Thursday, February 6, 2020

"காற்றில் இருந்து தயாரிக்கப்படும்" புரோட்டீன் உணவு


காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தியை ஃபின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது பத்தே ஆண்டுகளில் சோயாவுக்கு (புரதச்சத்து நிறைந்த உணவு) போட்டியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நீரில் இருந்து மின்சாரம் மூலம் பிரிக்கப்படும் ஹைட்ரஜனுடன், மண் பாக்டீரியாவை சேர்ப்பதன் மூலம் இந்தப் புரோட்டீன் உருவாக்கப்படுகிறது.
இதற்கான மின்சாரம் சூரியசக்தி அல்லது காற்றாலை மூலம் கிடைக்கும் என்றால், பசுமைக்குடில் வாயு (Greenhouse gas) உற்பத்தி எதுவும் இல்லாமல் உருவாக்கப்படும் உணவாக இது இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கனவு நனவாகும் போது, விவசாயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகிற்கு உதவக் கூடியதாக இது இருக்கும்.
கடந்த ஆண்டு ஹெல்சின்கியின் புறநகர் பகுதியில் உள்ள சூரியசக்தி உணவு தயாரிப்பு முன்னோடி நிலையத்திற்கு நான் சென்றிருந்த போது, அதை விரிவாக்கம் செய்ய ஆராய்ச்சி யாளர்கள் நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.
தங்களுக்கு 5.5 மில்லியன் யூரோக்கள் முதலீடாகக் கிடைத்துள்ளது என்று இப்போது அவர்கள் கூறுகின்றனர். மின்சாரத்துக்கான செலவின் அளவைப் பொருத்து, தசாப்தத்தின் இறுதிக்குள் இதன் உற்பத்தி விலை சோயா உற்பத்தி விலைக்கு இணையாக மாறிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே கூட இது சாத்தியமாகலாம் என்கின்றனர்.
சோலெயின் எனப்படும் - புரதம் நிறைந்த மாவு தயாரிப்பதற்கான சில தானியங்களை நான் சாப்பிட்டுப் பார்த்தேன். அதில் எந்த ருசியும் இல்லை. அப்படி உருவாக்குவதற்குத்தான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
எல்லா வகையான உணவுகளுடனும் சேர்க்கக் கூடிய ருசியற்ற கூடுதல் சேர்க்கை உணவுப் பொருளாக இது இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
நிலக்கடலை, அய்ஸ்கிரீம், பிஸ்கட்கள், பாஸ்டா, நூடுல்ஸ், சாஸ் அல்லது ரொட்டியுடன் சேர்ப்பது போன்று இது பயன்படுத்தப்படலாம்.
செயற்கை முறையில் மாமிசம் அல்லது மீன் இறைச்சி உருவாக்குவதற்கான அடிப்படைப் பொருளாக, திசுக்கள் வளர்வதற்கான தளமாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டுபிடிப் பாளர்கள் கூறுகின்றனர்.
மழைக் காடுகளில் வளர்க்கப்படும் சோயாவுக்கு பதிலாக இதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
திட்டமிட்டபடி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, பல ஆண்டுகள் முன்னதாகவே புரோட்டீன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியும். ஆனால், இது நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. செயற்கை முறையிலான உணவு தயாரிப்பை நோக்கிய பல ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...