மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 ஆயிரம் இடங்களை நிரப்புவதாக மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு வரவேற்கத் தக்கதாகும்.
சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் இந்தக் குறைந்த அளவு விழுக்காடு இடங்கள்கூட அளிக்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கண்டனத்துக்குரியதுமாகும்.
மத்திய அரசின் முதல் பிரிவு(Class I) இடங்கள் என்று எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டவர் களுக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சதவிகிதம் 13 விழுக்காடுதான்; மீதியுள்ள இடங்கள் எங்குப் போயின? யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டது என்பது முக்கிய கேள்வியாகும்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இடங்கள் 27 விழுக்காடு என்றாலும் முதல் பிரிவுப் பணிகளில் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இடங்கள் வெறும் 5.4 விழுக்காடுதான்.
ஏ,பி,சி,டி. மற்றும் ஸ்வீப்பர் என்று சொல்லப்படும் அடி மட்ட அத்தனை இடங்கள் உட்பட தாழ்த்தப்பட்டோருக்குரிய விழுக்காடு 17.78 ஆகும். பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 5-83 ஆகும்.
இதில் வேடிக்கை, விநோதம் என்னவென்றால் ஸ்வீப்பர் என்ற பணியில் மட்டும் தாழ்த்தப் பட்டோருக்கு 59.4 விழுக்காடு மேல் தட்டுப் பதவிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய இடங்கள் அளிக்கப் படுவதில்லை. பணிகளின் தரம் குறையக் குறைய (எடுத்துக்காட்டு ஸ்வீப்பர்கள்) இவர்களின் இட ஒதுக்கீட்டு சதவிகிதம் மிகவும் அதிகரித்துள்ளது. 22.5 விழுக்காட்டையும் மீறி, 59.4 விழுக்காடு என்கிற அளவுக்கு அதிகமாக அளிக்கப்படுகிறது என்பதை சமூகச் சிந்தனையாளர் விழிப்போடு கவனிக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை போய் விடுகிறது; உயர் ஜாதியினருக்குத் தகுதியிருந்தும் உரிய இடங்கள் கொடுக்கப்படுவதில்லை என்று மூக்கால் அழுகிறார்களே, பணிகளின் தரத்திற் கேற்ப இடங்களில் எண்ணிக்கை மாறுபடுவது பற்றி மூச்சு விடுவதில்லையே ஏன்?
திராவிடர் கழகக் கூட்டங்களில், மாநாடுகளில் பேரணிகளிலும் இந்தத் திசையில் தீர்மானங் களாகவும் முழக்கங்களாகவும் வெளியிட்டு வருகின்றன. பொது மக்கள் மத்தியிலும் இந்த முழக்கங்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
50 ஆயிரம் இடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் சட்டப்படியான அளவுக்கு இடங்கள் அளிக்கப்படாத நிலையில் புதிய பணி களை அளிக்கும்போது அவர்களுக்கு நிலுவையில் உள்ள இடங்கள் புதிதாக நியமனம் செய்யப்படும் பொழுது ஈடு செய்யப்பட வேண்டும். (Back-log). சமூக நீதியில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி நாடாளுமன்றத்தில் உரிமை முழக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
இப்பிரச்சினை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்குப் பொதுவானது என்பதால் சிறுபான்மையினரும் இணைந்து ஓரணியில் திரண்டு கட்சி பேதமின்றி அழுத்தமாகக் குரல் கொடுத்தால், ஒரே நொடியில் சமூக நீதிக்கான இந்தப் பிரச்சினைக்கு விடிவு கிடைத்துவிடுமே!
மக்கள் தொகையில் இவர்கள்தானே அதிக எண்ணிக்கை உடையவர்கள்; ஜனநாயகம் என்பதுதான் என்ன? பெரும்பான்மையான மக்களால் ஆளப்படுவதுதானே?
இந்தியாவிலோ இது தலைகீழாக உள்ளதே! பெரும்பான்மையினர் இன்னும் கோரிக்கை வைக்கும் நிலையில் இருப்பது பரிதாபம் அல்லவா? வெகு ஜன மக்களின் பிரதிநிதிகள் - அவர்களைச் சார்ந்த அரசியல் கட்சிகள் சிந்திக்குமாக - செயல் படுமாக!
No comments:
Post a Comment