Wednesday, July 11, 2012

பெரியார் ஒருவரே!


மயிலாடுதுறைக்கு வந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. இராமதாசு அவர்களுக்குக் கட்சியினர் வரவேற்புப் பதாகைகளை அமைத் துள்ளனர். அதில் காணப்படும் வாசகம் இளம் பெரியாரே! வருக! வருக!!
இதனை மருத்துவர் இராமதாசு கண்டிக்க வில்லை. இந்த நாட்டில் பெரியார் ஒருவரே! அய்யா என்றாலும் அவரே!!  இதற்கு ஆய்வுகள் தேவைப் படாது. கட்சிகள், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட்டுவிட்டவை இவை.
இளம் பெரியார், நடுத்தரப் பெரியார், முதிய பெரியார் என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாராவது சொல்ல ஆசைப்பட்டால், அது அவருக்கு அவரே செய்துகொண்ட கேலியும் கிண்டலுமே! 29 பதவிகளைத் தூக்கி எறிந்த புடம் போட்ட, பொது வாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட ஒப்பற்ற உயர் எண்ணங்கள் மலரும் சோலை பெரியார்.
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அணிந்திரா அணியாவார்
அறிந்திராத அறிவாவார்!
என்று புரட்சிக் கவிஞரால், பொறுக்கு மணிச் சொற்களால் கணிக்கப்பட்ட காலக்கதிரவன் பெரியார்!  உண்மையான புரட்சித் தலைவரும் கூட! தன்னை நாடி வந்து கதவைத் தட்டிய முதல் அமைச்சர்  பதவியை மூக்கறுத்து வெளியில் விரட்டிய வெண்தாடி வேந்தர் அவர்.
அறிவார்ந்த மக்களை உருவாக்கும் சிற்பி அவர். அடிமைத்தனத்தில், அடி முட்டாள்தனத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களின் பின்னால் ஓடுபவர் அல்லர்! வாக்குகளுக்காக தம் வாக்கினை மாற்றிக் கொள்ளாத மாபெரும் மானுடத் தந்தை பெரியார்.
அவரோடு ஒப்பிட்டுக்கொள்ள ஆசைப்பட வேண்டாம்!  அவர் கொள்கைகளை நேசிக்க, சுவாசிக்க முதலில் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது - ஆரோக்கியமானது.
குறிப்பு: திராவிடத்தை வெறுக்கும் மருத்துவர் திராவிடர் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரை எப்படி ஏற்றுக்கொள் கிறாராம்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.
அ.இ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் 24 ஆம் ஆண்டு விழா இன்று. கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதெல்லாம் சரிதான்.
அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரின் பெயரையும் அவ்வப்போது உச்சரித்துக் கொண் டுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேட்டில் இந்தத் தலைவர்களின் கொள்கை களுக்கு விரோதமான ஆன்மிகச் செய்திகளை வெளியிடலாமா?
பூணூல் தத்துவம் என்று சொல்லி, அதன் மகாத்மியங்களைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்குச் செல்லுவதுதான் அண்ணா காட்டிய கொள்கையா? வழியா?
பூணூல் என்ன, வருணாசிரமத்தை குழி தோண்டிப் புதைக்கும் போர்க்கருவியா?
கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். காலத்தில் அவர் நடத்திய ஏடுகளில் ஆன்மிக சேதிகள் உண்டா? தலப் புராணப் புழுதிகள் உண்டா?
அண்ணா தி.மு.க. என்றால் அக்கிரகார தி.மு.க. என்ற நிலையல்லவா இன்று ஏற் பட்டுள்ளது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...