகவலாகும்.
அரசியல் நெடி மண்ணையும் விண்ணையும் வெடி வைத்துப் பிளந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இப்படியும் ஒரு கிராமமா? இப்படியும் ஒரு புரட்சியா?
நம்புவதற்கே தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் நடத்திருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் எதற்கு என்று திராவிடர் கழகம் விடுக்கும் வினாவிற்கு இங்கு விடை கிடைத்துவிட்டதே!
ஒன்பது பேரும் ஒற்றுமையாக இருந்து ஊராட்சியை நேர்த்தியாக நடத்திக் காட்டினால், அதன் வீச்சு தமிழ் நாட்டையும் தாண்டி டில்லி வரை எதிரொலிக்கும். சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ன, 50 விழுக்காடும் கொடுக்கலாம் என்ற எண்ணம் வலிமை பெறும். நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சிக்கு முன் கூட்டிய (Advance)   நல்வாழ்த்துகள்.
நாட்டார்மங்கலம் அனைவரும் நாடுவார் மங்கலமாக ஜொலிக்கட்டும்!

***********

சென்னை ஆதம்பாக்கம் செக்ரடேரியட் காலனியில் ஒரு விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
என்ன விசேடமாம்?
அடிப்படை வசதிகள் எதையும் இதுவரை செய்து தராத தங்கள் பகுதிக்கு வாக்கு கேட்க வரவேண்டாம்! என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாஷ்! மக்களுக்கும் கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது!  உள்ளாட்சித் தேர்தலில் அரசியலை மறந்து மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படை வசதிகளைத் தான். என்ன செய்வது! நம் நாட்டில் எல்லாம் தான் அரசியல் ஆகிவிட்டதே!
மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் . ..
சாலையோரத்தில் வேலையற்றதுகள்; அவர்களின் கண்களில் விபரீதக் குறி என்று அறிஞர் அண்ணா ஏதோ ஒரு திரைப்படத்தில் எழுதிய வசனம்தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது! ஆட்சியாளர்களே, எச்சரிக்கை!
***********
சென்னைப் பெருநகரில் 4876 வாக்குச் சாவடிகள் உள்ளன; இவற்றில் 1900 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாம்!
இதன் பொருள் என்ன? இந்த வாக்குச் சாவடிகளில் அமைதியாக வாக்களிப்பு நடைபெறாது. ஆள் மாறாட்டம் நடைபெறும். குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தால்,  அவர்கள் வாக்களிக்க வராதபடி செய்து விடுவார்களாம்! எப்படி முடியும்? அந்தப் பகுதியில் கலகம் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் எப்படி வாக்களிக்க வருவார்கள்? தோல்வி பயத்தில் சில இடங்களில் சிலர் கலவரங்களில் ஈடுபடுவதும் உண்டு.
அதிகார பலம் உள்ளவர்கள் வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டுவது. . . இத்தியாதி . . . இத்தியாதி! திருக்கல்யாண குணங்கள் இந்தத் தேர்தல் வைபவத்தில் நடப்பதுண்டு. இப்படிப் பட்ட பகுதிகள்தான் - காவல்துறையின் பார்வையில் பதற்றமானவை என்பதாகும்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என்று பாராமல் காவல்துறை நியாயமாக நடந்து கொண்டால், தடியைத் தூக்கினால் இந்தக் கலகக்காரர்களை ஒடுக்கிவிடலாமே!
***********
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த விலங்கல்பட்டு ஊராட்சி யில் 650 குடும்பங்கள் உள்ளன. வாக்காளர் களின் எண்ணிக்கை 1650. ஒருநாள் காலை ஒவ்வொருவர் வீட்டு வாசல் முன்பும் 25 கிலோ அரிசி மூட்டை இருந்ததாம். வீட்டுக்காரர்களுக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி!
அவற்றைப் பொது இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டனராம். அரசியல் - அரிசியியலாக மாறிவிட்டது. நான் அரிசி தருகிறேன். நீ எனக்கு ஓட்டுப் போடு என் கிற பண்டமாற்று முறையாக ஓட்டுரிமை ஆகிவிட்டதே!
மக்களின் சிந்தனையில் அடிப்படை மாற்றம் முளைத்தாலொழிய இந்தக்கறைகளைக் கழுவ முடியாது.
மக்களை அறிவாளிகளாக - சிந்திப்பவர்களாக ஆக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். மக்கள் சிந்திக்காதவர்களாக இருக்கும் வரைதான் நம் பாடு கொண்டாட்டம் என்று நினைக்கிற அரசியலும் நாட்டில் இருக்கவே செய்கிறது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...