Wednesday, January 4, 2012

சொர்க்க வாசல் படுகொலையா? பக்தியா?


நாளை சொர்க்கவாசல் திறப்பாம்; வைணவ கோவில்களில் ஒரு கதவைத் திறந்து வைத்திருப்பார்கள்; பக்தர்களும் அதற்குள் நுழைந்து வெளியில் வந்தால் சொர்க்கம் சென்று வந்ததாக ஒரு  நினைப்புப் போதை!
சின்ன குழந்தைகள் மண்ணில் மூத்திரம் பெய்து குழைத்து, சிறுவீடு கட்டி, கூட்டாஞ்சோறு ஆக்கிக் குதூகலிப்பதில்லையா?
வளர்ந்து ஒதிய மரமாகிய பின்பும் அந்த சின்னபுத்தி பக்தர்களைவிட்டு விலகுவதில்லை.
சொர்க்கத்திற்குப் போகப் போகிறோம் - வீடு பேறு அடையப் போகிறோம் - இனி திரும்பி சொந்த வீட்டுக்கு வரப் போவதில்லை என்ற நிலை இருந்தால் எந்தப் பக்தன் அல்லது பக்தை ஏகாதசியன்றுவிரதம் இருந்து குளித்து மூழ்கிக் கோவிலுக்குச் செல்லுவார்கள்? விரலை மடக்குங்கள் பார்க்கலாம்.
ஏகாதசி - சொர்க்கவாசல் என்று சிறப்பு இதழ்களை வெளியிடும் பத்திரிகை வியாபாரிகளோ, அந்த முதலாளிகளோ, ஆசிரியர்களோ அப்படி ஒரு நிலை இருந்தால், சொர்க்கவாசல் மண்டபத்திற்குள் நுழைவார்களா?
மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பகற்கொள்ளை அடிப்பதுதான் பத்திரிகைத் தொழிலா?
பிரஸ்கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நாக்கைப் பிடுங்கக் கேட்ட பிறகும்கூட இந்தப் பத்திரிகையாளர்கள் திருந்தவில்லையே!
இந்தச் சொர்க்கவாசல் மகாத்மியம்தான் என்ன? திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற பக்தி நூல் என்ன கூறுகிறது?
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் - ஓடக்காரன் துணையோடு.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்க்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம் (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி)
சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வனத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
திருமங்கை ஆழ்வார் வைபவ நூல் இவ்வாறு கூறுகிறதே - இதன் பொருள் என்ன?
(1) திருமங்கை ஆழ்வார் என்பவன் ஒரு திருடன்!
(2) தொழிலாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுக்காமல் வஞ்சகமாக அழைத்துச் சென்று படுகொலை செய்தவன்!
(3) இந்தப் படுகொலைக்கு சீரங்கநாதன் என்று கூறப்படும் ரெங்கநாதன் என்ற கடவுளும் உடந்தை.
(4) இப்படித் திட்டமிட்டு படுகொலையையும் செய்துவிட்டு, அதனை வஞ்சகமாகப் பக்திப் போதை மாத்திரைகளாக உருட்டிக் கொடுத்து, பக்திப் பரவசமாக்கி - வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு என்று கூறி மக்களை ஆண்டுதோறும் வஞ்சிக்கிறார்கள் - சுரண்டுகிறார்கள் என்றால், இந்தக் கொடுமையை என்ன சொல்ல!
பக்தர்களே, உங்கள் முன்னோர்களைப் படுகொலை செய்த நாளைப் பயபக்தியோடு ஏற்கலாமா?
இந்தப் பார்ப்பன வஞ்சகத்தை வெறுக்கவேண்டாமா?
சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...