Friday, November 17, 2017

தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும்போது நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநர் நேரிடையாகத் தலையிடுவதா?

நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!

தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும்போது நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநர் நேரிடையாகத் தலையிடுவதா? இது முற்றிலும் ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விதிகளை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை ஆகும்! இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுக்குப் புதிதாக வந்துள்ள மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கோவை பாரதியார்  பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக் கழக வேந்தர் என்ற பொறுப்பில் (ex officio) உள்ளதால் சென்றுள்ளார்.

அங்கு சென்றவர்,  திடீரென 'இன்ஸ்பெக்ஷன்' செய்யும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று ஆய்வுகளைச் செய்துள்ளார் என்பது மிகவும் விசித்திரமான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அ.இ.அ.தி.மு.க. அரசினைக் கேலிக் கூத்தாக்கிடும், ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இருக்கும்போது, ஆளுநர் இப்படி தனியே ஒரு ஆளுமையை ஏற்படுத்திக் கொள்ளுதல் எவ்வகை அரசியல் சட்ட வழிமுறைகளாகும்?

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது...

நடைமுறைப்படி ஆளுநர் ஆட்சி (Governor  rule under Article 356)

நடைபெற்றால் அவர் இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று 'ஆளுமை' செய்யலாம்! ஆனால் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இருக்கும் போதே -  அது செயல்படாத அரசு என்றோ அல்லது போதிய பெரும்பான்மையில்லாத அரசு என்றோ ஏதோ ஒரு காரணம் காட்டியோ, அல்லது காரணமே காட்டாமல்  ''Otherwise'  என்ற வார்த்தையைப் பயன்படுத்தி  முன்பு ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்தபோது - ஆளுநர் பர்னாலாவின் அறிக்கையைக்கூட பெறாமலேயே  - திமுக ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்தது போன்றோ (அநியாயம் என்பது அப்புறம்) - தங்களுக்குள்ள அதிகார மத்திய அரசின் செயலை செய்து விட்டு, இப்படி தினமும் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சென்று ஆய்வு நடத்தினால், முதல் அமைச்சர், அமைச்சர்கள் பதவியில் இல்லாததால் 356இன் படியோ அல்லது வேறு சில சட்ட விதிகளின் படியோ செய்கிறார் என்றாவது நியாயப்படுத்திட முயலலாம்!

எவ்வகையில் சரியானது?

எதுவுமே இல்லாமல் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவது, இதைக் கண்டித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு, "நான் இனி எல்லா மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தியே தீருவேன்" என்று கூறுவது, எவ்வகையில் சரியானது?

ஆளுநருக்கு பா.ஜ.க.வினர் வக்காலத்து வாங்குவது, அவர் பிரதமர் மோடி அரசால் இங்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதால் ஒரு வேளை இருக்கலாம்!

இக்கட்சி ஆளும் மாநில கட்சியாக இருந்து, மத்தியில் வேறு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்து இப்படி ஒரு ஆளுநர் நடந்து கொண்டால் இவர்களால் அதை ஏற்க  முடியுமா? இதில் கட்சிக் கண்ணோட்டம் இல்லாது அரசியல் சட்டப்படி ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கண்ணோட்டம் மட்டுமே இருக்க வேண்டும் - பொது ஒழுக்கப்படி.

உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி உள்ளதே!

புதுச்சேரியிலும், டில்லியிலும் உள்ள துணைநிலை ஆளுநர்களின் இத்தகைய தலையீடுகள் - போட்டி அரசாங்க நடவடிக்கைகளால் அம்மாநிலங்களின் வளர்ச்சி வெகுவாக தடைப்படும் நிலை உள்ளதே, உச்சநீதிமன்றமே இதைச் சுட்டிக்காட்டியும் உள்ளதே!

மாநிலத் தகுதியுள்ள தமிழ் நாட்டில் ஆளுநர் என்பவர்  பெயரில் மாநில ஆட்சித் தலைவர் என்பதே நடைமுறையில் - காட்சித் தலைவர்தான் அரசியல் சட்டப்படி! எடுத்துக்காட்டாக,

சட்டமன்றத்தில் ஆளுநர் (கவர்னர்) உரை நிகழ்த்தப்படுகிறது. அதை ஆளுநரா எழுதுகிறார்? தயாரிக்கிறார்? அது தமிழக அரசின் கொள்கை முடிவுகளையொட்டி, அமைச்சரவை தயாரித்து, ஆளுநரை விட்டுப் படிக்கச் செய்வதுதான்!

ஆளுநர்கள் "நான் படிப்பதை நானேதான் தயாரிப்பேன்" என்று அடம் பிடிக்க முடியுமா?

இந்த உதாரணம் போலும்தான் அவரது "மேற்பார்வையும்" இருக்க வேண்டும்.

திறனற்ற அரசாக இருப்பதால் இந்நிலை!

ஆளும் (அதிமுக)  கட்சியின் பிளவினைப் பயன்படுத்தி, 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்ற பழமொழிபோல டில்லி அரசு இங்கே உள்ள அரசை பொம்மை அரசாக்கி - எடுத்ததெற்கெல்லாம் சலாம் போட்டு - நீட் தேர்வு மசோதாக்கள் இரண்டின் நிலை என்னவாயிற்று என்று கூட அழுத்தந் திருத்தமாகக் கேட்டு வலியுறுத்தி வெற்றி பெற இயலாத, ஒரு செயல் திறனற்ற அரசாக இருப்பதால் இந்நிலை! 'அம்மா அரசு', 'அம்மா அரசு'  என்று மூச்சுக்கு முன்னூறு தரம் பேசுவோர் - அந்த 'அம்மா' (ஜெயலலிதா) ஆட்சியில் இருந்தபோது டில்லிக்கு இப்படியா 'சலாம்' போட்டு 'குலாம்' ஆகவா நடந்து கொண்டார்?

முற்றிலும் ஜனநாயக விரோதம்

டில்லி அல்லவா அவருக்கு இங்கே வந்து 'சலாம்' போட்டது. குறைந்தபட்சம் அந்த நினைவாவது நமது முதல் அமைச்சர் உட்பட்ட அனைவருக்கும் வர வேண்டாமா?

அதற்காக, "அறிவிக்கப்படாத ஒரு ஆளுநர் ஆட்சியை நான் நடத்துவேன்" என்று ஆளுநர் மூலம் டில்லி முயற்சிப்பது முற்றிலும் ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விதிகளை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை ஆகும்! இதனை உடனே கைவிட்டு, வேலிகள் பயிரை மேயும் நிலை இருக்காமல், தங்கள் எல்லையில் நிற்பதே சிறந்தது!

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

 கி. வீரமணி
தலைவர்,       திராவிடர் கழகம்

சென்னை
16-11-2017

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...