அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப் பிறகுத் திராவிடர் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று கழகத் தோழர்களின் ஒருமித்த முடிவின் அடிப் படையில் மிக முக்கியமான பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் (17.3.1978).
16.3.1978இல் மறைந்த அன்னை மணியம்மையார் அவர் களின் ஏற்பாட்டின்படி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் என்ற பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார். (18.3.1978)
திரும்பிப் பார்த்தால் திகைப்பாக இருக்கிறது - நடந்து வந்த பல நிகழ்வுகளும் திடுக்கிடவும் வைக்கின்றன.
விவசாயிக்கு ஏற்படும் கடமை போல களைகளையும் அவ்வப்போது எடுக்க வேண்டிய நல்லதோர் விவசாயியாகவும் இருந்து வர வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டதுண்டு.
கையும் உறையுமாக இருந்தவர்களைக் கை கழுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது - பொது நலன் கருதி. இவரா இப்படி? என்று ஏற இறங்கப் பார்க்கும் அளவுக்கு எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்.
கழகத்தின் அணுகுமுறைப்படி, நாட்டின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்கும் பொழுது அரசியல் ரீதியாக வந்து நின்ற எரிமலைகள், கூர்ப் பார்த்து வீசப்பட்ட ஏவுகணைகளும் உண்டு உண்டு!
நேற்று வரை எப்படி எல்லாம் பழகினோம் - இவரின் ஒத்துழைப்பும், தந்த பாதுகாப்பும் எத்தகையது என்பதைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் எண்ணப்படாமல் - அடேயப்பா எத்தனை எத்தனை நெருக்கடிகள்!
கழகத்தை மட்டும் நடத்தவில்லையே நமது தலைவர் - கல்வி அறக்கட்டளைப் பணிகளையும் அல்லவா நடத் தினார்! தவறான அபிப்பிராயங்களைக் கால மருத்துவன் குணமாக்கியிருக்கின்றான்.
எரிவதை இழுத்தால் கொதிப்பது தானாக அடங்கி விடும் என்று - வருமான வரித்துறை ஒரு திட்டத்தோடு, பெரியாரின் அறக்கட்டளைமீது கவண் வீசியது. அதற்கு அது தேர்ந்தெடுத்த நேரமோ நெருக்கடி நிலை காலம்!
உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த அன்னை மணியம் மையார் தன்மீது போர்த்தியிருந்த போர்வையைத் தூக்கி ஏறிந்து, வீரச் சிங்கமாக நிமிர்ந்து நின்றாரே! கழகப் பொதுச் செயலாளர் மிசா கைதியாக இருந்த கால கட்டம் அது என்பதை கணக்கில் கொண்டால் அவர்கள் எப்படிக் கணக்குப் போட்டு, எந்த நேரத்தைத் தேர்வு செய்து பெரியார் திடலில் நுழைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கழகத்தின் பொதுச் செயலாளராக, அறக்கட்டளையின் ஆயுள் செயலாளராகப் பொறுப்பேற்ற தலைவர் அவர்கள் இரு திசைகளிலும் தீக்கனல் கக்கி வந்த அம்புகளை எப்படி எல்லாம் எதிர் கொண்டார் என்பதை மய்யப்படுத்தி ஒரு "வீர காவியமே" எழுதலாம்.
இது அறக்கட்டளைதான் என்று நிறுவுவதற்கு ஆசிரியர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அசாதாரணமானது. வருமான வரி மேல் முறையீட்டை விசாரிக்கும் நீதிபதிகள் இருவர், வருமான வரித் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை சார்பான வழக்குரைஞர் எல்லாம் பார்ப்பனமயமே!
இந்த நெருப்புச் சக்கர வட்டத்துக்குள்ளிலிருந்து வெளியேறுவது என்பத எளிதானது தானா? பனிமலைமீது தலை கீழாக ஏறும் மிகப் பெரிய "சாகசம்" அன்றோ!
ஆம் அந்த 'சாகசத்தை' அவர் சாதித்துக் காட்டிய வரலாறு சாகா வளம் பெற்றதாகும்.
இது அறக்கட்டளை தான் என்ற தீர்ப்பையும் பெற்று, வருமான வரித்துறைக்கு அதுவரை கட்டப்பட்ட பணத் தையும் வட்டியோடு திரும்பப் பெற்ற அதிசயம் - ஆசிரியர் அவர்களின் ஆற்றலாலும் நம்மிடம் இருந்த நியாய பலத் தாலுமே ஈட்ட முடிந்தது.
சமூக ரீதியாக சமூக நீதிக்கு ஏற்பட்ட பல சவால்கள் நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் இந்த அரை நூற்றாண்டு காலத்திலும் எழந்தன.
திராவிட இயக்கம் என்ற போர்வையில் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பினை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்ததை எதிர் கொண்டது மட்டுமல்ல; அதன் பின்னணியில் 49 விழுக்காடு இடஒதுக்கீட்டை 68 விழுக்காடாக, பின் 69 விழுக்காடாக பரிணமிக்க செய்தது சரித்திரத்தின் காலக் கல்வெட்டு!
மத்திய அரசுத் துறைகளில் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்னும் மண்டல் குழுவின் பரிந்துரையை செயலாக்கம் செய்துள்ளமை சாதாரணமானதுதானா?
42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் நடத்துவதற்கு சூத்திரதாரியாகவே இருந்தவர் நமது ஆசிரியர் ஆயிற்றே!
"விடுதலை" ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பை ஏற்க முன்வராவிட்டால் விடுதலையை வார ஏடாக நடத்திட முடிவு செய்தேன்" என்று தந்தை பெரியார் எழுதியதை ("விடுதலை" 10.8.1962) ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் நம் தலை சுற்றுகிறதா இல்லையா? நாள்தோறும் "விடுதலை" நடைபோடாவிட்டால் தமிழர் உரிமைகள் எல்லாம் நடை பிணமாயிருக்காதா?
இந்த ஒன்றே ஒன்றுக்கேகூட நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள், தமிழர்கள் காலா காலத்திற்கும் தலை சாய்ந்த நன்றியை நாள்தோறும் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டுமே!
நான்குமுறை இருதயத்தில் கை வைத்தாயிற்று. ஆனாலும் இந்த இருதயம் நாட்டு நலனுக்காக இன்னும் எட்ட வேண்டிய உரிமைகளைக் கொய்து தருவதற்காக இயங்கிக் கொண்டே இருக்கிறது!
தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குப் பார்வையில் உயர் எண்ணங்கள் மட்டுமல்ல - இயக்கத்திற்கு அவர் செய்து வைத்த ஏற்பாடு (அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணி) இருக்கிறதே - பிரதமப் பாத்திரத்தை வசிக்கும் என்பதில் அய்யமில்லை.
40 ஆண்டுக் கழகப் பொறுப்பேற்று ஆற்றியிருக்கும் பணிகளுக்கு கழகத்தவர் சார்பாக மட்டுமல்ல. தமிழ் கூரும் உலகின் சார்பாக தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க பெரியார், வாழ்க அன்னை மணியம்மையார், வாழ்க ஆசிரியர் வீரமணி!
No comments:
Post a Comment