மத்திய இணை அமைச்சர் விஜய் கோயல் வாஸ்து சரியில்லை என்று கூறி தனது அலுவலகத்தை மாற்றம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து தொழிலாளர் நலத்துறை அலுவலக உணவகம் அமைந்துள்ள 4 மாடி கட்டடத்தை அலுவலகமாக மாற்றும் பணியில் ரூபாய் 1.9 கோடிகளுக்கு மேல் செலவு செய்துள்ளார். இவ்வளவு செலவு செய்தும் இன்றளவும் பணிகள் நிறைவடையவில்லையாம்.
பாஜக டில்லி தலைவர்களுள் ஒருவராக விஜய் கோயல் புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது புள்ளியியல் மற்றும் திட்ட ஆலோசனைகளுக்கான இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். வாஸ்துவில் நம்பிக்கை உடையவரான இவர் தன்னுடைய ஜோதிடரை அழைத்து தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் வாஸ்து முறைப்படி சரியாக உள்ளதா என்று கேட்டுள்ளார். கிடைத்த வாய்ப்பை விட்டு விடுவார்களா? "உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலு வலகமே மிகப் பெரிய வாஸ்துகுறைபாடுடன் உள்ளது. ஆகவே உங்கள் அலுவலகத்தை உணவகம் இருக் கும் கட்டடத்திற்கு மாற்றினால் உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்" என்று கூறினாராம். இதனை அடுத்து அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய பொதுப் பணித் துறையினரிடம் உணவகத்தை தனது அலுவலகமாக மாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். மேலும் தனது வாஸ்து ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு அவர் கூறுவது போல் அலுவலகத்தை அமையுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அவ்வளவுதான்! வேலைகள் மும்முரமாகத் தொடங் கின. உணவகத்தை அங்கிருந்து அகற்றி தற்காலிக கூடாரத்திற்கு மாற்றி அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இடைஇடையே ஜோதிடர் வந்து புதிய புதிய மாற்றங்களைக்கூற வேலைஅதிகமாகிக் கொண்டே சென்றது. ரூபாய் 71 லட்சம் என்று திட்ட மிடப்பட்ட புதிய அலுவலகம் அமைக்கும் பணிகள் செலவும் 1.9 கோடியைத் தாண்டியும் இன்றுவரை முடியவில்லை.
இது குறித்து மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது "மத்திய அமைச்சர் விஜய் கோயலுடன் ஒருவர் (வாஸ்து ஜோதிடர்) இரண்டுமுறை புதிதாக கட்டப்படும் அலுவலகத்தைப் பார்வையிட்டுச்சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் சில ஆலோசனைகளைக் கூறினார். இதனால் மேலும் செலவு அதிகமாகும்" என்று தெரிவித்தார்.
முக்கியமான கண்ணாடி மேசைகள் புதிதாக வாங்கப்பட்டு விட்டன. கண்ணாடி மேசைகள் ஒளியை எதிரொளிக்கும், அது அமைச்சருக்கு நல்லதல்ல; ஆகவே கண்ணாடி மேசைகளின் மீது வெள்ளிமுலாம் பூசப்பட்ட தகடுகளை பதிக்கக் கூறியுள்ளார். மேலும் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு நடத்தும் அறை முற்றிலும் புதிதாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறி, மரச்சாமான்களின் இரும்புகள் (ஆணி போன்றவை) இருக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். (விஜய்கோயலுக்கு இரும்புச் சாமானினால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாம்) ஆகவே மரச்சாமன்கள் அமைத்தும், தாமிர ஆணிகள் மற்றும் உறுதியான மரத் தக்கைகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூறியிருந்தார். இரும்புப் பொருட்கள் விலை மிகவும் குறைவு; ஆனால் தாமிரம் போன்ற உலோகங்களின் ஆணிகள் அளவு கொடுத்து செய்யச் சொல்லவேண்டும். ஆகவே செலவுகள் அதிகமாகும். வேலையும்முடிந்த பாடில்லையாம்.
இந்த கட்டடத்தை அலுவலகமாக மாற்ற தற்போது 1.9 கோடி செலவு செய்தும் கட்டட வேலை முடிவடையவில்லையாம்.
மேலும் தற்போது புதிதாக 39 லட்சத்திற்கு தொலைக் காட்சி, இணையதள வசதிகொண்ட பல்வேறு புதிய மின் னணு கருவிகள் வாங்க அமைச்சர் உத்தர விட்டுள்ளார். இதனால் செலவு 1.50 கோடி வரை செல்லுமாம்.
திட்ட ஒதுக்கீட்டிற்கு மேல் செலவு செய்தும் வேலை முடியாததால் இது குறித்து விஜய்கோயலிடம் நிதித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு "அந்தக் கட்டடம் எனக்கான அலுவலகமாக மாற்றப்படுகிறது என்று எனக்குத் தெரியாது, வேலை ஏன் இவ்வளவு மெதுவாக நடைபெறுகிறது, ஏன் அதிக செலவு பிடிக்கிறது என்று நான் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன்" என்று என விஜய் கோயல் தட்டிக் கழித்துள்ளார்.
எப்படி இருக்கிறது மத்திய பா.ஜ.க. ஆட்சி? அமைச் சர் ஒருவரின் ஜோதிட மூடநம்பிக்கைக்காக அரசு பணம், மக்கள் வரிப் பணம் இப்படியெல்லாம் கரியாக வேண்டுமா?
தனது சொந்த மூடநம்பிக்கைக்காக அரசு பணத்தை இப்படி மானாவாரியாக செலவு செய்வதுகூட ஒரு வகையான ஊழல்தான். விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஒரு மத்திய அமைச்சரே இதற்கு விரோதமாக இருக்கிறாரே எந்த ஊடகமும் கண்டிக்கவில்லையே!
No comments:
Post a Comment