Tuesday, October 2, 2012

காந்தியார் பிறந்த நாளில் சில முக்கிய சிந்தனைகள் - கி.வீரமணி


இன்று காந்தி அடிகளாரின் 144ஆவது பிறந்தநாள்.
ஒரு  தலைவரின் பிறந்த நாளைக் கொண் டாடுவோர் எவராயினும் அவர் போதித்த கொள்கை, லட்சியங்கள், நடைமுறைகள் பற்றி சிறிதாவது சிந்தித்துச் செயல்பட முனைவதே உண்மையாக அவருக்கு மற்றவர் காட்டும் மரியாதையாகும்.
ஆனால் நம் நாட்டில் தலைவர்கள் பலருக்கும் பிறந்த நாள் விழாக்களில் படத்திற்கு மாலை, சிலைகளுக்கு மாலை - அவர்கள் போதித்த சீலங்களுக்கு விடை கொடுக்கும் ஓலை! இதுதான் இன்றைய யதார்த்தம் - (வரலாற்றுக் குறிப்புக்காகச் செய்யப்பட வேண்டியதுதான்).
அதே நேரத்தில் படங்களுக்கு மாலையிடு வதைவிட அவர்களிடமிருந்து கற்ற பாடங்களைக் கொண்டொழுகுவது அல்லவா சிறந்த அறிவு நாணயம்?
காந்தியாரின் தொண்டராயிருந்த பெரியார்
தந்தை பெரியார் போன்ற காந்தியாரிடம் ஈர்க்கப்பட்ட தொண்டர் - வேறு எவரையும் காட்ட முடியாது 1920-களில்!
மதுவிலக்குக்காக 500 தென்னைகளை தன்தோப்பில் வெட்டி வீழ்த்தினார்.
ஒத்துழையாமை, மற்றும் கள்ளுக்கடை மறியலில் தனது குடும்பப் பெண்களையே ஈரோட்டில் தலைமை தாங்க வைத்தது! (இதனால் தான் அப்போது அப்போராட்டத்தை நிறுத்துவது ஈரோட்டில் இருந்த இரு பெண்மணிகளின் கைகளில் (நாகம்மையார், கண்ணம்மையார்) உள்ளது என்று பெருமிதம் பொங்கக் கூறினார் காந்தியார்)
தந்தை பெரியார் தம் கதர் பரப்பலுக்கும், நூற்றலுக்கும் பாராட்டு வழங்கி, பெரியார் தம் கைகள் வீங்கியதால் 6 மாதம் நூல் நூற்க வேண்டாம் என்று காந்தியாரேகூறி, விலக்கு அளித்துப் பெருமை செய்தார்!
கோர்ட் பகிஷ்காரமும் - பெரியாருக்கு இழப்பு ரூ.50 ஆயிரமும்
கோர்ட் பகிஷ்காரத்தின்போது, தனக்கு வர வேண்டிய ரூ.50 ஆயிரம் சிவில் பிராமிசரி நோட்டைப் புதுப்பிக்காது காலாவதி ஆனாலும் பரவாயில்லை என்று இழப்புக்கு ஆளானார் (நீங்கள் வசூலிக்காவிட்டாலும் பரவாயில்லை நாயக்கர் வாள்! எனக்கு Made Over செய்து கொடுங்கள், நான் வசூலித்துக் கொள்ளுகிறேன் என்று பிரபல வழக்குரைஞர் - காங்கிரஸ்காரர் சேலம் விஜயராகவ ஆச்சாரியார் அவர்கள் கூறியதையும் ஏற்காமல் மறுத்தவர் தந்தை பெரியார்.)
தனக்கு வர வேண்டிய வைக்கம் வெற்றியின் மரியாதையையும் தனது தலைவரான காந்தி ஜிக்கே கிடைக்கட்டும் என்று சற்று தள்ளியே நின்ற அடக்கத்தின் பேருருவம் அய்யா அவர்கள்.
தந்தை பெரியார் காங்கிரசை விட்டு காஞ்சீபுரம் மாநாட்டிலிருந்து வெளியேறிய பின்பும், பெங்களூருக்கு அழைத்து, மிகவும் நீண்ட நேரம் விவாதித்து மறு அழைப்புக் கொடுத்தவர் காந்தியார்!
மிகுந்த பணிவுடன் அதனை மறுத்தவர் தந்தை பெரியார்.
காங்கிரசிலிருந்தபோதே, பெரியாரின் பார்வை, பார்ப்பனர்கள் பக்கம் கூர்மையான தாகத்தான் இருந்து வந்தது!
காந்தியாரின் வருண நம்பிக்கை - பெரியாரின் மாறுபாடு
காந்தியார் தீண்டாமை ஒழிய வேண்டு மென்றார், ஆனால் வர்ணாசிரமத்தில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டவராயிருந்தார்.
தீண்டாமை ஒழிய தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி கிணறு, தனிக்கோயில், தனிப்பகுதி ஒதுக்குவதை பெரியார் கடுமையாக எதிர்த்தார். காங்கிரசிலேயே கருத்து வேறுபாடு அரும்பியது.
வைக்கம் போராட்டம் - பெரியாரும் - காந்தியாரும்
1924இல் வைக்கம் போராட்டத்திற்கு முதலில் காந்தியார் ஆதரிக்கவில்லை - கழுதையும், நாயும், பூனையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் நடமாடுகின்றபோது ஆறறிவு படைத்த மனிதனுக்கு நடமாட உரிமை இல்லையா? அவன் கீழ்ஜாதி - புலையன், தீயன், ஈழவன் என்ற காரணங்காட்டி அந்த மனித உரிமையை மறுக்கலாமா? அந்தப் பிராணிகள் என்ன சத்தியாகிரகம் செய்தா அவ்வுரிமைகளைப் பெற்றன? என்று கடுமையாக காந்திஜிக்குப் பெரியார் வைக்கத்திலிருந்து கடிதம் எழுதிய பிறகுதான் - எதிர்ப்பைத் தணித்தார் காந்தியார். (ஆதாரம்: பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் Gandhi & Vaikam Satyagraha - Book)
சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும்  -காந்தியாரின் நிலைப்பாடும்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் வ.வே.சு. அய்யரின் வர்ணாசிரம நடத்தையைக் கண்டித்து தந்தை பெரியார், திரு. வரதராஜூலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் தீர்மானம் போட்டபோது, சமரசம் செய்ய முனைந்த காந்தி யார் - சமையலுக்குப் பிராமணரை சமையல் காரராக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதை டாக்டர் பி. வரதராஜுலு, (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) கடுமையாக மறுத்தார். (ஆதாரம்: Hindu நூற்றாண்டு மலர்)
மதத்தினை அரசியலுக்குள் கலந்ததால்  காந்தியாரைவிட்டு விலகி கடுமையாக எதிர்த் தார் தந்தை பெரியார்.
1946-க்குப்பின் காந்தியாரின் சிந்தனை மாற்றம்
ஆனால் அதே காந்தியார் 1946முதல் பார்ப் பனீயத்தின் விஷமத்தை - விஷத்தை உணரத் தொடங்கினார்.
வகுப்புவாரி உரிமைபற்றி ஓமந்தூரார் குறித்து அவர் ஆட்சியைப்பற்றி காந்தியிடம் பார்ப்பனர்கள் மனு கொடுத்த நிலையில், அவர் முதலமைச்சர் ஓமந்தூராரிடம் கேட்க, அவர் தந்த புள்ளி விவரம் காந்தியாரின் அகக் கண்களையும், புறக் கண்களையும் திறந்தது!
பார்ப்பனர்களைக் கண்டித்தார்! வேதம் ஓதுதல் தானே வேதியர்க்கழகு? வர்ண தர்மத்தை ஆதரிக்கும் நீங்கள் (பார்ப்பனர்கள்) மெடிக்கல், இஞ்சினீயர் படிப்புக்கு ஏன் செல்ல வேண்டும் என்று பளிச்செனக் கேட்டார்!
மதத்தை அரசியலில் கலப்பதை விரும்ப மாட்டேன்; அரசாங்கம் வேறு - மதம் வேறு என்றார்!
இப்படிக் கூறியது 1947 இறுதியில். சொல்லிய ஒரு சில மாதத்திற்குள் காந்தியார் கோட்சே என்ற மராத்தியப் பார்ப்பனனால் (சதி நடத்தி - பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தபோது) சுட்டுக் கொல்லப்பட்டார்  - 30.1.1948இல் காந்தி நாடு தந்தை பெரியார், மதவெறிக்குப் பலியான காந்தியாருக்கு மரியாதை செய்யும் வகையில் இந்தியாவை காந்தி நாடு என்று அழையுங்கள் என்று அறிக்கை விட்டார்.
முன்பு காந்தியை கடுமையாக எதிர்த்த நீங்கள் இப்போது இப்படிக் கூறுவது முரண்பாடல்லவா? சந்தர்ப்பவாதம் அல்லவா? - என்று கேட்டபோது குடிஅரசு ஏட்டில் தெளிவாக எழுதினார்.
முன்பு வாழ்ந்த காந்தியார் வேறு; பின்பு கொலை செய்யப்பட்ட காந்தியார் வேறு!
இரு வேறு காந்தியார்கள் என்றார்; இன்னும் கூட வேடிக்கையாகவும், வேதனையாகவும் ஒருமுறை சொன்னார் பெரியார்.
கோட்சே விட்டு வைக்கவில்லையே!
காந்தியார் 125 ஆண்டுகள் வாழ்வேன் என்றார் (இல்லாத) எமன் விட்டு வைத்தான். ஆனால் பார்ப்பான் விட்டு வைக்கவில்லையே என்ன கொடுமை என்றார்.
வானொலியில் பெரியார்
காந்தியார் கொலையைச் சாக்காக வைத்து இஸ்லாமியர்கள் வாணியம்பாடி, திருவண்ணா மலை போன்ற சில ஊர்களில் தாக்கப்பட்டனர். வானொலி மூலம் - அன்றைய முதல் அமைச்சர் ஓமந்தூரார் வேண்டுகோளை ஏற்று - ஒரு அப்பீல் அறிவுரை மக்களுக்குச் சொல்லி, மதக் கலவரமாக மாறாமல் இருக்கப் பார்த்துக் கொண் டார் தந்தை பெரியார். தமிழ்நாடு மற்றொரு நவ காளியாகாமல் தடுத்தாட் கொண்டார் அய்யா.
கொன்றவன் கோட்சே - ஒரு மராத்தியப் பார்ப்பனர் என்றவுடன் மராத்தியத்தில் பார்ப்பனர் தாக்குதலுக்கு ஆளானார்கள்; அக்ரஹாரங்கள் சூறையாடப்பட்டன.
ஆனால் பார்ப்பனரல்லாத இயக்கம் உச்சத் தில் இருக்கும் தமிழ்நாட்டில் - கலவரமே இல்லை - எந்தப் பார்ப்பனருக்கும் ஆபத்து இல்லை; காரணம்...?
சுடப்பட்டதன் பின்னணியில்..
தந்தை பெரியார் கூறினார்: சுட்டவன் ஒரு தத்துவத்தின், கொள்கையின் துப்பாக்கி; அதற் காக அச்சமூக மக்களை - தனிப்பட்டவர்களைத் தாக்கிடுவது கூடாது என்று பேசினார். (நன்னிலம் பொதுக் கூட்டப் பேச்சு ஆதாரம்)
இந்தச் சிந்தனைகள் பரவட்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?
இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல் காந்தியார் கொல்லப்பட்டது - 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 168ஆம் நாள் கொல்லப்பட்டார்.
காந்தி, இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது. 7.12.1947-இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948-இல். அதாவது அவர் நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால்,  இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.
- தந்தை பெரியார்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...