Thursday, November 16, 2017

பசுவின் பெயரால் படுகொலை - 238

ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்பண்ணை அதிபர், பசுப் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரகா என்ற பகுதியில் உள்ள ரயில்பாதை ஒன்றில் 32 வயது இஸ்லாமியர் ஒருவரின் உடல் கிடைத்துள்ளது. முதலில் ரயில் விபத்தில் இறந்திருப்பார் என்று  காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலை யில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு வாகனத் தில்  6 பால் மாடுகள் நின்றுகொண்டு இருந்தது, தெரியவந்தது. மேலும் சாலை  ஓரத்தில் துப்பாக்கிக் குண்டுகாயத்துடன் ஒருவர் கிடந்துள்ளார்.

இது குறித்து கொலை செய்யப்பட்ட பால்பண்ணை அதிபர் உமர்கானின் (32) சொந்த ஊரான பரத்பூரில் விசாரித்த போது கடந்த 9 ஆம் தேதி பால் மாடுகளை மருத்துவப் பரி சோதனை செய்துவிட்டு மேலும் சில பால்மாடுகளை சந்தை யில் வாங்கிக்கொண்டு அவரும் அவரது உறவினர் தாகிர் கான் மற்றும் ஓட்டுநர் ஜாவேத்கானும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 11 ஆம் தேதி காலைவரை எங்களுக்கு அவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை, இப்போது அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல் துறையினர் கூறுகின்றனர் என்று கொலை செய்யப்பட்ட உமர்கானின் உறவினர்கள் கூறினார்கள்.

உள்ளூர் மக்கள் மற்றும் உமர்கான் உடல் கிடைத்த ராம்கிரகா கிராம மக்களின் அழுத்தம் காரணமாக உமர்கான் வழக்கை,  அடையாளம் தெரியாத நபர்கள்மீது கொலை வழக்காக  மாற்றிப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குண்டுகாயம்பட்ட தாகிர்கான், அரியானா மாநிலத்தில் உள்ள பிரோஸ்பூரில் தனியார் மருத்துமனையில் சேர்க்கப் பட்டார். மயக்கம் தெளிந்த நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் ‘‘நாங்கள் பால்பண்ணை நடத்துகிறோம்; எங்கள் ஊரில் அனைவருமே பால்பண்ணை நடத்துபவர் கள்தான்.  நாங்கள் அவ்வப்போது மாட்டிற்கு சிகிச்சை அளிக்கவும், புதிய மாடுகள் வாங்கவும் சந்தைக்குச் சென்று வருவோம். கடந்த 10 ஆம் தேதி, நானும் எனது உறவினர் உமர்கானும், வண்டி ஓட்டுநர் ஜாவேத்கானும்  அரியானாவில் உள்ள மாட்டுச் சந்தைக்குச் சென்று மாடுகளை வாங்கிக் கொண்டு வந்தோம். வரும் வழியில் சிலர் எங்களை வழி மறித்து  கேள்வி எதுவும் கேட்காமல் தாக்க ஆரம்பித்தனர்.

இதில், முதலில் என்னை துப்பாக்கியால் சுட்டனர். எனது தோளில் குண்டுபட்டு மயக்கமடைந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார். எனது உறவினரும், மாடுகளை ஏற்றிவந்த டிரக் ஓட்டுநருமான ஜாவேத்கான் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்றார்.

இது தொடர்பாக  அல்வர் மாவட்ட காவல்துறை ஆணை யர் ராகுல் பிரகாஷ் கூறும்போது,

உமர்கான் உடல் கிடைத்த சில கிலோ மீட்டர் தூரத்தில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த டிரக் ஒன்றைக் கண்டு பிடித்தோம், அதில் 5 மாடுகள் இருந்தன. அதில் ஒருமாடு இறந்துவிட்டது; மற்றவை மாவட்ட கால்நடைத்துறை அதி காரிகளிடம் ஒப்படைத்துள்ளோம் என்று கூறினார்.

இது தொடர்பாக உமர்கானின் உறவினர்கள் கூறும்போது, காவல்துறையினருக்குத் தெரியாமல் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. காவல்துறை வேண்டுமென்றே கொலைகாரர்களுக்குத் துணைபோகிறது. இது தொடர்பாக நாங்கள் மாவட்டத் தலைநகரில் போராட்டம் நடத்தவிருக் கிறோம் என்று கூறினார்கள்.

உமர்கானின் உறவினர் சேர்முகமது என்பவர் கூறும் போது, ‘‘நாங்கள் மோசே என்ற பிரிவைச் சார்ந்தவர்கள், நாங்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் பசுவை எங்களின் வீட்டில் உள்ள ஒரு நபராகவே மதித்து வருகிறோம். எங்களு டைய முக்கிய தொழிலே பால் விற்பனைதான். இங்குள்ள பலருக்கு நாங்கள் இங்கே சுயமாக சம்பாதித்து வாழ்வது பிடிக்கவில்லை. இதனால் பசுப் பாதுகாவலர்களைத் தூண்டி விட்டு எங்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். இதனால் நாங்கள் உயிருக்குப் பயந்து பால் விற்பனைத் தொழிலை விட்டுவிடுவோம்'' என்று நினைக்கிறார்கள் என்றார்.

இதே ஊரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் பகலூகான் என்பவரை பசுப்பாதுகாவலர்கள் ஆக்ரா - ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் முன்பாகவே அடித்துக் கொலை செய்தனர். இந்த காட்சிகளை சிலர் கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

பகலூகானின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் ராஜஸ்தான் மாநில காவல்துறை, விடுதலை செய்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் அதே ஊரைச்சேர்ந்த உமர்கான் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மற்றொரு உறவினர் என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உபி மாநிலத்தில் முகமது அக்லாக் என்பவரை கொலைசெய்தது முதல் இன்றுவரை 238 பேர் பசுப் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு கொலைகள் நடந்தும் பசுப் பாதுகாவலர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை, அப்படியே சிலர் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் சில நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிச ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பதற்கு வேறு என்ன சாட்சியம் தேவை?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...