Saturday, November 25, 2017

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒரு மைல் கல்!

சூத்திரப் பட்டத்தை ஒழிப்போம்!

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம்

சென்னை மாநாட்டுக்கு வாரீர்!



http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

25.11.2017 சனியன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம், 26.11.2017 ஞாயிறன்று மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வலியுறுத்தும் மாநாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அதில் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திரண்டு வருவதன் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பார்ப்பனர் அல்லாத தமிழினப் பெரு மக்களே! இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எல்லாம் இந்து மதத்தில் வருண தர்மப்படி சூத்திரர்களாம், அதாவது பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாம்!

தமிழன் கட்டிய கோயில்களில்

தமிழன் அர்ச்சகனாகக் கூடாதா?

நம் தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்களில் தமிழர்களாகிய நாம் கர்ப்பக்கிரகம் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடுமாம் - செத்துப் போய் விடுமாம்!

நமது தமிழக அரசு பல சட்டங்களை நிறைவேற்றும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார், ஜீயர் போன்றவர்களின் எல்லா வகையான ஆசீர்வாதம், பொருளாதாரங்களின் துணையோடு உச்சநீதிமன்றம் சென்று முடக்கி விடுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?

ஆனால், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறி விட்டது (6.12.2015).

இதன் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க. அரசு நினைத்தால்  இந்து அற நிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்றுள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டும் ஒரு வரி பதில்கூட இல்லை.

கேரளாவுக்கு ஒரு சட்டம்

தமிழ்நாட்டுக்கு வேறொரு சட்டமா?

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில் தாழ்த்தப்பட்டவர் 6 பேர் உட்பட பிற்படுத்தப்பட்டவர்களும் அடங்கிய  62 பேர்களுக்கு அர்ச்சகர்களாகப் பணியாற்றிட மாநில அரசு ஆணை பிறப்பித்து, அவர்களும் அர்ச்சகர் பணியைத் தொடங்கி விட்டார்கள்.

கேரளாவுக்கு ஒரு அரசியல் சட்டம் என்றும், தமிழ்நாட்டுக்கு வேறொரு அரசியல் சட்டம் என்றும் கிடையாது. கேரளாவை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படலாம்.ஆனால் வேதனைக்குரிய நிலை என்னவென்றால், எதிலும் செயல்படாத அரசாகக் கூனிக் குறுகி விட்டது தமிழ்நாடு அரசு.

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானப் போராட்டம்.

பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம் - பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறோம்.

இனிமேலும் நாம் இதில் தாமதத்தை அனுமதிக்க முடியாது.

வரும் சனியன்று கருத்தரங்கம்

ஞாயிறன்று மாநாடு

அந்த வகையில் வரும் சனியன்று (25.11.2017) மாலை நடைபெறும் ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமும், ஞாயிறன்று மாலை (26.11.2017) நடைபெறும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடும் நடைபெற உள்ளன.

சமூக நீதியில், சமத்துவச் சிந்தனையில், ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர்கள் எல்லாம் கருத்தரங்கத்திலும், மாநாட்டிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தீர்வு காண்போம் - வாரீர்!

இம்மாநாட்டின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் வாருங்கள், சூத்திர இழிவை இன்னும் எவ்வளவுக் காலத்திற்குத் தாங்கிக் கொண்டிருப்பது?

"மானமும், அறிவும் மனிதனுக்கழகு - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!" என்ற நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டை நிலை நிறுத்த வாரீர், வாரீர்! என்று அனைவரையும் அழைக்கிறோம்.

இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மனித உரிமை சமத்துவம் மட்டுமே உண்டு - வாரீர்! வாரீர்!!

 கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
24-11-2017

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...