Monday, May 28, 2012

தாழ்த்தப்பட்டோர் - தந்தை பெரியார் சிந்தனைகள்


பறையன் பட்டம் போகாமல் சுத்திரப்பட்டம் போகாது! பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். மற்றும் பேசப் போனால், பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்ஜாதி என்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. கைபலமே ஒழிய, தந்திரமே ஒழிய வேறில்லை. உங்கள் சூத்திரப் பட்டங்களுக்கும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு.  இத்தனையையும் நாசமாக்கி அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப் பட்டம் கீழே இறங்காது. ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந் திருந்தால், நீங்கள் சாதியை ஒன்றாக்குகிறீர்களே என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள்.
ஆகவே, ஆதித் திராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பாப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.
(தந்தை பெரியார் -குடிஅரசு 11-.10.-1931)
29.-9-.35 அன்று சேலம் ராசிபுரம் ஆதிதிராவிடர் மாநாட்டில் பெரியார் தலைமையுரை:
அரசாங்கத்தால் வழங்கிய சீர்திருத்தத்தில் உங்களுக்கு சுயமரியாதை உள்ள சீர்திருத்தம் இருந்தது. அதை தேசாபிமான சீர்திருத்தம் என்னும் பூனா ஒப்பந்தம் பாழாக்கிவிட்டது.
பூனா ஒப்பந்ததை உங்களில் சிலர் ஆதரிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதற்கு அவர் கள் சொல்லும் காரணம் மிகமிக ஆச்சரியமாய் இருக்கிறது.
அதாவது நீங்கள் மேல் ஜாதிக்காரர்களைப் போய் ஓட்டுக் கேட்க வேண்டுமாம். மேல் ஜாதிக் காரர்கள் உங்களை வந்து ஓட்டு கேட்க வேண்டுமாம். இதில் பரஸ்பர நோக்கம் ஏற்படுமாம்.
இது மைனா பிடிக்கிற வித்தையே ஒழிய இதில் நாணயமோ, அறிவுடைமையோ இல்லை. பார்ப்பனர் அதிகாரியாக இருக்கின்ற கச்சேரிக்குள் நீங்கள் போகவேண்டுமானால் சர்க்கார் உத்தரவும், பொதுத் தெருவில் நீங்கள் நடக்க வேண்டுமானால் பீனல் கோட் சட்டமும் வேண்டி இருக்கிறது. நீங்கள் பார்ப்பன அக்கிரகாரத்தில் நடந்து போய் அவர்கள் வீட்டு வாசல் நடை கடந்து உள் ஆசாரத்தில் படுத்து வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் பார்ப்பானிடம் போய் ஓட்டுக் கேட்க முடியுமா?
16-.6.19-29 - கள்ளக்குறிச்சி தென்னார்க்காடு மாவட்ட ஆதி திராவிட மாநாட்டில் திறப்பாளராக இருந்து பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
மேற்கண்ட மதமும், கடவுளும் வந்து குறுக்கிடுகின்றன. ஆதலால் இந்நிலைக்கு ஆதாரமானதென்று சொல்லப்படும் மதத்தையும், கடவுளையும் எதிர்த்து நின்று அவற்றை அழித்தால் ஒழிய, வேறு மார்க்கமில்லை என்று பதிலளிக்கவும் ஒழுக்கமாகவும், தைரியமாகவும், தெளிவாகவும் இருந்தாலொழிய வேறு மார்க்கத்தில் முடியவே முடியாது. அன்றியும் உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். நாம் ஏன் தாழ்த்தப் பட்டவர்கள்? நாம் ஏன் ஒருவரை சாமி என்று கூப்பிட வேண்டும்? என்கிற உணர்ச்சி வர வேண்டும். நீங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்று கருதவேண்டும் என்று மனிதர்களாக வாழவேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர் தமிழகத்தில் பெரியார் தாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த் தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத் தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக் கின்றார்கள் என்றால் வடநாட்டுப் பிடிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறை கூறமுடியுமா?
என்னையோ, அல்லது திராவிடர் இயக் கத்தையோ வீணாகக் குறை கூறினாலும், இல்லா விட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிட இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிசாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை யான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.
திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்கதாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு உரிமை உண்டு.
-பெரியார், விடுதலை 8-.7-.1947


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

காவிரி டெல்டா மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா? மத்திய ரயில்வேதுறை!


தமிழகத்தின் தொன்மையான ரயில்பாதைகளில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை-விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் மெயின்லைன் பாதையும் ஒன்று. 1999ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜாபர் செரீப் ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபொழுது இந்தமீட்டர்  இருப்புப் பாதை அகலப்பாதையாக மாற்றும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளை விரைவுபடுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும், வர்த்தகர்களும்,பொதுமக்களும் கூடி ஆர்ப்பாட்டம் - கடையடைப்பு - பட்டினிப் போராட்டம் எனப் பல நிலைகளில் போராடியதன் விளைவாக திருச்சி-தஞ்சை வழித்தடம் 1998-லும், தஞ்சை-கும்பகோணம் 2002-லும், கும்பகோணம்-மயிலாடுதுறை 2004-லும் மயிலாடுதுறை-விழுப்புரம் 2009லுமாக மெல்ல மெல்ல அகலப்பாதைப்பணி நிறைவுற்று ஒரு சில ஆண்டுகளாக இந்தத்தடத்தில் திருச்சி-சென்னைக்கு தொடர்வண்டிகள் இயக்கப் படுகின்றன.     சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே மீட்டர் பாதையில் 12-க்கும் மேற்பட்ட வண்டிகள் ஓடிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உயர்ந்துவரும் மக்கள் தொகைக்கேற்ப அகலப்பாதைப்பணிக்கு பிறகு வண்டிகளின் எண்ணிகையை அதிகரிக்கவேண்டிய மத்தியஅரசு பழைய வண்டிகளின் எண்ணிகையையும் குறைத்துவிட்டது.அத்துடன் தற்போது இயக்கப்படும் வண்டிகள் அனைத்தும் விரைவு வண்டிகளாகவே உள்ளன. நடுத்தரமக்களுக்கு பயன்படும் வகையில் பயணிகள் தொடர்வண்டி வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.    ஜாபர்செரீப் காலத்தில் நாகூரிலி ருந்து, மயிலாடுதுறை-கடலுர்-விருத்தா சலம்-சேலம் வழியாக பெங்களூரு வரை விடப்பட்ட பயணிகள் தொடர்வண்டி, அகலப்பாதை மாற்றத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இயக்கப்படவில்லை. இதனால் மயிலாடு துறையிலிருந்து பெங்களூரு செல்ல இரண்டுமணி நேரத்தை அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஈரோடு-கருர் வழியாக பெங்களூருவுக்கு ஒரேயொரு வண்டி மட்டும் இயக்கப்படுவ தால் பயணிகள் கூட்டநெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.     மயிலாடுதுறை-திருவாருர் அகலப் பாதை பணி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்து சரக்குவண்டியும் இயக் கப்பட்ட நிலையில் இதுவரை பயணிகள் வண்டி இயக்கப்படாதது இந்தப்பகுதி யினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியஅரசின் மெத்தனப்போக்கை கண்டித்து போராடுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.         இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் திருமதி பவானி சீனுவாசன் கூறுகையில் புனிதத்தலங்கள் நிறைந்த பகுதியாக விளங்குவதால் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பயணநேரத்தை குறைக்கவும் கடலுர்-விருத்தாசலம் மார்க்கத்தில் பெங்களூருவுக்கு உடனடி யாக தொடர்வண்டி இயக்கப்பட வேண்டியது அவசியம்.
குறிப்பாக  கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர். மயிலாடுதுறை-திருவாருர் அகலப்பாதை பணி முடிந்து வெகு நாட்களாகியும் வண்டி இயக்கப்படாதது வேதனையளிக்கிறது.
மயிலாடுதுறையிலிருந்து நாகைக்கு ரயிலில் செல்ல கும்பகோணம், தஞ்சாவூர் என ஊர் சுற்றி செல்ல வேண்டியிருக் கிறது என்றார். வர்த்தகசங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில் திருச்சி-சென்னை மெயின்லைன் 3 வருடங்களில் அகலப்பாதையாக மாற்றப்படும் என்று ஆரம்பிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் ஆகியும் பணி நிறைவடையாததால் பொதுமக்களோடு சேர்ந்து வர்த்தக சங்கமும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. பட்டினி போராட்டம், ரயில் மறியல் என பல நிலைகளை எடுத்தோம். ரயில் மறியலில் ஈடுபட்ட எங்கள் சங்க கவுரவத் தலைவர் அந்த இடத்திலேயே மாரடைப்பால் உயிர்விட்டார் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.கோரிக்கைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. அறிவிக்கப் பட்ட நாகூர்-பெங்களூரு வண்டி இயக்கப்படவில்லை.
மயிலாடுதுறையிலிருந்து சென் னைக்கு பயணிகள் ரயில் கேட்டோம். எந்த பதிலும் இல்லை. மயிலாடுதுறை-திருவாரூர் அகலப்பாதை பணி நிறைவு பெற்று பலநாட்கள் ஆகிறது அந்த தடத்திலும் வண்டி இயக்கப்படவில்லை என்றார்.  நாகை மாவட்ட தி.மு.க. செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களிடத்தில் கேட்டபோது நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தில் இதுபற்றி, தான் பேசியிருப்பதாக குறிப்பிட்டார்.
பெட்டிகளின்(கோச்) பற்றாக்குறையே காலதாமதத்திற்கு காரணம் என்றும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்ததாகவும் கூறினார். மயிலாடுதுறை-திருவாருர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் துவக்க விழாவிற்கு முதலமைச்சரிடம் தேதி கேட்டிருப்பதாக அறிகிறோம். அதனால் தான் காலதாமதமாகி கொண்டிருக்கிறது என்றார்.  இதற்கிடையில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர்  பாதையில் இருந்த தண்டவாளங்களை பல ஆண்டு களுக்கு முன்பே ரயில்வேதுறை அகற்றிவிட்டது தண்டவாளங்கள் அகற்றப்பட்டாலும் வழித்தட இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே மீண்டும் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயிலை எனது முயற்சியில் ஓடவிடுவேன் என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மேலவை உறுப் பினருமான மணிசங்கர் அய்யர் மயிலாடு துறைப்பகுதிக்கு வரும்போதெல்லாம் கூறிவருகிறார்.  காவிரி டெல்டா பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை களுக்கு தீர்வு கிடைக்குமா?
- கி. தளபதிராஜ்,
விடுதலை செய்தியாளர்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உலகில் மகிழ்ச்சியில் நாம் எங்கே இருக்கிறோம்?


அய்.நா. மாமன்றம் உலக மகிழ்ச்சி அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது! மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் (முதல் அய்ம்பது) நாடுகளின் வரிசை - உலக நாடுகளில் - எப்படி உள்ளன? எந்த தர வரிசை என்பதை பல அளவுகோல்கள் ஆய்வுகள் நடத்தி, கண்டு அறிந்து வெளியிட் டுள்ளார்கள்!

அந்த வரிசைப்படி, (மகிழ்ச்சி அளவின் தரவரிசைப்படி)

1) டென்மார்க், 2) ஃபின்லாந்து, 3) நார்வே, 4) நெதர்லாந்து, 5) கனடா, 6) சுவீட்சர்லாந்து, 7) சுவீடன், 8) நியூசிலாந்து, 9) ஆஸ்திரேலியா, 10) அயர்லாந்து, 11) அமெரிக்க அய்க்கிய நாடுகள் (USA) 12) கோஸ்டோரீகா, 13) ஆஸ்திரியா, 14) இஸ்ரேல், 15) பெல்ஜியம், 16) லக்சம்பர்க், 17) அய்க்கிய அரபு எமிரேட்ஸ் (U.A.E.) ( 18) இங்கிலாந்து (U.K.) 19) வெனிசுலா, 20) அய்ஸ்லாந்து 21) பனாமா, 22) ஸ்பெயின், 23) பிரான்ஸ், 24) மெக்சிகோ, 25) பிரேசில், 26) சவுதி அரேபியா, 27) போர்ட்டோ ரீகோ, 28) இத்தாலி, 29) குவைத், 30) ஜெர்மனி, 31) கத்தார், 32) துர்க்மெனிஸ்தான், 33) சிங்கப்பூர் (இங்கிருந்துதான் எழுது கிறேன்) 34) பெலீஸ் (Belize) 35) சைப்பிரஸ், 36) செக் குடிஅரசு, 37) கவுத்திமேலா, 38) டிரினிடாட் & டூபேகோ 39) அர்ஜென்டினா, 40) ஜமைக்கா, 41) கொலம்பியா 42) கிரீஸ், 43) சிலி, 44) ஜப்பான், 45) கயானா, 46) தைவான், 47) மால்ட்டா, 48) எல்சால்வடார், 49) ஸ்லோவேனியா, 50) உருகுவே.
(source: World Happiness Report United Nations)

இதில் - மகிழ்ச்சி நிலவும் மக்களை வரிசைப்படுத்திய நாடுகளில் பெரும்பாலானவை சிறிய நாடுகளே!  பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படைக் கட்டுமான வசதிகள், படிப்பறிவு, சுகாதாரம் (நல் வாழ்க்கை) கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளம், அவை எல்லாவற்றையும்விட சமூக ஆதரவு, நண்பர் குழு, குடும்ப உறவுகள் - இவைகளின் ஒட்டு மொத்தமான ஆய்வுகள் கூட்டுத் தொகையினைப் பயன்படுத்தியதன் அடிப் படையில் இந்த தர வரிசை அமைந் துள்ளன.

நிறைய பணம் சம்பாதிப்போர், அதிகம் உள்ள நாடுகளில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக அவர்கள் இருப்பதில்லை என்பதை  பண்பாடு, மனவளம், நோயற்ற வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மை இப்படி பலவற்றையும் ஆய்வு செய்து அய்.நா. மகிழ்ச்சி அறிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கறுப்பு இன மக்கள் அதிகம் வாழும் நாடுகள்தான் மிகவும் துன்பம், வறுமை, வாழ்க்கைத் தரக் குறைபாடு எல்லாமும் உடை யவை!

ஏன் நம் நாடு இந்தியா  தர வரிசையில் முந்த  இல்லை? நம் ஞானபூமி - பன் மதங்களையும் பலகோடி கடவுள்களையும், வழிபாட்டு நிலையங்களையும் ஆத்மா, தத்துவார்த்தத்தில் எமக் கிணை எவரே என்று தம்பட்டமடிக்கும் இந்த புண்ணிய பூமியில் மகிழ்ச்சிக்கு ஏனோ பஞ்சம், எல்லாம் தலை யெழுத்து, முன் ஜென்மவினை, கர்ம பலன் என்ற கட்டுக்களே தடைக் கற்கள் என்பதை உணர்ந்தால், உண்மை புரியும்!

தாயன்பின் தனித்தன்மை இதுதான்!


இன்று - மே 13 - அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இது மேலை நாட்டில் - குறிப்பாக அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை, தாய்மை என்பதும் தாய்ப்பாசம், தாய் அன்பு என்பதும் பாரம்பரியமாக வருவதாகும்.

உலகில் மனித குலமே துவக்கத்தில் தாய்வழிச் சமூகத்தில்தான் துவங்கியது; பிறகுதான் பிறழ்ந்து, இன்றுள்ள ஆணாதிக்கச் சமூகமாக மாறிவிட்டது!

தாய் அன்புக்கும், தாயின் தியாகத்திற்கும் ஈடாக, இணையாக எந்த உவமையையும் (100க்கு 100 சரியாக) சொல்ல முடியாது.

கருவில் சுமந்து கொண்டுள்ள காலத்தில் கூட தன் நலத்தை விட, வயிற்றில் வளரும் அந்தக் குழந்தைக்காக செய்யப்படும் தாயின் தியாகம் அப்போதே துவங்கி விடுகிறது!

கவலைகள் பூராவிலும் தனது உடல்நலத்தை விட அந்த பூமிக்கு வராத அந்த புது மொட்டினை நோக் கியதாகவே அமைந்து, அதற்கேற்பத் தன்னுடைய சுவைகள், தேவைகள், விருப்புகள் எல்லாவற்றையும் அந்தத் தாய் மாற்றிக் கொள்ளுகிறாரே இதை எப்படி பிறவற்றோடு ஒப்பிட முடியும்?

இப்போது மகப்பேறு எளிதாகிவிட்டது. சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, கருவைச் சுமக்கும் நமது தாய்களைப் பற்றி, ஆதிக்கம் - அதிகாரம் செலுத்தும் மாமியார்கள் கூட, அய்யோ அவள் சாவைத் தலையில் வைத்துக் கொண்டுள்ளவளாயிற்றே, அவளது விருப்பத் தினை நாம் பூர்த்தி செய்யவேண்டாமா? என்ற ஒரு பச்சா தாபம் கலந்த இரக்கத்தைக் காட்டத் தவற மாட்டார்கள்!

சந்திக்கக் கூடிய வேதனைகளில் மிகவும் சங்கப்படக் கூடிய உச்ச வேதனை பிரசவ வேதனை என்பதுதானே நடைமுறை வழக்கு?

இப்படியெல்லாம் தொல்லைகளையும் துன்பங்களையும் அனுபவித்த அந்தத் தாய், மலர்ந்த அந்த புதுமலரைக் கண்டபோது, கதிரவன் ஒளி கண்டு காணாமற்போகும் பனித் திவலைகளாக அல்லவா அவரது கவலைகள் மாறி விடுகின்றன. அந்தத் தாயின் புன்சிரிப்பு - பிறந்த குழந்தையின் அழுகுரல் கண்டு புது வானத்து முழுநிலவைக் கண்டது போன்ற ஒரு குளிர்ச்சி அல்லவா  ஏற்படுகிறது உடம்பெல்லாம்!

அதன் பிறகு எத்தனையோ பாதுகாப்பு - கவசங்களைச் சுமந்து ஆளாக்கிய பிறகும் அந்த அன்னை எதிர்பார்ப்பது தம் செல்வத்திடமிருந்து பணமா, காசா, நன்றியா? நல்லவைகளைக் கூட அல்ல, பாசம், பாசம்! பாசம் தானே!!

ஒழுக்கத் தவறுடன் கொலை செய்த பிள்ளை யானாலும் கூட, அந்தப் பாசம் அந்தத் தாயின் ரத்தத்திலிருந்து வெளியேறுவதே இல்லையே!

வெறுக்கத் தெரியாது, பொறுத்தே வாழ்வதற்கு மறு பெயர்தான் தாய் அன்பு!

யார் நேசித்தாலும், இவர் - இந்த அன்னை அதனைத்தானே வாழ்நாள் முழுவதும் யாசிக்கிறார்?

இதை ஏன் பல பிள்ளைகள் - வளர்ந்து வாழ்வில் ஒரு சில மமதை மன்னர்கள் யோசிக்க மறுக்கிறார்கள் - அதுதான் புரியவில்லை. இதற்கு வள்ளுவர் பதில் அளிக்கிறார், அவர்கள் செத்தாருள் வைக்கப்பட வேண்டியவர்கள் என்று.

ஆனால் இந்தத் தாய்களோ அத்தகைய பிள்ளை செத்தாலும் தாங்களும் அவர்களுடன் எரிந்துவிட வேண்டும் என்று மனதார அழுது புலம்பி ஆறுதல் பெறாமல் அலைகின்றார்களே!

இதுதான் தாயன்பு, இதுதான் கைம்மாறு கருதா, இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும் இயல் புடையது!

வாழ்க தாயன்பு!

வளர்க நன்றி உணர்வு!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்? - பெரியார்


தோழர்களே!
தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற் களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தமிழ் பாஷை
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்த வன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டா மல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந் தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப் பந்தமுண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டிய வனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.
அன்பு என்பது...
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக் கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.
அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத் துகிறேன்.
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத் தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக் கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப் பதுமுண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டா ருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழை யது - புதியது என்ப தற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக் காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினா லாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னி யில் போற்றப்படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக் கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.
பழங்காலம்
பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம்.  இனி யும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம்.  பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன் படுத்துவதுமில்லை.  உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள் வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்?  அது போவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.  தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா?  அவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு -  06.08.1939

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...