Saturday, October 24, 2015

இலங்கைக்குத் தொடர்பே இல்லாத பன்னாட்டு விசாரணை நீதிமன்றமே தேவை! தவறுகளைத் திருத்திக் கொண்டு இந்திய அரசும் சிந்திக்கட்டும்!



போர்க் குற்றம் நடைபெற்றது உண்மைதான் என்பது உறுதியாகி விட்டது
இந்நிலையில் இலங்கைக்குத் தொடர்பே இல்லாத பன்னாட்டு விசாரணை  நீதிமன்றமே தேவை!
தவறுகளைத் திருத்திக் கொண்டு இந்திய அரசும் சிந்திக்கட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வரலாறுகளை வரிசைப்படுத்தியுள்ள அரிய  அறிக்கை

இலங்கை அரசிடம் இப்பொழுது அளிக்கப்பட்ட அறிக்கை மட்டுமல்ல; இதற்குமுன் அளிக்கப்பட்ட அறிக்கைகளிலும் போர்க் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசுக்குச் சம்பந்தமே  இல்லாத பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட விசாரணை நீதிமன்றம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2013ஆம் ஆண்டில் இலங்கைத் தீவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவால் அமைக்கப் பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவின் அறிக்கை இப்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ளது (21.10.2015). 178 பக்கங்களைக் கொண்ட குழுவின் அறிக்கை அதுவும் ஈழத் தமிழர்ப் படுகொலைக்குக் காரண கர்த்தாவாக இருந்த கொடூரன் ராஜபக்சேவாலேயே அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ள உண்மைகள்  - எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
இதற்குமுன் வெளிவந்த குழுக்களின்  அறிக்கை என்ன சொல்லுகின்றன? இந்தக் குழு மட்டுமல்ல, இதற்கு முன் அய்.நா.வால் அமைக்கப்பட்ட குழு, மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, ஜெபர்ட் ராம் அல் உசேன் விசாரணை அறிக்கைகளையும் ஒரு சேரப் பார்க்கும் பொழுதுதான் இலங்கையில் நடைபெற்றது - இனப்படுகொலையே என்பதை இதுவரை நம்பாதவர்களின் கண்களையும் திறக்கச் செய்யும்.
பின்லாந்து நாட்டைச் சோந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டிசாரி,
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட்,
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  மனித உரிமைக் கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரைக் கொண்ட -
அய்.நா.வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட  மூவர் குழு அளித்துள்ள அறிக்கை என்ன சொல்லுகிறது?
1. இறுதிகட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு தரப்பின் ஷெல் தாக்குதலின் காரண மாக உயிரிழந்தனர்.
2.  மருத்துவமனைகள் மற்றும் அய்.நா.வின் மய்யங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 3. சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டார்கள்;  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.  4. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக கருதப்படலாம்.  நவநீதம் பிள்ளை அறிக்கை (25.2.2014)
இலங்கையில் நடந்த மனித உரிமைமீறல் தொடர்பில் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை  வெளியிட்ட 18  பக்கங்கள் அறிக்கை என்ன கூறுகிறது?
1. சுதந்திரமான விசாரணை நடைபெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தவறிவிட்டது.
2. பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
3. சிறுபான்மை இனப்பிரிவினர், ஊடகம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல் களுக்குப் பொறுப்பேற்க  வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். .
4. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் உட்பட சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய சுய அதிகாரம் கொண்ட குழு விசாரணையை நடத்த வேண்டும்..
5. இராணுவத் தலையீடுகள் இன்றி சிவில் செயற்பாடுகள் இடம்பெறுவதை  உறுதிப்படுத்தவேண்டும்.
6. யுத்த வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களும் கொண்டாடவேண்டும் என்று அரசின் செயற்பாடு மிகவும் மோசமானது.
7. மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை  முற்றாக நிராகரித்துள்ளது.
8.  மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் பூர்வாங்க அறிக்கையின் சிபாரிசுகளில் பெரும்பாலானவை  நடைமுறைப்படுத்தப்படவில்லை. அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் விசாரணை அறிக்கை (2014 செப்டம்பர்) அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கியது (2015).
இந்தக் தொடரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் . 300 பக்க விசா ரணை அறிக்கையை சமர்ப்பித்தார் அதில் கூறியுள்ளதாவது:
1. சிறுபான்மை தமிழ் மக்கள், தன்னார்வத் தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலதரப்பினரும் பரவலாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி போல் சரணடைந்த விடுதலைப் புலிகள் ஏராளமானவர்களை தூக்கிலிட்டுக் கொன்றுள்ளனர். மேலும், பொதுமக்களை இலங்கை ராணுவத்தினர் சித்ரவதைக்கு ஆளாக்கி உள்ளனர். பாதுகாக் கப்பட்ட பகுதி களில் இருந்தவர்களையும் குண்டுகள் வீசிக் கொன் றுள்ளனர். போர் முடிந்த பின்னர்தான் ராணுவத்தினர் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
2. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்தால், அதிக கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.
3. இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபேது, 115 சதுர மைல் அளவுக்கு காட்டுப் பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்தப் பகுதியில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக்கொண்டனர். தாக்குதல் நடத்தக் கூடாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், தன்னார்வத் தொண்டு நிறுவன முகாம்கள் மீதெல்லாம் ராணுவத்தினர் குண்டுகள் வீசியுள்ளனர். இவை எல்லாம் சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல்களாகும். 4. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி முறைகளில் அடிப்படை சீர்திருத்தம் ஏற்படுத்த மிகப்பெரிய அளவில் நடவடிக்கை தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றை இலங்கை அரசு சொல்வது போல உள்நாட்டு விசாரணை அமைப்பால் விசாரித்து நீதியை நிலைநாட்டுவது இயலாது. எனவே, சர்வதேச விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அமைப்பது அவசியம். மேற்கண்ட அறிக்கைகளோடு, இப்பொழுது இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை யும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அறிக்கை என்ன கூறுகிறது?
1. இலங்கை இறுதி யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை மட்டுமின்றி, 37 ஆண்டுகால போரின் போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2. இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். - மூத்த ராணுவ தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
3. போர்க் குற்றங்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் உண்மையானவை.
4. இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட் டோர் சரணடைந்த போது அவர்களை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
5. இலங்கை ராணுவத்தின் விசாரணை கள் நம்பகமானதாக இருக்காது. சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட குழு விசாரிக்க வேண்டும். 6. இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு காணாமல் போனோர் குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும்.  நடந்தது இனப்படுகொலையே!
மேற்கண்ட அனைத்து அறிக்கைகளி லிருந்தும் உணரப்படுவது என்ன?
ஈழத் தமிழர்களை இலங்கை அரசு இராணுவத்தைப் பயன்படுத்தி திட்ட மிட்டுக் கொன்று குவித்துள்ளது - நடந்தது இனப்படுகொலை தான் என்று இதுவரை ஏற்காதவர்கள் இப்பொழுதாவது  ஏற்றுக் கொள்ள வேண்டும்.  ஈழத் தமிழர் பிரச்சினைமீது மண்ணை வாரி இறைத்த உள்நாட்டு, வெளிநாட்டுப் பிற்போக்குக் கும்பல், ஊடகங்கள் இதற்குப் பிறகாவது உண்மையின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும் - நடந்துகொள்ளவும் வேண்டும்.
இலங்கையில் நடைபெறுவது இனப் படுகொலையே என்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் சொல்லியுள்ளார். ராஜீவ் காந்தியும் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் செயல் பாடுகளும் - இலங்கை அரசின் நடவடிக்கைகளும் ஒன்றல்ல!
விடுதலைப்புலிகள் பற்றி அறிக்கை சொல்லவில்லையா என்று கேட்கலாம் இலங்கை அரசு. அதன் இராணுவம் இவற் றின் செயல்பாட்டையும் - விடுதலைப்புலி களின் செயல்பாட்டையும் சமதளத்தில்  வைத்துப் பார்க்க முடியாது - கூடாது! அரச பயங்கரவாதத்திற்கான எதிர் வினையே அது!
விடுதலைப்புலிகள் என்ற அமைப் பின் பிறப்புக்கே காரணம் - சிங்கள வெறி ஆதி பத்தியம்தான் என்பதை மறுக்க முடியாது - கூடாது. எந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஆயுதம் தூக்க நேர்ந்தது என்பதுதான் முக்கியம். எனவே ஒரு நாட்டின் விடுதலை உணர்வும், அதனை அடக்க அரசுப் பயங்கரவாத நடவடிக் கையும் ஒன்றல்ல.
விடுதலைப்புலிகள் எங்கே உள்ளனர்?
மேலும் இப்பொழுது எந்த விடுதலைப் புலிகள்மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம்? இந்தியா உட்பட பல நாட்டு இராணுவங்களின் துணையோடு விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்து விட்ட பிறகு - யார் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம்?
அடுத்து மேற்கொள்ளப்பட  வேண்டிய நடவடிக்கைகள் யாவை?
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் கவனிக்கத் தக்கவை ஆகும்,
பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அது கண்டிப்பாக இலங்கை அரசியல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு, அவ்வரசின் கண்காணிப்போடு நடத்தப் பட வேண்டும் என்பது - இதுவரை பல அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் கண்டுள்ளவைகளை காலில் போட்டு மிதித்துத் துவம்சம் செய்வதாகும்.
இலங்கையில் உள்ள சிறீசேனா அரசு இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்ளும் என்பது வெளிப்படை
யார் இந்த சிறீசேனா?
இனப்படுகொலை அங்கு நடந்த போது இலங்கையின் இராணுவ அமைச்ச ராக இருந்தவர்தான் இன்றைய அதிபர்.
மேலும் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் - நீர்த்துப் போகச் செய்யப்படுவதற்கு இலங்கை அரசின் கடும் முயற்சியை உணர்ந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் போகாது.
இந்த நிலையில் இலங்கை அரசுடன் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத பன்னாட்டு சுயேச்சைத் தன்மை கொண்ட  நீதி விசாரணை நடப்பதுதான் நியாயமும், நீதியும், மனித உரிமையும், மனிதநேயமும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.
இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்?
இந்திய அரசுகள் இதுவரை எத்தனை எத்தனையோ - ஈழத் தமிழர் பிரச்சனை - தவறுகளை செய்துள்ளன. பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இந்தி யாவின் ரத்தம் தோய்ந்த கைகள் இருக் கின்றன.
இவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தம் - கழுவாய் இலங்கை அரசு தலையிடாத சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசு சார்பாக திட்டவட்டமாக அய்.நா.வுக்கும், உலக நாடுகளுக்கும் பிரகடனப்படுத்த வேண் டும் என்று கோடானு கோடி உலகத் தமிழர்கள் சார்பாக மட்டுமல்ல  - மனித  உரிமை, மனித நேயர்களின் சார்பாகவும் வைக்கப்படுகிற வேண்டுகோளும் ஆகும்.
இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? பார்ப்போம்!
உலகத் தமிழர்களும் உன்னிப்புடன் உள்ளார்கள்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
23-10-2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...