Thursday, October 13, 2011

சங்கராச்சாரியார்கள்மீது விசாரணை தேவை!


சங்கராச்சாரியார்கள்மீது விசாரணை தேவை!

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஏழாண்டுகளுக்குமுன் கைது செய்யப்பட்டார். எதற்காக? காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவில் மேலாளராகவிருந்த (சங்கர மடத்தின் முன்னாள் ஊழியர்தான்) சங்கரராமன் என்பவர் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட குற்றத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டவர்.


இந்தியன் குற்றப் பிரிவு 302, 120-பி, 34 மற்றும் 200 (கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் கொலை உள்ளிட்ட) பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார். குற்றத்திற்கான அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவரை நீதிமன்ற காவலில் வைக்க - சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் சிறையில் 61 நாள் அடைக்கப்பட்டார்.

ஜூனியர் சங்கராச்சாரியார் என்று கூறப்படும் விஜயேந்திர சரஸ்வதி சென்னை மத்திய சிறைச் சாலையில் 31 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள்தாம் ஜெகத் குருக்களாம்!

ஏழாண்டுகள் ஓடி விட்டன; இன்னும் வழக்கு நீண்டு கொண்டே போகிறது.

இந்த வழக்கு தமிழ் நாட்டுக்குள் நடத்தப்படக் கூடாது என்று நீதிமன்றம் வரை சென்றனர் குற்றஞ்சாற்றப்பட்ட சங்கராச்சாரியார்கள்; அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் வழக்கு மாற்றப்பட்டது. சரியான வகையில் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இதுவரை உரிய தீர்ப்புகள் வழங்கப்படாத நிலை.

இன்னும்  - ஜாமீனில் தான் இரு சங்கராச்சாரியார் களும் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜெகத் குருவாகவே பாவிக் கிறார்கள். இதனை நமது பார்ப்பனர் அல்லாதவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். பார்ப்பனர்களிடையே நிலவும் அந்த இனப் பற்றை பற்றித் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள்மீது கொலைக் குற்றம் சாற்றப்பட்டுள்ளதால்; அவர்கள் மடாதிபதி பதவியி லிருந்து விலகி இருக்க வேண்டும் என்று துவாரகா பீடம் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்துகூடச் சொன்னார் -அதைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், கொஞ்சம்கூட வெட்கமின்றி அலைந்து திரிகிறார்கள்.

தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைப் பிறழ் சாட்சிகளாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அரசு தரப்பு சாட்சிகள்கூட பல்டி அடித்திருக்கிறார்கள் என்றால், இதன் தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் முதன்மை விசாரணைக் காவல்துறை அதிகாரியே, வழக்கின் டைரியைப் பார்க்க அனுமதிக்க வில்லை என்பது அதிர்ச்சிக்கு உரியதல்லவா! பிறழ் சாட்சியாகும்படி அவர் வலியுறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார் ஜெயேந்திர சரஸ்வதி என்ற வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்பொழுதோ அதிர்ச்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் மற்றொரு தகவல். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி திருமதி பத்மா அம்மையார் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கே கடிதம் எழுதியுள்ளார்.

விசாரணைக்காக  சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் என்னை அழைத்துச் சென்று, நீதிமன்ற வளாகத் துக்குள்ளேயே மிரட்டி பிறழ் சாட்சியம் அளிக்கும்படி அச்சுறுத்துகின்றனர். உன் மகனையும், மகளையும் ஆசிட்டேங்கில் போட்டு விடுவோம். அவர்களின் உடல்கள்கூட உங்களுக்குக் கிடைக்காது. பெரும்பாலான சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளிக்க, அச்சுறுத்தல் மூலமோ, கையூட்டு மூலமாகவோ சரி கட்டப்பட்டு விட்டனர்.

இச்செயலில் காவல்துறையும், பிராசிக்யூஷன் தரப்பில் கைகோத்துக் கொண்டு ஈடுபட்டுள்ளனர். சாட்சியங்களை விலைக்கு வாங்க அனுமதிக்கப்பட் டுள்ளது என்று கூறி மிரட்டினர் என்று தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி.

மேலும் தன் மருமகன் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்மீது இரு பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ள தாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்த வழக்கு விசாரணை விரைவில் நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படா விட்டால் இன்னும் என்னென்ன நடக்குமோ தெரியவில்லை.

முதலில் அவர் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படை யிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் - உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற நம்பிக்கை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...