Sunday, January 8, 2012

விஞ்ஞான மனப்பான்மை என்பது இதுதானோ?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவுத் திட்டமாகும். மாறி மாறி வந்த அரசுகள் வாக்குறுதி கொடுத்திருந்தாலும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான், அத்துறை அமைச்சராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அமைச்சராக இருந்த நிலையில் தான் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததோடு அல்லாமல் பணிகளும் வேகமாக நடைபெற்றன. 50 சதவிகிதத்துக்கு மேல் பணிகள் முடிந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, அரசியல் அனாமதேயம் சு.சாமி ஆகி யோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்தது.

இப்பொழுது செயல்படுத்தப்படும் திட்டத்தால், ராமனால் கட்டப்பட்ட பாலம் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது. இது மதநம்பிக்கையுள்ளவர்களின் மனதைப் புண்படுத்தும் என்று வழக்குத் தொடுத்தவர்களின் மூடத்தனத்தை ஏற்று, மாற்று வழியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றித் திட்டம் தயாரிக் குமாறு உச்சநீதிமன்றம் கூறியதே அடிப்படையில் தவறான ஒன்றாகும்.

ஏற்கெனவே திட்டம் மேற்கொள்ளப்பட்ட வழி யானது யாரும் தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல.

நாகப்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்புப் பொறி யியல் ஆய்வு நிலையம் (Neeri - The National Environmental Research Institute) என்கிற அமைப்பு பல வகைகளிலும் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் படிதான் வாய்க்கால் தோண்டும் பணி நடத்தப்பட்டது.

இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் ஆணை பிறப்பிக்க வேண்டியதுதான் உச்சநீதிமன்றத் தின் கடமையே தவிர, இதிகாச கற்பனைப் பாத்திரம் ஒன்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது எந்த வகையில் சரி?

உச்சநீதிமன்றத்தில் தொல்பொருள் துறை என்ன கூறியது? இராமன் என்பதே கற்பனைப் பாத்திரம் - அப்படி இருக்கும்போது,  ராமன் பாலம் எங்கிருந்து வந்தது என்று குறிப்பிட்டு இருந்ததே!

இதில் வெட்கப்பட வேண்டியது என்னவென்றால், அறிவியல் ரீதியாக  உண்மையைச் சொன்ன அந்த அதிகாரிகள்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, தமது  பிற்போக்குத்தன முகத்தை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு விட்டது (தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த அதிகாரிகள் அப்படித்தான் சொல்லுவார்கள் என்ற விமர்சனம் வேறு; ஒரு வகையில் தந்தை பெரியார் மண்ணுக்குக் கொடுக்கப்பட மரியாதை அது!)

வழக்கமாகப் பார்ப்பனர்கள் தங்கள் பித்த லாட்டத்தை இதிலும் செய்து பார்த்தனர். அமெரிக் காவின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் அது ராமன் பாலம்தான் என்று சொன்னதாக அரே ராமா, அரே கிருஷ்ணா பேர் வழிகள் ஒரு கதையைக் கட்டி விட்டனர்;   பார்ப்பனர்கள் கைகளில் உள்ள ஊடகங் களும் அதனை ஊதிப் பெருக்கிக் காட்டின. இது குறித்து நாசா விடம் எழுதிக் கேட்டபோது அது பொய்யென்று அம்பலப்படுத்தப்பட்டது.

இந்தியா இலங்கை இடையே உள்ள ஆதாம் பாலம். இயற்கையான மணல் படிவுகளால்  உருவான மணல் திட்டுதான் அது - பாலமல்ல என்று நாசா பதில் அளித்து விட்டதே (26.7.2007).

இதற்குப் பிறகும் வேறு பாதையில் திட்டத்தை வகுக்கக்கோரி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதும் அதன்படி இப்பொழுது புதிய பாதையில் திட்டத்தை அமலாக்கும் வகையில் நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளது என்கிற செய்தியும் வெட்கித் தலைகுனியத்தக்கதாகும். இதுவரை செய்யப்பட்ட செலவுகளை யார் கணக்கில் எழுதுவது?

1992 டிசம்பர் 6இல் பாபர் மசூதியை இடித்த கூட்டம் இப்பொழுது ராமன் பெயரில் இந்தியாவின் மதச் சார்பின்மையையும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப் பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் (51A(H) என்ற சரத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது.

இதன் மூலம், உலகத்தின் முன் இந்தியா மிகவும் பிற்போக்குத்தனமான நாடு என்பதைத் தலை கவிழ்ந்து தெரிவித்துக் கொண்டு விட்டது.

மாட்டையும், குரங்கையும் கும்பிட்டுக் கிடக்கும் மக்கள் இந்தியர்கள் என்று மார்க்ஸ் சொன்னது 2012-லும் நிரூபிக்கப்பட்டு விட்டது. வெட்கம்! மகா வெட்கம்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...