Monday, May 28, 2012

தாயன்பின் தனித்தன்மை இதுதான்!


இன்று - மே 13 - அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இது மேலை நாட்டில் - குறிப்பாக அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை, தாய்மை என்பதும் தாய்ப்பாசம், தாய் அன்பு என்பதும் பாரம்பரியமாக வருவதாகும்.

உலகில் மனித குலமே துவக்கத்தில் தாய்வழிச் சமூகத்தில்தான் துவங்கியது; பிறகுதான் பிறழ்ந்து, இன்றுள்ள ஆணாதிக்கச் சமூகமாக மாறிவிட்டது!

தாய் அன்புக்கும், தாயின் தியாகத்திற்கும் ஈடாக, இணையாக எந்த உவமையையும் (100க்கு 100 சரியாக) சொல்ல முடியாது.

கருவில் சுமந்து கொண்டுள்ள காலத்தில் கூட தன் நலத்தை விட, வயிற்றில் வளரும் அந்தக் குழந்தைக்காக செய்யப்படும் தாயின் தியாகம் அப்போதே துவங்கி விடுகிறது!

கவலைகள் பூராவிலும் தனது உடல்நலத்தை விட அந்த பூமிக்கு வராத அந்த புது மொட்டினை நோக் கியதாகவே அமைந்து, அதற்கேற்பத் தன்னுடைய சுவைகள், தேவைகள், விருப்புகள் எல்லாவற்றையும் அந்தத் தாய் மாற்றிக் கொள்ளுகிறாரே இதை எப்படி பிறவற்றோடு ஒப்பிட முடியும்?

இப்போது மகப்பேறு எளிதாகிவிட்டது. சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, கருவைச் சுமக்கும் நமது தாய்களைப் பற்றி, ஆதிக்கம் - அதிகாரம் செலுத்தும் மாமியார்கள் கூட, அய்யோ அவள் சாவைத் தலையில் வைத்துக் கொண்டுள்ளவளாயிற்றே, அவளது விருப்பத் தினை நாம் பூர்த்தி செய்யவேண்டாமா? என்ற ஒரு பச்சா தாபம் கலந்த இரக்கத்தைக் காட்டத் தவற மாட்டார்கள்!

சந்திக்கக் கூடிய வேதனைகளில் மிகவும் சங்கப்படக் கூடிய உச்ச வேதனை பிரசவ வேதனை என்பதுதானே நடைமுறை வழக்கு?

இப்படியெல்லாம் தொல்லைகளையும் துன்பங்களையும் அனுபவித்த அந்தத் தாய், மலர்ந்த அந்த புதுமலரைக் கண்டபோது, கதிரவன் ஒளி கண்டு காணாமற்போகும் பனித் திவலைகளாக அல்லவா அவரது கவலைகள் மாறி விடுகின்றன. அந்தத் தாயின் புன்சிரிப்பு - பிறந்த குழந்தையின் அழுகுரல் கண்டு புது வானத்து முழுநிலவைக் கண்டது போன்ற ஒரு குளிர்ச்சி அல்லவா  ஏற்படுகிறது உடம்பெல்லாம்!

அதன் பிறகு எத்தனையோ பாதுகாப்பு - கவசங்களைச் சுமந்து ஆளாக்கிய பிறகும் அந்த அன்னை எதிர்பார்ப்பது தம் செல்வத்திடமிருந்து பணமா, காசா, நன்றியா? நல்லவைகளைக் கூட அல்ல, பாசம், பாசம்! பாசம் தானே!!

ஒழுக்கத் தவறுடன் கொலை செய்த பிள்ளை யானாலும் கூட, அந்தப் பாசம் அந்தத் தாயின் ரத்தத்திலிருந்து வெளியேறுவதே இல்லையே!

வெறுக்கத் தெரியாது, பொறுத்தே வாழ்வதற்கு மறு பெயர்தான் தாய் அன்பு!

யார் நேசித்தாலும், இவர் - இந்த அன்னை அதனைத்தானே வாழ்நாள் முழுவதும் யாசிக்கிறார்?

இதை ஏன் பல பிள்ளைகள் - வளர்ந்து வாழ்வில் ஒரு சில மமதை மன்னர்கள் யோசிக்க மறுக்கிறார்கள் - அதுதான் புரியவில்லை. இதற்கு வள்ளுவர் பதில் அளிக்கிறார், அவர்கள் செத்தாருள் வைக்கப்பட வேண்டியவர்கள் என்று.

ஆனால் இந்தத் தாய்களோ அத்தகைய பிள்ளை செத்தாலும் தாங்களும் அவர்களுடன் எரிந்துவிட வேண்டும் என்று மனதார அழுது புலம்பி ஆறுதல் பெறாமல் அலைகின்றார்களே!

இதுதான் தாயன்பு, இதுதான் கைம்மாறு கருதா, இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும் இயல் புடையது!

வாழ்க தாயன்பு!

வளர்க நன்றி உணர்வு!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...