- சொ. நடராசன், சென்னை
திரு. நரேந்திர சேகவாட் என்பவர் மிகக் காட்டமாக 24 ஏப்ரல் இந்து நாளேட்டில் தன் கருத்துகளை முன் வைத்துள்ளார். அவருடைய கட்டு ரையை அப்படியே மொழி பெயர்க் காமல் அவருடைய கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. அவருடைய கட்டுரையைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது, கோபம் கொப்பளிக்கிறது, இந்த இந்திய சமூகத்தை நினைத்தால்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் இரு தொழில்கள் - ஒன்று சோறு படைக்கும் விவசாயம், மற்றொன்று சோம்பேறியாக்கும் கிரிக்கெட் ஆட்டம். விவசாயி எனும் கதாநாயகனுக்கும் வில்லன் எனும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி கிழிகிழியென்று கிழிக்கிறார். கிரிக்கெட் ஆட்டம் தொழில் ஆகிவிட்டது. தொழில் மயமாக்கப்பட்டுவிட்டது.
இரு தொழில்களையும் சிறிது சுருக்கமாக ஆராய்வோம். விவசாயம் சிறப்பாக மக்களுக்கு சோறு போட்டு உயிர் வாழ வைப்பது. கடினமான ஒன்று. அறிவு சார்ந்த ஒன்று. நுண் ணறிவு தேவையான ஒன்று. மேலாண் மைத் திறன் தேவைப்படும் ஒன்று.
மேலெழுந்த வாரியாக விவசாயியை ஒரு புழுபூச்சி பார்ப்பது போல் நம்ம வர்கள் பார்க்கின்றனர். கிராமத்தான் என்று கிண்டல் செய்வதும், சுருக்கமாக அவனை மாக்கான் என்று நினைக் கிறார்கள். அவனை மிக துச்சமாகவே மதிக்கிறார்கள். மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று கிண்டல் செய்வார்கள். இப்படி சொல்பவர்களிடம் இரண்டு மாடுகளைக் கொடுத்துப் பாருங்கள். எப்படி மேய்க்கிறார்கள் என்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுக்கும்போது கைவேறு கால்வேறு ஆகிவிடும். விவசாயம் என்பது ஒரு கடினமான தொழில் என்று தெரிய வரும். இப்படிப்பட்ட கடினமான தொழிலை விடாமல் இன்னும் ஏன் அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறான். உயிரை உடலுடன் ஒட்டி வைத்துக் கொள்ளத்தான் வேறு வழி இல்லாமல்.
ஏறக்குறைய எழுபது விழுக்காடு இருக்கும் விவசாயிகள் இந்த நாட்டு ஆட்சியை கைக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால்? இந்தக் கேள்விக்கு விடை என்ன?
நம் விவசாயிகளிடம் ஜாதி, மத, இன வேறுபாடுகள் மனதில் ஆழமாக பதிந் துள்ளன. மூடநம்பிக்கை குடியிருக்கும் இடமாக உள்ளனர். எதற்கும் விதியை நொந்து கொள்பவர்கள், குடும்ப விழாக்களில் தன் சக்திக்கும் மேலாக செலவு செய்பவன், சமூகம் தன்னை தரக்குறைவாக எடை போட்டுவிடக் கூடாது என்பதற்காக. மொழியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தடையாக உள்ளது. இதனை பயன் படுத்தியே மேட்டுக்குடி மக்கள் ஆட் சியைத் தங்கள் கையில் வைத்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள், வருமானம் மிகக் குறைவு.
மராட்டிய கரும்பு பயிரிடும் விவ சாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில விவ சாயிகள் வாழ்க்கைத் தரம் மற்ற மாநில விவசாயிகளை விட மேம்பட்டுள்ளது. நீர் வளம் அவர்களை ஆதரிக்கிறது.
விவசாயிக்கு, அவனுடைய கடின உழைப்புக்குச் சரியான விலை நாம் கொடுப்பதில்லை. அவன் உற்பத்தி செய் யும் பொருளுக்கு விலை மதிப்பிட அவ னுக்கு உரிமை இல்லை. தரகர்கள் உள்ளனர்.
ஒன்றிரண்டு நிகழ்வுகள் குறிப்பிடு கின்றேன். மல்லிகைப் பூ உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவர் சந்தைக்குப் பூக்கூடைகளைக் கொண்டுவந்தார். கோவைக்கு அருகே உள்ள துடியலூர் சந்தையில், அடி மாட்டு விலைக்குக் கேட்டார்கள். பூ பறிப்பதற்கான கூலி கூட வரவில்லையே என்ற ஆதங்கத்தில் தெருவில் குடியிருந்த பிள்ளையார் சிலைக்கு, இந்தா, இந்தப் பூமுழுவதும் உனக்கு என்று அதன் தலைமேல் கொட்டிவிட்டுப் போனார்.
இன்னொரு விவசாயி, லாரி சுமையாக மாம்பழம், கொத்தவால் சாவடிக்குக் கொண்டு வந்தார். கைநிறைய, பைநிறைய காசு கொண்டு போகலாம் என்று தரகர்கள் சூழ்ந்து கொண்டனர். சிறிது நேரம் தரகர்கள் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண் டனர். விலையைக் கூறினர். விவசாயிக்கு வந்தது கோபம். பொருள் உற்பத்தி செய் தவன் நான். விலை சொல்ல வேண்டியவன் நான். அப்படியிருக்க நீங்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டு என்னிடம் விலை பேசுகிறீர்கள். மாம்பழங்களை இங்கேயே தரையில் கொட்டிவிட்டுப் போய்விடுவேன் விற்காமல் என்று அங்கலாய்த்தார். எவ் வளவு கடினமான தொழில் என்று பாருங்கள்.
நகர வாசிகள், நரக வாழ்க்கை வாழும் விவசாயிகளைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. மாறாக கத்தரிக்காய் விலை இன்று அய்ந்து ரூபாய் மேலே போய்விட்டது. இன்றைய விளையாட் டில் அவன் நூறு அடிப்பானா என்ற சிந்தனைதான்.
நிற்க, சோம்பேறி ஆட்டமான கிரிக்கெட்டுக்கு வருவோம். வெள்ளைக் காரர்கள் வெயில் காய்வதற் காகவும், வெட்டிப் பொழுதைப் போக்கு வதற்காகவும் ஆரம்பித்த விளையாட்டு கிரிக்கெட்.
ஒரு ஜெர்மானிய விளையாட்டு ஆய்வாளர் உலகிலுள்ள விளையாட்டுகளை அவைகளுடைய ஆற்றல் (Skill), வேகம் அல்லது வேக வீதம் (Speed) மற்றும் உடலுரம் (Stamina) என்பவைகளின் அடிப்படையில் தரம் பிரித்தார். முதல் தர அணி ஆட்டங்களில் (Team Games) வருபவை கூடைப்பந்து, கால் பந்து, ஹாக்கி போன்றவைகள். தனி ஆட்டங்களில் (Individual Events) குத்துச் சண்டை, கோல்ஃப், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன் றவைகள் முதல் இடம் பிடிக்கின்றன. கிரிக்கெட்டை அவர் மூன்றாம் தர ஆட்டமாக கணித்துள்ளார். என்ன, சதுரங்கம், டேபிள் டென்னிஸ் போன் றவைகள் கிரிக்கெட்டைவிட மேலான ஆட்டமா என்றா கேட்கிறீர்கள். ஆம் என்பதுதான் உண்மை. மேற் குறிப் பிட்டுள்ள பரிமாணங்களின் அடிப் படையில் இந்த ஆட்டங்களுக்கு மிகுந்த திறன் தேவைப்படுகிறது.
சீன நாட்டில் கிரிக்கெட் விளை யாட்டை அறிமுகப்படுத்த எண்ணினர். அரசு ஒரு விளையாட்டு விற்பன்னரை அணுகி அதற்கான அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. அறிக்கையும் வந்தது, அரசு பரிசீலித்தது. இது என்ன, ஒரு ஆட்டம் முடிய அய்ந்து நாட்களா, இதற்கு சீனாவில் அனுமதி இல்லை என்று முடிவு எடுத்தனர். அப்பொழுது ஒரு நாள் ஆட்டம், அரைநாள் ஆட்டம் வரவில்லை.
கியூபா நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் போது வயல் வெளியில் வேலை செய்பவர்கள் வேலையை விட்டு விட்டு வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள். ;விளைவு, வயலில் விளைச்சல் இல்லை. பார்த்தது அரசாங் கம், தடை செய்தது இந்த ஆட்டத்தை.
இருநூறு நாடுகளுக்கும் மேலே உள்ள இந்த உலகில் ஒரு எட்டு அல்லது பத்து நாடுகள் ஆடும் கிரிக்கெட்டுக்கு உலகக் கோப்பை தகுதி உள்ளதா? குறைந்தது ஒரு அய்ம்பது நாடுகளாவது விளையாட வேண் டாமா? கால்பந்து இருநூறு நாடு களுக்கு மேல் விளையாடப்படுகிறது. கால் பந்து விளையாடாத நாடே இல்லை. எவ்வளவு முயன்றும் எட் டையும், பத்தையும் தாண்ட முடியாமல் தவிக்கிறது கிரிக்கெட் ஆட்டம். யாரேனும் மூன்று குச்சியைத் தூக்கிக் கொண்டு போனால் அதையும் ஒரு நாட்டின் அணியாக்கி விடுவார்கள். இதுதான் இந்த விளையாட்டின் நிலை.
நிற்க. நரேந்திர செகாவட்டின் அங்கலாய்ப்புக்கு வருவோம்.
எங்கும் கும்மாளம், கூச்சல், பட் டாசுகள் வெடிச் சத்தம்,லட்சக்கணக்கில் பீர் பாட்டில்கள் திறக்கப்பட்டன. அரசுகள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தன. என் மனம் குமுறுகின்றது, கொதிக்கின்றது. வெகு அருகிலே எனக்கு உணவளிக்கும் விவசாயிகள் கொத்து கொத்தாக உயிர் துறக்கின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரி 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். எத்தனை நாட்களாக? கடந்த பதினாறு ஆண்டு களாக. கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றும் அந்த நிலை தொடர்கிறது.
ஒளிர்கிறது இந்தியா, இந்தியா ஒரு வல்லரசாக மாறி வருகிறது, வளர்ச்சி 9 விழுக்காடு, வளர்ந்த மேற்கத்திய நாடுகளை மிஞ்சுகிறது, இவை எதற்காக? யாருக்காக?
கடந்த மாதம் மார்ச் 5 ஆம் நாள் பெங்களூரு நகரம் பாட்டும் கூத்தும் எல்லோரும் விவாதித்துக் கொண்டி ருக்கின்றனர். கிரிக்கெட்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று. ஒரு நூறு கி.மீ. தூரத்தில், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட இளம் தம்பதி யினர் தங்களுடைய மூன்று இளம் பிஞ்சுகளை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கினர். ஏன்? எதற்காக? அவர்கள் குடிகாரர்களா, அல்லது கிராமத்தில் ஜாதிச் சண்டையா? பெரும் நோய்க்கு ஆளானவர்களா? இல்லை, இல்லை. பின் எதற்காக? அவர்கள் விவசாயத் துக்காக பெற்ற கடன் ரூ 80,000. (இந்தத் தொகை ஒரு மென்பொறியாளர் தம்பதிகள் ஒரு மாதத்தில் பெறும் சம்பளம்). விவசாயியின் கடன் ரூ80,000 ரூ 1.20,000 ஆக வளர்ந்துவிட்டது. மனக் கவலையும், இந்தக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாததின் காரணம், அரசுதான். பட்டு இறக்குமதி வரியை 30 விழுக்காட்டிலிருந்து 5 ஆகக் குறைத் தது. பட்டு உற்பத்தி செய்த விவ சாயியின் வயிற்றில் அடித்தது. சீனப்பட்டு வந்து குவிய ஆரம்பித்தது. அந்த இளம் தம்பதியினர் இந்த உலகில் இருந்து தற்கொலை வழியாக விடுதலை பெற்றனர். அந்த மூன்று குழந்தைகளின் கதி? கேள்விக் குறிதானோ?
இந்தியத் திருநாட்டில் சராசரியாக ஆண்டுதோறும் 17,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், கடந்த 15 ஆண்டுகளாக.
கூக்குரலெழுப்பும் நாளேடுகளும் தொலைக் காட்சி ஊடகங்களும் என்ன செய்கின்றன?
அவை பாகிஸ்தான் அணி மும்முரமாகப் பயிற்சி செய்யும்போது இந்திய அணி அந்த அளவுக்கு முயற்சி செய்யவில்லையே, ஏன் என்று, மூன்று பேரை உட்கார வைத்துக் கொண்டு, நேரலை வழியாக நேயர்களிடம் கேள்விகளை வரவழைத்துக் கொண்டு, விவாதித்துக் கொண்டிருக்கும்.
ஊடகங்கள் பத்திரிகைகள் ஜன நாயகத்தின் மூன்றாவது கண் (நெற்றிக் கண்ணோ?) நான்காவது தூண் (Fourth Estate) என்றும் அழைக்கிறார்கள். ஆனால் அவை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றன.
ஊடகங்கள் - அதனுடைய பார்வையை இதன் பக்கம் செலுத்தப் போவதில்லை. வேறு எங்கு செல்வது? யார் அடைக்கலம் அளிப்பார்கள்? அரசாங்கம் உள்ளதே. அது எவ்வாறு பணியாற்றுகிறது என்பதுதான் தெரியுமே! ஒரு நாள் பெங்களூரு விதான் சவுதா வழியாக செல்ல நேர்ந்தது. அதன் நுழைவாயிலில் நன் கண்ட வாசகங்கள் - அரசின் பணி, கடவுள் பணி (Government work is god’s work) இப்பொழுது புரிந்து கொண்டேன். ஏன் நமது அரசுகள் தனது பணியை கடவுளிடம் ஒப் படைத்துவிட்டன என்று.
கருநாடக முதல்வர் திரு எடியூரப்பா அவர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு வீட்டு மனை வழங்குவதாக அறிக்கை வெளியிட்டார். பெங்களூரில் நிலம் எங்கே? பின்பு சுதாரித்துக் கொண்டு நிலத்துக்குப் பதிலாக பணம் கொடுப் பதாகக் கூறியுள்ளார். இந்தப் பணம் எங்கிருந்து வரும்? நீங்களும் நானும் கட்டும் வரிப்பணம்தான். ஏற்கெனவே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களுக்குப் பணம் தேவையா அல்லது மண்ணோடு மண்ணாக மாய்ந்து போகும் நிலையில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையா?
அரசு வங்கிகளுக்கு வருவோம். உங்களுக்கு ஒரு பென்ஸ் கார் வேண் டுமா? சிவப்புக் கம்பள வரவேற்பு. வட்டி 6 விழுக்காடு. டிராக்டர் வாங்க விவசாயி அலையோ அலை என்று அலையவேண்டும். வட்டி 15 விழுக்காடு. என்னே ஒரு ஏற்றத் தாழ்வு. விவசாயி களின் கைகளை எத்தனை காலம்தான் முறுக்குவீர்கள்.
ஆண்டு 2008. மும்பையில் லக்மே இந்தியா அணி வகுப்புக் காட்சி (Lakme India Fashion Show) அய்ந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டல் ஊடகங்களில் இருந்து அய்நூறுக்கும் மேற்பட்ட வர்கள் வந்து குவிந்தனர். அன்றையப் படைப்புப் பொருள் பருத்தி ஆடை. நளினமாக உடுத்தி வலம் வந்தனர் நாரிமணிகள். நூறு கிலோ மீட்டருக்கு அப்பால், பருத்தி விவ சாயிகள் தற்கொலை செய்து கொண் டிருந்தனர். தினமும் நான்கு அல்லது அய்ந்து பேர். எத்தனை ஊடகங்கள் இந்த கோரமான நிகழ்வுகளை வெளியே கொண்டு வந்தன?
இந்தியத் திருநாட்டில் 67 விழுக்காடு மக்களின் (எண்பதுகோடி) ஒரு நாள் வருமானம் ரூ.20. அமெரிக்க மக்கள்தொகையின் இரண்டரை மடங்கு. ஒரு கொக்ககோலாவின் விலையும் ரூ 20. பகல் இரவு கிரிக்கெட் விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் மின் சக்தியால் விவசாயிகளின் பலநாள் மின்தேவையை நிறைவு செய்ய இயலும். மின்வெட்டுக்கூட ஏற்றத் தாழ்வு பார்த்துத்தான் கொடுக்கப் படுகிறது.
நகரத்தில் இரண்டு மணி நேரம். பேரூர்களில் நான்கு மணி நேரம். கிராமங்களில் எட்டு மணி நேரம். உணவு உற்பத்திக்காக யாருக்கு மின்சாரம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மின்வெட்டு அதிகம்.
பிறந்த நாள் விழாக்களை ஆடம் பரமாகக் கொண்டாடுகின்றோம். குளிர் மகிழ்வுந்தில் கோடை வெயிலை சமாளிக்க கூர்க், ஊட்டி போன்ற இடங்களுக்குப் பயணிக்கிறோம். பயணிக்கும்போது சிந்தியுங்கள். நீண்ட சாலையின் இருமருங்கிலுமுள்ள கிராமங்களில், ஒரு விவசாயி பூச்சி மருந்தைக் குடித்துக் கொண்டிருப்பான் அல்லது மரத்தில் தொங்கிக் கொண் டிருப்பான். ஏன்? அவன் வாங்கின பத்தாயிரம் ரூபாய்க் கடனைக் கட்ட முடியாமல்.
ஆண்டு 2009. இந்திய பெரு நகரங்களில் பீதி. பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. அரசு, நாளேடுகள், தொலைக் காட்சி ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தன. எத்தனை பேருக்குப் பன்றிக் காய்ச்சல், எத்தனை இறப்பு,அரசு என்ன செய் கிறது, என்ன செய்யத் தவறிவிட்டது. நேர்காணல் ஏராளம் ஏராளம். காரணம் பாதிக்கப் பட்டவர்கள் நகரவாசிகள். பணத்தில் மிதப்பவர்கள். அதே நேரத்தில் நம் கிராமங்களில் தினமும் 47 பேர் வாழ்வை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாளா? இல்லை. பதினைந்து வருடங்கள். அனுதினமும்.5475நாட்கள், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 2,57,325 பேர். இன்றும் தொடர்கிறது. செய்தி வெளிவருவதில்லை. மறைக்கப்படுகிறது.
விவசாயக் குடும்பத் தலைவன் இறந்த சில மாதங்களிலேயே அவனு டைய மனைவி, குழந்தைகளை மாய்த் துக் கொண்டோ, அல்லது ஆதரவற்ற நிலையில் விட்டுவிட்டோ அவளும் தற்கொலை செய்து கொள்கிறார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட் டத்தில் ஒரு விவசாயியின் மனைவி பூச்சி மருந்தைக் கடைக்காரரிடம் கடனுக்கு வாங்கி உயிரை மாய்த்துக் கொண்டாள். சாகும்போதும் கடன் பட்டே சாகிறாள்.
நாம் எல்லோரும் ரோமானிய மன்னர் நீரோ போன்றவர்களா? தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறோமா? நீலிக் கண்ணீர் வடிக்கக்கூட நேரமில்லை.
அவர் மேலும் தொடர்கிறார்: நான் கிரிக்கெட்டுக்கு எதிரானவன் அல்ல. உலகக் கோப்பைக்கு எதிரானவன் அல்ல. உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முதல் ஆளாக நான் இருப்பேன். ஆனால்? ஆனால் என்ன? இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் என் நாட்டு விவசாயிகள், கிராமவாசிகள், எல்லோரும் மகிழ்ச்சியுடன் என்னோடு ஆரவாரமிடவேண்டும். அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. வங்கியின் வட்டிவிகிதத்தில் சமத்துவம் நிலவும்போது, அவன் நமக்கு சோறு படைக்கிறான் என்ற நன்றி உணர்வு நம் எல்லோரிடமும் திகழும்போது, நான் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வேன். ஆனால், மீண்டும் ஆனால், எனக்கு உணவளிக்கும் அவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் போதோ, அவனை நம்மில் ஒருவராகக் கருதும் மனப்பாங்கு இல்லாத உங்களோடு, வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நானில்லை. தொலைந்து போகட்டும் கிரிக்கெட், தொலையட்டும் உலகக் கோப்பை, தொலையட்டும் உங்கள் வெற்றிக் கொண்டாட்டம்.
1 comment:
நெஞ்சம் பொறுக்கவில்லை சகோதரா!!! இந்த மதிகெட்ட மாந்தரை நினைத்தால் .....அருமையான பதிவு நண்பரே நம்முடைய நிலையை எடுத்துரைத்து சூடு போட்டதற்கு........இந்தியனாக நாம் ஒவ்வொருவனும் சிந்திக்க வேண்டிய விஷயம் .......
Post a Comment