Thursday, January 5, 2012

இன்னும் எத்தனை நிபுணர் குழு தேவை?

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று இன்னும் எத்தனை முறை உறுதி கூற வேண்டும்? இன்னும், எத்தனை நிபுணர் குழு - தம் நிபுணத்துவ அறிக்கையை அளிக்க வேண்டும்?

இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் செல்ல வேண்டும்? இன்னும் எத்தனை முறை நீதிமன்றத்தில் அரைத்த மாவையே அரைப்பது?

இன்னும் எத்தனை எத்தனை முறை நீதிமன்றம் சொன்ன தீர்ப்பையே திருப்பித் திருப்பிக் கூறுவது?

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான தகவல்களும், செய்திகளும் கேட்டுக் கேட்டு மக்களுக்குப் புளித்துப் போய் விட்டன.

நிஜமாகத் தூங்குவோரை எழுப்பி விடலாம்; தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்புவது என்பது இயலாத ஒன்றாகும்.

கேரளாவைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் போக்கு என்பது தூங்குவதுபோல நடிக்கும் வகையைச் சேர்ந்ததாகும்.

கேரள மாநில அட்வகேட் ஜெனரல் உண்மைகளைப் போட்டு உடைத்து விட்டார். அப்படி உண்மையைச் சொன்ன  வழக்குரைஞர் பல வசை கலந்த மோசமான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளார் - கண்டனத் துக்கும் ஆளாகியுள்ளார்.

மத்திய நீர்வளத்துறை முன்னாள் செயலாளர் தத்தே, ஓய்வு பெற்ற மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழு இப்பொழுது என்ன கூறியுள்ளது?

1. அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

2. முல்லைப் பெரியாறு இடுக்கி அணையின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை.

3. மத்திய மண்வளத் துறை நிபுணர்கள், புவியியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஆய்வு செய்த பிறகே  இந்த முடிவு எடுக்கப்பட்டது.

4. டிஜிட்டல் கேமரா மற்றும் ஸ்கேன் மூலம் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு, அணையின் நீரோட்டம் உள்ளிட்ட அனைத்து அதிர்வுகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகே அணையின் பாதுகாப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறி விட்டதே!

2000ஆம் ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவும் 10.10.2000, 11.10.2000 ஆகிய இரு நாள்களும் ஆய்வு செய்து இப்பொழுது நிபுணர் குழு என்ன சொல்லிற்றோ அதையேதான் அடித்துச் சொன்னது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தத்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அன்று கூறிய தீர்ப்பு என்ன?

ில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டு இருக்கிறது. நீர் தேக்கி வைத்திருக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேரள மாநிலம் இதில் முட்டுக் கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.

மத்திய நீர்வளத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் அணையில் சில இடங்களில் பழுது பார்க்கும் பணிகளைத் தமிழக அரசு நிறைவேற்றி விட்டது. ஆனால் மீதமுள்ள பணிகளை முடிப்பதற்குக் கேரள மாநில அரசு அனுமதிக்கவில்லை.

அணையின் எல்லாப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அளவுக்கு அதிகமான நீர் கசிவு எங்கும் இல்லை. எங்கும் சேதமடையவும் இல்லை - அணை சமீபத்தில் தான் பாதுகாக்கப்பட்டுள்ளது.

- இவ்வாறு உச்சநீதிமன்ற அமர்வு கறாராகச் சொன்னது (27.2.2006).

அப்பொழுதும் முதல் அமைச்சர் இதே உம்மன் சாண்டிதான். அணையின் நீர் மட்டத்தை உயர்த்த முடியாது என்று அடம்பிடித்தார்.

அப்பொழுதே உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசும் சட்டப்படியான நடவடிக்கையை எடுத்திருந்தால் இத்தனை ஆண்டு காலம் இந்தப் பிரச்சினை தள்ளாடி யிருக்காது.

நீதியும், நியாயமும் காப்பாற்றப்பட்டு இருக்கும்; அதன் மூலம் தென் மாநிலத் தமிழ்நாட்டு மக்கள் வயிற்றில் அடிக்கப்பட்டதும் நிறுத்தப்பட்டு இருக்கும். என்ன, நீதிமன்றமோ-  என்ன மத்திய அரசோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...