இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. உலகம் ஓர் குலம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அரிய தத்துவத்திற்கு அருமையான வாழ்வாதாரம் இது!
அது மட்டுமா? ஆங்கிலமும் தமிழும் நமக்கு இரு விழிகள்; தாய் மொழி நமது வீட்டின் கதவுகள் என்றால், ஆங்கிலம் உலகத்தை அறிந்து கொள்ளச் செய்யும் சாளரங்கள் அல்லவா?
சுதந்தரச் சிந்தனை, பல்நோக்கு, அடிமைத்தளைக்கு எதிரான போர்க் குரல், உரிமைக்குரல், தாராள மனப்பான்மை - இவை எல்லாம் ஆங்கிலம் படித்த தினால் வேகமாக உருவாகிய செயல் திறன் ஆகும்.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நம்மை நாகரிகப் படுத்திடும் அறிவியலுக்கு ஆங்கிலம் அல்லவா நுழைவு வாயில்? எனவே ஆங்கிலப் புத்தாண்டை தமிழர்கள் திராவிடர்கள் கொண்டாடலாமா? என்று கேட்போர் ஒன்று விவரமறியாதோர்; இன்றேல் விஷமக்காரர்கள்!
இந்த புத்தாண்டில் பல பேர் உறுதிகள் எடுத்துக் கொள்ளுவது வழமை. பலர் சில நாள்கள் அதனைக் கடைப்பிடித்து பிறகு, மெல்ல மெல்ல அதனைக் கை விட்டு விடுவதும் உண்டு. ஆனால் சிலரோ மாறியவர்களாகவும், ஒரு எடுத்த முடிவைக் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நம் பாராட்டுதலுக்குரியவர்கள். மற்றொல்லா உறுதிகளை விட ஒரு எளிய ஆனால் பெரிய உறுதியை நாம் அனைவரும் எடுக்க முன்வர வேண்டும்.
நன்றி காட்டுதலை நம் வாழ்வின் முக்கிய மூச்சுக் காற்றாக்கிக் கொள்வோம் என்றே உறுதி செய்தல் மிகவும் முக்கியம் ஆகும். எவர் எத்தகைய உதவி செய்தாலும் அது சிறியதானாலும், பெரியதானாலும் உடனடியாக அதற்கு நன்றி கூறிடத் தயங்கக் கூடாது.
நன்றி என்பது பயனடைந்தவர் கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது; அப்படி எதிர் பார்த்தால் அது சிறுமைக் குணமே என்றார் தந்தை பெரியார் அவர்கள். அது மனதில் செதுக்கப்பட வேண்டும். சிறு குழந்தை களுக்கும்கூட முதலில் வீடுகளில் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய முதல் வார்த்தையே நன்றி - ஆங்கிலத்தில் Thanks என்பதாகும். நன்றி காட்ட மறந்த மக்களாலோ, சமுதாயத்தாலே ஒரு போதும் ஒரு நாளும் முன்னேறவே முடியாது. எனவே புது ஆண்டின் தொடக்க முதலே இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கும், குழந்தைகளைவிட பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
1 comment:
எத்தகைய உதவி செய்தாலும் அது சிறியதானாலும், பெரியதானாலும் உடனடியாக அதற்கு நன்றி கூறிடத் தயங்கக் கூடாது.
அமாங்க நன்றிங்க நல்லா தகவல் சொன்னதுக்கு .
Post a Comment