குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் சிறுபான்மை மக்களை வேட்டையாடினார் என்பதை தெகல்கா புலனாய்வு நிறுவனம் பிஜேபி, விசுவ ஹிந்து பரிஷத் போன்ற மோடியின் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்களிடத்திலேயே பேட்டி கண்டது - வீடியோக்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.
விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த தலைவர் ராஜேந்திர வியாஸ் கூறுகிறார்:
முதல் அமைச்சர் மோடி காவல்துறையை எங்களுக் காகப் பணிபுரிய வைத்தார் என்று கூறுகிறார்.
நீங்கள் ஜெய்ராம் என்று சொன்னால் காவல்துறை யினர் புரிந்து கொள்வார்கள் என்று சங்பரிவார்க்குக் கூறப்பட்டதாக தவால் ஜெய்ந்த் பட்டேல் (விசுவ ஹிந்து பரிஷத்) கூறியுள்ளார்.
பஜ்ரங்தள் எனும் அமைப்பைச் சேர்ந்த (பஜ்ரங்தள் என்றால் குரங்குப் பட்டாளம் என்று பொருள்) ஹரேஷ் பட்டேல் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
மூன்று நாள்களில் அனைத்தும் முடித்து விடுங்கள்; அதற்குமேல் கால அவகாசம் கேட்காதீர்கள் என்று முதலமைச்சர் நரேந்திரமோடி உத்தர விட்டார் என்று கூறியுள்ளாரே!
பாபு பஜ்ரங்கி என்னும் பிரபலமான பஜ்ரங்தள் முன்னணி தலைவர் என்ன சொல்லியியுள்ளார்? கோத்ரா கலவரங்கள் நடந்தபோது எல்லாவற்றையும் கச்சிதமாக முதல் அமைச்சர் மோடி முடிவு செய்து முடித்தார். முதல்வர் மோடியின் ஆசீர்வாதத்தால் இவ்வளவையும் செய்து முடிக்க முடிந்தது! என்றாரே!
குஜராத் கலவரம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு இன்னொரு முக்கிய எடுத்துக் காட்டு உண்டு.
மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அமெரிக்காவாழ் குற்றவாளியான பாகிஸ்தானியரான டேவிட் ஹெட்லிமீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜ்ராத் கலவர வீடியோ காட்சி என்னிடம் போட்டுக் காட்டப்பட்டது. அந்தக் காட்சிதான் என்னைப் பயங்கரவாதியாக ஆக்கியது என்று அமெரிக்காவில் சிகாகோ நீதிமன்றத்தில் கூறினார் என்றால் மோடி ஆட்சியின் கொடூர மனிதப் படுகொலைகளின் உக்கிரத்தை ஒரு கணம் எண்ணிப் பார்த்தாலே எளிதில் விளங்குமே!
குஜராத் இனப்படுகொலையில் ஒரு கொடூரம் குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.
வதோரா என்னும் நகரத்தில் பெஸ்ட் பேக்கரி என்னும் நிறுவனம் முஸ்லீம் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வந்தது. அந்தப் பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லா ஷேக் உட்பட 14 பேர்கள் விறகுக் கட்டைகளைப் போல் கட்டித் துடிக்கத் துடிக்க பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமையை எழுதுவதற்கே கைகள் நடுங்குகின்றனவே! அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் எப்படியோ தப்பிப் பிழைத்தார்; காவல் நிலையம் சென்று புகாரும் கொடுத்தார். வேறு வழியின்றி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்தார். மனித உரிமை அமைப்புகள் அழுத்தமாக எதிர்ப்புக் குரல் கொடுத்தன!
21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதிக்கு மோடி அரசு வெகுமதி கொடுக்காமல் இருக்குமா? குஜராத் மாநில மின்வாரியத்தில் ஆலோசகர் பதவி தூக்கிக் கொடுக்கப் பட்டது. மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், பங்களா, கார், தொலைப்பேசி வசதிகள், உதவியாளர்கள் இத்யாதி இத்யாதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. உழைப்புக்கேற்ற கூலி என்பது இதுதானோ!
மோடியைப் பொருத்தவரை, தான் நினைக்கும் எந்த கேவலமான காரியத்தையும் சாதிக்க எந்த மோசமான எல்லைக்கும் செல்லக் கூடிய மனிதாபிமானம் சிறிதுமற்ற பேர் வழி!
பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்கு உச்சநீதிமன்றத் திற்கும் கொண்டு செல்லப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி ராஜீவ் (தமிழ்நாட்டுக்காரர்), அரிஜித் பசாயத் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியை நீரோ மன்னன் என்று தீர்ப்பில் எழுதினார்களே!
மேலும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்த வரிகள் மோடி ஆட்சிக்குக் கொடுக்கப்பட்ட கேவலமான சூடுகள்!
சட்டத்தின் பார்வையில் இது விடுதலையே அல்ல; தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவையல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும் பொழுது, மகாத்மா மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும்படியான அளவுக்குச் சிலர் போய் விட்டார்களா? என்ற கேள்விதான் எழுகிறது
எந்தவிதப் பாதுகாப்புமற்ற தப்பான இடத்தில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானமாகும்
மனித நேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உருவாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர் களிடம் வற்றிப் போய் விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுதினார்களே - நியாயமாக நரேந்திர மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?
இந்த மோடி நீரோ மன்னன் தான் கொடுங்கோலன்தான், ரத்தவெறி பிடித்த ஆசாமிதான் இவர் இந்தியாவுக்குப் பிரதமராக வர வேண்டுமாம் - அனுமதிக்கலாமா? வெகு மக்கள் வீதிக்கு வந்து கண்டனக் குரலை எழுப்ப வேண்டாமா!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment