Saturday, November 26, 2011

நவம்பர் 26


தந்தை பெரியார் போராட்டம் நடத்துவதற்காகத் தேர்வு செய்யும் நாள்கூட காரண காரியத்துடன் இருக்கும். அந்த வகையில்தான் நவம்பர் 26 (1957) அன்று நடத்தப்பட்ட சட்ட எரிப்புப் போராட்டமாகும்.
1949 நவம்பர் 26 அன்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் நிர்ணயம் செய்யப்பட்ட நாள். ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புப் பிரிவினைக் கொளுத்தும் போராட்டத்தை தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு தனி மாநாட்டில் (3.11.1957) அறிவித்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று  கூறப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் 17ஆவது பிரிவு கூறுவது என்ன?
தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது; மற்றும் அதனை எந்த வகையில் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் எத்தகைய குறைபாடும் சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தீண்டாமை என்பது ஜாதியின் விளைவே, ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறுவது - வேரை விட்டு விட்டு, வெறும் இலையைக் கிள்ளுவதற்கு ஒப்பாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் 13 (2), 25(1), 29(1) (2) 368 பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதிகள் என்பதைத் தஞ்சை மாநாட்டில் எடுத்துக்காட்டி இந்தப் பகுதிகள் நீக்கப்படாவிட்டால் அந்தப் பகுதிகள் பகிரங்கமாகவே கொளுத்தப்படும் என்று அறிவித்தார் அய்யா.
இதற்காக மத்திய அரசுக்கு 22 நாள்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. பல லட்சம் மக்கள்  கொட்டும் மழையில் கூடிய ஒருமாநாட்டில், தமிழ் நாட்டின் மிகப் பெரும் தலைவர் கொடுத்த அழைப்புக் குறித்து கவலையுடன் பரிசீலிக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைக் கடமையல்லவா?
பிரதமர் நேரு உலக வரலாறு அறிந்தவர் என்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்றும் பாராட்டப்பட்டவராயிற்றே! குதிரை கீழே  தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழியைப் பறித்த கதையாக அவர் நடந்து கொண்டது வருத்தத்திற்குரியது.
சட்டத்தை எரிப்பவர்கள் முட்டாள்கள் (Nonsense) என்றும், சட்டத்தைப்  பிடிக்காதவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நாட்டை விட்டு வெளியேறட்டும் என்றும் கூறி பிரச்சினையின் வெப்பத்தை  அதிகரிக் கும்படிச் செய்து, வாங்கிக் கட்டிக் கொண்டார்.
சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லாத நிலையில் சென்னை மாநில அரசால் அவசர அவசரமாக தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult To National Act, 1957) ஒன்று இயற்றப்பட்டது. இதன்படி மூன்று ஆண்டுகள் வரை கடும் தண்டனை அளிக்கப்படலாம்.
அதற்கா தந்தை பெரியார்  அஞ்சுவார்? கருஞ் சட்டைத் தொண்டர்கள்தான் பின் வாங்குவார்களா?
10 ஆயிரம் பேர் எரித்தனர். மூவாயிரம் பேர் சிறைக்குள் தள்ளப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்னுயிரைப் பலி கொடுத்தனர் என்றாலும் இந்நாள் வரை ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் நீக்கபடவில்லை.
1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப் பெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டிலும் முக்கியமான ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவின்படி தீண்டாமை (ரவேடிரஉயடைவைல) ஒழிக்கப்படு கிறது என்பதற்குப் பதிலாக ஜாதி (உயளவந) ஒழிக்கப் படுகிறது என்று திருத்த வேண்டும் என்று அம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றவும்பட்டது.
ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரமும், சுயமரியாதையும் இருக்குமா என்று தந்தை பெரியார் எழுப்பிய பகுத்தறிவு மிக்க மனிதாபிமான வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கப் பெறவில்லையே!
இதற்குப் பெயர் சுதந்திரமாம். அதற்காக ஆட வேண்டுமாம் - பாட வேண்டுமாம் - மகா வெட்கக் கேடு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...