Wednesday, March 27, 2019

பி.ஜே.பி. ஆட்சியில் மதக்கலவரங்களே வெடிக்கவில்லையா?

பி.ஜே.பி. ஆட்சியில் மதக்கலவரங்களே கிடையாது என்று நீட்டி முழங்குகின்றனரே அது உண்மையா?
இதோ பி.ஜே.பி. ஆட்சியின் உள்துறை வெளியிட்டுள்ள ஆதாரப்பூர்வ அறிக்கை
2016 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் 751 மத வன்முறைகள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளன. அதில் 97 பேர் மரணமடைந்துள்ளனர். 2,264 பேர் படுகாய மடைந்துள்ளனர் என்கிறது உள்துறை அறிக்கை.
2016 ஆம் ஆண்டின் அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. கோவா மாநிலத்தில் சிறுபான்மையினரின் கல்லறைத் தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் 38 விழுக்காடு அளவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உயர்ந்துள்ளது.
யுனைட்டேட் கிரிஸ்டியன் போரம் என்ற அமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு கொடுத்த தகவலின்படி அரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகவும் பழைமையான 27 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேவாலயங்களில் மத வேறுபாடின்றி அனைத்து சமுகத்தவரும் வந்து வழிபடுவார்கள். மேலும் இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளூர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களை மிரட்டி வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களின் நுழைவாயிலில் காவிக் கொடிகளை வைக்கின்றனர். அரசிடம் இதைப் புகாராக தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்று அந்தத் தகவலில் கூறியுள்ளனர்.
பசு மாட்டு வன்முறை
பசு மாட்டின் பெயரால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன. 2014 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆம் ஆண்டுவரை அரியானா மாநிலத்தில் 12 பேர் பசுப் பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்ற இடத்தில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தி பரவியதை அடுத்து முகமது அக்லக் எனும் 63 வயது முதியவர் படுகொலையைத் தொடர்ந்து மேற்கு வங்கம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராட்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் மிகவும் சாதாரணமாக மாறிவிட்ட ஒன்றாகிவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புக் கொள்கைகளை பா.ஜ.க. அரசு மீறி விட்டது

தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக 'டெக்கான் கிரானிகிள்' ஆங்கில இதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அளித்த பேட்டி


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை தொடங்குவதற்கு முன்னதாக ஆசிரியர் கி. வீரமணி "டெக்கான் கிரானிகிள்" இதழுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் அரசியலமைப்புச் சட்ட முகப் புரையில்  வலியுறுத்தப்படும் கோட்பாடுகளைப் பா.ஜ.க. புறக்கணித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள அஇஅதிமுக வைக் கண்டித்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற பா.ஜ.க. 2014இல் மத்திய அரசில் அதிகாரம் பெற்றதிலிருந்து முந்தைய அரசுகளின் பாதையிலிருந்து திட்டமிட்டு விலகிச் செல்கிறது. அரசியலமைப்பிலும் அதன் முகப்புரை யிலும் கண்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளையும் மதிப்பதில்லை என்றார்.

கடந்த பல ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் மத்திய அரசு கண்டது தோல்வியே. மோடியின் அரசு அதிகபட்ச அழிவுக்குக் காரணமாயிருந்திருக்கிறது. நாடு மாற்றத்தையும் நல்லாட்சியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார் அவர். நாணய மதிப்புக் குறைப்பு அனைவரையும் பாதித்திருக்கிறது. தொழில் துறை, உற்பத்தித் தொழிற்சாலைகள், மரபு சாராத தொழில்கள் அனைத்தையுமே. பெருமளவு கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. அந்தத் திட்டத்தின் நோக்கமே தோல்வியடைந்துவிட்டது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கடந்த பதினாறு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தல் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இது நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது. அரசியல் கட்சிகளின் எதிர் காலத்தை மட்டுமின்றி இனி வர இருக்கும் தலை முறையின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.

இந்தத் தேர்தல் எதிர்காலத்தில் இருக்கப் போவது  இந்தியாவா, ஹிந்து நாடா என்று தீர்மானிக்கப் போகிறது. திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக் குக் கூட்டணி மக்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடுவதற்கான கொள்கை அடிப்படைக் கூட்டணி என்றார் அவர். அஇஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத மானது.  வாக்குகளை அள்ளி வெற்றி பெறுவதே நோக்கம் என்று அந்தக் கட்சிகளே குறிப்பிட்டுள்ளன. கொள்கை அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு விட்டன.

பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசு தன் நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். திராவிடக் கட்சிகளோடு சேரும்போது கொள்கையை  மாற்றுவது என்பதே அவரது கொள்கை.

மத்திய அரசு அஇஅதிமுகவை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அமைச்சர்களை வருமான வரிச் சோதனையையும், சி.பி.அய்.யையும் காட்டிப் பயமுறுத் துகிறது. அவர்கள் அடிமைகள். அமைச்சர் ஒருவர் 'மோடி எங்கள் டாடி' என்று சொல்கிறார்.

அவர்களின் தேர்தல் அறிக்கை கட்சிக் கூட்டத்தில் போட்ட தீர்மானங்கள் போல இருக்கிறது என்றார். வீரமணி. 'நீட்' தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்குக் கேட்கிறது. ஆனால் 'நீட்' உட்பட மாநிலத்தின் பல்வேறு குறைகளைத் தீர்ப்பதற்காக மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான எத்தனையோ வாய்ப்புகளை  அஇஅதிமுக அரசு நழுவ விட்டி ருக்கிறது.

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். அது போலவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆனால், மற்றபடி தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அந்தக் கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. 'நீட்' தேர்வு தொடர்பான இரண்டு சட்ட வரைவுகளை மாநில அரசு நிறைவேற்றியது. இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் அவற்றின் கதி என்ன என்று தெரியாத நிலை. மத்திய அரசு அவற்றை அங்கீகரிக்கவில்லை. அதன் விளைவாக கார்ப்ப ரேட்டுகள் 'நீட்' தேர்வுகளில் லாபமடைந்து கொண்டி ருக்கிறார்கள். - இவ்வாறு 'டெக்கான் கிரானிக்கிள்' ஆங்கில  இதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம்: 'டெக்கான் கிரானிக்கிள்' மார்ச் 26, 2019

Monday, March 25, 2019

இவர்களை ஆள விடலாமா?

தீட்டுக் கழிக்கும் பா.ஜ.க.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்தார் அல்லவா! அவர் உடல் கலா அகடமி கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பல நிலைகளில் உள்ளவர்கள் எல்லாம் இறுதி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அவர் உடல் தீட்டாகி விட்டது என்று கூறி தீட்டுக் கழிப்பு சடங்குகள் நடைபெற்றுள்ளன என்பது எவ்வளவு அருவருப்பான செய்தி!
இந்த 2019 ஆம் ஆண்டிலும் இந்த பா.ஜ.க. - சங் பரிவார்க் கூட்டத்தின் புத்தி வேத காலத்தில் சஞ்சரிக்கிறதே.
மறைந்த பாரிக்கர் பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஆள விடலாமா?  வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

பிரியாணி பொட்டலத்தைக்கூட தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம்


ஜோதிடம், யாகம் முதலியவைகளுக்கு செய்யப்படும் செலவைக் கணக்கில் சேர்க்காதது ஏன்?

கொடியை அகற்றுவதோடு நில்லாமல், கொடி மரத்தையும் அறுக்கவேண்டுமா?
சிலரிடம் வேட்பு மனுவை எழுந்து நின்று வாங்குவது; வேறு சிலரிடம் உட்கார்ந்தபடியே அதிகாரிகள் வாங்குவது சரியா?


பிரியாணி பொட்டலத்தைக் கூடத் தேர்தல் செலவில் சேர்க்கும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்காக ஜோதிடம் பார்ப்பது, யாகம் நடத்துவது போன்றவற்றிற்கு ஆகும் செலவை, செலவுக் கணக்கில் கொண்டு வராதது ஏன் என்றும், வேட்பு மனுவை வாங்கும்போது சிலரிடம் எழுந்து நின்று வாங்குவது, வேறு சிலரிடம் உட்கார்ந்தபடியே தேர்தல் அலுவலர்கள் வாங்குவது ஏன்? என்ற சுயமரியாதைக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது அறிக்கை வருமாறு:

தேர்தல் ஆணையம் இம்முறை புதிதாக பிரியாணி பொட்டலம், குடி தண்ணீர் பாட்டில்'' இவைகளுக்கெல்லாம் கட்டணம் விதித்து மிகவும் கண்டிப்புடன், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு அனுமதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றத்திற்கு 28 லட்சம் ரூபாய் என்ற கணக்குக்கு அதிகமானால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறக்கூடிய ஒரு கத்தியை வேட்பாளர்களின் தலைக்குமேல் தொங்க விட்டிருக்கிறது!

பிரியாணி பொட்டலம் லஞ்சமில்லையா?

பிரியாணி பொட்டலம் லஞ்சம்'' அல்லாமல் வேறு என்ன?
இதைத் தேர்தல் ஆணையம் சட்டப்படி தடுக்க முற்படவேண்டுமே தவிர, இதற்குக் கட்டணம் போட்டு கணக்கிட்டால், அதனை சட்டப்படி ஏற்கிறது; அங்கீ கரிக்கிறது என்பதுதானே! நமது ஜனநாயகத்தை கேலி செய்து, பழிக்குப் பகிரங்கமாகவே ஆளாக்குவது எவ் வகையில் சரியானது - நியாயமானது?

வெளிநாட்டவர்கள் இந்தச் செய்தியைப் படித்தால் பிரியாணி பொட்டலத்திற்காக தங்கள் வாக்குகளை விற்கும்'' வாக்காளர்கள் இந்திய வாக்காளர்கள் என்ற கெட்ட பெயர் வராதா?

கையில் மை வைப்பதும் அவமானமே!

அடையாள அட்டையுடன் - அதில் படமும் உள்ளபோது - கையில் மை வைப்பதே தேசிய அவமானம் அல்லவா? இது நிறுத்தப்படல் வேண்டும். நாட்டின் முதல் குடி மகனான குடியரசுத் தலைவருக்கும்கூட - அவர் ஓட்டுப் போட்டால் கையில் மை வைத்தாகவேண்டும்; அதுபோல், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் உள்பட இச்சட்டத்திற்கு யாரும் விலக்கு அல்லவே! (A Nation of dishonest Voters  ஆக மதிக்கப் படலாம்!)
இதன்மூலம் நமது நாட்டு வாக்காளர்கள் மறுபடியும் இரண்டாம் முறை வாக்களிக்கக்கூடியவர்கள் என்று மற்றவர்கள் எண்ணும் இழுக்கு தேசிய அவமானம் அல்லாமல் வேறு என்ன?

அதில் இப்போது பிரியாணி பொட்டலம் 200 ரூபாய், தண்ணீர் பாட்டில் 50 ரூபாயும் சேருகிறதாம்!

ஜோசியத்துக்குக் கொட்டியழும் பணம் தேர்தல் கணக்கில் வராதது ஏன்?

இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் தேர்தல் ஆணை யம், பெரும்பாலான வேட்பாளர்கள் ஜோசியர்களிடம், வாஸ்து நிபுணர்களிடம் ஜாதகம் பார்த்து - நல்ல நேரம் கணித்து, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களே, அந்த ஜோசியர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணங்களை செலவுக் கணக்கில் சேர்க்கவேண்டாமா?

பிரியாணி பொட்டலமாவது 200 ரூபாய்; ஜோதிடமோ ஆயிரத்திற்கு, 500 ரூபாய்க்குக் குறையாதது அல்லவா!
அதுமட்டுமா?

யாகங்களுக்கான செலவும் முக்கியம்தானே!

யாகங்கள், அதுவும் சத்ரு சங்கார யாகங்களுக்கு' பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது அந்த வேட் பாளர்களால்!  புரோகித பார்ப்பனர்களுக்கு ஏராளமான பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்களே - அது ஏன் கணக்கில் சேர்க்கப்படக்கூடாது? அதற்கு ஆகும் நெய் உள்பட  பல பொருள்களின் விலை கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா?
மலத்தில் அரிசி பொறுக்குவதா?

நல்ல நேரம், முகூர்த்த நாள் பார்த்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்; இதற்கு விதி விலக்கு ஏதோ ஆயிரத்தில் ஒன்றாக இருந்தாலே அதிசயம் - மலத்தில் அரிசி பொறுக்கும் அசிங்கத்தினைச் செய்ய விரும்பவில்லை நாம்!

வடநாட்டில் சாமியார்களுக்கும், ஜோசியர்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கியாம்! அப்பாயிண்ட்மெண்ட் அவர் களிடம் கிடைப்பதற்கே கூட வாங்கித் தருபவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறதாம்.

தேர்தல் அறிவிப்பு இராகுகாலத்தில்தானே வெளியிடப்பட்டது!

தேர்தலில் வெற்றி பெற இத்தியாதி, இத்தியாதி' நாள் நட்சத்திரம், மேஷம், மீனம் பார்க்கப்படுகிறது. ஜோசியரிடம் ஆலோசனை கேட்டு, பூஜை புனஸ்காரம், சமாதி சமர்ப்பியாயமி' எல்லாம் செய்து, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களே, அவர்கள் அத்துணை அரசியல் கட்சியினரும் ஒன்றை "வசதியாக'' மறந்துவிட்டனரே, அது ஏன்?

நாட்டின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்ட தேதி, நேரம் மறந்துவிட்டதா?

2019 மார்ச் 10 ஞாயிறு மாலை 5 மணிக்கு (கொழுத்த'') ராகுகாலத்தில்தானே!

அந்த இராகுகாலத்தில் அறிவிக்கப்பட்டதால், தேர் தலில் நிற்கமாட்டோம் என்று எந்த  அமாவாசை, கிருத்திகை, பாட்டி முகம் - பார்க்கும், கையில் ஒரு வண்டி அழுக்குக் கயிறுகளைக் கட்டியுள்ள பிரகஸ் பதிகள்'' ஏனோ கூறவில்லை?

ஜோதிடம் பார்த்த அனைவரும் வெற்றி பெற முடியுமா?

போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்? பின் என்ன  நல்ல நேரம் - வெங்காயம்?

அதே ஜாதி என்ற இந்த முட்டாள்தனத்திற்கு மெருகு ஏற்றப்பட்ட தங்கப் பூண்!
இவர்கள் வெற்றி பெற்று அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுக்கப் போகிறார்களே -
அதில் 51 ஏ-எச் பிரிவில், அடிப்படைக் கடமைகள் என்ற தலைப்பு என்ன கூறுகிறது?

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டல், சீர்திருத்தம் - இவை களை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை'' என்று ஒரு பிரிவு உள்ளதே! குறைந்த பட்சம் அதைப் படித்தாவது பார்க்க வேண்டாமா?

ஆன்மிக அரசியலாம், அட அறிவுக் கொழுந்துகளே!
என்ன விநோதம் பாருங்கள்!
எவ்வளவு ஜோக்கு பாருங்கள்!!''
அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!!!
இதில் இன்னும் இரண்டு செய்திகள்:
கட்சிக் கொடிகளை அகற்றவேண்டும் என்கிறார்கள் - அது ஏன் என்றே தெரியவில்லை.
சரி, அதுதான் போகட்டும்; கொடியை இறக்கியதுடன் நில்லாமல், கொடிக் கம்பத்தையும் அகற்றுவது ஏன்? இரும்புக் கம்பம் என்றால் அதனை அறுத்து எடுத்துச் செல்லுவது ஏன்?
இரண்டவதாக, வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வரும்பொழுது, தேர்தல் அதிகாரிகள் நடந்துகொள்ளும் போக்கு கண்டிக்கத்தக்கது.

குறிப்பிட்ட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, எழுந்து நின்று வரவேற்பது, வேட்பு மனு வாங்குவது; மற்றவர்கள் வரும்போது உட்கார்ந்தபடியே வாங்குவது - இதில் என்ன வருண பேதம்' - வர்க்க பேதம்? உயர்ந்தவர் - மட்டமானவர் என்ற கணிப்பு? அலுவலக நடைமுறைப் பண்புக்கு இது உகந்ததுதானா? சட்டத்தின்முன் அனைவரும் சமமில்லையா?

இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்புவது நல்லது!

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
25.3.2019

Thursday, March 21, 2019

"தினத்தந்தியும், தினமலரும்"

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா ளராகிய பிரியங்கா காந்தியின் வருகை, காங்கிரஸ் கட்சிக்குப் புதுத்தெம்பை ஊட்டுமா? இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்துமா? என்கிற சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரிய தாக்கத்தை   ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.

மத்தியில் நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி என்பது முற்றிலுமாக தோல்வியடைந்த ஆட்சி என்பதை விட - நாட்டுக்குக் கேடு செய்யும் ஒரு பாசிச ஆட்சி என்பதுதான் கவலைக்கு உரிய ஒன்றாகும்.

134 கோடி மக்கள் கொண்ட இந்தியா என்பது ஒரு நாடு அல்ல - ஒரு துணைக் கண்டம் - வெள்ளைக்காரனின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்ட ஒன்றே.

பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும். ஆனால் இதனை எப்பொழுதுமே பிஜேபி ஏற்றுக் கொண்டது கிடையாது.

1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது அதனை எதிர்த்த ஒரே கட்சி இந்த பிஜேபியின் முன்னோடியான ஜனசங்கமே!
இதற்குக் காரணம் உண்டு. உலகில் சொந்த நாடு என்று ஒன்று இல்லாத இனம் ஆரிய இனம். தனக்கு மூக்கு இல்லை என்றால் எல்லோருக்குமே இருக்கக்கூடாது - என்று கூறும் ஒரு கதை போல, தனக்கென ஒரு நாடு இல்லாத நிலையில் மற்றவர்களுக்கும் அந்த நாடு இருக்கக்கூடாது என்கிற 'தாராள' புத்திதான் பார்ப்பனர்களுடையது.

தனி மாநிலம், தனி மொழி, தனி இனம், தனிப் பண்பாடு என்ற உணர்ச்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டால், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் தான் பாரத தேசம் ஒரே நாடு - நாம் அதன் புதல்வர்கள் என்று ஓங்கி ஓங்கிப் பாடுவார்கள்.

இன்றைக்கு மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி - இந்த பல இனங்கள், பல மொழிகள், பலப் பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திலே ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒன்று உருவாக்கினால் தான் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தோடுதான் பல்வேறு கொல்லைப்புற  யுக்திகளைக் கையாண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் ஒரே வகைத் தேசியக் கல்வி, குருகுலக் கல்வி என்பதெல்லாம் இந்தப் பார்ப்பன சமஸ்கிருத கலாச்சாரத்தின் பதிப்புதான். மாநிலங்களின் ஆளுகையில் உள்ள பல துறைகளையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு செல்லுவதெல்லாம் இந்த சூழ்ச்சி யுக்தியின் அடிப்படையில்தான்.
'இந்து' என்ற ஓர் அடையாளத்தைக் கொடுத்தால் தங்கள் மொழி, இனம் பண்பாடு இவற்றை மறந்துவிட்டு, ஆரியம்  விரிக்கும் வலையில் வீழ்வார்கள் என்பதே அவர்களுக்கே உரித்தான சாணக்கியப் புத்தி.

ராமஜென்மபூமி, கீதை புனித நூல், மனுதர்மமே, அரசமைப்புச் சட்டம் என்பதெல்லாமே இந்த வகையான மூளைச் சலவை ஏற்பாடுகளே!

சமுகநீதியை ஒழித்தால்தான் சமத்துவ நிலை ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதும் அவர்களின் திட்டம்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பாசிச பார்ப்பன ஆட்சியைக் கொண்டு வருவதுதான் அவர்களின் மறைமுக அஜண்டா.

மற்றபடி மக்கள் நலம், வளர்ச்சி என்பதே எல்லாம் "மயக்க பிஸ்கட்தான்".

மோடி கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும்.

பொருளாதாரப் பாதையில் ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என்பதெல்லாம், குதிரை குப்புறத் தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாகி விட்டது.

இந்த நிலையில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பச்சையான பாசிச பார்ப்பன - பனியா கார்ப்பரேட் கொடுங் கோல் ஆட்சிதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய உத்தரவாதங்களான மதச்சார்பின்மை - சமுகநீதி இவற்றைக் காப்பாற்றிட இந்தக் கொள்கையில் அக்கறை உள்ள மக்கள் நலனை விரும்பும் கட்சிகள் எல்லாம் இணைந்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்காக ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் பிரியங்காவின்  வருகை கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை வரவேற்க வேண்டியதுதான் புத்திசாலித்தனமுடையதாகும்.

இதுகுறித்து நேற்றைய "தினத்தந்தி"யில் (19.3.2019) தலையங்கம் பகுதியில் குறிப்பிட்டிருப்பதாவது:

ஆமதாபாத்தில் பிரியங்கா ஆற்றிய தேர்தல் உரையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது அந்தத் தலையங்கம். "இந்தக் கூட்டத்தில் பிரியங்கா பேச்சு மிகவும் அரசியல் நாகரிகத்தோடு, அர்த்தமுள்ளதாக இருந்தது. மிகவும் சிந்திக்கத் தக்க வகையில் அவர் பேச்சு இருந்தது, அவருடைய மென்மையான பேச்சு இதயங்களைக் கவர்ந்தது!" இவ்வாறு 'தினத்தந்தி'யின்' தலையங்கம் படம் பிடித்துக் கூறுகிறது.

அதே தேதியில் (19.3.2019) 'தினமலர்' ஏடு "அக்கம் பக்கம்" பகுதியில் இவ்வாறு எழுதுகிறது. "பிரியங்கா காந்தியின் வருகை பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிரியங்காவிடம் உற்சாகம் இல்லை. முகம் சோர்வடைந்திருந்தது. பேச்சிலும் அவர் பாட்டி இந்திரா போல் ஆவேசம் இல்லை. மென்மையான குரலில் பேசினார். குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழுவில் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்தார், இதைப் பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் "நாம் தான் அதிகம் எதிர்பார்த்து, ஏமாந்து விட்டோம் போலிருக்கிறது எனப் புலம்புகிறார்கள்" என்று எழுதுகிறது "தினமலர்".


'தினத்தந்திக்கும்', 'தினமலரு'க்கும் உள்ள இந்த வேறு பாட்டை எண்ணினால் இடையில் இழையும் வெள்ளை நூலை அப்பட்டமாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா!

பாஜகவுக்கு கடும் பின்னடைவு

அருணாச்சலப் பிரதேசத்தில் 25 தலைவர்கள் திடீர் விலகல்

இட்டாநகர், மார்ச் 20 மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச பாஜகவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் திடீரென விலகியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பாஜகவில் இருந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் விலகியுள்ளது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. விலகியவர்கள் அனைவரும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் 11- ஆம் தேதி சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள் ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், மக்கள வைத் தேர்தலும் நடைபெற இருக் கிறது. அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவையின் 60 இடங்களில் 54 இடங் களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட் டியிட்ட பலருக்கு  வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் மட்டும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாலர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம் லின், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விலகியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனை வரும் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில்(என்பிபி) சேர்ந்துவிட்டனர்.

அருணாச்சலப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த வெய், ஜர்கர், ஜர்பும் ஆகியோரைத் தவிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்வாங் வாங்கம், தபுக் தகு, பனி தரம், பாங்கா பாகே, வாங்லிங் லோவன்டாங், கார்டோ யெக்கியோர், முன்னாள் அமைச்சர் செரிங் ஜுர்னே ஆகியோர் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.


அருணாச்சலப் பிரதேச உள்துறை அமைச்சரும், பாஜகவில் இருந்து விலகிய வருமான குமார் வெய் கூறுகையில், வாரிசு அரசியலைப் புகுத்துகிறது பாஜக. பாஜக சரியாக இருந்தால் நான் விலகியிருக்க வேண்டியது இல்லை. நாடுதான் முதலில் முக்கியம். அதன் பின் கட்சி, தனிமனிதர்கள் என்று பாஜக தலைமை சொல்கிறது. ஆனால் நிதர்சனத்தில் பார்த்தால், அதற்கு எதி ராக நடக்கிறது பாஜக. காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது என்று பாஜக விமர்சிக்கிறது. ஆனால், மாநி லத்தில் முதல்வரின் குடும்பத்தில் 3 உறுப்பினர்களுக்கு பாஜக சீட் வழங்கி யுள்ளது'' எனத் தெரிவித்தார்.

Monday, March 18, 2019

வீதிமன்றத்திலும், நீதிமன்றத்திலும் சந்திப்போம்!

அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று (16.3.2019)

திருச்சி பெரியார் நூற்றாண்டு  கல்வி வளாக காம்பவுண்டு சுவரை இடித்த

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின் அராஜகம்!

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் 50 ஆண்டுகாலமாக இருந்த சுற்றுச்சுவரை (Compound Wall)  சட்ட விரோதமாக - அன்னையார் நினைவு நாளில் திட்டமிட்டு தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை  பொக்லைன் கொண்டு இடித்திருக்கிறது.


டில்லியில் பி.ஜே.பி. ஆட்சியில் பெரியார் மய்யத்தை இடித்ததுபோல, பி.ஜே.பி.யின் தொங்கு சதையாக இருக்கக் கூடிய அ.இ.அ.தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இடித்துத் தள்ளிய அராஜகத்தைக் கண்டித்தும், இதுகுறித்து வீதி மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சந்திப்போம் என்றும்  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் தொடக்கப் பள்ளி, பெரியார் மணி யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் முதலிய நிறுவனங்கள் இயங்கிக் கொண்டுள்ளன.

தந்தை பெரியார் காலத்தில் உருவாக்கப்பட்டது

தந்தை பெரியார் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி வளாகம், அன்னை மணியம்மையார் காலத்தில் மேலும் வளர்ந்து, ஒரு மாபெரும் கல்விச் சோலையாக மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், நன்மதிப்பும் பெற்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

அரை நூற்றாண்டுக் காலமாக தந்தை பெரியார் காலத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிர மித்துக் கொண்டு இருக்கிறதென்றும், ஆகவே, நீங் களே அகற்ற வேண்டும் என்றும் திருச்சிராப்பள்ளி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்திலிருந்து  கடந்த 6.3.2019 அன்று நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றது.

அந்தக் கடிதத்திற்கு 11.3.2019 அன்று கீழ்க்கண்ட வாறு பதிலிறுக்கப்பட்டுள்ளது.

``மேற்படி நிலம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள சர்வே எண்கள் எங்களுக்குச் சொந்த மானது இல்லை; ஆக்கிரமிப்பு உள்ளது என்பதை சர்வே செய்யாமலேயே எப்படிக் கூறுகிறீர்கள்?


அப்படி நீங்கள் சர்வே செய்வதாக இருந்தால், நாங்கள் இல்லாமல் எப்படி சர்வே செய்தீர்கள்? இந்த நிலையில் 7 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள்.


எங்கள் நிறுவனத்தை சற்றும் பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள். நாங்கள் எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. தேவை யென்றால் தாங்கள், சர்வேயர் மூலம் எங்கள் முன்னிலையில் நிலத்தை அளந்து கொள்ளலாம். அதைவிடுத்து தாங்கள் தவறாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்`` என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி  திருச்சி உதவி கோட்டப் பொறியாளர் அவர்களுக்கு 11.3.2019 நாளன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோட்டப் பொறியாளருக்கு இதன் நகலும் அனுப்பப்பட்டது.



மேலும் 15.3.2019 அன்று மீண்டும் ஒரு கடிதம் திருச்சிராப்பள்ளி உதவி கோட்டப் பொறியாளருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது:

``பார்வை 2 இல் கண்டுள்ள கடிதத்தின்படி மாநக ராட்சி சர்வேயர்கள் வந்து எங்கள் இடத்தை மதியம் 2 மணியளவில் அளந்தார்கள். பார்வை 1 இல் கண்ட தங்கள் கடிதத்தில் 1.80 மீட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால், தற்போது அளந்ததில் அதைவிடக் கூடுதலாக 6 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பு இருப்பதாக சர்வே இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.


எங்களின் பார்வையில் அளந்தது எதுவும் சரியில்லை என்பதாகவும், எனவே சரியான அளவு களுடன் கூடிய அடிப்படை ஆவணங்களை (Basic records) ஒப்பிட்டு, மீண்டும் அளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் அதுவரை பார்வை 1 இல் கண்டுள்ள தங்களது கடிதத்தின் மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்`` என்று திருச்சி உதவி கோட்டப் பொறியாளருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி 15.3.2019 நாளிட்டு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல் கோட்டப் பொறியாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், சென்னை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.


முரண்பட்ட இரு சர்வேக்கள்!

இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒருமுறை 1.80 மீட்டர் என்றும் இன்னொரு முறை 6 மீட்டர் ஆக்கிரமிப்பு என்றும் முரண்பாடாக சர்வே செய்யப் பட்டது எப்படி? இதில் எது உண்மை? மேலும் கடிதத் தொடர்பு இருந்து கொண்டு இருக்கும் போதே, திடீரென்று அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று (16.3.2019) அவர்கள் கண்ணிமையாக கட்டிக்காத்த பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர்களை பொக்லைன் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை சர்வே செய்த போது குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பின் அளவு முரண்பாடாக இருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையில் உள்ள சாலை வரைபடத்தை காட்ட வேண்டும் என்றும், நெடுஞ்சாலைத் துறையின் கல்லிலிருந்து அளவிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டபொழுது, அதையெல்லாம் காட்டவேண்டிய அவசியம் எங் களுக்கு இல்லை என்று தான்தோன்றித்தனமாக இடிக்கப்பட்டுள்ள - பெண்கள் அதிகம் படிக்கும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புச் சுற்றுச்சுவரை இடித்ததில், எந்த அளவும் நியாயம் இல்லை. இதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.


பொய் சொல்லலாமா அதிகாரிகள்?

6.3.2019 நாளிட்ட கடிதத்தில் நேரில் தெரிவித்ததாக சொல்லப்படுவது என்பதெல்லாம் உண்மையல்ல. நேரில் யாரிடம் தெரிவித்தார்கள்? தெரிவித்தவர்கள் யார்? என்ற விவரம் இல்லாமல் மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பதுபோல பொறுப்பு வாய்ந்த அதிகாரி எழுதலாமா? இது அப்பட்டமான பொய்யைத் தவிர வேறு அல்ல.

மேலும் பெறுநர் என்பதில் பெரியார் ஸ்கூல், சுந்தர் நகர், சாத்தனூர் என்று இருக்கிறது. அந்தக் கல்வி நிறுவனம் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானது - யாருக்குக் கடிதம் அனுப்பப்படவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கடிதம் எழுதுவது பொறுப்பற்ற காரியம் அல்லவா! பெறுநர்: பெரியார் ஸ்கூல் என்று ஒன்று உண்டா?
ஏதோ அவசர கதியில் இடித்துத் தள்ளவேண்டும் என்ற வெறியில் யாரோ சிலரின் கண்ணசைப்பில் நடந்ததாகத்தான் இதனைக் கருதவேண்டியுள்ளது.

இந்தக் கல்வி வளாகத்துக்குள் பெண்கள் விடுதி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் (பெண்கள்) முதலியன இயங்கி வருகின்றன. சுற்றுச்சுவர் பெண் களுக்குப் பாதுகாப்பானது என்று நன்கு தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாக இடித்துத் தள்ளியதன் காரணமாக பெண்கள் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபரீதம் எதுவும் நடந்தால், அதற்கு நெடுஞ்சாலைத் துறையும், தமிழக அரசும்தான் பொறுப்பாகும்.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு ஒரு நியாயம்? பெரியார் கல்வி நிறுவனத்திற்கு இன்னொரு நியாயமா?

தஞ்சை வல்லத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் - திறந்தவெளி சிறைச்சாலைக் கான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன - அவற்றை உடனடியாக அகற்றிடவேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டும், இதுவரை அதன்மீது துரும்பளவும் நடவடிக்கையை எடுக்காத இந்த அ.இ.அ.தி.மு.க. அரசு பெரியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளுகிறது என்றால், இந்த அரசு யாருக்கான அரசு என்பது திட்டவட்டமாகவே தெரிகிறது.

அன்று டில்லியில் பி.ஜே.பி. ஆட்சியில் பெரியார் மய்யத்தை சட்ட விரோதமாக இடித் துத் தள்ளியதுபோல, (அதன் பின்விளைவு அரசின் நடவடிக்கை தவறானது என்று ஆனது) இன்று பி.ஜே.பி.யின் தொங்கு சதையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசு அரசியல் நோக்கத்தோடு இந்த சட்ட விரோத, நியாய விரோத அழிபழி செயலில் இறங்கி உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

வீதிமன்றத்திலும் - நீதிமன்றத்திலும் சந்திப்போம் -
ஆத்திரப்படாதீர்கள் தோழர்களே!

இதன்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வீதிமன்றத்திலும், நீதிமன்றத்திலும் சந்திப்போம். கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஆத்திரப்படாமல், அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை

Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நாடே கொந்தளிப்பு; பொள்ளாச்சியில் போராட்டம்

சி.பி.அய். விசாரணைக்கு மாற்றம்


சென்னை, மார்ச் 13 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் முக நூல்  மூலம் நண்பர்களாக பழகி காத லிப்பதாகக் கூறி பாலியல் வன்முறை செய்து அவர்களிடம் பணம் பறித்துள் ளனர். இளம்பெண்களை பாலியல் வன்முறை செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (வயது 25), திரு நாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்தக் கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ் விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கொடூரக் கும்பல் 200 -க்கும் அதிகமான பெண்களை  கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலி யல் வழக்கு சிபிஅய் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்த வழக்கில்  முறையாக விசாரணை நடைபெற வில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஅய் விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டத் தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டம் 600 பேர் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சியில் நேற்று பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி திமுக சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது
மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமாகிய கவிஞர் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். கனிமொழி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கையும் உரிய தண்டனையும் வழங்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் 1000 பேர் போராட் டத்தில் ஈடுபட்டனர். சென்னை அடையாற்றில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையைக் கண்டித்து தமி ழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர்.


வரும் 16 ஆம் தேதி மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Tuesday, March 12, 2019

அம்மா நூற்றாண்டில் ஆசிரியர் முக்கிய அறிவிப்பு

அன்னையார் அவர்களின் இந்த நூற்றாண்டில் (2019-2020) கீழ்க்கண்ட அறிவிப்புகளை தமிழர் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி பெரியார் மணியம்மை ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. பலரும் இதற்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு 50 விழுக்காடு வரி விலக்கு (80G) கிடைக்கும். அன்னையார் அவர்களுக்கு தந்தை பெரியார் எழுதி வைத்திருந்த சொத்துக்கள், அன்னை மணியம்மையாரின் சொத்துகளை உள்ளடக்கிய அறக்கட்டளை ஒன்றினை அன்னை மணியம்மையார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது  உருவாக்கினார்.
மேனாள் சட்டமன்ற செயலாளர் சி.டி. நடராசன், சென்னை பொது மருத்துவமனை கண்காணிப்பாளர், தந்தை பெரியாரின் தனி மருத்துவர் டாக்டர் கே. இராமச்சந்திரா, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, வழக்குரைஞர் கோ. சாமிதுரை, மேட்டூர் டி.கே. இராமச்சந்திரன் ஆகியோர் சாட்சி கையொப்பமிட்டனர். 1974 செப்டம்பரிலேயே பெரியார்  மணியம்மை கல்வி அறப் பணிக் கழகம் என்று சட்டதிட்ட விதிகளுடன் பதிவு செய்யப்பட்டது.
அன்னையார் அவர்களின் நூற்றாண்டையொட்டி லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தச்சன்குறிச்சி என்னும் ஊரில் ஓர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட உள்ளது. அதே போல வேலூர் லத்தேரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை இந்த நிறுவனம் தத்தெடுக்கும் என்று அறிவித்துக் கொள்கிறோம் (பலத்த கரஒலி).
1919-1920 கல்வியாண்டில் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புக்குச் சேரும் இருபால் மாணவர்களுக்கும் முதலாண்டில் முதல் செமஸ்டரில் கல்விக் கட்டணம் (டுயூஷன்ஃபீஸ்) கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அன்னை மணியம்மையார்  பிறந்த இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைத் தங்களின் சொந்த கல்வி நிறுவனமாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு  நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். தந்தை பெரியார்  அவர்களுக்கு இந்த மருத்துவமனையில் தான் டாக்டர் பட் அவர்கள் 5 மணி நேரம்  அறுவை சிகிச்சைகள் செய்தார்  என்பதை நினைவு கூர்கிறோம் என்றார். விழா மேடையில் அன்னை மணியம்மையார் பவுன்டேஷனுக்கு நிதி அளித்தனர்.

Saturday, March 9, 2019

உலக மகளிர் நாள் (மார்ச் 8) சிந்தனை பெரியாரின் புரட்சிப் பெண் முழங்குகிறார்!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

இன்று உலக மகளிர் நாள்!



மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டும், கட்டுரைகள், கவிதை மலர்களால் மகளிர் மாண்பைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திப்பதை பரப்பும் பரப்புரை நாள் என்றால், மிகையல்ல!

ஒரு கேள்வி - மகளிர் விடுதலைப் போராளிகளில் அறிவு ஆசான் தந்தை பெரியாரைப் போல் சிந்தித்து, செயல்பட்டு, மாற்றத்தைச் செயல் வடிவிலும், சட்ட வடிவிலும் உரிமைப் பாதுகாப்புப் பெட்டகமாக்கிய பெண்ணினத்தை வாழ வைக்கும் தொலைநோக்கும், செயற்போக்கும் தனது வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொண்ட ஒருவரை விரல் காட்டிக் கூற முடியுமா?

மற்றவர்கள் பெருமைகளைக் குறைக்க அல்ல இக்கேள்வி! தந்தை பெரியார் என்ற ஓர் ஆண், தனது ஆசாபாச - எஜமானத்துவ' எண்ண ஓட்டங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பெண்ணினத்தை மானுடத்தின் ஒரு சமப் பகுதி என்ற உணர்வு மேலோங்க, உரிமைப் போரை 1908 முதல் - தனது தங்கையின் மகள் ஒருவர் பால்ய விதவையானவரை, தூக்கி நிறுத்தித் துணிந்து மறுமணம் செய்து வைத்து, தன் குடும்பத்தாரையே ஜாதி விலக்குக்கு ஆளாக்கியதைப்பற்றி அலட்சியம் செய்த நெஞ்சுரத்திற்கு வேறு எவரே சொந்தம் கொண்டாட முடியும் தோழர்களே?

மகளிரை தோழர்களே'' என்று அழைத்து பாலின வேற்றுமைச் சுவரை இடித்து தள்ளிய கடப்பாரை அல்லவா அவர்?

மண்ணுக்கு உரிமை வருமுன்னே, பெண்ணுக்கு உரிமை தாருங்கள்'' என்று முழங்கியதோடு, கல்வி உரிமை, வேலை உரிமை, சுதந்திர மண் உரிமை, சொத்துரிமை முதலிய உரிமைகளுக்கு முதலில் ஏடு தொடங்கி, எழுதி, நாடு முழுவதும் போராடி, ஆட்சிக்குப் போகாமலேயே ஆளுமையோடு அவ்வுரிமைகளை அடையச் செய்த அசகாயப் போராளி அல்லவா அவர்!

புரட்சியில் பூத்த மலர்களலல்லவா அன்னைகள் நாகம்மையாரும், மணியம்மையாரும்!

அய்யாவின் புரட்சிக் கருத்துகளை 21 ஆம் நூற்றாண்டிலும் செரிமானம்'' செய்துகொள்ள பல பெண்களாலேயேகூட முடிவதில்லையே!

இருட்டிலேயே பல காலம் வசித்தவர்கள் - பகலவனின் கதிரொளியைக் கண்டு கண்கள் கூசுவது இயல்புதானே!

கூடிவாழ்தலே சாலச் சிறந்த நட்புரிமை!
தலைசிறந்த ஒழுக்கமும், நாணயமும்
அதில் செழிப்புடன் வளரும்.
ஏமாறுவது, ஏமாற்றுவதும் என்றும்
இருக்காத ஏற்பாடு அல்லவா அது!

கருத்துரிமைகளிலேயே தலையாயது வயது வந்து மனம் பக்குவப்பட்ட நிலையில், அவர்தம் வாழ்வுரிமையில் மற்றவர் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமும், அதிகார ஆணவமும்கூட! 
இன்றும் இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் - பெண்ணுரிமைபற்றிய கிளப்புகளில்' விவாதிக்கும் கண்ணாடி மாளிகைப் பதுமைகளால் கூட ஏற்க முடிவதில்லையே!

திருமணமே கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்'' என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றவர் அய்யா - இன்று அதிர்ச்சி - நாளையோ அது அன்றாட நிகழ்ச்சி!

அடிமைகளாய் இருப்பதைவிடக் கொடுமை அடிமைத் த(ன)ளத்தில் சுகம் காணும் விசித்திரம்!

எனவே, இளம் பெண்ணே!
இன்றைய தலைமுறையின் எழுச்சியே!
இதோ பெரியாரின் கைத்தடி
உனக்கு இனி சம்மட்டி!
தடுமாற்றம் வந்து கீழே விழும்போதெலாம்
உறுதியாய் அதைப்பற்றி நில்!
உறையிட்ட வாளாய் யிராதே
சுழலும் போர்வாளாக மாறு!
புரட்சியைத் துவக்கு!
ஒப்பனைகளோ, சொப்பனங்களோ
உனக்கு உரிமைகளைத் தராது!
உன்னை இழந்து'' உன்
வர்க்கத்தைக் காப்பாற்று!
உரிமைப் போரில் பின்வாங்காதே!
நீ ஒருபோதும் பாலினப் பண்டம் ஆகாதே!
சமத்துவப் புரட்சியின் போர்க் கருவியாக மாறு!
முன்னே நட!
முனைந்து நட!
அடையவேண்டிய வெற்றி இலக்கு

உன் காலடித் தடத்தில்!

Wednesday, March 6, 2019

ஏழு பேர் விடுதலைக்கான மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்பீர்!

சென்னையில் நான் பங்கேற்கிறேன்: தமிழர் தலைவர் அறிக்கை



கடந்த 28 ஆண்டுகளாக ஒரு கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி மார்ச் 9 ஆம் தேதியன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை மனித சங்கிலி அறப்போராட்டம் - சென்னை - கோவை - மதுரை - திருச்சி - நெல்லை - சேலம் - புதுச்சேரி ஆகிய ஏழு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழரும், மனிதநேயர்களும் ஆற்றவேண்டிய அடிப்படையான கடமை இதுவாகும்.
சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே நான் கலந்துகொள்கிறேன்.

கழகத் தோழர்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் திரளாகப் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு முன் னுரிமை கொடுத்து வெற்றியடையச் செய்வீர்!

- கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை

6.3.2019

"ஒரு சூத்திரன் பிணத்தை நாலு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றனரே - எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா!"

தினமலர் வாரமலரில் வெளியான (3.3.2019 பக்கம் 10) காந்தியாரை வடக்கே ஒரு பார்ப்பான் கொன்றது போல, ஆஷ் துரையை இன்னொரு பார்ப்பான் சுட்டுக் கொன்றது போலவே, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் ஒரு பார்ப்பான் கொல்லுவான் என்ற பொருள்பட - கேள்வி பதில் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு தழுவிய அளவில் கோப அலையை ஏற்படுத்திவிட்டது. பல ஊர்களிலும் அந்த வாரமலரை தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளனர் - காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "இதனை நான் வரவேற்கிறேன். நோயால், விபத்தால் சாவதைவிட இலட்சியத்திற்காகப் பலியாவது என்பது பெருமைக்குரிய ஒன்றே. இதற்காக ஒரு தடவையல்ல - பல முறை சுடட்டும்" என்று கருத்துத் தெரிவித்தார்.

நேற்று (5.3.2019) மாலை சென்னை - பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் இதுகுறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இது குறித்துக் கூறியதாவது:

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக எழுச்சி மாநாடும், பேரணியும், திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையும் (டிரவிடியன் மேனிஃபெஸ்ட்டோ) தான் நமது இன எதிரிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறது.

அதனுடைய எதிரொலிதான் தமிழர் தலைவர் மீதான வன்முறைத் தூண்டுதல்! தினமலர் வகையறாக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம், ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டை இளைஞர்களைக் கொன்று விட்டுத்தான் தமிழர் தலைவரை நீங்கள் நெருங்க முடியும்.
தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் வரிசையில் ஆசிரியரையும் காவிகள் தங்கள் பட்டியலில் வைத்துள்ளார்களா? காவல்துறை தன் கடமையை விரைவாக செய்ய வேண்டும். கருஞ்சட்டையிடம் காவிக் கைவரிசை காட்ட வேண்டாம் - கருஞ்சட்டைமுன் காவி தோற்று ஓடும் என்றார்.

தமிழர் தலைவர் கருத்து

இதுகுறித்து கூறிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறுகையில் புதுச்சேரியில் இதுகுறித்து கருத்துக்கூறியதைத்தான் இப்பொழுதும் கூறுகிறேன்.
வன்முறை என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒன்றும் புதியதல்ல - அது அவர்களுக்குக் கைவந்த கலை - வன்முறை அவர்கள் தர்மம் கூட.

மனுதர்மம் ஏழாம் அத்தியாயம் 107 முதல் 109 வரை உள்ள சுலோகங்கள் என்ன கூறுகின்றன?

107: இந்தப்படியாக சத்துருஜயஞ் செய்கிறவனுக்கு யார் விரோதஞ் செய்வார்களோ அவர்களை சாம தாந பேத தண்ட உபாயங்களினால் தனக்குச் சுவாதீநப்படுத்த வேண்டியது.

108: விரோதிகள் சாமதாந பேதங்களினால் சுவாதீநப்படாவிட்டால் மாத்திரம் தண்டோபாயத்தினால் மெதுவாகச் சுவாதீநப்படுத்த வேண்டியது.

109: இந்த நான்குபாயங்களுக்குள் சாமோபாயத்தில் பிரயாசை செலவு இல்லாததாலும் தண்டோபாயத்தில் காரியசாதகம் ஆகிறதினாலும் அவ்விரண்டையும் அரசர்களுக்கு இராச்சிய முதலிய சுகத்தைத் தருவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.
காந்தியாரையே சுட்டுக் கொன்றவர்கள் ஆயிற்றே! அந்த நேரத்தில் தந்தை பெரியார் கூறியது என்ன? உண்மையைச் சொல்லப் போனால் தந்தை பெரியாருக்குத் தான் பார்ப்பனர்கள் நன்றி கூறிட வேண்டும்.

தந்தை பெரியாரை அழைத்து வானொலியில் பேசச் சொன்னபொழுது காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் வெறும் துப்பாக்கிதான். அந்தத் துப்பாக்கியை இயக்கிய கைதான் மதவெறி. அதனை வீழ்த்த வேண்டும் என்று சொன்னாரே. அந்த நேரத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பான் என்று கூறி, கொஞ்சம் வன்முறையைத் தூண்டினால் என்ன நடந்திருக்கும்?

அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் உள்துறை அமைச்சராகவிருந்த மகாராட்டிரத்தில் என்ன நடந்தது? அக்ரகாரம் எரிக்கப்படவில்லையா? பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா?
தமிழ்நாட்டில் அவ்வாறு நடக்காததற்குக் காரணம் தந்தை பெரியாரே என்பதைப் பார்ப்பனர்கள் மறக்க வேண்டாம்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் கிடையாது. தனியாகத்தான் செல்கிறேன். எனக்குப் பாதுகாப்பாக இருப்பது இந்நாட்டுத் தமிழர்கள் - எம் தமிழர்கள் - நானும் மக்களோடு மக்களாகவே இருக்கிறேன்.

எனக்கு மெய்ப் பேசத் தெரியுமே தவிர மெய்க் காப்பாளர்கள் பற்றி சிந்திப்பதில்லை.

எங்களைப் பொறுத்தவரை வெளியில் வந்தால் செலவு - வீட்டுக்குத் திரும்பி வந்தால் வரவு. எங்கள் பொது வாழ்க்கையில் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட அடிப்படைப் பாடம் இது.

தமிழர் தலைவர் மீது வன்முறை தூண்டுதல் காவல்துறையில் புகார்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மீது கொலை வெறியைத் தூண்டும் வகையில் தினமலர் - வாரமலரில் (3.3.2019) கேள்வி பதில் பகுதியில் எழுதியது கண்டு தமிழ்நாடு முழுவதும் கொந் தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தின மலரையும் கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தினமலர் ஆசிரியர், வெளியிடு பவர், பதிப்பாளர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரா விடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் - சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையரிடம் நேற்று (5.3.2019) புகார் மனு கொடுத்தார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம் ஆகியோரும் உடன் சென்றிருந்த னர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையரும் கூறினார்.

ஆனால் ஒன்று 'தினமலர்', 'துக்ளக்', 'விஜயபாரதம்' வட்டாரங்களுக்கும் - அவர்களைச் சாந்தவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறோம். எங்கள் கொள்கை நாட்டுக்கானது - தமிழ் மக்களுக்கானது - எங்களைக் கொல்லுவதால் அது அழிந்து விடாது - மாறாக மேலும் மேலும் வீறு கொண்டு தான் எழும் - எந்தக் கொம்பனாலும் அதனை அசைக்க முடியாது - அசைக்கவே முடியாது - எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதுதான் விஞ்ஞானம் என்றார்.

பழனியில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்தி என்னைப் பாடை கட்டி தூக்கிச் சென்றனர். அது குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டனர்.


பார்ப்பனர்கள் பாடைக் கட்டித் தூக்கிச் சென்றுள்ளார்களே என்று கேட்டபோது "ஒரு சூத்திரன் பிணத்தை நாலு பார்ப்பனர்கள்' தூக்கிச் சென்றார்களே  - இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா!" என்று சொன்னேன் என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதலைத் தூண்டும் 'தினமலர்'மீது

தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

இல்லையெனில் பின்விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பு!


கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிக்கை


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது கொலை வெறியைத் தூண்டும் வகையில் எழுதியுள்ள தினமலர்' ஏட்டின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'தினமலர்' வார மலரில் (3.3.2019) பக்கம் 10 இல் "அந்துமணி பதில்கள்'' என்னும் பகுதியில் கீழ்க்கண்ட கேள்வி - பதில் இடம்பெற்றுள்ளது.
கே.வெங்கட்ராமன், தென்காசி
"தன்னைத் தானே, தமிழர்  தலைவர்' எனக் கூறிக் கொள்ளும், தி.க. தலைவர், வீரமணி, இந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற ஜாதிக்காரர்களைப்பற்றி, வாய் திறப்ப தில்லையே... இது ஏன்?
இவர் திட்டும் ஜாதியினர், கம்போ, தடியோ கையில் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான்!

அதே ஜாதிக்காரரான, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்குமுன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார, கலெக்டரை சுட்டுக் கொன்று, தானும் சுட்டு செத்தான், இதே ஜாதிக்காரன்....

இப்போது, தேர்தல்கள் நெருங்குகின்றன... இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்று கூடி, பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த, வெறிகொண்ட இளைஞன் ஒருவன், இவர் களை, கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டு விட்டால்...
எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.''

இதுதான் தினமலர்' வார மலரில் வெளிவந்த கேள்வி - பதில் பகுதி.
காந்தியாரை சுட்டதுபோல் சுடுவார்களாம்!

பச்சையாக கொலைவெறியைத் தூண்டும் வகை யில் வாசகங்கள் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளன என்பதில் அய்யமில்லை. காந்தியார் படுகொலை செய்யப்பட்டதுபோல, ஆஷ் துரை படுகொலை செய் யப்பட்டதுபோல, காந்தியாரையும், ஆஷ் துரையையும் கொலை செய்த அதே ஜாதியைச் சேர்ந்த (பார்ப்பன) இளைஞன் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைச் சுட்டுக் கொல்லுவான் என்ற தூண்டுதல் பொருளோடு பதில் சொல்லப்பட்டுள்ளதோடு, அவ்வாறு கொலை செய்வது நியாயம் என்பதுபோல காரணங்களையும் கற்பித்துள்ளது அந்த இதழ்.

தினமலர் வாரமலர்' எழுதியுள்ள பதிலைப் பார்த் தால், இவர்கள் ஏதோ ஓர் ஏற்பாட்டோடு இருப்பதாகவே தெரிகிறது.

இப்படிப் பச்சையாக, நாடறிந்த ஒரு தலைவரை - 10 வயது முதல் 86 வயதுவரை தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவரை - தமிழர் தலைவர் என்று மக்களால் மதிக்கப்படும் தலைவரை - தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கையையும், மதிப்பையும் பெற்ற தமிழ்நாட்டின் முக்கிய தலைவரான ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பச்சையாக கொலை வெறித் தூண்டுதலை மேற்கொண்டிருக்கும் தினமலர்' ஏட்டின் உரிமையாளர், ஆசிரியர், பதிப்பாளர்களைக் கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு அரசை குறிப்பாக காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

மகாராட்டிரத்தைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடகத்தைச் சேர்ந்த கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய சமுக சீர்திருத்தவாதிகள் கொல்லப்பட்ட வரிசையில் திராவிடர் கழகத் தலை வரையும் வைத்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

இலட்சியத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயார்!

இதுகுறித்து நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்து முக்கியமானது. பிணி வந்து சாவதைவிட, விபத்தினால் சாவதைவிட, இலட்சியத்திற்காக உயிர் என்ற விலை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதைவிட இலட்சிய வாதிக்குப் பெரும்பேறு எதுவாக இருக்க முடியும்?''
"ஜாதி, வருண தர்மம் ஒழிக்கப்படுவதற்கு என் உயிர் தேவைப்படும் என்றால், ஒருமுறையல்ல, பலமுறை சுட்டுக் கொல்லப்படுவதை விரும்புகிறேன். பார்ப்பனர்களே அதனை விரைவாக செய்யுங்கள்'' என்று புதுவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கம்பீரமாகவே கூறினார்.

இதற்கு முன்பும்கூட நான்கு முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்டதுண்டு.

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத ஜாதி, மதவெறியர்கள்,  வன்முறையால் சாதிக்க இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. மதம் யானைக்குப் பிடித்தாலும், மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்துதானே!

அவதாரங்களை எடுத்து பூதேவர்களான பார்ப்ப னர்கள் தங்கள் எதிரிகளான அசுரர்களைக் கொன்றது தானே அவர்களின் புராண தர்மம்! அதைத்தான் இப்பொழுது கையில் எடுத்துள்ளார்கள்.

வேறு கண்ணோட்டத்தோடு தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையை அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுத் தொண்டில் ஈடுபடுகின்ற தலைவர்களுக்கே உயிருக்கு இப்படி அச்சுறுத்தல் ஏற்பட்டால்,  நமக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்ச உணர்வுப் பொதுமக்களுக்கும் ஏற்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழ்நாடு அரசே பொறுப்பு!

அரசியல் கண்ணோட்டத்தோடோ - தினமலர்' மத்திய பி.ஜே.பி. அரசை ஆதரிக்கும் ஏடு என்பதை மனதிற்கொண்டோ, சட்ட ரீதியான நடவடிக்கையை தினமலர்'மீது எடுக்கத் தவறினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பு ஏற்கவேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும் இதுகுறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள், (தனியே காண்க!) அவர்களுக்கு நன்றி!

தமிழ்நாடு அரசு - காவல்துறை என்ன செய்யப் போகிறது? நாடே எதிர்பார்க்கிறது! - கழகத் தோழர்களும், பொதுமக்களும் அமைதி காப்பார்களாக! அதைத்தான் நமது தலைவர் விரும்புவார்; விரும்புகிறார்.

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்  திராவிடர் கழகம்.
சென்னை
4.3.2019

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...