Tuesday, November 28, 2017

திராவிடர் கழகம் - திமுக உண்டானதற்கு முன்னோடி நீதிக்கட்சியே!

நீதிக்கட்சி 101ஆம்ஆண்டு விழாவில் இனமான பேராசிரியர் க.அன்பழகன் உரை



சென்னை, நவ. 27  திராவிடர் கழகம், திமுக உண்டானதற்குக் முன்னோடி நீதிக்கட்சியே  என்றார் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

18.11.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற நீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழாவில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

நீதிக்கட்சி முன்னோடியான வெள்ளுடை வேந்தர் டாக்டர் பிட்டி தியாகராயர், சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்  உருவப்படங்களை திறந்து வைத்து உரையாற்றுகையில் கூறியதாவது:

நீதிக்கட்சியின் 101 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு ரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் வீரமணி அவர்களே, இந்த இயக்கத்தில் ஈடுபட்டு நம்முடைய அருமையான கொள்கைகளை விளக்கித் தந்திருக்கின்ற பி.டி.ஆர்.பி. தியாகராசன் எம்.எல்.ஏ., அவர்களே,

தலைமையுரையாற்றிய முனைவர் இராமசாமி அவர்களே, வரவேற்புரையாற்றிய முனைவர் மங்கள முருகேசன் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கின்ற முனைவர் தானப்பன் அவர்களே, குமரேசன் அவர்களே,

இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்ற பெரி யோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, அருமைத் தோழர்களே!

இந்நிகழ்வு நான் எதிர்பாராத ஒரு சிறப்பான நிகழ்ச்சி யாக அமைந்திருக்கிறது. மறைமலையடிகள், திரு.வி.க. போன்ற பெருமக்களின் பெயரைச் சொல்லி பழக்கப் பட்டிருக்கிற நான், நம்முடைய இயக்கத் தலைவர்களின் பெயரை அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு நல்ல நிலையை இந்த விழாவில் நான் பார்க்கிறேன்.

நீதிக்கட்சித் தலைவரின் படங்களைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த பெருமை!

நம்முடைய தலைவர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பெரியார், அண்ணா ஆகியோரின் படங்களைத் திறக்கின்ற வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. அவர் களுடைய படங்களை நான் திறந்து வைத்தேனே தவிர, உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களைப் போல இந்த இயக் கத்திற்கு ஆக்கம் கொடுத்தவர்கள், துணை நின்றவர்கள், வழிகாட்டியவர்கள் வேறு யாரும் இல்லை. அந்தத் தலைவர்கள்தான் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சியைத் தொடங்கி வைத்த தலை வர்கள், நீதிக்கட்சியினுடைய கொள்கை விளக்கத்தை செய்த தலைவர்கள், திராவிட இயக்கம் என்றால், என்ன என்று விளக்கியவர்கள். எனவே, அப்படிப்பட்ட தலைவர்களின் படங்களை நான் இன்றைக்குத் திறந்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்த பெருமை.

நீதிக்கட்சித் தலைவர்கள் இல்லையென்றால்....

அந்தத் தலைவர்கள் இல்லை என்று சொன்னால், இன்றைக்கு நம்முடைய இயக்கம் இல்லை. நம்முடைய இயக்கம், இந்தக் கொள்கையில் உள்ள இயக்கம் -  திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இந்த நாட்டில் தலையெடுத்திருக்க முடியாது. அவர்கள் இருந்தார்கள், வாழ்ந்தார்கள், வழிகாட்டினார்கள், விளக்கம் சொன்னார்கள் - அதனுடைய விளைவு - இன்றைக்கு நாமெல்லாம் அந்த இயக்கத்தினுடைய கொள்கையைப் பின்பற்றி, அதனை உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு, மக்களிடையே எடுத்துச் சொல்கிறோம்.

உளமார்ந்த நன்றி

எனவே அப்படிப்பட்ட பெருமக்கள் நம்முடைய வழிகாட்டிகளான அவர்களுடைய படங்களைத் திறந்து வைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காக நான் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அதிகம் பேச முடியாத ஓர் இக்கட்டான நிலையில், இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். எனவே, இக்கட்டான அந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை. எனவே, அப்படிப்பட்ட நிலைகாரணமாக, நான் அதிகமாகப் பேச முடியா விட்டாலும் கூட, என்னுடைய உளமார்ந்த உள்ளத்தை உணர்ந்த நீங்கள், அதனை உணர்ந்துகொண்டு ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்பி, என்னுடைய உரையை நான் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...