நாட்டில் சட்டம் ஒழுங்கு வெகு நேர்த்தியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்படு கிறது; அவ்வப்பொழுது அரசு சார்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் அன்றாடம் நாட்டில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் வேறு எப்பொழுதும் கேள்விப்படாதவை - நடக் காதவை.
நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலை. ஆளுங் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுகிறார்கள் - இரவு நேரத்தில் மட்டுமல்ல; பட்டப் பகலிலேயே கொலைகள் பட்டவர்த்தனமாக நடைபெறத் தொடங்கி விட்டன.
ஏதோ குக்கிராமங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெரு நகரத்திலேயே குலை நடுங்கும் கொலைகள்.
காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமா?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரி மாவட் டத்தில் தொடங்கப்பட்ட - தாழ்த்தப்பட்டவர் களின் பகுதிகள் எரிப்பு என்பது இப்பொழுது மரக்காணம் வரை பரவி விட்டது.
அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் நிலைமையைச் சமாளித்து விட்டதான நெருப்புக் கோழி மனப்பான்மை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி விடாது.
மக்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் வன்முறையை நேரில் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள் - ஏடுகளிலும் படித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப்படாது.
வீட்டைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ள பொருள்கள், நகைகள் பணத்திற்கு உத்திரவாதம் கிடையவே கிடையாது.
வெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் ஓய்வும் எடுத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக, எந்தவிதப் பதற்றமுமின்றிப் பொருள்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி செல்லுகிறார்கள் என்றால் இவை எல்லாம் சினிமாவில் நடப்பதுபோல் தெரியவில்லையா?
காவல் நிலையம் அருகே படுகொலை என்றெல்லாம் செய்தி வருகிறது.
பட்டப்பகலில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் பறிக்கப்படுவது சர்வ சாதாரணம். தங்க நகை என்று நினைத்துப் பறித்துச் சென்றவன், அது போலி என்று தெரிந்து கொண்டபிறகு, அந்தப் பெண்ணிடம் திரும்பி வந்து ஓர் அறை அறைந்து விட்டுச் சென்றான் என்று எல்லாம் சேதி வருகிறதே - இது எங்கே கொண்டு போய் விடும்?
கொலைகாரர்களும், கொள்ளைக்காரர் களும் எளிதாக பிணை பெற்று வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக் கிறது. பிணையில் வெளிவந்த ஆளே வெட்டிக் கொல்லப்படும் செய்தியும் வருகின்றது.
இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - வாய்ச் சவடால் விடுவதற்கு; மக்களின் உயிருக்கும், உடைமைக்கு உத்தரவாதம் என்பது மிகவும் அடிப்படை உரிமைப் பிரச் சினை. இதனைச் செய்து கொடுக்க முடியா விட்டால் அரசாங்கம் இருப்பது என்பதற்கே பொருளில்லாமல் போய் விடும்.
மூல காரணத்தைக் கண்டு அறிவதில் அரசும், காவல்துறையும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.
தேவை வெறும் அறிக்கையல்ல - நடை முறையில் மாற்றம்தான்!
ஊடகங்கள் மவுனசாமியார் ஆகிவிட்டன என்ன பின்னணியோ! யார் அறிவார் பராபரமே!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- கடவுள் நம்பிக்கையற்ற காலம் மலரப் போகிறது!
- கடவுளும், மதமும் கடைத்தேறப் போவதில்லை
- கடவுள் நம்பிக்கை குறைகிறது
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: