Thursday, October 11, 2012

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து சரியானதே!:தமிழர் தலைவர் வரவேற்று- அறிக்கை


கோவில்கள் முக்கியமல்ல; கழிவறைதான் அவசியம்!
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து சரியானதே!

தமிழர் தலைவர் வரவேற்று- அறிக்கை

நாட்டுக்குத் தேவை நவீன கழிப்பறைகளே; கோவில்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூற்றை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
இந்நாட்டில் கோவில்களை உருவாக்குவதைவிட கழிப்பறைகள் (டாய்லெட்) அமைப்பது மிகவும் அவசியம் என்பது போன்ற ஒரு கருத்தைச் சொன்ன மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு உடனே பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி என்பவர் கண்டனம் தெரிவித்து, ஆகா இதன்மூலம் பக்தியும், மதமும் போய்விடும் என்று உளறிக் கொட்டி, அக்காவிக் கட்சியின் உண்மை நிறத்தை உலகறியச் செய்துள்ளார்! மதவெறி அரசியலின் வெளிப்பாடு அது!
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூற்று நடைமுறை உண்மை!
போக்குவரத்துக்கு இடையூறாகக் கோவில்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நாட்டில் எவ்வளவு நடை பாதைக் கோவில்கள் உள்ளன? இவை இடித்துத் தரைமட்டமாக்கப்பட வேண்டியவை என்பதை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப் பெற்றும், மாநில அரசுகள் (தமிழ்நாடு அரசு உள்பட - தமிழ்நாட்டில் இப்படி அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்கள் அதிகம் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக் காட்டியும் கூட) வேடிக்கை பார்த்து, கைகட்டி, வாய் பொத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காது நிற்கின்றன!
ஜெய்ராம் ரமேஷ் ஒன்றும் நாத்திகர் அல்லர்!
மத்திய அமைச்சர், மக்களின் நல்வாழ்வுக்கு வகை செய்ய, நாட்டில் கழிப்பறைகள் மிக இன்றி யமையாதவை என்று சுட்டிக்காட்டவே அப்படிக் கூறியுள்ளார்; அவர் ஒன்றும் நாத்திகர் அல்லர்.
கோவில்களை விபச்சார விடுதிகள் என்று காந்தியார் சொன்னாரே!
கோவில்கள் விபச்சார விடுதிகள் என்றார் தேசப் பிதா என்று அனைவராலும் அழைக்கப்படும் காந்தியார்! அப்போதும் துள்ளிக் குதித்தனர் சில பார்ப்பனர்கள். அவர் அந்த நிலையை உறுதி செய்தாரே தவிர, பின்வாங்கவில்லை. (ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி என்ற நூல்).
உலக வங்கியின் அறிக்கை ஒன்றில், கழிப்பறை வசதிபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது; சுகாதாரத்திற்கு கழிப்பறை வசதி மிகவும் இன்றியமையாதது; அதற் கென ஒரு பன்னாட்டு அமைப்பு உதவிட முன் வந்துள்ளது.
வருணாசிரமப் புத்தி
நமது மொத்த வருமானத்தில் 6.4 சதவிகித அளவில் சுகாதாரத் துறைக்கு சுமார் 24,000 கோடி ரூபாய்கள் செலவழித்தும் உரிய கழிப்பறை வசதி இல்லாததினால் பயனற்றவையாக  ஆகிவிட்டது என்பதை உலக வங்கி அறிக்கை சுட்டியுள்ளது!
உலகிலேயே இந்து மதம் பரவியுள்ள இங்குதான் வருணாசிரமவாதிகள், சாப்பிடும்போது தனிமையில் கதவைச் சாத்தி, பிறர் பார்த்தால் தீட்டு என்று சாப்பிடுவதும், மலங்கழிக்கும்போது திறந்தவெளி அரங்கில் சற்றும் வெட்கம் கூச்சநாச்சமின்றி உட்காருவதும் காட்டுமிராண்டித்தனம் அல்லவா!
நம் நாட்டு நவீனமயத்தில் கூட இதில் பலர் அக்கறை செலுத்திட முன்வராதது வேதனை.
செல்போன் உண்டு - கழிவறைகள் கிடையாது
நம் நாட்டில் 63.2 சதவிகித வீடுகளில் டெலிபோன் (செல்போன் இதில் 52.3 சதவிகிதம்) மேலும் வீட்டுக்கு வீடு டெலிவிஷன் செட்டுகள் உண்டு.
ஆனால், சுமார் 49.8 சதவிகித பகுதி வீடுகளில் கழிப்பறைகளே கிடையாது என்பது எவ்வளவு விசித்திரமான நிலை!
எனவே, 100 சதவிகித கழிப் பறைகளை கட்டவேண்டும் என்ற இலக்குக்கே முன்னுரிமை தர வேண் டும். பக்தி இல்லாவிட்டால் என்ன நட்டம்? சுகாதாரம் இல்லாவிட்டால் இப்படி நாள்தோறும் மனித ஆயுள் சுருங்கித் தீருமே! இதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
பூஜை அறைகளா முக்கியம்?
எனவே, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட் டாலும் சரி அந்தக் கூற்று உண்மையே! நடைபாதைக் கோவில்கள் முக்கியமல்ல; வீடுகளில் பூஜை அறைகள் முக்கியமல்ல; கழிப்பறைகளே முக்கியம். பின்னவை தான் மக்களை நோயிலிருந்து காப்பாற்றி வாழ வகை செய்யும். எனவே, மதத்தை வைத்து அரசியல் - வாக்கு வங்கி அரசியல் நடத்துவதைக் கண்டிக்கும் வகையில், அறிவு கொளுத்திய தந்தை பெரியாரின் தொலைநோக்குதான் என்னே!

சென்னை                                                                                                     கி. வீரமணி
10.10.2012                                                                                   தலைவர், திராவிடர் கழகம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...