Tuesday, November 28, 2017

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே! ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே!

ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

அதிமுகவுக்கும் - பிஜேபிக்கும் சேர்த்துத் தோல்வியைத் தாரீர்!

http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

சென்னை - ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வே வெல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்ற தொகுதி  இடைத் தேர்தல்  வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி  12.4.2017 என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக அணியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றனர் என்பது அதிகாரிகள் திட்டவட்டமாக அறிந்த நிலையில், அத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும் வெளியானது.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் அத்தொகுதியில் தேர்தலை நடத்திட ஆணையிட்டுள்ள தேர்தல் ஆணையம் கடந்த முறை எந்தக் காரணத்துக்காகத் இடைத் தேர்தலைத் தள்ளி வைத்ததோ, அந்தக் காரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 'சிதம்பர ரகசியமோ!'

குற்றவாளிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சம்பந்தப்பட்டவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்திருந்தால்தானே வரும் டிசம்பர் 21இல் மீண்டும் நடக்க இருக்கும் இடைத் தேர்தல் கையூட்டியின்றி நடைபெறும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

அவ்வாறு எந்த அறிவிப்பும், எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நடக்க இருக்கும் இடைத் தேர்தலின் மீதான அவநம்பிக்கை நிழல் படிவதைத் தவிர்க்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த  கால கட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டு பணப்பட்டுவாடா செய்ய வழி வகை செய்து கொடுத்தது தேர்தல் ஆணையம் என்பதை  தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்களே.

அது எப்படியோ போகட்டும்;  நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இந்தத் தேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அந்த வேட்பாளர் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு கொள்கை பூர்வ, நியாயமான காரணங்கள் ஏராளம் உண்டு.

அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்?

குறிப்பாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசால் கொண்டு வரப்படவிருந்த பல திட்டங்களை, அவர் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றித் திட்டவட்டமாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று -

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (அந்தியோதயா அன்னயோஜனா). ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நவம்பர் (2016) முதல் தேதி முதல் தமிழ்நாட்டில் அது அமலுக்கு வந்து விட்டது.

அதேபோல தமிழகத்தின் எல்லையில்கூட உள்ளே நுழைய விட மாட்டேன் என்று முதல் அமைச்சர் ஜெயலலி தாவால் உறுதியுடன் நிராகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. திட்டம் ராஜநடை போட்டுத் தமிழகத்திலே வலம் வரும் நிலையை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மண் - தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் வீறுநடை போட்ட பூமி தமிழ்நாடு.

நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படியாகவே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகத் தடுக்கப்பட்ட மாநிலமும் தமிழ்நாடே! இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவர்களாக ஏராளம் வர முடிந்தது.

'நீட்' மேல் தட்டு மக்களின் சதி

அதனைத் தடுக்க மேல் ஜாதி ஆதிக்க சதியால் திணிக் கப்படும் 'நீட்' தேர்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் 'நீட்' தேர்வு கூடாது என்று இரு சட்டங்கள் இயற்றப்பட்டும், அதற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்குப் போதுமான முயற்சிகளை அளிக்க மாநிலத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கே அந்தக் கோப்பு செல்லவில்லை என்பதைத் தெரிந்த பிறகும்கூட, அதில் அக்கறை காட்டாதது உயிர் நாடிப் போன்ற இந்த சமூகநீதிப் பிரச்சினையில் இந்த அரசின் அக்கறையின்மையைத் தெளிவுபடுத்தி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்திருந்தால், மத்திய அரசு நிச்சயம் பணிந்து வந்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பை  வேண்டுமென்றே தமிழக அரசு தவிர்த்து விட்டதானது - எவ்வளவுப் பெரிய துரோகம்!

மடியில் கனம் - வழியில் பயம் என்ற நிலையில் மத்திய பிஜேபி அரசின் தொங்கு சதையாக, தலையாட்டிப் பொம்மையாகிவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. மத்தியில் பிஜேபி  ஆட்சி இருக்கும் வரை எங்களை அசைக்க முடி யாது என்று  கொஞ்சம்கூட முகம் சுழிக்காமல் ஒரு மாநில அமைச்சரால் சொல்ல முடிகிறது என்றால் இந்த ஆட்சி யார் மடியில் பத்திரமாகத் தூங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆளுநர் பிரச்சினையில்

ஜெயலலிதா எப்படி நடந்து கொண்டார்?

வேறு எந்தக் கால கட்டத்திலும் நடந்திராத வகையில் ஆளுநர் அன்றாட அரசு நடவடிக்கையில் தலையிடுவதைக் கூடத் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளும் பலகீனத்தை என்ன சொல்ல? மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அண்ணாவின் பெயர் இந்தக் கட்சியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எத்தகைய அவலம்?

1995இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டு சில விவரங்களைக் கேட்டார் என்பதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்ததோடு ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியதை இன்றைய அதிமுக அரசு வசதியாக மறந்தது ஏனோ? இதில் மட்டும்  ஆளும் மந்திரிகள் அடிக் கொரு தரம் கூறும் அம்மாவின் 'ஆன்மா' மன்னித்து விடுமோ!

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு சரியான பாடம் கற்பிக்கத் தவறி விட்டால் அதைவிட தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வது - வேறு ஒன்றும் இருக்க முடியாது - இருக்கவே முடியாது.

தி.மு.க. வெல்ல வேண்டும் - ஏன்?

தி.மு.க.வின் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க.வில் அடி மட்டத் தொண்டராக இருந்து அந்தப் பகுதியில் தன் தொடர் பணிகளால் அறிமுகமான தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது தி.மு.க.வுக்காக அல்ல - நாட்டு மக்களுக்காக.

மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்களுக்கு நல்லதோர் பாடத்தைக் கற்பிப்பதற்காகவே!

இந்தக் கால கட்டத்தில் 'உழைப்புத் தேனீ'யானதிமுகவின் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராப் பணி இல்லாவிட்டால், இன்னும் பல கடுமையான, கொடுமையான இழப்புகளைத் தமிழ்நாடு சுமக்க வேண்டியிருந்திருக்கும்.

இது ஓர் இடைத் தேர்தலாக இருந்தாலும், இதில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தி.மு.க.வுக்குக் கொடுக்கும் வெற்றி அகில  இந்திய அளவில் பெரிய அலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அ.இ.அ.தி.மு.க.வின் பின்புலத்தில் மதவாத - காவி இந்துத்துவ சக்தி இருக்கிறது என்று தெரிந்தபின்பும், (தேர்தல் அறிவிப்பும், இரட்டை இலை சின்னமும் ஒரே நேரத்தில் கைகோத்து வருவதைக் கவனித்தீர்களா?) இதில் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. தமிழ் மண்ணின் தன்மானம், பகுத்தறிவு, சமூகநீதி, மதச் சார்பின்மை உணர்வைப் பிரதிபலிக்கும் இடைத் தேர்தலாக ஆர்.கே.நகர் அமையட்டும் - அமையட்டும்!

ஒரே கல்லால் இரு காய்களை வீழ்த்தக் கிடைத்த சரியான, அருமையான சந்தர்ப்பம் இது - நழுவ விடலாமா வாக்காளர்களே!

தி.மு.க. வெல்லட்டும்! வெல்லட்டும்!!

தமிழ்நாடு விழித்திருக்கிறது என்பது புரிய வேண்டியவர் களுக்குப் புரியட்டும்!

திராவிடர் கழகத்தின் ஆதரவு எல்லா வகைகளிலும் உண்டு. கழகத் தோழர்கள் முழு வீச்சில் செயல்படுவார்கள்!



கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
27-11-2017

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...