Thursday, November 2, 2017

‘‘உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும்'' என்ற நெருக்கடியில் மோடி?

நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய நிலை

‘‘உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும்'' என்ற நெருக்கடியில் மோடி?

சிவகாசியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்



சிவகாசி, நவ.1 ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும் என்ற நிலையில் தவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிவகாசிக்கு  (30.10.2017) அன்று வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழர் தலைவர்: தந்தை பெரியார் அவர்களுடைய நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் அவர்கள் தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தபோது,  சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் அதன்மூலம் ஜாதி, தீண்டாமை ஒழிவதற்கு அதுதான் சரியான வாய்ப்புக் கருதி தந்தை பெரியார் அவர்கள் இறுதிவரை போராட்டத்தில் இறங்கி னார்கள்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம்

திமுக ஆட்சியிலே சட்டமும் கொண்டு வந்து கலைஞர் அவர் கள் நிறைவேற்றி, அந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றமும் தெளிவாக  சொல்லிவிட்ட சூழ்நிலையிலே,

நமக்குப் பின்னால் வந்த கேரள அரசு அதை நடைமுறைப்படுத்தி, ஆதிதிராவிடர்கள் அர்ச்சகர் ஆகக்கூடிய அளவுக்கு தேவசம் போர்டு அங்கே ஏற்பாடு செய்துவிட்ட சூழ்நிலையிலே,

இன்றைக்கு இருக்கின்ற அதிமுக அரசு, ஏற்கெனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சட்டமன்றத்திலேயே நீதிமன்ற வழக்கு முடிந்த உடனேயே அல்லது தெளிவுபடுத்தப்பட்ட உடனேயே  நாங்கள் நிச்சயமாக இதை நடைமுறைப்படுத்துவோம், அர்ச்சகர்கள் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். உறுதிமொழியும் தந்தனர்.

எனவே, சட்டமன்றத்திலே ஒரு முதலமைச்சரால் அல்ல, இரண்டு முதலமைச்சர்களால் உறுதிமொழி கொடுத்து, அதே கட்சி ஆட்சி தொடருகின்ற இந்தக் காலகட்டத்திலே, எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலே இருக்கக்கூடிய இந்த ஆட்சி, இனிமேலும் தாமதிக்காமல், ஏற்கெனவே, ஆகமங்களில் பயிற்சி பெற்ற 206பேர் தயாராக இருக்கிறார்கள், அனைத்து ஜாதியிலிருந்தும் 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள்.

ஆகவே, உடனடியாக அவர்களை அர்ச்சகர்களாக கோயில்களிலே நியமனம் செய்ய வேண்டும்.

பயிற்சி இல்லாதவர்கள் இப்பொழுது இருக்கிறார்கள்

அர்ச்சகர் பயிற்சியே இல்லாதவர்கள் இப்பொழுது பெரிய பெரிய கோயில்களிலே அர்ச்சனை செய்துகொண்டிருப்பது சட்ட விரோதம், மத விரோதம், நியாய விரோதம் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவே கொடுத்திருக்கிறது. எனவேதான், இனிமேலும் தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் திராவிடர் கழகத்தின் சார்பிலே.

1957 இல் போராட்டம்

வருகிற நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு நாள். ஜாதியைப் பாதுகாக்கின்ற அரசமைப்புச் சட்டத் தாளைக் கொளுத்துவேன் என்று தந்தைபெரியார் வாழ்ந்த காலத்திலே 1957இலே அவர்கள் தம்முடைய தோழர்களை வைத்து, அதன் நகலைக் கொளுத்தி, ஆறு மாதம் முதற்கொண்டு மூன்று ஆண்டுகள் வரை சிறைச் சாலைக்குப்போய், 18 பேர் சிறைச்சாலையிலும், வெளியிலும் மரணத்தைத் தழுவினார்கள். அப்போராட்டத்துக்கு இப்பொழுது 60 ஆண்டுகள் நிறைகிறது.

இந்த 60 ஆண்டுகளும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இதைச் செய்வதற்கு இதுதான் சரியான தருணம். பக்கத்திலே கேரளாவிலே அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

உச்சநீதிமன்றத்திலே இருந்த வழக்கு, இந்த சட்டம் திமுக கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று கூறி, மதுரை அர்ச்சகர்கள் மற்றவர்கள் போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது  நீதி மன்றம்.

ஆகவே, இப்பொழுது எந்தத் தடையுமில்லை. முன்னாலே ஆரம்பித்தவர்கள் நாம்; இன்னும் செய்யவில்லை. பின்னாலே வந்த கேரளா இதைச் செய்து பரிசைத் தட்டிக்கொண்டு விட்டது; முயல், ஆமை கதை மாதிரி இது இருக்கிறது.

ஆகவே, மேலும் தாமதிக்காமல், உடனடியாக இதைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து கட்சி தோழர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் அத்துணைப் பேரையும், பாஜக, அதிமுக தவிர மற்ற அத்துணைக் கட்சிக்காரர்களும் கலந்துகொள்ளக்கூடிய ஒரு மாபெரும் மாநாடு சென்னையில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் அத்துணைக் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதிலே தெளிவாக அரசாங்கத்திற்கு இதைச் செய்ய வேண்டும் என்றும், இல்லையானால், சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும் அறி விக்கப் போகிறோம்.

கேரளா முந்திக்கொண்டது

செய்தியாளர்: கேரளா முந்திக்கொண்டது. தமிழகம் பிந்தியிருக்கிறது. இப்படி ஒரு சுணக்கம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?

தமிழர் தலைவர்: காரணத்தை நீங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உங்களை சந்தித்தால் கேட்கலாம்.

செய்தியாளர்: அரசியல்தான் காரணமா...?

தமிழர் தலைவர்: அரசியல் காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். ஏனென்றால், ஒருவேளை மோடி இன்னும் இதற்கு கிளியரன்ஸ் கொடுக்கவில்லை என்று நினைக்கிறாரோ என்று தெரியவில்லை. மோடியிடம் அடுத்த தடவை போகும்போது, அவரோ அல்லது துணை முதல்வர்தான் அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப் பைப் பெற்றிருக்கிறார் இவரைவிட. அவர்மூலமாக கேட்டு சீக்கிரம் அதற்கு என்ஓசி வாங்கி, கிளியரன்ஸ், பச்சைக்கொடி காட்டச் செய்யவேண்டும். எல்லாவற்றி லும், தேர்தல் சின்னம் உள்பட, மோடி பார்த்துக்கொள்வார் என்கிறார்கள். அப்ப, இதற்கும் கூட மோடிகிட்டே கேட்டிருக்கிறோம், பதில் வரவில்லை என்று ஒருவேளை சொல்கிறார்களோ என்று தெரியாது. இல்லையில்லை வீரமணி சொல்வது தப்பு, அதெல்லாம் இல்லை நாங்கள் சுதந்திரமாக நடத்துகிறோம் என்று, அப்படி செய்தாலும் நாங்கள் வரவேற்போம், பாராட்டுவோம்.

பா.ஜ.க. வழிகாட்டுதல்படி தமிழக ஆட்சி

செய்தியாளர்: பாஜக வழிகாட்டுதல்படிதான் தமிழக அரசு உள்ளதா?

தமிழர் தலைவர்: உங்கள் ஊர் அமைச்சர், உங்கள் பகுதி அமைச்சர்தான் சொல்லியிருக்கிறார். நான் சொல்லவில்லை. இது பற்றி அமைச்சரே சொல்லியிருக்கிறார். அதற்கு முன்னாலே சாய்பாபாவைப்பார்த்து நாமிருக்க பயமேன் என்று கேட்டார். இப்போது அவர் (மோடி) இருக்க பயமேன் என்கிறார்கள் அவ்வளவுதான்.

அரசியல் வெற்றிடமா?

செய்தியாளர்: ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறதே, அதுபற்றி...?

தமிழர் தலைவர்: வெற்றிடம் இல்லீங்களே, அந்த இடத்திலேதான் உட்கார்ந்திருக்கிறார்களே, அந்த அம்மா மறைந்தும் விட்டார்கள், இப்போது மண்டபம் கூட கட்டுகிறார்கள். வெற்றிடமே இல்லையே அங்கே. முழு இடமும் அடைக்காமல் நல்ல அளவுக்குப் புதைத்த இடத்தில்கூட மண்டபம் கட்டப் போகிறார்கள். அதனாலே வெற்றிடமே கிடையாது.

வெற்றிடம் என்று சொல்லிக்கொண்டு, சில பேர் Ôமிஸ்டு கால்Õ கட்சிக்காரர்கள் உள்ளே நுழையலாம் என்று பார்க்கிறார்கள். சொந்தக்கால் வருகின்ற வரை யிலும் அவர்களால் உள்ளே நுழைய முடியாது. Ôமிஸ்டு காலைÕயும் நம்ப முடியாது.

கமலும், ரஜினியும்

செய்தியாளர்: ரஜினி, கமல் போன்றவர்கள் இப் பொழுது அரசியலில் வருவதற்கு முயற்சி செய்துவரு கிறார்களே...?

தமிழர் தலைவர்: அதுபற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசமைப்புச் சட்டத்திலே உரிமை உண்டு. எப்படி என்றால், மூன்றே மூன்று தகுதிகள்தான். ஒன்று 25 வயது ஆகவேண்டும். இன்னொன்று இன்சால்வண்ட் ஆக இல்லாமல் இருக்க வேண்டும். மூன்றாவது பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது. இந்த மூன்றும் இருக்கக்கூடியவர்கள் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இரண்டாவது பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டுமானாலும், தொழிற் சாலை ஆரம்பிக்க வேண்டுமானாலும் லைசன்ஸ் வாங்க வேண்டும்.

கட்சி ஆரம்பிப்பது ரொம்ப சுலபம் நம்ம நாட்டிலே.  அதற்கு லைசன்ஸ், பெர்மிஷன் யாரிடமும் வாங்க வேண்டியதில்லை நம்ம நாட்டிலே. குறைந்தபட்சம் ஒருத்தர் இருந்தாலே கட்சி ஆரம்பிக்கலாம். இரண்டு பேர்கூட தேவையில்லை.

கொள்கையைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கொள்கையை பின்னாலே பார்த்துக்கொள்ள லாம், கட்சியை முன்னாலே சொல்லலாம் என்றெல்லாம் பலபேர் வருகிறார்கள். அதுமாதிரி சினிமாக்காரர்கள் நேரடியாக வந்து உட்கார்ந்துகொள்வோம் என்று சொல்லும்போதும் எங்கள் கருத்தைச் சொல்லியிருக் கிறோம்.

சினிமாக்காரர்கள் வரக்கூடாதா?

சினிமாக்காரர்கள் வரலாம், என்ன தியாகம் செய்தி ருக்கிறார்கள்? மக்களுக்காக என்ன போராடினார்கள்? என்பதையெல்லாம் செய்து முடித்துவிட்டு அதற்கப்புறம் வரட்டும். மக்களிடம் சொல்லட்டும். என்ன கொள்கை யோடு நாங்கள் வருகிறோம் என்று சொல்லட்டும். வந்தால் சொல்லலாம் என்றோம். சில பேர் முதலில் வந்தார்கள்.   ரொம்ப முன்னாலே போனவர்கள் கொஞ் சம் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலே போகிறார்கள் சில பேர். பின்னாலே என்ன என்று பார்க்கலாம்.

செய்தியாளர்: வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு எப்படி இருக்கும், நடிகர்கள் வந்தால் ஜெயிக்கலாம் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: முதலில் அவர்களின் சொந்தக்காரர் களைக் கேட்கட்டும். வெற்றி வாய்ப்பு எவ்வளவு என்று அவர்களின் சொந்தக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கட்டும். அல்லது பாரதிராஜா மாதிரி இருப்ப வர்களைக் கேட்கட்டும். அவர்கள் என்ன சொல்கி றார்கள் என்று கேட்கட்டும். எங்களைவிட அவர்கள் தான் ரொம்ப நெருக்கமானவர்கள்.

தமிழக அரசு நீடிக்குமா?

செய்தியாளர்: எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து நீடிக்குமா?

தமிழர் தலைவர்: டெங்கு தீருமா? என்று கேட்பது மாதிரி இருக்கிறது. பொதுவான தத்துவம் என்ன என்றால், இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பார் என்று எண்ணவோ திடமில்லை என்று முதலில் தத்துவ வேதாந்திகள் சொன்னார்கள். இந்த அரசு எவ்வளவு தூரம் என்பதில், அவர்களே சொல்லியிருக்கிறார்களே, மோடி தயவிலே நாங்கள் இருக்கிறோம் என்று; மோடி எவ்வளவு நாளைக்கு இருக்க வேண்டும், இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவ்வளவு காலத்துக்கு இருக்கும். மெஜாரிட்டியாக இருந்தாலும் சரி, மைனாரிட்டியாக இருந்தாலும் சரி, பாதி பேர் வெளியே போய்விட்டாலும் சரி, அவர் நினைத்தார் என்றால், அவரின்றி ஓர் அணுவும் அசையாது அப்படி என்று சொல்லக்கூடிய அளவிலே வந்துவிட்டார்கள் இவர்கள். ஆகவே, அதைப்பொறுத்துதான் இருக்கிறது. இவர்கள் ஜமக்காளத்து நிழலில் நின்று கொண்டிருக் கிறார்கள். ஜமக்காளத்தை எப்போது இழுக்கிறது என்கிற கை டில்லியிலே இருக்கிறது.

செய்தியாளர்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கிலே நீதிமன்றத் தின் நிலை என்னவாக இருக்கும்?

தமிழர் தலைவர்: வழக்கு நீதிமன்றத்தில். நீதிமன்றத் தீர்ப்புக்கு யூகங்கள் எல்லாம் சொல்லக்கூடாது. வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி பேசுவதே சரியல்ல. இரண்டாவது, நீதிமன்றத் தீர்ப்பை யூகத்திலே எனக்கு வரும், உனக்கு வரும் என்று சொல்லவே முடியாது. சொல்லக்கூடாது. நான் வழக்கறிஞன், சட்டம் தெரிந்த வன். ஒரு வேளை சட்டம் படிக்கவில்லை என்றால், எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் சட்டமும் படித்தவன் என்பதாலே சொல்வதற்கு தயக்கம். நீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருப்போம்.

பெரியார் மண்ணில் பா.ஜ.க.வா?

செய்தியாளர்: பெரியார் மண்ணில் பாஜக கால் பதிப்பதற்கு இவ்வளவு துடிக்கிற அளவுக்கு நாம் விட்டுவைத்ததுதான் காரணமா?

தமிழர் தலைவர்: இல்லை, இல்லை. காரணம் என்ன வென்றால், திராவிட இயக்கத்தில் கொஞ்சம் ஊடுருவல் நடந்ததாலே வந்ததாலே வந்த கோளாறு. வேறு ஒன்றுமில்லை.

செய்தியாளர்: என்ன ஊடுருவல்?

தமிழர் தலைவர்: ஊடுருவல் உங்களுக்கே தெரிந்தது தான்.

உடும்பு வேண்டாம் - கைவந்தாலே போதும்!

செய்தியாளர்: நவம்பர் 8 அன்று கருப்பு நாளாக கடைப்பிடிப்பதாக கூறியுள்ளார்களே?

தமிழர் தலைவர்: அது எல்லாருக்குமே தெளிவாக தெரிந்ததுதானே. இந்த பண மதிப்பிழப்பு என்பதாலே, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று சொன்னார்கள். பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. தளர்ச்சி ஏற்படும் என்று மன்மோகன்சிங் அவர்கள் தெளிவாக நாடாளுமன்றத்திலேயே சொன்னார். இன்றைக்கு அவர் சொன்னபடி, ஏழாக இருந்தது ஆறாக குறைந்து, 5.7 ஆக ஆகிவிட்டது. வேலை வாய்ப்புகள் புதிதாக ஏதுமில்லை. ஏற்றுமதிகள் இல்லை. போதாததற்கு எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது மாதிரி, ஜி.எஸ்.டி என்று உள்ளே நுழைந்து, வியாபாரிகள் எல்லாம் தங்கள் நிலைகளைப் பற்றி பரிதாபப்படக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். இப்போது உடும்பு வேண்டாம், கை வந்தால் போதும் என்கிற நிலைக்கு மோடி அரசு உள்ளது.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...