Friday, June 14, 2013

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (4)

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி எத்தகைய அருவருக்கத்தக்க மனப்பான்மை கொண்டவர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.
மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை காரணமாக 61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளை விட்டே ஓடும் நிலை! 70 ஆயிரம் சிறுபான்மை மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அடைக்கலம் புகுந்த கொடுமை! (ஒரு வகையில் ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலை நினைவுக்கு வந்தால் அது குற்றமல்ல!)
அந்தச் சூழலில் குஜராத் முதலமைச்சர் மோடி கவ்ரவ் யாத்திரை ஒன்றை நடத்தினார். அந்த யாத்திரையில் பொறுப்பான முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் மோடியின் திருவாய் மலர்ந்தது என்ன?
நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக்குப் பாடம் படித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசியது ஒரு முதலமைச்சர் என்பதை எண்ணிப் பார்த்து வெட்கப்படவேண்டும்.
பாபர் மசூதியை சங்பரிவார் கும்பல் ஒரு பட்டப் பகலில் இடித்தபோதுகூட இதே மோடி இந்தத் தரத்தில்தான் கருத்தினை உமிழ்ந்தார். பி.ஜே.பி. அலிகள் கட்சியல்ல; ஆண்கள் கட்சி! என்று சொன்னவர்தான் இந்தப் பெரிய மனிதர்(?).
மோடி ஆட்சியில் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) ஆர்.பி.ஸ்ரீகுமார் கூறியது கவனிக்கத்தக்க தாகும். மோடி மட்டும் முதலமைச்சராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம்கள்மீது வெடிகுண்டுகளை வீசி யிருப்பார் என்றாரே பார்க்கலாம்.
பி.ஜே.பி. கோத்ரா சட்டப்பேரவை உறுப்பினர் ஒன்றைச் சொன்னார், தெகல்காவிடம்: குஜராத்தில் பட்டாசுக் கடைகள் எல்லாம் வெடிகுண்டு கடைகளாக மாறிவிட்டன! ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரே இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிறகு வேறு என்ன ஆதாரம் தேவை?
மோடியின் பாசிச ராஜ்ஜியம் ஒரு பக்கம் இப்படி நடந்து கொண்டிருந்த நிலையில், சங் பரிவார்க் கும்பல் கையில் சட்டத்தை எடுத்துக் கொண்டு சதுராட்டம் போட்டன.
மக்களிடத்தில் கலவரத்தைத் தூண்டும் துண்டறிக் கைகளை வழங்கிக் கொண்டிருந்தன. அந்தத் துண் டறிக்கைகளின் வாசகங்களை அவுட்லுக் இதழ் வெளியிட்டது.
உங்கள் உயிருக்கு ஆபத்து! நீங்கள் எந்த இடத்திலும் கொல்லப்படலாம்; கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தினார். இந்துக்களுக்கு எதிரானவர் களை ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதே! என்று.
தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டுமானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பு அறையிலோ கொல்லுவார்கள். போலீசோ, இராணுவமோ உங்களைக் காப்பாற்றாது.
இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்று பேசுபவர்கள் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றபவர்கள். வந்தே மாதரம்! பாரத் மாதாக்கீ ஜே! என்று சொல்லாத மக்களை நீங்கள் எப்படி நம்புவது?
எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை நம்பாதவர்கள்; ஒரு நாள் அவர்கள் மெஜாரிட்டியாகிவிடக் கூடும் என்று இனப் படுகொலையை ஓர் அரசு திட்டமிட்ட வகையில் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் பெரும்பான்மையினரான இந்து மக்கள் மத்தியில் இத்தகைய வெறியூட்டும் துண்டறிக்கைகளை விநியோகம் செய்வார்களானால், அதன் விளைவு என்னாகும்? அதுதான் குஜராத்தில் நடந்தது!
குஜராத்தில் ஒரு கிராமத்துக்குள் நுழையும்போது, நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழைகிறீர்கள்! என்ற அறிவிப்புப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.
இன்றைக்குப் பிரதமருக்கான வேட்பாளர் என்றும், பி.ஜே.பி.யின் பிரச்சாரக் குழுவின் தலைவர் என்றும் நரேந்திர மோடி அறிவிக்கப்படுகிறாரே, அதே கோவா வைச் சம்பந்தப்படுத்திய முக்கிய தகவல் ஒன்றுண்டு.
என் நாடும், என் வாழ்க்கையும் என்று எல்.கே.அத்வானி நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்: குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி விலகவேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். அதற்கு நரேந்திரமோடி கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார் என்று அத்வானி அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். சொன்னபடி அவர் நடந்துகொள்ளவில்லையென்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த நிலையில், உள்ள ஒருவர்தான் அதே கோவாவில் நடைபெற்ற செயற்குழுவில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதச் சார்பின்மைக் கொள்கையைப் பறைசாற்றும் இந்தியாவிற்கு மோடிதான் பிரதமர் என்றால், அதைவிட தற்கொலை வேறு ஒன்று உண்டா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!


 
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...