Tuesday, July 17, 2012

டெசோ என்றால் கடுகடுப்பு - ஏன்


டெசோ அமைப்புப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தக்க முயற்சி எடுத்து அதனை மீண்டும் செயல்படுத்தும் பணியைக் காலத்தால் மேற்கொண்டார்.
அந்நாள் முதல் பார்ப்பன ஊடகங்களும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோரும் சேற்றை வாரி இறைக்கும் பணியில் வீராவேசமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட நான்தான் காரணம் என்றும், யுத்தம் என்று வந்தால் பொதுமக்கள் சாவது இயற்கைதான் என்றும், ஈழத்தில் யுத்தத்தை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி வந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றி விமர்சிக்கமாட்டார்கள். ஆனால் இந்தக் கால கட்டத்தில் உலக அளவில் தனியீழம் தேவைதான் என்ற ஒத்த கருத்து மேலோங்கி நிற்கும் தருணத்தில், அதனை ஒருமுகப்படுத்தி, மாபெரும் அழுத்தம் கொடுப்பது என்ற அடிப்படையில டெசோ மாநாட்டை நடத்திட முன் வந்தால், பிரச்சினையின் மீது அக்கறை கொண்டவர்கள் இரு கரம் நீட்டி வரவேற்கவே செய்வார்கள். எதையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் தற்போது டெசோ மாநாடு யாருக்காக நடத்துகிறார் என்பதுதான் புரியவில்லை. கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறி இருக்கிறார். (தினமலர் 16-7-2012 முதல் பக்கம்)
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினையில் சீரான தொடர்ச்சியான கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.
29-5-1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளின் பிரதிநிதிகள் கூட - பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க - இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் பங்கேற்கவில்லை. பங்கு கொள்ளாததுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான ஜனசக்தி       (20-6-1997) என்ன எழுதிற்று தெரியுமா?
தமக்குப் பந்த் நடத்த தகுதியோ, திறமையோ இல்லாத கட்சிகள் அதற்காக அறைகூவல் விடுத்தது - அப்பட்டமான அகம்பாவமும் அதிகப்பிரசிங்கித் தனமும், அரசியல் ஆதாயம் தேடுவதுமாகும் என்று எழுதிற்றே!
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளை இணைத்து திராவிடர் கழகம் நடத்திய முழு வேலை நிறுத்தத்தைத்தான் இப்படி கூறியது ஜனசக்தி. இந்தக் கட்சிகளை விட இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிதான் பந்த் நடத்த தகுதி உள்ளது போலும். இதைவிட இன்னொரு தகவலும் உண்டு. இலங்கைத் தமிழர்களின் துன்பம் தொடர்கதையாவதற்கு இலங் கையில் இன்றைய அரசு மட்டுமே காரணமல்ல. பிரபாகரன் வகையறாவும்தான் காரணம் என்பதை, தமிழ் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் - போலித் தீவிரர்கள் ஏற்றுக் கொள் ளாமல் ஏமாறு கின்றனர் அல்லது ஏமாற்றுகின்றனர் என்று எழுதியது கட்சியின் அதி காரபூர்வ ஏடான ஜனசக்திதான்  (20-6-1997).
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் அது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கண்ணோட்டத்தில்  ரத்தக் கொதிப்பாம்! (சோ, இந்து ராம் போன்றோரின் அப்பட்டமான ரத்தவாடையல்லவா இது).
இவற்றையும் கடந்து மற்றொன்று முக்கியம்! முக்கியம்!! அதி முக்கியம்!!!
ஈழத் தமிழர் பிரச்சினை இலங்கையின் பொறுப்பு. அவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வது அவர்கள் கடமை. நாம் தலை யிடுவது - இன்னொரு நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகும் என்று  எழுதியதும் அதே ஜனசக்திதான்.
இத்தோடு விட்டு விட முடியுமா? இதே கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் பேசுகிறார்:
இலங்கைப் பிரச்சினைக்காக எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம். (புதினம் இணையப் பதிவு 15-2-2009).
இவற்றிற்கு விளக்கங்கள் தேவையில்லை.
இவர்கள்தான் டெசோ மாநாட்டை விமர்சிப்பவர்கள்; கொச்சைப்படுத்துபவர்கள்.
உலகத் தமிழர்களே புரிந்து கொள்வீர்!





No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...