Monday, May 28, 2012

காவிரி டெல்டா மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா? மத்திய ரயில்வேதுறை!


தமிழகத்தின் தொன்மையான ரயில்பாதைகளில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை-விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் மெயின்லைன் பாதையும் ஒன்று. 1999ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜாபர் செரீப் ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபொழுது இந்தமீட்டர்  இருப்புப் பாதை அகலப்பாதையாக மாற்றும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளை விரைவுபடுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும், வர்த்தகர்களும்,பொதுமக்களும் கூடி ஆர்ப்பாட்டம் - கடையடைப்பு - பட்டினிப் போராட்டம் எனப் பல நிலைகளில் போராடியதன் விளைவாக திருச்சி-தஞ்சை வழித்தடம் 1998-லும், தஞ்சை-கும்பகோணம் 2002-லும், கும்பகோணம்-மயிலாடுதுறை 2004-லும் மயிலாடுதுறை-விழுப்புரம் 2009லுமாக மெல்ல மெல்ல அகலப்பாதைப்பணி நிறைவுற்று ஒரு சில ஆண்டுகளாக இந்தத்தடத்தில் திருச்சி-சென்னைக்கு தொடர்வண்டிகள் இயக்கப் படுகின்றன.     சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே மீட்டர் பாதையில் 12-க்கும் மேற்பட்ட வண்டிகள் ஓடிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உயர்ந்துவரும் மக்கள் தொகைக்கேற்ப அகலப்பாதைப்பணிக்கு பிறகு வண்டிகளின் எண்ணிகையை அதிகரிக்கவேண்டிய மத்தியஅரசு பழைய வண்டிகளின் எண்ணிகையையும் குறைத்துவிட்டது.அத்துடன் தற்போது இயக்கப்படும் வண்டிகள் அனைத்தும் விரைவு வண்டிகளாகவே உள்ளன. நடுத்தரமக்களுக்கு பயன்படும் வகையில் பயணிகள் தொடர்வண்டி வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.    ஜாபர்செரீப் காலத்தில் நாகூரிலி ருந்து, மயிலாடுதுறை-கடலுர்-விருத்தா சலம்-சேலம் வழியாக பெங்களூரு வரை விடப்பட்ட பயணிகள் தொடர்வண்டி, அகலப்பாதை மாற்றத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இயக்கப்படவில்லை. இதனால் மயிலாடு துறையிலிருந்து பெங்களூரு செல்ல இரண்டுமணி நேரத்தை அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஈரோடு-கருர் வழியாக பெங்களூருவுக்கு ஒரேயொரு வண்டி மட்டும் இயக்கப்படுவ தால் பயணிகள் கூட்டநெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.     மயிலாடுதுறை-திருவாருர் அகலப் பாதை பணி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்து சரக்குவண்டியும் இயக் கப்பட்ட நிலையில் இதுவரை பயணிகள் வண்டி இயக்கப்படாதது இந்தப்பகுதி யினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியஅரசின் மெத்தனப்போக்கை கண்டித்து போராடுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.         இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் திருமதி பவானி சீனுவாசன் கூறுகையில் புனிதத்தலங்கள் நிறைந்த பகுதியாக விளங்குவதால் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பயணநேரத்தை குறைக்கவும் கடலுர்-விருத்தாசலம் மார்க்கத்தில் பெங்களூருவுக்கு உடனடி யாக தொடர்வண்டி இயக்கப்பட வேண்டியது அவசியம்.
குறிப்பாக  கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர். மயிலாடுதுறை-திருவாருர் அகலப்பாதை பணி முடிந்து வெகு நாட்களாகியும் வண்டி இயக்கப்படாதது வேதனையளிக்கிறது.
மயிலாடுதுறையிலிருந்து நாகைக்கு ரயிலில் செல்ல கும்பகோணம், தஞ்சாவூர் என ஊர் சுற்றி செல்ல வேண்டியிருக் கிறது என்றார். வர்த்தகசங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில் திருச்சி-சென்னை மெயின்லைன் 3 வருடங்களில் அகலப்பாதையாக மாற்றப்படும் என்று ஆரம்பிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் ஆகியும் பணி நிறைவடையாததால் பொதுமக்களோடு சேர்ந்து வர்த்தக சங்கமும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. பட்டினி போராட்டம், ரயில் மறியல் என பல நிலைகளை எடுத்தோம். ரயில் மறியலில் ஈடுபட்ட எங்கள் சங்க கவுரவத் தலைவர் அந்த இடத்திலேயே மாரடைப்பால் உயிர்விட்டார் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.கோரிக்கைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. அறிவிக்கப் பட்ட நாகூர்-பெங்களூரு வண்டி இயக்கப்படவில்லை.
மயிலாடுதுறையிலிருந்து சென் னைக்கு பயணிகள் ரயில் கேட்டோம். எந்த பதிலும் இல்லை. மயிலாடுதுறை-திருவாரூர் அகலப்பாதை பணி நிறைவு பெற்று பலநாட்கள் ஆகிறது அந்த தடத்திலும் வண்டி இயக்கப்படவில்லை என்றார்.  நாகை மாவட்ட தி.மு.க. செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களிடத்தில் கேட்டபோது நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தில் இதுபற்றி, தான் பேசியிருப்பதாக குறிப்பிட்டார்.
பெட்டிகளின்(கோச்) பற்றாக்குறையே காலதாமதத்திற்கு காரணம் என்றும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்ததாகவும் கூறினார். மயிலாடுதுறை-திருவாருர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் துவக்க விழாவிற்கு முதலமைச்சரிடம் தேதி கேட்டிருப்பதாக அறிகிறோம். அதனால் தான் காலதாமதமாகி கொண்டிருக்கிறது என்றார்.  இதற்கிடையில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர்  பாதையில் இருந்த தண்டவாளங்களை பல ஆண்டு களுக்கு முன்பே ரயில்வேதுறை அகற்றிவிட்டது தண்டவாளங்கள் அகற்றப்பட்டாலும் வழித்தட இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே மீண்டும் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயிலை எனது முயற்சியில் ஓடவிடுவேன் என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மேலவை உறுப் பினருமான மணிசங்கர் அய்யர் மயிலாடு துறைப்பகுதிக்கு வரும்போதெல்லாம் கூறிவருகிறார்.  காவிரி டெல்டா பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை களுக்கு தீர்வு கிடைக்குமா?
- கி. தளபதிராஜ்,
விடுதலை செய்தியாளர்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...