Monday, October 1, 2012

நாடாளுமன்ற குழுவிடம் திராவிடர் கழகத் தலைவர் அளித்த மனுவின் முழு விவரம்


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேம்பாட்டுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் டி. அனுமந்தராவ் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தார். (சென்னை - 29.9.2012)

சென்னைக்கு 29-9-2012 அன்று வருகை தந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் அளித்த கோரிக்கை மனுவின் தமிழாக்கம்:
பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு பொது மக்கள் மற்றும் அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிவதற்காக மேற்கொண்ட பயணத் தில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 50%,  தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவு மக் களுக்கு 19%  இட ஒதுக்கீடு அளித்துள்ள பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழ் நாட்டை முதலில் தேர்ந்தெடுத்து வந்தி ருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த பாராட் டுதல்களைத் தெரிவித்துக் கொள்கி றோம்.
பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்காக ஒரு நாடாளுமன்றக் குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற பத்தாண்டு காலத்திற் கும் மேலான கோரிக்கையைப் பரிசீ லித்து, தற்போதைய அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தின் முழுமையான ஒப்புதலுடன், பிற்படுத் தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27% இடஒதுக்கீடு சட்டம் முறையாக நடைமுறைப்படுத்து வதையும், பிற்படுத்தப் பட்ட பிரிவு மக் களின் ஏனைய முன்னேற்றத்தையும் கண் காணிக்க நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பை உருவாக்கியிருப்பது ஒரு குறிப் பிடத் தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும்.
தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அரசமைப்பு சட்ட அதிகாரங்கள் அளித்தல்: பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அரசமைப்பு சட்டப்படியான அதிகாரங்களை அளிப்பது பற்றி, ஒரு மிகக் குறுகிய காலத்திற்குள் ளாகவே, பிற்படுத்தப்பட்டோர் நலன் களுக்கான நாடாளுமன்றக் குழு விவாதித்து, நாடாளுமன்றத்திற்கு ஓர் அறிக்கை அளித்திருப்பதைக் கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்காக பயன் நிறைந்த வகையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக் களுக்கான தேசிய ஆணையத்தைச் செயல்படச் செய்ய மேற்கண்ட பரிந் துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த தக்க தொடர் நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று இக்குழுவை யும், உறுப்பினர்களையும் நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் சங்கங்களுடன் விவாதித்தல்
சில கொள்கைப் பிரச்சினைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது மட்டுமன்றி, இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது பற்றியும் அதனுடன் இணைந்த மற்ற பிரச்சினைகள் பற்றியும்,  துறை அலுவலர்களுடன் கலந்துரையாடுவதற்காக, அவர்களை சந்திக்க சில மய்யங்களுக்குத் தாங்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் நாங்கள் அறிகிறோம்.
இம்முயற்சியைப் பாராட்டும் நாங்கள், அத்தகைய கலந்துரையாடல் கூட்டங் களுக்கு முன்னதாக, தொடர்புடைய துறைகளில் இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்துவது பற்றி தங்களுக்கு உள்ள குறைகளையும், தங்கள் கருத்து களையும் தெரிவிக்க வாய்ப்பளிக்கும் முகத்தான்  பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவது மிகவும் இன்றிய மையாதது என்று நாங்கள் கருதுகிறோம். இதனால் அவர்களின் குறைகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு முறை யாகத் தீர்க்கப்பட இயலும். சில துறைகளில் நமது பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பொதுப் போட்டி பிரிவில் தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப் பெண்களைப் பெற்றிருந்த போதிலும், அவர்கள் பொதுப்போட்டிப் பிரிவு இடங்களின் பட்டியலில் சேர்க்கப்படாமல்,  27% இட ஒதுக்கீட்டு இடங்களின் பட்டி யலில் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர் என்று நாங்கள் அறிகிறோம். துறையினர் பராமரித்து வரவேண்டிய இனச்சுழற்சி ஆவணங்களை  பரிசீலனை செய்து, இத் தவறினை நாடாளுமன்றக் குழு சரி செய்ய வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சினையாகும் இது. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலச் சங்கங்களின் பிரதி நிதிகளை அழைத்துப் பேசினால், துறை களில் இட ஒதுக்கீட்டினை நடை முறைப் படுத்துவதில் செய்யும் இது போன்ற தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளித்தல்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணி யாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதைத் தடை செய்து அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி உயர்வில் இத் தகைய இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டமசோதா ஒன்றை அரசு மாநிலங் களவையில் தாக்கல் செய்துள்ளது; இன்னமும் அந்த மசோதா நிறைவேற்றப் படவில்லை. அதே போன்று பிற்படுத்தப் பட்ட பிரிவு பணியாளர்களுக்கும் பதவி உயர்வில் இது போன்ற இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு எழுப்பி உள்ளது.  பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர்களும் அரசின் உயர்பதவி களில் அதிக எண்ணிக்கை கொண்டவர் களாக இல்லை என்பதால்,  இதற்காக அரசு கொண்டு வரும் சட்ட மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவும் சேர்க்கப்பட வேண்டும். இந்த நியாயமான கோரிக்கையை அரச மைப்பு சட்ட 16(4) பிரிவின் விதிகளுக்கு ஏற்ப இதற்கான ஒரு சட்டமசோதாவை விரைவில் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந் துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நீதித் துறையிலும் இடஒதுக்கீடு
நீதித் துறையில், குறிப்பாக உயர் நீதிமன்றங்களிலும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலும்  பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் பிரதிநிதித்துவம் மிகமிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.  தங் களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று இந்நாட்டு மக்கள் எதிர் பார்த்து நம்பி யிருக்கும் ஒரு நடைமுறையில், மக்களின் பல்வேறுபட்ட பிரிவினர் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வில்லை என்பது மற்றொரு மாபெரும் அநீதியாகும். இந்த குறைபாட்டை விரைவில் போக்குவது பற்றி நாடாளுமன்றக் குழு வரும் நாட்களில் தீவிரமாகவும், விரிவாகவும் விவாதித்து, அதனைப் போக்குவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தனியார்  துறையிலும் இட ஒதுக்கீடு:
பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் சிறிது சிறிதாகக் குறைந்து வரும் இக் கால கட்டத்தில், கூடுதலான வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு மக்கள் நம்பி எதிர்பார்க்கும் துறை தனியார் துறை ஒன்றே.  ஆனால்,  இந்த தனியார் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அனைத்து உயர் பதவி களில் இருக்கும் உயர்ஜாதியினர்களும்,  வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கொள்கையைப் பின்பற்றுவதில்லை. தகுதி,  திறமை என்ற பெயர்களில், தங்களின் சமூகக் கடமைகளை நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்கவே அவர்கள் முயலுகின்றனர். அதே நேரத்தில், அரசிடம் இருந்து கடன் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளையும், வரிச்சலுகை போன்றவைகளையும் அவர்கள் முழுமையாக அனுபவித்துக் கொள்ளவும் தவறுவதில்லை. எனவே, நாடாளுமன்றக் குழு இந்தப் பிரச் சினையைத் தீவிரமாகப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டு தனியார் துறை களிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினத்தவர் ஆகியோ ருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றி நிறைவேற்றச் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, நிறைவேற்றச் செய்ய வேண் டியதே இந்த காலகட்டத்தின் மிகப் பெரிய தேவையாகும். இட ஒதுக்கீட்டு அளவை மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்
நமது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு, இதர பிரிவுகள்  போன்ற பல்வேறுபட்ட பிரிவு மக்கள் மொத்த மக்கள் தொகையில் கலந்திருக்கும் அளவும், அவர்களின் வரலாற்றுப் பின்னணி, புவியியல் அமைப்பு, மொழி, பண்பாடு ஆகியவற்றிடையே உள்ள இயல்பான வேறுபாடுகளின் காரணமாக அவர்களிடையே காணப் படும் சமூக மற்றும் கல்வி அளவிலான பிற்படுத்தப் பட்ட தன்மையும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்தில் வேறுபட்டே இருப்பவையாகும். எனவே, பிற்படுத் தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பதே பொறுத்தமானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள 50%  இட ஒதுக்கீட்டு அளவை, அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் நீக்குதல்
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத் தவர், பிற்படுத்தப்பட்டோர் எனும் ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க அதிக அளவாக 50ரூ   என்று  உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இது நியாயமானது அல்ல. பல மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களின் மொத்த மக்கள் தொகை அம்மாநில மொத்த மக்கள் தொகையில் 80ரூ க்கும் மேலாக உள்ளது. மேலும், இச்சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக மறுக்கப் பட்டே வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் வெறும் 20ரூ  என்ற அளவில்  சிறுபான்மையினராக மட்டுமே உள்ள உயர்ஜாதிப் பிரிவு மக்களே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் பகுதியை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரு கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், இந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக் கான இட ஒதுக்கீட்டில் எந்த உச்ச வரம்பையும் நிர் ணயிப்பது என்பது சரியானதும் அல்ல; நியாயமானதும் அல்ல. இந்த இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்குவதற்கு, தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தாகிலும், தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இடஒதுக்கீட்டுப் பயன் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்:
பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு  1993 முதலும், கல்வி நிறுவன சேர்க்கையில் இட ஒதுக்கீடு 2007 முதலும்தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பல நூறாண்டு காலமாக சமூக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களாக பாரம்பரியமாக வைக்கப் பட்டிருப்பவர்கள் ஆவர். அவர்கள் பொருளாதார அளவில் உயர்ந்தி ருக்கிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே, கல்வி மற்றும் சமூக அளவு பிற்போக்குத்தன்மையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்று கருத முடியாது. இடஒதுக்கீடு பெறுவதற்கு அவர்களுக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிப்பதன் மூலம், இட ஒதுக்கீட்டுப் பயன்களை அவர்களுக்கு மறுப்பதோடு, அவர்களும் அவர்களது சந்ததியினரும் சமூக, கல்வி பிற்போக்குத் தனத்திற்கே மறுபடியும் தள்ளப்பட்டு விடுவர். எனவே இடஒதுக்கீட்டுப் பயன் பெறுவதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என்று நாங்கள் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள 27%  இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்:
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் மக்கள் தொகை 65%   முதல் 70%   வரையிலும் இருப்பதால், ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக வாய்ப்புகள் மறுக்கப் பட்டதன் காரணமாக நீண்டகாலமாக அவர்கள்  அடைந்து வந்துள்ள துயரங்களைக் கருத்தில் கொண்டால், அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள 27%    இட ஒதுக்கீடு,  மிகவும் பொருத்தம் அற்றதும்,  போதுமானது அல்லதும் ஆகும். எனவே அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு தற்போதுள்ள 27% லிருந்து குறைந்ததாக 50%     அளவுக்காவது உயர்த்தப்பட வேண் டும் என்று நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
தொழிற் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் பொதுத் தேர்வு நடத்தும் முடிவைக் கைவிடல்:
பல்வேறுபட்ட பல்கலைக் கழகங்கள், இடைநிலைக் கல்விக் கழகங்களின் கீழ், பல்வேறுபட்ட  வட்டார மொழிகளில் பயின்ற மாணவர்களை ஒருவருடன் ஒருவர் போட்டியிட வைப்பது சரியானதும், நியாயமானதும் அல்ல. ஒரு பொது நுழைவுத் தேர்வின் மூலம் அவர்களை  சமன்படுத்தவும் இயலாது; சமன் படுத்தவும் கூடாது. எனவே, தொழில் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் முடிவும், குறிப்பாக மருத்துவக் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் ஒரு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தேசிய மருத்துவக் கவுன்சிலின் முடிவும் முழுமையாகக் கை விடப்பட வேண்டும்.
அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங் களுக்கான மாணவர் சேர்க்கையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப் படுவதில்லை.  அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு  2007 ஆம் ஆண்டு முதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில்,  இவ்வாறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது மிகமிக நியாயமற்ற செயலாகும்.
இந்தியா முழுவதிலும் மாநில அரசுகளாலும், தனியாராலும் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்பிற்கு 15% அளவில் பெறப்படும் மருத்துவப் பட்டப் படிப்பு இடங்களிலும், 50% அளவில் பெறப்படும் எம்.எஸ்., எம்.டி.போன்ற முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான இடங்களிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இது சற்றும் நியாயமானது அல்ல. மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு  2007 ஆம் ஆண்டு முதல் சட்டப்படி அளிக்கப் பட்டு வரும் நிலையில்,  இவ்வாறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மத்திய தொகுப்பில் இருந்து அளிக்கப்படும் மாணவர் சேர்க்கையில்,  பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது மிகமிக நியாயமற்ற செயலாகும். மத்திய தொகுப்பில் இருந்து மருத்துவக் கல்லூரி களில் பட்டப் படிப்புக்கும், முதுகலை பட்டப் படிப்புக்கும் செய்யப்படும் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க ஆவன செய்ய வேண்டுமென்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில்  பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் களுக்கான 27% இட ஒதுக்கீடு உடனடியாக முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27%   இட ஒதுக்கீடு அளிப்பது என்ற கொள்கை முடிவை 2007 இல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து உயர்ஜாதி மக்கள் போராட்டம் மேற்கொண்டதுடன், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். ஒரு நீண்ட நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகும், பொது விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகும், ஆண்டு ஒன்றுக்கு 9%   வீதம் இந்த 27%   இடஒதுக்கீட்டை 3 ஆண்டு காலத்தில் தவணை முறையில் நிறைவேற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்தது. உயர்ஜாதி மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் 9% இடங்களைக் கூடுதலாக ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்து ஆணையிடப்பட்டது. இவை அனைத்துக்கும் பிறகும், இந்த 9ரூ இட ஒதுக்கீடு முறையாகவும், முழுமையாகவும் பல மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த 27%  இட ஒதுக்கீட்டை மேலும் காலதாமதமின்றி உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எந்த வித தவிர்ப்பும் இன்றி அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களிலும், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்:
அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையிலும் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு  2007 ஆம் ஆண்டு முதல் அளிப்பது என்ற கொள்கை முடிவை மத்திய அரசு மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், மத்திய பல்கலைக் கழகங்கள், இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் IITs, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் IIMs ஆகியவற்றில் இத்தகைய பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் தவிர்ப்பு அளித்திருப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. எனவே, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் 27%  இட ஒதுக்கீடு அளிப்பது என்ற மத்திய அரசின்  கொள்கை முடிவை எந்த விதத் தவிர்ப்பும் இன்றி, அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இந்திய தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களிலும் IITs, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் IIMs உடனடி யாக நடைமுறைப்படுத்தத்  தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவனம், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சண்டிகர் முதுகலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்காக தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்துவது கைவிடப்பட வேண்டும்
டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவனம், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை,  சண்டிகர் முதுகலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்காக தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்துவதன் மூலம், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக முயலும் மாணவர்களை, பலவித நுழைவுத் தேர்வுகளை எழுதவைக்கும் செயல் நியாயமானது அல்ல.  இந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தனித்தனியே நுழைவுத் தேர்வு நடத்துவதைக் கைவிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவன பட்டப்படிப்பு மாணவர் களுக்கு முதுகலை மருத்துவ பட்டப் படிப்பு இடங்களில் 30% அளிக்கப்படும் நடைமுறை கைவிடப்படவேண்டும்.
மத்திய தொகுப்பில் இருந்து  முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு  இடங்களில் 30%  இடங்களை டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல்நிறுவன பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அளிக்கும் நடைமுறை கைவிடப்படவேண்டும். ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக இவ்வாறு 30%  அளவு முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான இடங்கள் அளிக்கும் நடைமுறையைக் கைவிட இந்திய அரசுக்கு தக்கபடி எடுத்துக் கூறி மனநிறை வடையச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மண்டல் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துதல்:
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப் பட்ட பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றி மட்டுமன்றி, அவர்களின் மற்ற பொருளாதார மேம் பாட்டுக்காக பல மேம்பாட்டுத் திட்டங்களையும் மண்டல் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அத் தகைய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய பணித் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுப்போட்டிப் பிரிவில் தங்களின் தகுதியினால் இடம் பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுப் போட்டிப் பட்டியலில் இடம் கொடுக்காமல், பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில்இடம் கொடுக்கும் சட்டத்திற்குப் புறம்பான நடை முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மத்திய அரசின் பணி நியமனங்களுக்காக மத்திய பணித் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தகுதியின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுப் போட்டிப் பிரிவில் இடம் பெறும் பிற்படுத்தப் பட்டவர்கள் பொதுப் போட்டிப் பிரிவுப் பட்டியலில்தான் இடம் பெறவேண்டும்; ஆனால் சட்ட விரோதமாகஇவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இதுவரை சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் இடஒதுக்கீட்டுப் பட்டியல்படி வேலைவாய்ப்பு பெறவேண்டிய மற்ற பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் படுகிறது. எனவே பொதுப் போட்டிப்பிரிவில் தகுதியின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பெறும் பிற்படுத்தப்பட்டவர்களை இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்காமல், பொதுப் போட்டிப் பட்டியலிலேயே சேர்க்க வேண்டும் என்ற சட்டப்படியான நடைமுறையை மத்திய அரசுப் பணித் தேர்வாணையம் தவறாமல் பின்பற்றச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னைக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் மறுபடியும் நாங்கள் வரவேற்றுப் பாராட்டு கிறோம். இங்கு  அலுவலர்களுடனும், பிற்படுத்தப்பட்ட மக்கள் நல அமைப்புகளின் பிரதிநிதி களுடனும் தாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல் பயன் நிறைந்ததாக, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மிக்க மரியாதையுடனும், மனம் நிறைந்த வாழ்த்துகளுடனும்.
தங்கள் அன்புள்ள  
கி.வீரமணி

(29.9.2012)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...