Wednesday, February 5, 2020

கலையிலும் ஜாதி வருணப் பார்வை?

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதிய `செபாஸ்டியன் & சன்ஸ்' நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் காந்தி நூலை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவருமான தொல்.திருமாவளவன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். (3.2.2020)
சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அரங்கில் நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த விழாவுக்கு இரண்டு நாள்களுக்கு முன் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இசைக் கருவியான மிருதங்கம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறித்து 4 ஆண்டுகள் தொடர் ஆய்வுக்குப் பின், அதை டி.எம்.கிருஷ்ணா புத்தகமாக வெளியிடுகிறார்.
அனுமதி ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் இயங்கும் கலாசேத்ரா வெளியிட் டிருந்த அறிக்கையில், ``கலாசேத்ரா, அரசு நிறுவனமாக இருப் பதால் அரசியல், கலாச்சாரம், சமூகரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது.
செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் சர்ச்சைக் குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது. மேலும், நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன. புத்தக வெளியீட்டு விழாவுக்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங் களுக்குத் தெரியாது. ஆகையால் புத்தக வெளியீட்டு விழா வுக்காக எங்கள் அரங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள அளிக் கப்பட்ட அனுமதியை ரத்துசெய்கிறோம்" என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி அரங்கில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அதேநாளில் புத்தக வெளியீடு நடந்தது. அனுமதி மறுப்பு விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை எழுப்பியிருந்த நிலையில், நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அரங்கு நிறைந்த நிலையில், வெளியில் திரை மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், `தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தொல்.திருமாவளவன், ``வர்ணம் அடிப்படையிலான ஜாதியப் பாகுபாடு இன்றும் இருக்கிறது என்பது, இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதில் இருந்தே அறிந்துகொள்ளலாம். உலகில் தோன்றிய முதல் தோல் இசைக்கருவி பறைதான். அதன் பரிணாம வளர்ச்சியா கவே தபேலா, மிருதங்கம் போன்றவை வந்தன. ஆனால், பறை இழிவாகப் பார்க்கப்படுகிறது. கோயிலுக்குள்ளும் அதற்கு இடமில்லை.
ஆனால், மிருதங்கமும் ஒருவகையான பறைதான். ஆனால், அதற்கு கோயிலுக்குள் இடமுண்டு. அதேபோல், மிருதங்கம் தயாரிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப் பட்டவர்களே. அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருக் கிறார்கள். அப்படி மதம் மாறினாலும் அவர்களை ஜாதியப் பாகுபாடு துரத்துகிறது. அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். அவர்களும் ஒடுக்கப்படும் போக்கு இருப்பது அதனால்தான். இந்தப் புத்தகம் புனைவாக எழுதப்பட்டது அல்ல. உண்மையான வரலாற்றையே டி.எம்.கிருஷ்ணா இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூர், மதுரை, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து மிருதங்கம் தயாரிக்கும் கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இங்கு குடும்பங்களுடன் அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். டி.எம்.கிருஷ்ணா புத்தகம் குறித்து நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். மிருதங்கம் தயாரிக்கும் தொழிலாளர்கள் குறித்தும் அவர், தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ``எனது புத்தகம் மீது என்ன விமர்சனம் வேண்டுமானால் வைக்கலாம். இந்தப் புத்தகம் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்'' என்றார்.
சீன அதிபரின் சென்னை வருகையின் போது தமிழக அரசின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை முதல், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், பரத நாட்டியம் என பல வகையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் கலைஞர்கள் நிறுத்தப்பட்டிருந்த போது, அந்த வேறுபாடு நன்றாகவே காணப்பட்டது. அதாவது, தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆடியவர் களுக்குச் சிறிய இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பரத நாட்டியம் ஆடியவர்களுக்கு தரைவிரிப்புகள் மற்றும் இட வசதியும் அதிகம் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து டி.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்பி இருந்தார், மேலும் சீன அதிபர் தங்கும் விடுதிக்கு எதிரே பரதநாட்டிய கலைஞர்களுக்கு சாமியானா நிழல் மேடை, நாதஸ்வரம் - தவில் மற்றும் மேள வித்வான்களை சாலையின் ஓரத்தில் வெயிலில் நிற்கவைத்தனர் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்
பாடகர் கிருஷ்ணா கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்களை கர்நாடக இசையில் பாடுகிறார் என்பதற்காக 2018-ஆம் ஆண்டு இந்திய விமானப்போக்குவரத்து துறை சார்பில் டில்லியில் நடைபெறவேண்டிய இவரது இசைக்கச்சேரியை கடைசி நேரத்தில் விளக்கம் எதுவுமே கொடுக்காமல் ரத்துசெய்து அதே மேடையில் வேறு ஒருவரை பாடவைத்து அவமானப்படுத்தியது பெரும் விவாதப் பொருளானதும் குறிப்பிடத்தக்கது. கலையிலும் கூட வருணப் பார்வை, மதப் பார்வை என்பது அநாகரிகத்தின் எல்லையே!
மத்தியில் பிஜேபி அரசு தொடரும் வரை இந்த நிலை தான் - இதனை வெகு மக்கள் உணர வேண்டும் - அதுதான் தீர்வு.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...