மகளிர் உரிமை மகுடம் சூட்டிக் கொள்ள திராவிடர் இயக்கத்தைத் தோளில் சுமப்பீர்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
மகளிர் முழு உரிமை பெற வேண்டுமானால் திராவிடர் இயக்கச் சிந்தனைகளை வரித்துக் கொள்ள வேண்டும் என்று - உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று உலக மகளிர் நாள் என்கிறபோது, நம் நாட்டில் நமது மகளிர் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர்; வாழுகின்றனர் என்பதையும், இவர்களது அடிமைத் தன்மை நீங்கி, இன்று அதிகார உரிமை பெற்றவர்களாகத் திகழ்வதற்கு யார் முக்கிய காரணம் என்பதையும் இன்று சிந்திக்க வேண்டிய நாள் ஆகும்.
பஞ்சமர்களுக்கும் கீழே பெண்கள்
1. பிறப்பினால் உயர்வு, தாழ்வு கூறும் நம் நாட்டுச் சமூக அமைப்பில், ஜாதி என்பதுபோலவே, மற்றொரு பேதம் வளர்க்கும் அமைப்பு ஆண் - பெண் பிரிவுகளுக்கும், அதாவது பிறவி பேதம் காரணமாக எப்படி உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது உருவாக்கப்பட்டு, பிராமணர் - சூத்திரர் - பஞ்சமர் என்ற வர்ணாசிரமப் பிரிவுகளை நிலைநாட்டினார்களோ, அதே வரிசையில், அந்த அய்ந்து பிரிவுகளுக்கும் கீழே வைக்கப்பட்டுள்ளவர்கள்தான் பெண்கள் - அவர்கள் எந்த ஜாதியானாலும் அடுக்கின் கீழே ஆறாவதாக - அமர்த்தப்பட்டவரே மகளிர்!
மனுவின் பார்வையில்...
எனவே அடிமைகளுக்கும் கீழே உள்ள அடிமைகளான இந்த மகளிருக்கு
1) படிக்க உரிமையில்லை.
2) சொத்துரிமை இல்லை.
3) தனக்கென சுதந்திரத்துடன் ஒரு அடையாளத் துடன் வாழ உரிமையில்லை.
4) கற்பு என்ற ஒரு பாலருக்கு மட்டுமே போடப்பட்ட இரும்பு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய முடியாத நிலை!
அதற்கான மனுவின் சுலோகங்கள் இதோ சில எடுத்துக்காட்டுக்கள்:
மதராடவர் தருமம் என்ற 9ஆவது அத்தியாயத்தில், கணவன் முதலிய பந்துக்கள் இரவிலும் பகலிலும், ஒரு காரியத்திலும் மாதரைச் சுவாதீனமில்லாதவர்களாக செய்ய வேண்டியது. அவர்கள் கெட்டதான விஷயப் பற்றுள்ளவர்களாக விருந்தாலும் தங்கள்வசத்தி லிருக்கச் செய்ய வேண்டியது. மாதர் இளமைப் பருவத்தில் பிதாவினாலும் யௌவனத்திற் கணவனாலும்,மூப்பில் மைந்தனாலும், காக்கத்தக்கவ ராகையால் எக்காலமும் மாதர் சுவா தீனமுடையவரல்லவர். (சுலோகம் 2,3)
மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடையவராதலால் கணவனாற்காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக் கின்றார்கள்.
மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதேயுண்டானதென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் துரோகசிந்தை இவற் றினை மாதர் பொருட்டே மநுவானவர் கற்பித்தார். (சுலோகம் 15,16,17)
இது மட்டுமா?
பிரபலமாக பிரச்சாரம் செய்யப்படும் பகவத் கீதை பெண்களை பாவயோனிகள் என்று கொச்சைப் படுத்துகிறது!
மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களான ஹிந்துக்களுக்குசட்டம் ஹிந்துலா (Hindu law) அது முழுக்க, முழுக்க மனு போன்றவைகளையே அடிப் படையாகக் கொண்டு நீதிமன்றங்களில் நீதி வழங்கப் பட்டது. இதனை எதிர்த்து திராவிடர் இயக்கம், அண்ணல் அம்பேத்கர் மற்றும் சில முற்போக்கு சிந்தனையாளர்கள் குரல் கொடுத்தும் போராடியும், மகளிரிடையே விழிப் புணர்ச்சியையும் ஏற்படுத்தியதால், இன்று ஓரளவு விடியல் - விடுதலை - சமத்துவம், அதிகாரப் பகிர்வு கிடைத் துள்ளன!
பெண்கள் மாநாட்டில்...
13.11.1938இல் தமிழ்நாட்டில் உள்ள நன்றியுள்ள மகளிர் தலைநகரில் கூடி,
இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் வரலாற்றின் வைர வரிகள் ஆகும். நன்றி உணர்வின் நல்லதோர் சான்றாகும்.
(மறைமலைஅடிகளார் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னின்று நடத்தியவர்கள் தாமரைக் கண்ணி அம்மையார், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள், டாக்டர் தர்மாம்பாள், திருவாட்டி மலர்முகத்தம்மாள்)
சுயமரியாதை இயக்கத்தின் பணிகள்
அதற்கு முன்பே குடிஅரசு மூலம் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் சுயமரியாதை இயக்கமும், அதற்குமுன் ஆண்ட ஜஸ்டீஸ் கட்சி என்று அழைக்கப்பட்ட திராவிடர் இயக்க ஆட்சியும் மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பாதை அமைத்துப் பயணம் செய்வித்து பயன் பெற வைத்தன!
1967 முதல் அண்ணா தலைமையில் உதயமான தி.மு.க. ஆட்சி, லட்சிய ரீதியாக தொடர்ந்த கலைஞர் தலைமையிலான திராவிடர் இயக்க ஆட்சி, இப்படி பற்பல திராவிடர் இயக்க ஆட்சிகள், அக்கட்சி மத்தியில் பங்கு பெற்றதால் ஏற்பட்ட சட்டமாற்றம் - ஆண்களை ஒத்த சொத்துரிமை (2005) சட்டமானது வரை எத்தனையோ அமைதிப் புரட்சிகள் நடந்துள்ளன!
பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சியே!
இன்று நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஒரு பெண்மணி - அதுவும் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்மணி என்பதும், இதற்கு முதல் முதல் பெண்களுக்கு வாக்குரிமை என்பதை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வருவதற்கு முன்னரே அளித்தது அன்றைய நீதிக்கட்சி ஆட்சிதான் என்பதும் சென்னை மாநில திராவிடர் ஆட்சிதான் என்ற வரலாறும் பலர் அறியாத ஒன்றாகும்!
பெண்கள் மகுடம் சூட...
மகளிருக்கு சம சொத்துரிமையை - டாக்டர் அம்பேத் கர் கொண்டு வந்த இந்து சட்டத் திருத்த மசோதாவை அன்றைய குடிஅரசுத் தலைவரே ஏற்காததால் அண்ணல் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார்.
அதே காங்கிரசு - மத்திய ஆட்சி தி.மு.க. திராவிடர் இயக்கத்தின் துணையோடு வந்த நிலையில் சட்டமாக நிறைவேற்றி வரலாறு படைத்தது!
மகளிர் உரிமை என்பது ஆண்கள் பார்த்து அளிப்பது அல்ல; மகளிரே விழிப்புணர்வு பெற்று தட்டிப் பறிக்க வேண்டிய தகத்தகாய ஒளிவீசும் உரிமை!
அதே நேரத்தில் படிப்பில் வளர்ச்சி, பதவியில் முன்னேற்றம் - மகளிருக்குச் சிறப்புதான். ஆனால் இன்னமும் அலங்கார பொம்மைகளாகவோ, பிள்ளைப் பேறுக்குத் தவமாய் தவம் கிடக்கும் மனநிலை உடையோ ராகவோவா வாழுவது? தெளிவு வேண்டும். உரிமையின் சிறப்பு அடக்கத்தில்தான், எளிமையில்தான் உள்ளது என்று தந்தை பெரியார் அறிவுறுத்தினார். மறவாதீர் தோழியர்களே!
புரட்சிக் கவிஞர் பாடினார்:
அக்கா அக்கா என்றழைக்கும் (கூண்டுக்)கிளியே
சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!
அக்கா வந்து தர?
என்று எழுதியதை நினைவில் நிறுத்தி,
சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!
அக்கா வந்து தர?
என்று எழுதியதை நினைவில் நிறுத்தி,
மகளிர் உரிமை காக்க திராவிடர் இயக்கத்தைத் தன் தோளில் சுமந்தால், மகளிர் தலைகளில் மனித உரிமைகள் மகுடம் தானே வந்து அமரும் என்பதை இந்த நாளில் உணர்ந்து செயல்படட்டும்!
வாழ்த்துக்கள்.
பெரியார் வாழ்க!
பெண்ணுரிமை ஓங்குக!
பெரியார் வாழ்க!
பெண்ணுரிமை ஓங்குக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
1 comment:
மகளிர் உரிமை என்பது ஆண்கள் பார்த்து அளிப்பது அல்ல; மகளிரே விழிப்புணர்வு பெற்று தட்டிப் பறிக்க வேண்டிய தகத்தகாய ஒளிவீசும் உரிமை!//
மிகச்சரியான உண்மையே .பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் .
Post a Comment