Thursday, March 21, 2019

"தினத்தந்தியும், தினமலரும்"

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா ளராகிய பிரியங்கா காந்தியின் வருகை, காங்கிரஸ் கட்சிக்குப் புதுத்தெம்பை ஊட்டுமா? இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்துமா? என்கிற சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரிய தாக்கத்தை   ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.

மத்தியில் நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி என்பது முற்றிலுமாக தோல்வியடைந்த ஆட்சி என்பதை விட - நாட்டுக்குக் கேடு செய்யும் ஒரு பாசிச ஆட்சி என்பதுதான் கவலைக்கு உரிய ஒன்றாகும்.

134 கோடி மக்கள் கொண்ட இந்தியா என்பது ஒரு நாடு அல்ல - ஒரு துணைக் கண்டம் - வெள்ளைக்காரனின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்ட ஒன்றே.

பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும். ஆனால் இதனை எப்பொழுதுமே பிஜேபி ஏற்றுக் கொண்டது கிடையாது.

1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது அதனை எதிர்த்த ஒரே கட்சி இந்த பிஜேபியின் முன்னோடியான ஜனசங்கமே!
இதற்குக் காரணம் உண்டு. உலகில் சொந்த நாடு என்று ஒன்று இல்லாத இனம் ஆரிய இனம். தனக்கு மூக்கு இல்லை என்றால் எல்லோருக்குமே இருக்கக்கூடாது - என்று கூறும் ஒரு கதை போல, தனக்கென ஒரு நாடு இல்லாத நிலையில் மற்றவர்களுக்கும் அந்த நாடு இருக்கக்கூடாது என்கிற 'தாராள' புத்திதான் பார்ப்பனர்களுடையது.

தனி மாநிலம், தனி மொழி, தனி இனம், தனிப் பண்பாடு என்ற உணர்ச்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டால், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் தான் பாரத தேசம் ஒரே நாடு - நாம் அதன் புதல்வர்கள் என்று ஓங்கி ஓங்கிப் பாடுவார்கள்.

இன்றைக்கு மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி - இந்த பல இனங்கள், பல மொழிகள், பலப் பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திலே ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒன்று உருவாக்கினால் தான் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தோடுதான் பல்வேறு கொல்லைப்புற  யுக்திகளைக் கையாண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் ஒரே வகைத் தேசியக் கல்வி, குருகுலக் கல்வி என்பதெல்லாம் இந்தப் பார்ப்பன சமஸ்கிருத கலாச்சாரத்தின் பதிப்புதான். மாநிலங்களின் ஆளுகையில் உள்ள பல துறைகளையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு செல்லுவதெல்லாம் இந்த சூழ்ச்சி யுக்தியின் அடிப்படையில்தான்.
'இந்து' என்ற ஓர் அடையாளத்தைக் கொடுத்தால் தங்கள் மொழி, இனம் பண்பாடு இவற்றை மறந்துவிட்டு, ஆரியம்  விரிக்கும் வலையில் வீழ்வார்கள் என்பதே அவர்களுக்கே உரித்தான சாணக்கியப் புத்தி.

ராமஜென்மபூமி, கீதை புனித நூல், மனுதர்மமே, அரசமைப்புச் சட்டம் என்பதெல்லாமே இந்த வகையான மூளைச் சலவை ஏற்பாடுகளே!

சமுகநீதியை ஒழித்தால்தான் சமத்துவ நிலை ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதும் அவர்களின் திட்டம்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பாசிச பார்ப்பன ஆட்சியைக் கொண்டு வருவதுதான் அவர்களின் மறைமுக அஜண்டா.

மற்றபடி மக்கள் நலம், வளர்ச்சி என்பதே எல்லாம் "மயக்க பிஸ்கட்தான்".

மோடி கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும்.

பொருளாதாரப் பாதையில் ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என்பதெல்லாம், குதிரை குப்புறத் தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாகி விட்டது.

இந்த நிலையில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பச்சையான பாசிச பார்ப்பன - பனியா கார்ப்பரேட் கொடுங் கோல் ஆட்சிதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய உத்தரவாதங்களான மதச்சார்பின்மை - சமுகநீதி இவற்றைக் காப்பாற்றிட இந்தக் கொள்கையில் அக்கறை உள்ள மக்கள் நலனை விரும்பும் கட்சிகள் எல்லாம் இணைந்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்காக ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் பிரியங்காவின்  வருகை கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை வரவேற்க வேண்டியதுதான் புத்திசாலித்தனமுடையதாகும்.

இதுகுறித்து நேற்றைய "தினத்தந்தி"யில் (19.3.2019) தலையங்கம் பகுதியில் குறிப்பிட்டிருப்பதாவது:

ஆமதாபாத்தில் பிரியங்கா ஆற்றிய தேர்தல் உரையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது அந்தத் தலையங்கம். "இந்தக் கூட்டத்தில் பிரியங்கா பேச்சு மிகவும் அரசியல் நாகரிகத்தோடு, அர்த்தமுள்ளதாக இருந்தது. மிகவும் சிந்திக்கத் தக்க வகையில் அவர் பேச்சு இருந்தது, அவருடைய மென்மையான பேச்சு இதயங்களைக் கவர்ந்தது!" இவ்வாறு 'தினத்தந்தி'யின்' தலையங்கம் படம் பிடித்துக் கூறுகிறது.

அதே தேதியில் (19.3.2019) 'தினமலர்' ஏடு "அக்கம் பக்கம்" பகுதியில் இவ்வாறு எழுதுகிறது. "பிரியங்கா காந்தியின் வருகை பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிரியங்காவிடம் உற்சாகம் இல்லை. முகம் சோர்வடைந்திருந்தது. பேச்சிலும் அவர் பாட்டி இந்திரா போல் ஆவேசம் இல்லை. மென்மையான குரலில் பேசினார். குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழுவில் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்தார், இதைப் பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் "நாம் தான் அதிகம் எதிர்பார்த்து, ஏமாந்து விட்டோம் போலிருக்கிறது எனப் புலம்புகிறார்கள்" என்று எழுதுகிறது "தினமலர்".


'தினத்தந்திக்கும்', 'தினமலரு'க்கும் உள்ள இந்த வேறு பாட்டை எண்ணினால் இடையில் இழையும் வெள்ளை நூலை அப்பட்டமாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...