Tuesday, January 14, 2020

நுழைவுத் தேர்வு - நீட் தேர்வு வரலாற்றைக் கேளீர்!

குமரிமுனையில் தொடங்கும் தமிழர் தலைவரின்

சூறாவளி பயணத்தை  வெற்றி பெறச் செய்வீர்! செய்வீர்!!
நுழைவுத்  தேர்வு என்பது தலைமுறை தலைமுறையாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களை மேலே படிக்க விடாமல் காலைப் பிடித்து இழுத்துச் செல்லும் நயவஞ்சக வேலை.
இந்த நயவஞ்சக வரலாற்றைக் கேளீர்! கேளீர்!!
(1)   எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவிருந்த எச்.வி. ஹண்டே நுழைவுத் தேர்வைப்பற்றி வாயைத் திறந்தார் (1982). அடுத்த கணமே, அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர் திராவிடர் கழக அன்றைய பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (23.3.1982).
(2) உடனடியாக திராவிடர் கழகம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பெரியார் திடலில் கூட்டியது (25.3.1982). கடுமையான எதிர்ப்பின் காரணமாக அப்போது அந்த நயவஞ்சக திட்டம் பதுங்கியது.
(3) ஆனால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு குறித்து அறிவித்தார் (1984).
(4) தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் 23 இடங்களில் நுழைவுத் தேர்வை எதிர்த்து அரசாணையை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது (23.6.1984).
(5) தொடர்ந்து திராவிடர் கழகம் நுழைவுத் தேர்வை எதிர்த்துக் கொண்டே வந்தது. செல்வி ஜெய லலிதா ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது  (9.6.2005). அதனை எதிர்த் துப் போடப்பட்ட வழக்கில் ரத்து செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது (27.6.2005).
(6)  இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டிய முக்கிய தகவல் உண்டு. நுழைவுத் தேர்வை முதல் அமைச்சர் ரத்து செய்வதற்கு முன்பு வல்லுநர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்; வேறு வேறு பாடத் திட்ட முறைகள் உள்ளதால் அவைகளிலிருந்து தேர்வு பெறுவோர்களிடம் உள்ள மதிப்பெண்கள் சம அளவில் இருக்க வாய்ப்பு இல்லாததால், அவற்றைச் சமப்படுத்தும் வகைக்கான பரிந்துரைகளைப்  பெற்று, அதனை உடனடியாக தமிழ் நாடு அரசு செயல்படுத்தும் வகையில், ஓர் அவசர சட்டத்தைப் பிறப்பித்தால் நீதிமன்றம் இதனைத் தடுக் காது என்ற கருத்தினை திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார் ('விடுதலை' 16.1.2006). அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா பரிசீலிக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றம் நுழைவுத் தேர்வு ரத்தை ரத்து செய்து விட்டது. இரண்டு முறை ஜெயலலிதா தலைமையிலான அரசு நீதிமன்றம் சென்றும் தீர்ப்பு அரசு ஆணைக்கு எதிராகவே அமைந்து விட்டது (27.6.2005 மற்றும் 27.2.2006).
(7) 2006ஆம் ஆண்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில் முறைப்படி கல்வியாளர் முனைவர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின்  (7.7.2006) பரிந்துரைகளை ஏற்று திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது (5.3.2007). குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு, நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. வழக்கம்போல சமூகநீதிக்கு எதிரான சக்திகள் உயர்நீதிமன்றம் சென்ற நிலையில் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு  சட்டம் செய்யப்பட்டதால் நுழைவுத் தேர்வு  ரத்து  செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது (27.4.2007).
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் ஓர் அபாய அறிவிப்பு வெளி வந்தது. அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற அறிவிப்புவந்தது. இந்திய மருத்துவக் கவுன்சிலும், அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக விருந்த கபில்சிபிலும் சேர்ந்து,  சமூகநீதிக்கு எதிரான ஒரு முடிவு எட்டப்பட்டது.
உடனடியாக திராவிடர் கழகம் போர்க் கொடி உயர்த்தியது. நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது (29.12.2010). திமுக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஜோதிமணி  அவர்கள் விசாரணையில் மத்திய அரசின் நுழைவுத் தேர்வுக்கு இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது (6.12.2011).
மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் திமுக தன்னையும் இணைத்துக் கொண்டது (மினீஜீறீமீணீபீ).
(8) எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அவர்களும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினார்.
(9) அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர், விக்கிரமஜித் சிங், ஏ.  ஆர்.தவே அடங்கிய அமர்வில் ஏ.ஆர். தவே மட்டும் நுழைவுத் தேர்வு செல்லும் என்று மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். மற்ற இரு நீதிபதிகளின் தீர்ப்பு நுழைவுத் தேர்வுக்கு எதிராக இருந்தமையால் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்ற முறையில் அன்றைய நுழைவுத் தேர்வு என்னும் சமூக அநீதி தடுக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி 'நீட்' தேர்வு என்னும் நுழைவுத் தேர்வு செல்லாது என்பதுதான் அந்த அருமையான தீர்ப்பு.
(10) இந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் (திமுக அரசு) பல அரிய புள்ளி விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன அவை மிகவும் முக்கியமானவை (21.2.2006).
"2004-2005ஆம் ஆண்டில் +2 தேர்வினை 5 லட்சத்திற்கும் அதிகமாக இருபால் மாணவர்களும் எழுதினர். அவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் இருபால் மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் பெரும்பாலோர் அதிக மதிப்பெண்களை எடுத் தனர். ஆனால் கடந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில், 1195 இடங்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்த இடங்கள் வெறும் 227தான். அதன் காரண மாகத்தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தோம்" என்று தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கது.
(11) நுழைவுத் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.
"நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சமநிலை என் பது கட்டுக் கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட "கோன் பனேகா குரோர்பதி" தொலைக்காட்சி நிகழ்ச்சி போல, அனுமானத்தின் அடிப் படையில் விடைகளை 'டிக்' செய்யும் வாய்ப்பு உள்ளது" (27.4.2007) என்று கூறினரே!
(12) இப்பொழுது 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட இரண்டாண்டுகள் வரை காத்திருந்து பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு   தனிப் பயிற்சியில் (Coaching) சேர்ந்தவர்கள்தானே பெரும் பாலும்? இது எல்லோராலும் ஆகக் கூடிய காரியமா?
(13) நீட்டில் மோசடி நடக்கவில்லையா?
மருத்துவ முதுகலைப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 45 டாக்டர்கள் உட்பட 52 பேர்கள்மீது சி.பி.அய். வழக்குத் தொடர்ந்ததா இல்லையா? (ஆதாரம்: 'தினமணி' 21.3.2007 பக்கம் 14)
(14) இப்பொழுது நடைமுறையில் உள்ள 'நீட்'டால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? தமிழ் வழியில் கல்வி பயின்றோர் நீட் தேர்வுக்கு முன்  பெற்ற இடங்கள் 2015-16இல் 510, 2016-17இல் பெற்ற இடங்கள் 537. நீட் வந்த பிறகு நிலை என்ன? 2017-2018இல் 52 இடங்கள்; 2018-2019இல் 106 இடங்கள்.
எவ்வளவுப் பெரிய வீழ்ச்சி! எண்ணிப் பார்க்க வேண்டாமா?
2016இல் நீட் இல்லாதபோது தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர் பெற்ற இடங்கள் 30. நீட் வந்த பிறகு வெறும் 5 இடங்கள்.
2016இல் நீட் இல்லாதபோது மாநிலப் பாடத் திட்டத்தில் கிடைத்த இடங்கள் 3546. நீட் வந்தபிறகு கிடைத்த இடங்கள்: 2314 - இழப்பு 1232. 2016ல் நீட் இல்லாதபோது சிபிஎஸ்இ மாணவர்கள் பெற்ற இடங்கள் 62. நீட் வந்த பின் பெற்ற இடங்கள் 1220. அதாவது 20 மடங்கு அதிகம்.
இந்தப் பகல் கொள்ளையைத் தட்டி கேட்க வேண்டாமா?
(15) மீண்டும் மனுதர்மம் காலால் எட்டி உதைக்கிறதே இதனை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?
போராடிப் போராடி பெற்ற சமூகநீதி - பிஜேபி ஆட்சியில் சவக்குழிக்குத் தள்ளப்படுகிறதே,  இதனை முறியடிக்க வேண்டாமா?
அதற்காகத் தான் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி - தமிழர் தலைவர் ஆசிரியர் வரும் 20ஆம் தேதி குமரி மாவட்டம் நாகர்கோயிலில் தொடங்கி திருத்தணி, சென்னை உட்பட 30ஆம் தேதிவரை சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இது ஒரு கட்சி பிரச்சினையல்ல.  மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை. இறுதிக் கூட்டம் சென்னையில் நிறைவு பெறு கிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவி ருக்கிறார்கள்.
கழகத் தோழர்களே, கூட்டங்களை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்வீர்!
எங்கெங்கும் சுவர் எழுத்துக்கள் மின்னட்டும், சமூக நீதிப் போரில் நாம் தோற்றதில்லை. இப்பொழுதும் தோற்க மாட்டோம்.
செயல்படுவீர்! செயல்படுவீர்!!
- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...