தஞ்சையில் காந்தி சாலை இர்வின் பாலம் அருகேயுள்ள தர்காவில் நவம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் நடந்த தொழுகையில் பலர் கலந்து கொண்டனர். கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவரது கைபேசி காணாமல் போனது. அவரது அருகில் ஒரு பிச்சைக்காரரும் தொழுகையில் ஈடுபட்டிருந்தார். எனவே தொழுகையில் ஈடுபட்டவர்களிடம் விசாரிக்கும்போது அந்தப் பிச்சைக்காரரின் பையையும் சோதனையிட்டனர். சோதனையில் அவரது பையில் ரூ.6.26 லட்சம் ரொக்கமாக இருந்தது.
பணம் வைத்திருந்த பிச்சைக்காரரை தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்தப் பிச்சைக்காரர் மன்னார்குடியைச் சேர்ந்தவர், பெயர் அப்துல் சமது, மனைவி பக்ருநிஷா என்ற நூர்ஜகான். இருவரும் சென்னை, ஏர்வாடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தர்கா வாசலில் அமர்ந்து பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளனர். இதன் வழியாக கிடைத்த பணத்தை வங்கியில் சேமித்து வந்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் தஞ்சைக்கு அருகில் ஒரு மனை வாங்கி குடியிருக்க விரும்பியே வங்கியிலிருந்து பணத்தை எடுத்து பையில் வைத்துக் கொண்டு தொடர்ந்து பிச்சையெடுத்து வந்துள்ளனர். வங்கிக் கணக்கை சரிபார்த்த காவல்துறையினர் பணம் அவருடையது என்பதை உறுதி செய்து அவரிடமே பணத்தை ஒப்படைத்துள்ளனர். எடுத்தது பிச்சையானாலும் சேமித்து ஒரு வீடு வாங்கி வாழ நினைத்த அப்துல் சமதுவை பாராட்டுவோம்.
No comments:
Post a Comment