Wednesday, November 22, 2017

தமிழகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு இப்பொழுது நடைபெறுகின்ற தமிழக அரசினை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதுதான்

திருவாரூர், நவ.21 தமிழகத்தில் நிலவுகின்ற பிரச்சி னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு இப்பொழுது நடை பெறுகின்ற தமிழக அரசாங்கத்தை எவ்வளவு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ, அப்பொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு ஏற்படும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களிடையே கூறினார்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற இன்று (21.11.2017) திருவாரூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பவுத்திரமாணிக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்..
அவரது பேட்டி வருமாறு:

தூர்வாருவதும், குடிமராமத்து செய்வது என்பது எப்பொழுது வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்கிறதோ அல்லது தென்மேற்குப் பருவ மழை ஆரம்பிக்கிறதோ அதற்கு முன்பே அதனைச் செய்யவேண்டும் என்கிற ஒரு சாதாரண நிலைப்பாட்டைக் கூட எடுக்காமல், அவ்வப்பொழுது ஏதோ நடத்தினோம் என்று அதனைக் கணக்குக் காட்டுவதற்காக அதைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு அரசாங்கம் இருக்கக்கூடாது.

விவசாயிகளின் குறைகளைத் தெரிந்துகொண்டு...

நாகை, திருவாரூர் பகுதிகள் எந்த ஒரு சிறு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வந்தாலும் பாதிக்கக் கூடிய பகுதிகளாகும். ஆகவே, அதனைத் தடுப்பதற்கான நிரந்தரமான தடுப்பு, அந்த ஆபத்துகளிலிருந்து குடிமக்களை, குறிப்பாக விவசாயிகளை பாதுகாக்கக் கூடிய ஏற்பாடுகளை அவர்கள் செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

எனவேதான், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாகச் செல்லவேண்டும் என்பதற்காக, பவுத்திர மாணிக்கம், மஞ்சக்குடி (குடவாசல்), சோழங்கநல்லூர், கொட்டாரக்குடி, ஒக்கூர், செருநல்லூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம் போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்காக வந்திருக்கின்றோம்.

நேரிடையாகச் சென்று விவசாயிகளின் குறைகளைத் தெரிந்துகொண்டு, அறிக்கைகள் எழுதவும், அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகவும்தான் இங்கே வந்திருக்கின்றோம்.

நியாயவிலைக் கடையே கிடையாது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

செய்தியாளர்: நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தியும், உளுத்தம்பருப்பு கிடையாது என்று படிப்படியாக ஒவ்வொரு பொருளாகக் கிடையாது என்கிறார்களே,  அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர் ஆசிரியர்: கடைசியாக நியாயவிலைக் கடையே கிடையாது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்று சொன்னால், படிப்படியாக மத்திய அரசு பொருள்களைக் குறைத்துக்கொண்டு வரும்பொழுது, நம் அரசாங்கம் தட்டிக் கேட்கக் கூடிய நிலையில்  இல்லை. மத்திய அரசாங்கம் எதைச் சொல்கிறதோ, அவர்கள் சர்க்கரை விலையை உயர்த்துகிறார்கள் என்று சொல்லும்பொழுது, தீபாவளிப் பண்டிகை நேரத்தில், எங்களுக்கு அந்தப் பண்டிகையில் உடன்பாடு இல்லை என்று சொன்னாலும், மக்கள் கொண்டாடக் கூடிய நேரத்தில், சர்க்கரை விலையை ஏற்றினார்கள். சர்க்கரை கசந்தது.

இப்பொழுது உளுத்தம் பருப்பு இல்லை என்று சொல்கிறார்கள். சிறிது நாள்களுக்குப் பிறகு அரிசி யும் இல்லை என்கிற நிலை வரலாம். காரணம் என்னவென்றால், ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டு விட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்தபொழுது, அந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் மத்திய அரசாங்கத்தின் உணவுத் திட்டத்தை ஒப்புக் கொண்டதின் விளைவு, அவர்கள் கேட்பதற்கு முன்பே, இவர்கள் குனிந்து கொடுக்கக் கூடிய அளவிற்கு இருப்பது, சங்கடமான ஒரு சூழல். இதனையெல்லாம் கண்டிக்கக் கூடிய ஒரு அரசாங்கம் வரவேண்டும். அந்த மாற்றம் வந்தாலொழிய தனித்தனியே இதற்குப் பரிகாரம் என்பது கிடையாது.
பயந்து போயிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம்தான்

செய்தியாளர்: தமிழக ஆளுநரின் ஆய்வுகளைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகத்திற்கு ஏற்றதல்ல என்று சொன்ன பிறகும், நேற்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருப்பதுபற்றி...?

தமிழர் தலைவர் ஆசிரியர்: ஜனநாயக ரீதியாக, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள். கண்டிக்கவேண்டிய  தமிழக அமைச்சர்கள் அதனை கண்டிக்காததோடு, அது தவறில்லை என்று, ஆளுநரின் பக்கம் சாய்ந்துகொண்டு, சரியாகத்தான் அவர் செய்கிறார் என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம்தான் இது.

இந்த அரசாங்கத்தை எவ்வளவு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ...

செய்தியாளர்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வேற்று மாநிலத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்கிற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே...?

தமிழர் தலைவர் ஆசிரியர்: முதன்முதலில் அதனைக் கண்டித்து அறிக்கை விடுத்தது திராவிடர் கழகம்தான். ஏற்கெனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் பணிகளில் இது நடைபெற்று இருக்கிறது.

யாருக்கும் தெரியாமல், தமிழ்நாடு பப்ளிக் சர்வீசு கமிசன் ஆக்ட்டை - அந்த சட்டத்தைத் திருத்தி யிருக்கிறார்கள் என்பது வெளியில் தெரிந்திருக்கிறது. வெளி மாநிலத்தவருக்கு கதவு திறந்துவிடும் நிலை இருக்கக் கூடாது.

இன்னுங்கேட்டால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் பணிக்கே வர முடியாத சூழல் இருந்தது. அதையெல்லாம் இன்றைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிடும் பின்னணிபற்றி தெரியவில்லை.

‘நீட்' தேர்வில் வெளி மாநில மாணவர்கள் ஏராளமாக உள்ளே வந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் போக்கவேண்டும் என்றால், இந்த அரசாங்கத்தை எவ்வளவு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ, அப்பொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு ஏற்படும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...